www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிந்திப்போம்!

மக்களை முட்டாள்களாக்கும் சின்னத்திரையும் சினிமாவும்

- ரசிகன்:யாழ் உதயன்-
எனது பழைய நண்பர் ஒருவரைப் பல வருடங்களின் பின்னர் சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. அன்றைய நாள்களில் இருவரும் சேர்ந்து எத்தனை தடவைகள் வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்க்க என்று சென்றிருப்போம். கோயில் திருவிழாக்கள், பாடசாலைக் கொண்டாட்ட நாள்கள் எமக்குச் சினிமாத் தியேட்ட ரில்த்தான். அன்றைய பல பால்ய விவகாரங்களைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் 75ஆம் ஆண்டிலேயே வெளிநாடு சென்று பின் நாட்டின்நிலை காரணமாகப் பல ஊர்களிலும் வாசம் செய்து விட்டு வந்தவராதலால் அவரே பலவிடயங்களையும் கூறிக்கொண்டி ருந்தார். மீண்டும் பேச்சு பழைய காலத்திற்குப் போனது. ஆனால் சினிமா பக்கம் அவர் திரும்பவேயில்லை.
எனக்கு இப்பவும் சினிமா ஆசை சிறிது உண்டு. எனவே நானே அத்திசையில் முதலில் பேசினேன். ஆனால் அவர் அதிக நாட் டம் காட்டவில்லை. முன்பு அவரே சினிமா என்றதும் முன்நிற்பார். பல வற் புறுத்தல்களின் பின்பே நான் சம்மதித் துப் போவேன். படம் பார்க்க ஆசை தான். ஆனால், கள்ளத்தன மாகப் போவது மனப்பயம். இறுதியாக நான் கேட்டேன் இப்பவெல்லாம் சினி மாவில் ஆர்வமில்லையோ என்று. அதற்கு அவர் கூறிய கருத்துக்கள் ஒரு விமர்சனம் போல இருந்தது. அதன் அடிப்படைதான் இக்கட்டுரை.

சினிமாவில் இயற்கைத்தன்மை

அன்றைய சினிமாவில் இயற்கைத் தன்மை இருந்தது. நடிப்பவர்கள் தாமே பேசித் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். சண்டைக்காட்சிகளில் கூட அவர்கள் ஓரளவு இயற்கையா கவும் பழக்கப்பட்டும் இருந்தார்கள். வாயசைப்பில் சரியாக இருக்கவேண் டும் என்பதற்காகப் பாடல்களை அவர் கள் மனப்பாடம் செய்யவேண்டியிருந் தது. தாமே பேசி நடிப்பதால் முகத்தில் வேண்டிய பாவம் தானாகவே வந்து விடும். இசையமைப்பும் தெளிவாக இருக்கும். குரலின் தன்மைக்கேற்ப ஒலியளவு இருக்கும். எத்தனையோ முக்கியமில்லாத கட்டங்களைக்கூட ஷகுளோசப்|பில் காட்டுவார்கள். அன் றைய நடிகர், நடிகைகள் நடிப்பில் திறமைகாண்பிக்க வேண்டுமென்ற ஒரு நோக்கிலேயே செயற்பட்டார்கள். போட்டி இருந்ததுதான். ஆனால், பொறாமை, பழி வாங்கும் உணர்ச்சி குறைவாக இருந் தது. நடிகர் நடிகைகளுக்கு ஒரு மதிப்பு ஏற்படக் காரண மாக இருந்தார்கள். ஷகிசு கிசு| என்பது ஒரு பெரிய விடய மாக இருந்தது. ஒரு சில பேர்களைத்தவிர அநேகமானவர்கள் அதை விரும்புவதுமில்லை. காட்சிகள் இயற்கையாக இருக்கும். படத்திற்குப் படம், ஒரே நடிகர்களானாலும் புதுப்புது உத்திகளைக் கையாளுவார்கள். நவரசங்களுக்கும் எற்ற நடிகர்களையே இயன்ற வரை தெரிவு செய்வார்கள். உதாரணமாக நகைச்சுவை நடிகர்களான தங்க வேலு, நாநேஷ் போன்றவர்கள் வில்லத்தனமானது உட்பட, எப்படிப்பட்ட, பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடியவர்களாக இருந்தனர்;.

நான் குறுக்கிட்டு, இது எல்லாம் சரிதான். ஆனால், காலத் திற்கேற்ப வளர்ச்சி இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டு மென்றேன். அவர் சொன்னார் அதுசரிதான். ஆனால், அது தொழில் நுட்பத்திலேதான் தவிர நடிகர்களிடம் இல்லை என்று.
தொடர்ந்து அவர், இன்றைய நடிகர்களின் ஒரே குறிக்கோள் ஷஎப்படியாவது| நிலைத்து விட வேண்டும் என்பதுதான். சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் குறுக்குவழியில் சென்று அதை அடையமுற் படுகிறார்கள். ஆண் நடிகர்களைப் பொறுத்தமட்டில் இத்தன்மை கள் சிறிது குறைவுதான் என்றாலும் முதல் படத்தில் இடம் கிடைத்தவுடனேயே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். தாம் ஏதோ பெரிய "ஹீரோ" என்ற நினைப்பு வந்துவிடுகிறது. பெண் நடிகைகள் எவ்வளவு தூரம் மேனியைக் காட்டமுடியுமோ என்ற போட்டியிலும், தம்மைவிட்ட ரதிகள் இல்லை என்பது போலவும் நடக்கத்தலைப்பட்டு விடுகிறார்கள். திரைக்கு ஏற்ற முகவெட்டு இருக்கவேண்டிய அவசியம் பார்க்கப் படுவதில்லை. அவர்களின் முகபாவம் கவனிக்கப்படுவதில்லை. திரையில் அவர்கள் எப்பாத்திரத்தில் தோன்றியபோதும் அவர்களின் முகத்தில் ஒருவிதமான ஷகர்வ|பாவமே பின்னணியில் தெரிகிறது. இயற்கை வெளிப்பாடு கிஞ்சித்தும் இல்லை.

பேச்சைப் பொறுத்தமட்டில் அது கேட்கவே வேண்டாம். மொழி தெரியாதவர்களைப் போட்டு அவர்கள் ஏனோதானோ என்று வாயசைக்கும்போது பார்க்கச் சகிக்க முடிவதில்லை. பேசி நடிப்பவர்கள் கூட நடித்தபின் "டப்பிங்"முறையில் பேச்சுப் பதியப்படுவதால் பேச்சில் கட்டத்துக்குரிய நெழிவுசுழிவு, ஏற்ற இறக்கம், உணர்ச்சிவெளிப்பாடு ஆகியவை சரியாக அமை வதில்லை. மேலும் தொழில் வளர்ச்சி என்று கண்ட கண்ட ஒவ்வாத இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதால் பேசுபவரின் ஒலிக்கு மேலாகக் கர்ணகடூரமாக ஒலிக்கின்றது. இது ரசிக்க முடியாமால் இருப்பதோடு உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத் தும் என்பதை மறந்து விடுகிறார்கள். அத்துடன் குறிப்பிட்ட சிலரே பின்னணிக்குரல் கொடுத்துப் பேசுவதால், வேறு வேறு நடிகர் நடிகைகள் நடித்தாலும் கேட்ட குரல்களையே மீண்டும் மீண்டும் ஒரே இயல்பான நடையுடன் கேட்டுக்கேட்டு அலுத்துப் போய் விடுகிறது. இளைஞர்களைச் சீரழிப்பதே இன்றைய சினிமா வாக அவர் கருதுகிறார்.

கதாநாயகி என்றால் கவர்ச்சிதான்

காட்டப்படும் வன்முறைகளான காட்சிகளையும் பெண்களின் ஆபாசமான நடிப்பினையும் பார்க்கும்போது சட்டம் நீதி உள்ளதா, கலாசாரம் உள்ளதா எனச்சிந்திக்க வேண்டியுள்ளது. சண்டைக் காட்சிகளில் இரத்தவெறி புலப்படுகிறதே தவிர வீரம் புறக் கணிக்கப்படுகிறது. காதலைக்தவிர வேறு எதுவும் உலகில் இல்லை என்பது போலவே எல்லாச் சினிமாப்படமும் சித்தரிக்கப் படுகிறது. சிலபடங்களில் கதாநாயகி என்பவர் கவர்ச்சிக்காக மட்டுமே புகுத்தப்படுகிறார். உடுப்புகள் கேட்கவே வேண்டாம். ஆண் நடிகர்கள் அண்டவெயருடன் (அரைக்காற்சட்டை அளவில் இருந்தாலுங்கூட) காட்டும்போது அது பெர்ய ஆபாசமாக அங்கே சித்தரிக்கப்படும்போது பெண்நடிகைகள் அரைகுறை ஆடையுடன் காட்டப்படுவதை அனுமதிக்கிறது.

பேசப்படும் வசனங்கள் பொருத்தமற்றவையாகவும் இருக்கின்றன. உதாரணமாக குங்குமப் பொட்டின் பெருமையைச் சொல்லும் கதாநாயகியின் நெற்றியில் பொட்டே இருக்காது. சேலை கட்டு வதைப் பற்றி சொல்வார்கள் ஆனால், ஒரு கட்டத்திலாவது சேலைகட்டிய காட்சி வந்திருக்காது. ஒரு படத்தில் போட்டியில் சவால் விடும் கதாநாயகன் வெற்றியடையும் பட்சத்தில் கதா நாயகியைப் பிறந்தமேனியுடன் காட்சிதரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறான், கதாநாயகியும் அதை ஏற்றுக்கொள்கிறாள். இங்கு ஆண்மை என்பதற்கான அர்த்தம் தவறாக்கப்படும் அதேசமயம், ஒழுக்கமுடைய பெண்கள் கேட்டுச் சகிக்க முடியாத வசனம் அமைக்கப்படுகிறது. சேலை உரிவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. எத்தனையோ படங்களில் இக்காட்சிகள் அன்று பேச்சில் கூட இருப்பதில்லை. ஆணும் பெண்ணும் தொட்டுத் தோளில் கைபோட்டபடி பேசி நடிப்பது நடைமுறையாகிவிட்டது. நடை முறையில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சிகள் தாராளமாகக் காட்டப்படுகிறது. இரட்டை அர்த்தம் வரப் பேசுவது என்பது தற்போது விரசத்தினை அடிப்படையாக வைத்தே எழுதப்படுகிறது.
இதுபற்றிப் பலரும் எழுதியும் பேசியும் நிலைமை மோசமா கிறதே.

"மெகா சீரிஸ்" நாடகங்கள்

சரி சினிமா போகிறது என்றால் அடுத்துச் சீரழிப்பது இப் பொழுது நடைபெறும் "மெகா சீரிஸ்" நாடகங்கள். இவற்றில் அறிவை வளர்ப்பதற்கு என்ன இருக்கிறதோ தெரியவில்லை. சினிமாவில் ஓரங்கட்டப்பட்ட, அல்லது தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு நுழைந்து அதேசரக்குகளை பெயரைமாற்றி மக்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள். பார்ப்பதற்கு ஏமாளிகள் இருக்கும் வரை இதுவும் இருக்கத்தான் போகிறது. மேலும் இந்நாடகங்களால் தமக்குத் தேவையான பணிகளைக் கைவிட்டு வீணே நேரம்போக்கி உடல்நலமும் மனநலமும் கெட்டு அலைவதுதான் மிச்சம். போடப்படும் நாடகங்களில் மிகவும் படித்தவர்களாகக் காட்டப்படும் பாத்திரங்கள் சிலவேளைகளில் பாமரர்களிலும் குறைந்த விவரமுள்ளவர்களாகி விடுவர். சில கட்டங்களில் உரையாடல் மௌனமாக்கப்பட்டுவிடும். அது ஏற்ற வசனங்கள் கிடைக்காமையே முக்கிய காரணமென்றாலும், "சஸ்பென்ஸ்" என்று பெயர் சூட்டிவிடுவர். பின் தருணத்திற்கேற்ப கதையை மாற்றிவிடலாம். ஆனால், அநேக இடங்களில் அவைபற்றிப் பின்னர் எதுவுமே வருவதில்லை.
முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்ட, இதனால் நைந்து போயிருக்கும் எமது நாட்டவர்க்கு என்ன நன்மை என யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் இவை மத்தியிலே வளர்வதாலேயே அவர்களும் வளர்ச்சி குன்றிப்போய் இருக்கின்றனர். பல்கலைக்கழகங்களில் "ராகிங்" மோசமடைந்ததற்கு இதுவும் ஒரு காரணி என்றால் அதில் மறுப்பதற்கு இடமில்லை.
கேவலம் பக்திப்பாடல்களுக்குக்கூட சினிமாக்களில் வரும் விரசம் கலந்த அல்லது அம்மாதிரியான பாவம் கலந்த சொற்கள் கொண்ட இறக்குமதிக் குப்பைகள் வேண்டும். ஒலிநாடாவில் பதியப்பட்ட அப்பாடல்களை வாங்கிக் காது கிழிய ஒலிக்க வைத்து அனைவரையும் அவஸ்தைக்கு உட்படுத்துவதால் என்ன பலன்? உண்மையில் வணக்கத்திற்காகப் பாடப்பட்டவையல்ல அவை கள். வியாபார நோக்கில் அப்பாடல்கள் வருகின்றன. எம்மவரும் எதனையும் யோசிக்காமல் போட்டுவிடுகிறார்கள். எமது பிள்ளை கள் உறவினர் தெரிந்தவர் என்று எத்தனையோ பேர் நல்ல இனி மையான குரல் வளத்துடனும் பக்தி உணர்வைத் தட்டிஎழுப்பக் கூடியதான இயல்பினை வெளிக்கொணர்ந்தும் பாடக்கூடிய வர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தி எம்மை வளர்த் துக் கொள்வதோடு தேவையற்ற செலவீனங்களையும் தவிர்க்க லாம்.
சினிமாவில் பேசப்படும் வசனங்கள் மிகவும் கொடூரமானவை யாக, அர்த்தமற்றவையாக, ஆபாசமானவையாக, அமையக் கூடியவையாகவே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. கற்பனை யில் நினைத்தும் பார்க்க முடியாதபடி காட்சிகள் அமைவது இயற்கையாக இரசிக்கமுடிகிறதா? "மெரட்டுறாயா?" "செருப்பு பிஞ்சிடும்" "இழுத்து வைச்சு அறுத்துடுவேன்" "கழுத்திலை தலை இருக்காது" போன்ற வசனங்கள் சர்வசாதாரணம். காதலை வெளிப் படுத்துதல் என்பது மிகவும் மன எழுச்சியான விடயம்தான். "காதலிக்கிறேன்" என்று சொல்லக் கூச்சப்படுதல் நடைமுறையில் உண்டுதான். ஆனால், இன்று முழுக்க முழுக்கக் காதலை மைய மாகக் கொண்டே அநேகமான படங்கள் வெளிவருகின்றன. பெற்றோருடைய எதிர்ப்பினை நேராகவே சந்திப்பது போல அமை யும் படங்களில் அச்சொல்லைப் பாவிப்பதால் எதுவும் வந்துவிடப் போவதில்லை. காதலை வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் இன்றைய இந்திய தமிழ்ச்(?) சினிமாவில் "ஐ லவ் யூ" என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கில மென்றால் என்ன என்றே தெரியாத பாத்திரங்களானாலுஞ்சரி அப்படித்தான் சொல்லி உறுதிப்படுத்த வேண்டும். நன்றாக வேற்று மொழி தெரிந்தவர்களானாலும் உணர்ச்சி வசமான வேளைகளில் தமது தாய்மொழியிலேயே உரையாடுவார்கள். எதாவதொரு விட யத்தில் நியாயம் இல்லாதவிடத்து ஆனால், ஆங்கில அறிவு படைத்திருப்பின் எதிராளியை மடக்குவதற்கு அல்லது மழுப்பிச் சமாளிப்பதற்கே அம்மொழியை உபயோகிப்பது நாம் கண்ட ஒன்று.
முக்கிய விடயத்தில் புரியாதமொழியைப் பாவிப்பது மற்றவரை ஏமாற்றவே, என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சினிமாவைப் பின்பற்றி இப்போது சின்னத்திரையும் அவ்வாறே வந்து விட்டது.

சினிமாதான் இப்படி என்றால் சின்னத்திரை மக்களை முட்டா ளாக்குகிறது. எல்லாச் சின்னத்திரை நாடகங்களும் ஏதோ ஒரு வகையில் ஒரே கதைகளைத்தான் சொல்கின்றன. ஒரு வித்தியாசம் இடம் காலம் மாறிவருவது மட்டுமே. உதாரணமாக "சிறிசுகள் முதல் பெரிதுகள் வரை" அனைவரின் நாவிலும் நடனமாடிய நடிகை ஒருவரை முதன்மைப்படுத்தி ஒரு நாடகம் சிலகாலத்திற்கு முன் இங்கு சக்கை போடுபோட்டது. அந்நாடகத்தில் வந்த பாத்திரங்களில் 90 வீதமானவை நல்ல குணமுள்ள பாத்திரங்க ளல்ல. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஏதோஒரு தரமற்ற வாழ்க்கை இருந்துள்ளது. மேலும் வலுவற்ற காரணங்களுக்காகக் கதை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரிலேயே செல்வாக்கு மிக்க ஒரு வரை எதிர்க்கக்கூடிய துணிவும் திறமையும் உள்ளவராகக் காட்டப்படும் கதாநாயகியின் சொந்த வாழ்க்கையில் அவரது நிலையை காத்திரமற்றதாகக் காட்டப்படுவது, பொய்யான கார ணங்களுக்காகப் பயந்திருப்பது போல் காட்டப்படுவது ஆகியவை ஏற்கக்கூடியதாக அமையாது. அவர் பிள்ளைப்பேற்றைப் பெறாத வர் என்பது ஒரு எளிய வைத்திய பரிசோதனை மூலம் நிலை நாட்டி இருக்க முடியும். இந்நிலையிலேயே கதை முடிந்திருக்கும். ஆனால் பார்ப்பதற்குச் ஷசோணகிரிகள்| இருக்கும் போது இன்னும் வருடக்கணக்கிலும் இழுத்திருக்கலாம். இந்நாடகங்களை எழுது பவர்களும் ஏனோ தானோ என்று எழுதிவிட எம்மவரும் பார்த் துக்கொண்டே காலத்தை விரயமாக்குகிறார்கள்.
சினிமாவை மட்டும் அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகள்
நமது நாட்டைப் பொறுத் தமட்டில் கல்வி ஓரளவிற்கு அனைவருக்கும் கிடைக்கி றது. அண்மைக் காலங் களில் சிறிது பின்னடைவு இருப்பினும் நடுத்தர வயதி னர் அதற்கு மேற்பட்டோர் அநேகமாக நல்ல அனுபவ மும் அறிவும் கொண்டவர்க ளாக இருக்கிறார்கள். பெண்களும் அறிவுடையவர்களாகவே இருக்கிறார் கள். தமிழ் நாட்டின் நிலை இங் கில்லை. எனவே, இவைபற்றிச் சிந்திக்க வேண்டும். இங்குள்ள தமிழ் ஊடகங்கள், முக்கியமாகத் தமிழ் வானொலி, தொலைக்காட் சிகள் தமது நடைமுறைகளை மாற்றி நம்நாட்டுத் தயாரிப்புக்களுக்கு இடமளிக்கவேண்டும். தற்பொழுது அவைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் யாவும் ஏதோ ஒரு வகை யில் சினிமா என்ற ஒன்றை அடித்தள மாகக் கொண்டே தயாரிக்கப்படுகின் றன. எவ்வளவோ விடயங்கள் உண்டு. எமக்கு எவ்வகையிலும் பொருந் தாத எமது நாடு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஒவ்வாத விடயங்களை இறக்குமதி செய்து எமது தலையில் கட்டுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். இதனால் நாட்டின் பொருளாதாரம் பயன்பாட்டிற்கு உகந்ததாக்கப்படும். அங்கு அவர்கள் தமது நாட்டிற்கு ஏற்புடைய தான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கு கிறார்கள். சினிமாவையே எடுத்துக்கொண்டாலும் தற்பொழுது தமிழ் உபயோகம் குறைக்கப்பட்டு வேற்று மொழிகள் அதிலும் குறிப்பாக ஹிந்தி மொழி புகுத் தப்படுகிறது. இது அந்த நாட்டிற்குச் சரியானதாக இருக்கலாம் ஆனால், அவற்றால் எமக்கு எதுவித பலனும் இல்லை. மேலும் இதில் மிகவும் வேடிக்கை எதுவெனில் இங்கு காட் டப்படும் சில படங்களுக்குச் சிங்கள மொழி உப தலைப்புக்கள் கொடுக்கப் படுகின்றன. இதனால் மொழிபெயர்ப்பை நம்பிப்பார்ப்ப வர்களுக்கு கிடைக்கும் முழுமையான விளக்கம் தமிழ் ஒளிபரப்பில்கூடத் தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை யார் கவனிக் கிறார்கள்;. அந்த நாட்டின் சட்டம், நீதி, வாழ்க்கை முறைகள் வேறு, எமது நாட்டு முறைகள் வேறு. எனினும் எமது நாட்டின் தரமான படைப்பாளிகள் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முன்வரும் காலம்வரை சில பொதுவான விடயங்களை எடுத்து ஒலி, ஒளி பரப்புச் செய்யலாம். உதாரணமாக வைத்தியம், சமயம், இலக்கியம், விஞ்ஞானம், மொழிவழக்கு போன்ற பொதுவான விடயங்களில் கவனம் செலுத்தலாமே!.

இதனால் எமது சமுதாயத்தினை ஆரோக் கியமான நிலை தவறாதவாறு பாதுகாத்துக் கொள்ளலாம். சினிமாதான் உலகம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு, அவற்றைப் பார்த்துப் பின்பற்றும் கொள்கைகளைக் கைவிட்டு அது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதி எம்மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும்.
ஆம், எமது முன்னேற்றத்தை எட்ட வேண்டுமானால் பொழுதுபோக்கவும் அளவாகவே நேரத்தைச் செலவழிக்க வேண்டும். காலம் போனால் திரும்பாது, பருவத்தே பயிர் செய்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]