|
அது எந்த அளவுக்கு உண்மை...?
கணித்தமிழ் உலகில் பயனர் இடைமுகம் என்றொரு சொல் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.
User Interface என்றால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு எளிதில் புரியும்.
மற்றவர்களுக்கு?
கம்ப்யூட்டரில் பொதுவாக வெவ்வேறு மொழி சார்ந்தோ அல்லது வெவ்வேறு மென்பொருள்
சார்ந்தோ பலரும் பலவிதமான பயன்பாட்டு முறைகளுக்குத் தங்களைப்
பழக்கப்படுத்தியிருப்பார்கள். புதிய பயன்பாட்டு முறை அல்லது புதிய மென்பொருள்
புழக்கத்துக்கு வரும்போது ஏற்கனவே அவர்களுக்குள்ள பரிச்சயம் பாதிக்கப்படாமல்
பாதுகாப்பதுதான் பயனர் இடைமுகம்.
புதிய மென்பொருள் தயாரிப்புகளில் பயனர் இடைமுகம் இன்று முக்கிய அம்சமாகத்
திகழ்கிறது.
User Interface Engineering அல்லது Human Interface Engineering
என்பது கம்ப்யூட்டர் உலகில் இப்போது பரவலாகப் பேசப்படும் விசயம் என்று
சுட்டிக்காட்டுகிறார் முரசுஅஞ்சல் நிறுவனரும் மலேசியக் கணித் தமிழறிஞருமான
முத்து நெடுமாறன்.
மலேசியாவில் பொதுவாக ஒரே மென்பொருளில் ஆங்கிலம்,மலாய், தமிழ் ஆகிய மூன்று
மொழிகளிலும் கம்ப்யூட்டரை இயக்கும் வசதி இருக்கும்.இதற்கேற்பவே அங்கு புதிய
மென்பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.கணித் தமிழ் உலகமும் பயனர் இடைமுகத்தைக்
கருத்திற்கொண்டு புதிய மென்பொருள்களை வெளியிட வேண்டும் எனவும் அவர்
பரிந்துரைக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த இணைய மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு
அறிஞர்களில்,உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநரும் சிங்கப்பூர் தொழில்நுட்பப்
பல்கலைக்கழகப் பேராசிரியருமான அருண் மகிழ்நன் மற்றும் முத்து நெடுமாறனுடன்
தனியாக உரையாடியபோது,அவர்கள் கணித் தமிழ் சார்ந்த கவனத்திற்குரிய பல
விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
யுனிகோட் மட்டுமின்றிக் கணித்தமிழ் சார்ந்த இதர முக்கியப் பிரச்சனைகளிலும்
தமிழ்நாட்டு அறிஞர்களுக்கும் வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு
நிலவுவதாக ஒரு கருத்து நடமாடுகிறதே...அது உண்மையா? என்று கேட்டால், இல்லை...
என்று அமைதியாக,அழுத்தமாகச் சொல்கிறார் அருண் மகிழ்நன்.முத்து நெடுமாறனும் அதை
ஆமோதிக்கிறார்.
கணித்தமிழ் உலகில் இரண்டு வகையான சிந்தனைப் போக்குகள் உள்ளன.ஒன்று,தமிழ்நாட்டு
அறிஞர்கள் சார்ந்தது. இன்னொன்று,வெளிநாட்டு அறிஞர்கள் சார்ந்தது.எனினும்
தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இருவேறுபட்ட கருத்துகள் உண்டு. அதேபோல் வெளிநாட்டு
அறிஞர்களுக்குள்ளும் இருவேறுபட்ட கருத்துகள் உண்டு.இந்த வேறுபாடுகளெல்லாம்
அறிவு சார்ந்தவையே தவிர,தேசப் பாகுபாட்டால் எழுந்தவை அல்ல என்பதே உண்மை
என்கிறார் அருண் மகிழ்நன்.
தமிழ் மென்பொருள் தயாரிப்பை இரண்டு கட்டங்களாக வகைப்படுத்தலாம்.முதலாவது,
அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில்
எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பது.இரண்டாவது,Future Enhancement என்று
சொல்லக்கூடிய இருப்பதைவிட மேலும் வசதிகளைசிறீ கூட்டுவது.இப்போது நாம் இரண்டாவது
கட்டத்திலிருக்கிறோம் என்று வரையறுக்கிறார் முத்து நெடுமாறன்.
கம்ப்யூட்டரில் ஆங்கிலத்துக்கு நிகரான செயல்பாட்டு வசதியை அல்லது தகுதியைத்
தமிழால் பெற முடியுமா...?
நிச்சயமாகத் தமிழால் முடியும் என்று ஒருமித்த குரலில் சொல்கிறார்கள் அருண்
மகிழ்நனும் முத்து நெடுமாறனும் தமிழால் முடியும்...என்றாலும் தமிழகத்தால்
முடியவில்லை...அப்படித்தானே...என்றால், உரத்த சிரிப்பையே பதிலாகத்
தருகிறார்கள்.
தமிழால் முடியும் என்ற செய்தி எல்லோருக்கும் சென்றடைவதற்குத்தான் உத்தமம் பல
நிலைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார் அருண்.
கணித் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு உத்தமம் உரக்கச் சொல்லட்டும்.கணித் தமிழ் உலகின் பரப்பை விரிவடையச் செய்யும் மென்பொருள் வரவு இன்று எந்த
நிலையில் இருக்கிறது?Operating Systems என்று சொல்லப்படும் இயங்கு தளங்கள் மற்றும் இதர அடிப்படைத்
தேவைகள் சார்ந்த மென்பொருள்கள் தமிழில் இதுவரை சுமார் 45 வரை
வெளியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆரம்பகாலத்தில் தமிழில் ஒரு மென்பொருளின் விலை 18,000 முதல் 20,000 ரூபாய் வரை
கூட இருந்தது.படிப்படியாகக் குறைந்து இன்னும் 5,000 ரூபாய்க்கு வந்திருக்கிறது.அதற்கும் குறைந்த விலையிலும் மென்பொருள்கள் கிடைக்கின்றன.
இணைய அகராதி, கலைக்களஸசியம், சொல்திருத்தி, தமிழில் தேடுபொறி, தமிழில் இ-மெயில்,
விரும்பும் ஆவணங்களை அல்லது பக்கங்களை அப்படியே ஸ்கேன் செய்து விரும்பும்
விதத்தில் திருத்தியமைக்க உதவும் OCR,கணித்திரையில் தோன்றும் வரிகளைப் படிக்க
உதவும் UText Synthesizer-இப்படிப் பலவாறாகத் தமிழ் மென்பொருள் முயற்சிகள்
வெற்றி கண்டிருக்கின்றன அல்லது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போலத் தமிழிலேயே ஒரு பிரவுஸரை வெளிக்கொணர்வதற்கான
முயற்சி,தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்து வருகிறது.
யுனிகோட் அடிப்படையிலான குறியீட்டு முறைக்கும் அது சார்ந்த பயன்பாட்டுக்கும்
தமிழ் முழுமையாக மாறும் பட்சத்தில், ஆங்கிலத்தில் பிரபலமான google தேடு பொறி
மூலம் விரும்பும் தகவல்களை உடனடியாகப் பெறுவது போலத் தமிழிலும் பெறலாம்
என்கிறார்கள் கணித் தமிழ் அறிஞர்கள். அதாவது மரம் என்று தமிழில் அடித்து, அது
சார்ந்த இணையத் தகவல்கள் அனைத்தையும் ஆங்கிலம் போல ஒருங்கே பெற முடியும்.
Windows XP-ல் லதா என்ற பெயரில் ஒரு எழுத்து வடிவம் இருக்கிறது. அதன் மூலம்
இப்போதுகூட google தேடு பொறியில் தமிழ்ச் சொல்லைப் போட்டுத் தகவல்களைப் பெறலாம்.
ஆனால் ஆங்கிலம் போல ஒன்றுபட்ட முறைக்குத் தமிழ் இன்னும் மாறாததால் தகவல்கள்
சொற்பமாகவே கிடைக்கும்.
ஜாவா அடிப்படையிலான இயங்கு முறைகள் தமிழில் இன்னும் எளிதாக்கப்படவில்லை. ஜாவா
சார்ந்த இயங்கு முறைகள் தமிழில் பெருகப்பெருக, ஆங்கிலத்திற்கு நிகரான அதிநவீன
பயன்பாட்டு வாய்ப்புகள் அனைத்தையும் தமிழிலும் அனுபவிக்க முடியும் என்கிறார்கள்
அறிஞர்கள்.
தமிழ் மென்பொருள் முயற்சிகள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் சங்கத் தமிழிருந்து
நவீன இலக்கியம் வரை அனைத்தையும் இணையத்தில் ஏற்றும் முயற்சிகளும் தீவிரமாக
நடந்து கொண்டிருக்கின்றன.
ஸ்விட்சர்லாந்தைத் சேர்ந்த டாக்டர் கல்யாணசுந்தரம் மதுரைத் திட்டம்(Project Madurai)என்ற பெயரில் ஓர் இணைய முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார்.
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,காப்பியங்கள்,சைவ,வைணவ நூல்கள் என இதுவரை சுமார்
200வகையான தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார்
கல்யாணசுந்தரம்.
சென்னையில் காரைக்கால் அம்மையார் பாடல் புத்தகத்தை விலைக்கு வாங்குவதற்காகத்
தேடிப் பார்த்தேன்.கிடைக்கவில்லை என்று மோரீஷஸிருந்து ஒருவர் மெயில்
அனுப்பியிருந்தார்.எங்கள் இணையத்தில் அம்மையாரின் பாடல்கள் இருப்பதைத்
தெரிவித்துப் பதில் அனுப்பினேன். அவர் உடன் download செய்து பயன்படுத்திக்
கொண்டார்.இது இணையத்தால் மட்டுமே சாத்தியம் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்
கல்யாணசுந்தரம்.
கற்க கசடற...என்று ஒரு குறளை ஒருமுறை நான் கம்ப்யூட்டரில் டைப் செய்து
இணையத்தில் ஏற்றிவிட்டேன் என்றால் உலகிலுள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் அனைவரும்
அதை அப்படியே நகல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் கற்கக்
கசடற...என்று டைப் செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் இணையத்தின் பலன்களைப்
பட்டியலிடுகிறார்.
கல்யாணசுந்தரத்தின் ஆதரவுடன் தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage
Foundation)என்றொரு இணையத்திட்டமும் செயல்பட்டு வருகிறது.ஜெர்மனியைச் சேர்ந்த
கணித் தமிழ்ப் பொறிஞர்கள் கண்ணன் மற்றும் சுபாஷிணியின் முயற்சியில் உருவான
திட்டம் இது.
தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் இணையத்தில் ஏற்றிப் பாதுகாப்பது;வில்லுப்பாட்டு,கரகாட்டம் போன்ற தமிழர்களின் மரபார்ந்த கலாசார அடையாளஜகளை மல்டி
மீடியா முறையில் பதிவு செய்து இணையத்தில் உலா விடுவது போன்ற பணிகளை இக்குழு
செய்து வருகிறது.
ஜெர்மனியிலுள்ள பெர்ன் நூலகத்தில் மட்டும் 1000 தமிழ் ஓலைச் சுவடிகள்
இருக்கிறதாம்.இதைப்போல பிரிட்டிஷ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் நூலகங்களிலுள்ள தமிழ்
ஓலைச் சுவடிகள் மற்றும் தமிழகத்திலுள்ள ஓலைச் சுவடிகளின் பிரதிகளைப் பெற்று
இணையத்தில் ஏற்றும் முயற்சியில் இக்குழு தீவிரமாக இறங்கியிருக்கிறது.
மரபு குலையாமல்,உள்ளது உள்ளபடி தமிழைப் பாதுகாக்கும் அதிநவீன ஏற்பாடு.ஆகா...
அற்புதம்!இணையத்தில் தமிழின் வேகமான முன்னேற்றத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும்
இன்னொரு விசயம் எது தெரியுமா?
Open Source Software எனப்படும் தன்னார்வப்படைப்புகள்.பல்வேறு நாடுகளைஷ
சார்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர்கள் தாங்களாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் இ-மெயிலில்
கலந்துரையாடி, பொதுப்பயன்பாட்டுக்காகத் தயாரித்தளிக்கும் மென்பொருள்களே Open
Source Software எனப்படுகிறது.
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமே பெருமளவில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து யுனிக்ஸ் இயங்குதளம் புழக்கத்தில்
உள்ளது.யுனிக்ஸைத் தயாரித்த நிறுவனத்திருந்து வெளியேறிய கம்ப்யூட்டர்
வல்லுநர்கள் லினக்ஸ் (Linux) என்ற புதிய இயங்கு தளத்தைத் தயாரித்துப் பொதுப்பயன்பாட்டுக்காகப் புழக்கத்தில் விட்டார்கள்.குறுகிய காலத்தில் மைக்ரோசாஃப்ட்
மற்றும் இதர முதல் வரிசை பன்னாட்டு நிறுவனங்களை அசர வைக்கும் அளவுக்கு லினக்ஸின்
பயன்பாடு மிக வேகமாகப் பரவியது.
குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் எடுத்துப்
பயன்படுத்தக்கூடிய மென்பொருள் லினக்ஸ். விண்டோஸ் மற்றும் இதர நிறுவனத்
தயாரிப்புகள் போல பெரும் விலை கொடுக்க வேண்டியதில்லை.லினக்ஸ் மென்பொருளின்
மூலக் குறியீடும் பகிரங்கமாக்கப்படுவதால்,யாரும் தங்கள் தேவைக்கேற்ப
மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சீன மொழியில் லினக்ஸைக் கொண்டு வரும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழிலும் Mandrake என்ற பெயரில் லினக்ஸ் வரப்போகிறது.லினக்ஸ் மற்றும் விண்டோஸ்
பயன்பாடு இணைந்த லிண்டோஸ் ஏற்கனவே வந்துவிட்டது.
விண்டோஸுக்கு மாற்றாக ஒரு தன்னார்வப் படைப்பை உண்டாக்கும் முயற்சியில் சீனா,ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கெனவே கைகோர்த்துவிட்டன.
உலக நாடுகளின் அரசுகள் இப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளையே
பெரிதும் சார்ந்திருக்கின்றன.அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த இடத்தைத் தன்னார்வப்
படைப்புகள் பிடித்துவிடும் என்று உறுதியாகச் சொல்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகப்
பேராசிரியரும் தன்னார்வப் படைப்பியக்கத்தின் ஜெனரல் கவுன்சலுமான எபென் மாக்லென்.
தன்னார்வப் படைப்புகளில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று மைக்ரோசாஃப்ட்
மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்கள் புகார் கூறி வந்தன.தன்னார்வப் படைப்பாளிகள்
அதையும் தகர்த்துவிட்டார்கள்.
விண்டோஸ் எக்ஸ்பி சார்ந்த கட்டமைப்புக்குள் புகுந்து ஒரே ஒரு ஆவணத்தை யாராவது
எடுத்துக் கொடுத்தால் இவ்வளவு டாலர் பரிசாகத் தருகிறோம் என்று மைக்ரோசாஃப்ட்
சவால் விட்டது.கம்ப்யூட்டர் கில்லாடிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி, ஒன்றல்ல...
ஏகப்பட்ட ஆவணங்களை அம்பலப்படுத்திவிட்டார்கள்.அசந்துவிட்டது மைக்ரோசாஃப்ட்.
உலகளவிலான கம்ப்யூட்டர் சந்தை வெகுசில பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில்
சிக்காமல் தடுப்பதுடன், நவீன தொழில்நுட்பத்தின் பலன்களைக் குறைந்த விலையில்
எல்லோருக்கும் பரவலாக்கும் தன்னார்வப் படைப்புகள் உலகம் முழுவதும் பெரும்
வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தியக் கம்ப்யூட்டர் கட்டமைப்பை லினக்ஸ் சார்ந்ததாக மாற்றுவதற்கான வேலையை
வேகமாகச் செய்ய வேண்டும் என்று புதிய பாரதத்துக்கான கனவு ததும்பிய குடியரசுத்
தலைவர் கலாம் அழைப்பு விடுத்திருக்கிறார்.
Open Source Software -தொழில் நுட்பப் படைப்பாளிகளுக்கு ஒரு சமூக முகம் அவசியம்
என்பதைப் பறைசாற்றுகிறது.நாம் என்பதை நான் ஆகக் குறுக்கிவிட்ட உலகமயமாக்கல்
யுகத்தில்,கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சமூக முகத்தை மீட்டெடுத்துப்
புதுப்பித்திருக்கிறது.
கணித்தமிழ் உலகப் படைப்பாளிகளே... ஒன்றுபடுங்கள்!
இணையத்தமிழ் இனி வெல்லட்டும்!
- சுகதேவ் -
நன்றி: தினமணிகதிர
மேலே உள்ள
கட்டுரைகளில் காணப்படும் சில தவறுகள் பற்றி திரு.முத்து நெடுமாறன் அவர்கள்
தினமணி கதிர் இதழிற்கு அனுப்பிய அஞ்சலில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்..
தினமணி கதிர் இதழில் (7.9.03, 14.9.03, 21.9.03) "உத்தமம்' (உலகத் தகவல்
தொழில்நுட்ப மன்றம்) பற்றியும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தப்பட்டு
வரும் தமிழ் மொழிக்கான குறியீடுகளைத் தரப்படுத்த அந்த அமைப்பு ஆற்றி வரும்
பணிகள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டமைக்கு மிக்க
நன்றி. மனமார்ந்த பாராட்டுகள்.
அதே சமயம் அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஒன்றிரண்டு தகவல் பிழைகளை உங்கள்
கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதும் எங்கள் கடமையாகிறது.
உதாரணமாக, மைக்கேல் கப்ளான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில் அவர் இப்போதும் மைக்ரோ
சாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அவர் உத்தமத்தின் பணிக்குழு உறுப்பினர் என்ற முறையில், தமிழ் யூனிகோட் குறித்து
ஆராய்ந்து வரும் யூனிகோட் தொழில்நுட்பக் குழுவில் பங்கேற்று, இப்போதுள்ள
யூனிகோடுக்கு மாற்றாக வைக்கப்படும் திட்டத்தின் மீது விவாதங்கள் நடக்காதவாறு
தடுத்து வருகிறார் என்ற ரீதியில் கட்டுரைகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவர்
உத்தமத்தின் பணிக்குழுவில் இடம்பெறும் முன்னரே யூனிகோட் தொழில்நுட்பக் குழுவின்
முழுமையான உறுப்பினராக இருந்து வருகிறார்.
யூனிகோட் கன்சார்ஷியத்திற்கும் உத்தமத்திற்குமிடையே இரு தரப்பினரது முழு
சம்மதத்துடனே ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றி வருகிறார். அவர் விவாதங்களைத்
தடுக்கவில்லை. இப்போது நடைமுறையிலுள்ள தமிழ் யூனிகோட் பலவிதங்களில்
பயன்படுத்தப்பட்டு வருவது அதில் பெரிய குறைபாடுகள் இல்லை என்பதையே காட்டுகிறது
என்றுதான் சுட்டிக்காட்டுகிறார்.
இப்போதுள்ள யூனிகோடிற்கு மாற்றாக வைக்கப்படும் திட்டம் தமிழக அரசின் சார்பில்
முன் வைக்கப்படுவதால் அதைத் தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள கணினி அறிஞர்கள்
ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர் என்பதும் சரியல்ல. உத்தமம் அமைப்பில்
நாடு சார்ந்த கருத்து மோதல்கள் ஏதும் இல்லை. அது உலகு தழுவிய நோக்குடனேயே
செயல்பட்டு வருகிறது.
தற்போது நடைமுறையில் இருந்து வரும் தமிழ் யூனிகோட் குறைபாடு உடையது, தமிழுக்கு
நலன் தராது என்று எல்லாக் கணினித் தமிழ் அறிஞர்களும் கருதுவதைப் போன்ற கருத்து,
கட்டுரைகளில் தொனிக்கிறது. அது சரியல்ல. ஒரு சில கணினித் தமிழ் அறிஞர்களுக்குச்
சில தயக்கங்கள் இருந்த போதிலும், பல கணினி அறிஞர்கள் அதை ஏற்றுப்
பயன்படுத்தியும் வருகிறார்கள்.
தற்போதுள்ள யூனிகோடிற்கு மாற்றாக வைக்கப்படும் திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு புதிய
பணிக்குழுவையும் உத்தமம் அமைத்து வருகிறது. ஒருதலைப்பட்சமாக உத்தமம் முடிவுகள்
எடுக்காது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் வளர்ச்சி காண நீங்கள் காட்டிவரும்
ஆர்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
முத்து நெடுமாறன்
தலைவர், உத்தமம்,
சிங்கப்பூர். |