www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிந்திப்போம்!

கல்யாணம் ப்ரீசெக்ஸா, லைசென்ஸ் டூ செக்ஸா?

-சின்னப்பொண்ணு -
அவர் ஒரு ஆண் நண்பர். வயதில் மிகவும் மூத்தவர். இன்னும் மணமாகாமல் இருப்பவர். இலக்கின்றி ஒடிக்கொண்டிருந்த பேச்சு திருமணம் நோக்கி சென்றது. ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவரது சொந்த விஷயம். அதிகப்பிரசங்கித்தனமாக நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. அவராகவே தொடர்ந்தார், 'கல்யாணமென்றால் என்னங்க? ப்ரீ செக்ஸ்தானே?' பொட்டிலடித்தாற் போல இருந்தது.

ஒரு பெண் நண்பர். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்ற தலைப்பில் சுவாரஸியமாக பேசிக்கொண்டிருந்தோம். அவர் கூறினார், 'ஆதிகாலத்தில் ஆணைத்தக்க வைத்துக் கொள்வதில் பெண்களிடம் பெரும் போட்டியே நடந்தது. இது ஒரு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். அதன் தொடர்ச்சியே கணவனை, மகனென்ற பாத்திரத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சி. மற்ற பெண்கள் யாராயினும், அது கணவனின் தாயாரேயிருந்தாலும் மீட்டெடுக்கும் முயற்சி தொடருகின்றது'. அப்படியா'வெனும் ஆச்சர்யம் என்னை ஆட்கொண்டது.

தாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ் படித்தேன். தாலி, சடங்கு, சம்பிரதாயம், பெண்ணியம், சம உரிமை, ஊக்கு ஸ்டாண்ட் என ஏகப்பட்ட விடயம் இப்பதிவில் விரவிக் கிடப்பினும் முக்கியமான சாரம்சம் என்னவெனில், 'இது வெறும் லைசன்ஸ் டூ செக்ஸ், இதில் எனக்கு விருப்பமில்லை', என்று ஒரு பெண் அளித்த கருத்து. ஆண்கள் 'dick-headed' என்று முதல் பத்தி வரை நம்பியிருந்தேன். அப்படியெனில் பெண்கள் சிந்தனை என்ன? நீ மேலே பார்த்தால் நான் கீழே பார்ப்பதுதான் சரி என்பதா?
இன்னும் எவ்வளவு நாள்தான் மாயையிலேயே உழன்றுகொண்டிருப்போம்? எத்தனை படங்களில் காட்டியிருப்பார்கள் முதலிரவு சீன்கள்? 'புருஷன் மனங்கோணாம நடந்துக்கம்மா', என்று சீண்டி, பால்குவளையோடு சோடித்த படுக்கையறைக்கு அனுப்பும் ஆயாக்களை நினைத்தால் ஆயாசமாக இருக்கின்றது. சரிநிகர் சமானம் தேடும் பெண்கள் 'If men are dick-headed, we are clit-headed' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனரா? 'இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' என்று நாமும், ஆண்களின் தவறான தேடுதலுக்கு இரையாகி விட்டோமோ?

மனு தர்மம் நான் படிக்கவில்லை. ஆனால் பிராமண ஸ்தீரிகளும் சூத்திரரே என்னும் பொருள்பட எழுதுயுள்ளமையாக கேள்விப்பட்டேன். சென்ற கவிதையில் 'விளைநிலத்தை விருத்தியாக்கு', என்ற வரி அதிலிருந்தே எடுக்கப்பட்டது.

நான் குறிப்பிட்ட மேற்கோள்கள் தனது வாழ்க்கையை தானே சுயநிர்ணயம் செய்து கொள்ளும்/கொள்ளக்கூடிய ஆண்/பெண்'களிடமிருந்து வந்தவையே.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தற்கால சமுதாய சூழ்நிலையில் கல்யாணமென்பது என்ன?

ப்ரீசெக்ஸா, லைசென்ஸ் டூ செக்ஸா இல்லை வேறேதாவது அர்த்தமுண்டா?

- குழப்பமுடன்,
சின்னபொண்ணு

அனுப்பியவர் Admin

4 கருத்துக்கள்

கோபச் சுழற்சி

-கண்ணன்-
மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது.
இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது.
இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறது.
அறிவு மெல்ல மயக்கம் தெளிந்து மனத்திடம் மீள்கிறது. மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது. கை தட்டச்சி முடிக்கிறது.
மீண்டும் ஒரு/பல கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுக்காய்/நிகழ்வுகளுக்காய் காத்திருந்து தொடர்கிறது இருப்பு.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

நீ என்ன கலர்?

- நிர்மலா -
அவன்... வயது பத்தொன்பது. அந்த வயதிற்கே உரிய பெண்கள், காதல், சினிமா, ம்யூஸிக்... இவற்றிலிருந்து விலகி இருப்பவன். ப்ராணிக் ஹீலிங் கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆர்ட் ஆப் லிவிங் சேர்ந்திருக்கேன். நான் டான்ஸ் ஆடினேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு ஆடினேன். சந்தோஷமாக இருக்கிறேன். நான் எல்லோரையும் போல குடும்பம், மனைவி என்று வாழப் படைக்கப் பட்டவன் இல்லை என்பவன்.

எனக்கு பிராண்டட் சட்டைகள் தான் பிடித்திருக்கிறது. எம்டிவி, விடிவி ஸோ குட், என்ன சொல்றீங்க? என்று கேட்பவன். இந்திய கிரிக்கெட் டீம் பிடிக்காது. இந்தியாவில் நிறைய மாற்றம் வர வேண்டும் என்பவன். ஆனால் அதில் நம்பிக்கை அதிகம் இல்லாதவன். பகத் சிங் பட கடைசிக் காட்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தவன். காந்தி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் பகத் சிங்கை தூக்கில் போட்டிருக்க மாட்டார்களா? என்று வேதனைப் பட்டவன். ஸ்வதேஷ் ஒரு நல்ல படம். பார்த்ததில் எனக்குள் பாதிப்பு இருக்கிறது என்பவன். வயது பதினாறு.

வயது இருபத்தி ஐந்து. பிஸியோ தெரபிஸ்ட். அதுவும் இன்னும் ஆறு மாதங்களுக்குத்தான். அதற்குப் பிறகு முழுநேர மக்கள் சேவை என்று நண்பர்கள் தினத்தன்று தொலைபேசியில் அறிமுகமானவன் சொல்லிப் போகிறான்.

பொய் சொல்லப் போவதில்லை, ஏமாற்றப் போவதில்லை. நான் சொல்வதை கவனமாக யோசித்துப் பார். வேண்டாம் என்றால் என்னை கன்வின்ஸ் செய். கேட்டுக் கொள்கிறேன் என்கிறாள். கலாச்சார கோடுகள்... தாண்டுவதில் தப்பில்லை என்கிறாள். எல்லாம் மாறும், மாறத்தான் போகிறது என்கிறாள்.

என் வாழ்க்கை. நான் வாழ்கிறேன். எனக்கு என் தொப்புளில் வளையம் போடப் பிடித்திருக்கிறது. அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிறாள். கல்லூரி விடுதி வாழ்க்கை என் வாழ்க்கை. நான் விரும்பிய வண்ணம் வாழ்கிறேன். ஊருக்குப் போகும் போது அவர்கள் விரும்பும் மகளாக இருக்கிறேன். ஆமாம் எனக்கு இரண்டு முகம் தான். என்ன தப்பு? என்று கேட்கிறாள்.

ஒரிஸ்ஸாவிலிருந்து பெங்களூருக்குப் படிக்க வந்தவன். கால் சென்டரில் பகுதி நேர வேலை. என்னுடைய செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வயது பதினெட்டாகிவிட்டது, இன்னுமா அப்பாவை எதிர்பார்த்திருப்பது என்கிறான்.

படிய வாரிய தலைமுடி. கொஞ்சமாய் பூ. பாந்தமாக உடுத்திய சல்வாரோடு தான் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். half sex தப்பில்லை என்கிறாள். அதென்ன half sex என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. பத்து பேர். ஒரு கார், நான்கு பைக்கில் அணிவகுத்துப் போகிறார்கள், நண்பர்கள் தினத்தன்று 'காப்பி டே'க்கு.

கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஏழெட்டு பேர்களாக. நடுவிலிருப்பவன் தாதா போல நினைத்துக் கொள்கிறான். அங்கே இருக்கும் ஒரு பெண்ணை முத்தமிட்டு களேபரத்தில் நழுவி விடுகிறான். கொல்கத்தா செய்தித்தாள் மூல அறிமுகம் ஆனவன்.

நான்கு கல்லூரி மாணவர்கள். ஷாப்பிங் மாலில் கண்ணில் பட்ட பெங்காலி நடிகையை கேலி செய்து, காரில் துரத்தி, வழிமறித்து மிரட்டி விட்டுப் போகிறார்கள். எல்லோரும் பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள்.

என் பிள்ளைகள் மற்றும் செய்தித்தாள் மூலம் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை சாம்பிள்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு, வெள்ளை என்ற ஆறே வண்ண கலர் பென்சில்கள். நான் படிக்க ஆரம்பித்த போது பனிரெண்டு கலர் பாக்ஸ். இப்போது விரிந்து கிடக்கும் கலர் பேலட்... பார்க்க ஆச்சர்யம், கொஞ்சம் பெருமை, அதிர்ச்சி, பயம், சந்தோஷம்... எல்லாமும் தான்.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]