|
நாம் ஒருவரை ஒருவர்
புரிந்த கொள்வதற்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு கருத்தை
சொல்வதற்கும் மொழி அவசியமல்லவா. மொழிக்கு வடிவம் கொடுக்கப்படும்
போது அம்மொழி முழுமை பெறுகின்றது. இவ்வுலகில் உள்ள மக்கள்
முக்கியமாக மொழியின் அடிப்படையில் தான்
வித்தியாசப்படுகின்றார்கள். எது எப்படி இருப்பினும் இன்று
கணினிப் பாவனையானது எல்லாவற்றையும் கடந்து எல்லா மொழிகளுக்கும்
பொதுவானதாகவே இருக்கின்றது.
கணினி விடயத்தில் பொதுவாக ஆங்கிலமே பாவனையில் உள்ளபோதிலும்
ஒவ்வொரு மொழியினதும் தத்தமது மொழியில் அதனது உபயோகத்தைப்
பெறமுயற்சிக்கின்றார்கள். எதனையும் தத்தமது தாய் மொழியில்
காணும்போது கேட்கும்போது பார்ப்பவர்களும் கேட்பவர்களும்
நிச்சயமாய் பரவசம் அடைகின்றார்கள் என்பது உண்மை. எல்லோரும் ஒரு
மொழியைப் பயில்வது என்பது இயலளவில் சாத்தியமற்றது. அந்தவகையில்
தான் கணினியிலும் குறித்த ஒரு மொழியின் பயன்பாட்டை மாத்திரம்
புகுத்துவது சாத்தியமற்றது.
எல்லா மொழியினரும் கணினியைப் பயன்படுத்த வேண்டும், அதன்
பயன்பாட்டைப் பெற வேண்டும். இதில் படித்தவர், பாமரர் என்ற
வேறுபாடு காட்ட முடியாது. இனிவரும் உலகம் கணினியின்றி இயங்கவே
முடியாது என்பது மெய்ப்பிக்கப்ப்டடு வருகின்றது. ஆங்கிலேயரால்
உருவாக்கப்பட்ட கணினியினை உடனடியாக முற்றுமுழுதாக ஒவ்வொரு
மொhழியிரும் தத்தமது மொழிக்கு ஒத்திசைவாக்கம் செய்வது சிறிது
கடினம் எனினும் முடியாத காரியமில்லை.
இதற்கிடையில் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். கணினிக்கு
இன்று உலகில் உள்ள எந்த மொழியும் தெரியாது. அதற்கு ஒரே ஒரு
மொழிதான் விளங்கும்.அந்த இயந்திர மொழி (Machine
Language)மூலம்
தான் அதற்கு ஆணையினை வழங்க முடியும். அதற்கு ஊடகமாக ஒருவேளை
ஒவ்வொருவரும் தத்தமது மொழிகளை பயன்படுத்த முடியும்.இந்த மனித
மொழிகளுக்கும் இயந்திர மொழிக்;கும் இடையில் கணினி மொழிகள்
எனப்படும்
Programming Languages பயன்படுகின்றன.
இவை ஒரு புறம் நிற்க சீனர்கள் தமது கணினியானது தங்கள் மொழியில்
வெளியீடுகளைத் தர வேண்டும், உள்ளீடுகளைப் பெறவேண்டும் என்று
முயற்சிக்கின்றார்கள். அது போல் ஜேர்மனியர்கள் ஜேர்மன் மொழியலும்,
பிரான்சு தேசத்தவர் பிரெஞ்சு மொழியிலும், தமிழர் தமிழ்மொழியிலும்
கணினியின் உள்ளீடுகள், வெளியீடுகள் இருக்க வேண்டும் என
விரும்புகின்றார்கள்.
கணினி எமது மொழியில் வழங்கும் ஆணைகளை பெற்றுணர்ந்து எமது
மொழியிலேயே வெளியீடுகளை தரவேண்டும் என ஒவ்வொரு மொழிக்காரர்களும்
முயற்சிக்கின்றார்கள். அதில் பெருமளவில் வெற்றி பெற்று
வருகின்றார்கள். ஆயினும் வெறுமனே ஒரு மொழிப் பிரயோகமும்
கணினியில் சாத்தியமற்றது. குறித்த ஒரு தகவலில் ஒரு சைனீஸ் (Chinese)
சொல் சைனீஸ் மொழியில் இருக்க வேண்டும் எனில் அதற்கும் கணினி
ஒத்திசைவாக்கம் பெற்றிருக்குமாயின் எவ்வளவு நன்றாயிருக்கும்.
நிச்சயமாய் இது சாத்தியமானதொன்றே. இதற்காக நாம் பல்வேறு
எழுத்துருக்களை (Font) கையாளுகின்றோம். இந்த கட்டுரையினையே
உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இக்கட்டுரை அச்சில் வருவதற்காக
கணினி மூலம் அச்சு எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால்
கட்டுரை வெறுமனே தமிழில் மாத்திரம் இல்லையே. இடையிடை ஆங்கிலச்
சொற்களும் பாவிக்க வேண்டி இருக்கிறது. அப்போது என்ன செய்வது
தமிழ் பகுதியை தமிழிலும், ஆங்கிலப் பகுதியினை ஆங்கிலத்திலும்
ரைப் செய்ய வேண்டி இருக்கின்றது. அதற்காக அந்தந்த மொழி
எழுத்துக்களை தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.
இன்று ஒவ்வொரு மொழிக்கும் பல்வேறு எழுத்துருக்கள்
வெளிவந்திருக்கின்றன.வெறுமனே ஆங்கிலத்துக்கு ஒன்றும் தமிழிற்கு
ஒன்றும் என எழுத்துருக்கள் இல்லை ஒவ்வொரு மொழிக்கும் ஏராளமான
எழுத்துருக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஏன்? நிச்சயமாய்
காரணம் இருக்கின்றது. நாம் ஒரே சட்டையை எப்போதும் அணிகின்றோமா?
பல்வேறு இனத்தவரும் தத்தமது பாரம்பரிய அல்லது தம்மை
அடையாளப்படுத்தக் கூடிய உடை அணிகின்ற போதிலும் அவ்வாறே ஒரே
உடையினையா அணிகின்றார்கள்? குறித்த பாரம்பரிய உடையில் பல்வேறு
வடிவமைப்பு வித்தியாசங்கள் இருக்குமல்லவா அது போலவே ஒவ்வொரு
மொழியிலும் தனக்குரிய எழுத்துருக்களில் பல்வேறு
வடிவமைப்புக்களில் புதியபுதிய எழுத்துருக்களை உருவாக்கின்றன.
அதாவது ஒவ்வொரு மொழிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்கள்
இருக்கின்றன.
சரி இந்த மொழிகளை அதனுள்ள எழுத்துக்களை கணினிக்குள் உள்ளிட
வேண்டுமல்லவா அதற்கு சாதனம் இருக்கின்றது. அது தான்
‘விசைப்பலகை’ (Key
Board) அதில் ஒவ்வொரு விசை (
Key ) யினை
அழுத்தும் போது அந்த விசைக்குரிய எழுத்து இதுதான் என்று கணினி
புரிந்து கொள்ளும் அதனை உள்வாங்கும்.சாதாரணமாய் விசைப்பலகையில்
எத்தனை விசைகள் இருக்கும் 105 அல்லவா ? ஒரு மொழியில் எத்தனை
எழுத்துக்கள் இருக்கக் கூடும் ? இது மொழிக்கு மொழி வித்தியாசம்.
இதற்கும் தீர்வு உண்டு. சில விசைகளை சேர்த்து குறித்த இன்னும்
ஒரு விசையை அழுத்தினால் சில எழுத்துக்களை புரிந்து கொள்ளும்
திறனை கணினி கொண்டிருக்கின்றது. அல்லது குறித்த விசையினை அழுத்தி
பின்னர் விசைப்பலகையினை பயன்படுத்தும் போது விசைகள் யாவும்
குறித்த எழுத்துக்களையும் மற்றொரு விசையை அழுத்தியபின்
விசைப்பலகையினை பயன்படுத்தினால் மற்றொரு தொகுதி எழுத்துக்களையும்
புரிந்து கொள்ளும் வண்ணம் விசைப்பலகைகள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் விசைப்பலகைகள்
உருவாக்கும் போது கவனிக்கப்படுவதனால் இந்தப்பிரச்சனைகளையும்
தீர்வு காணப்பட்டு விட்டது.
உண்மையில் விசைப்பலகையில் விசை ஒன்றை அழுத்தும் போது குறித்த
எழுத்து நேரடியாக கணினியில் உள்ளிடப்படாது அந்த விசைக்குரிய
ASCII
இலக்கம் கணினிக்குள் செலுத்தப்படுகின்றது. அதனுடன்
அவ்வேளை உபயோகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் எழுத்து
மென்பொருளிற்கு ஏற்ப வெளியீடு வருகின்றது.சாதாரண ஆங்கில
விசைப்பலகை ஒன்றில் ஆங்கில எழுத்தான A யினை அழுத்தும் போது (Caps
Lock
அழுத்தப்பட்டிருக்கையில்)
97 என்ற
ASCII இலக்கம்
கணினிக்குள் வழங்கப்படும் அவ்வேளை
Arial
என்ற ஆங்கில எழுத்துரு
உபயோகத்தில் இருப்பின் அது “A” ஆகவும்
Bamini என்ற எழுத்துரு
உபயோகத்தில் இருப்பின் “யு” ஆகவும் வெளியீடு கிடைக்கும்.
வெளியீடானது எழுத்துரு மென்பொருளில்தான் தங்கியிருக்கின்றது
என்பது இதில் இருந்து புலனாகியிருக்கும். அநேகமாக தற்போது
புழக்கத்தில் உள்ள எழுத்துக்கள் சாதாரண விசைப்பலகைக்கு ஏற்பவே
அமைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த யுளுஊஐஐ எண்களே
திரும்பத்திரும்ப பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குரிய
வெளியீடுகள் இப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொரு மொழி
எழுத்துக்களும் நிர்ணயிக்கின்றன.
உதாரணமாக
Arial எழுத்துருவை உபயோகித்து
WELCOME என்ற சொல்
தட்டச்சு செய்யப்பட்டிருக்கின்றனது என வைத்துக் கொள்வோம்.
கணினிக்குள் உள்ளீடுகள் வழங்கப்படும் போது குறித்த விசைக்குரிய
ASCII இலக்கங்களே வழங்கப்பட்டிருக்க முடியும். அவை
Arial
எழுத்துக்கள் காரணமாக
WELCOME ஆக தெரிகின்றது. இதே சொல்லை
Bamini என்ற தமிழ் எழுத்துருவிற்கு மாற்றுவோம் எனில் எவ்வாறு
அமையும் ‘றுநுடுஊழுஆநு’ என அமையும். சரி “வணக்கம்” என்ற
Bamini
எழுத்துருவினு}டாக பெறப்பட்ட சொல்லை
Arial ஆங்கில
எழுத்துருவிற்கு மாற்றுவோமெனில் என்ன வரும் “tzf;fk்” என அமையும்.
ஆகவே குறித்த
ASCII இலக்கம் ஒவ்வொரு மொழி எழுத்திலும்
வித்தியாசமான வடிவங்களைத் தருகின்றது என்பது தெளிவாகின்றது.
ஆகவே குறித்த எழுத்துருவில் வைத்து ரைப் செய்யப்பட்ட சொல் அல்லது
சொற்கள் அதே மொழி எழுத்துரு மூலமே சரியாக வாசித்தறியப்பட
முடியும். சில வேளைகளில் ஒரே மொழிக்குள்ளேயே குறித்த யுளுஊஐஐ
இலக்கத்துக்கு வேறு எழுத்தை தரக்கூடிய வகையிலும் சில
எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது இங்கு கவனத்தில்
எடுத்துக் கொள்ளாமல் விடுவதே மேல் இவற்றைத் தான்தோன்றித்
தனமானமான எழுத்துருக்கள் என நாம் கொள்ளலாம்.
சரி நாம்
Bamini
என்ற எழுத்துருவில் ரைப் செய்த சொல்லை
Bamini
எழுத்துரு கொண்டுதான் வாசித்தறிய முடிகிறது என மேலே கண்டோம்.
அப்படியாயின் வாசித்தறியப்படவேண்டிய கணினியிலும் குறித்த
எழுத்துரு இருப்பது அவசியமாகிறது. சாதாரணமாக ஒவ்வொரு கணினியிலும்
பிரதானமாக (By
Default) ஒரே ஒரு எழுத்துருவே பாவனையில்
இருக்கும். மற்றயவை தேவைக்கேற்ப தெரிவு செய்யப்பட வேண்டும்.
குறித்த மொழியிலமைந்த கோப்பை திறக்கும் போது பிரதானமாக
உபயோகத்தில் உள்ள மொழி அதே மொழியில் இருந்தால்தான் ஆவணத்தை
வாசித்தறிய முடியும். இல்லையெனில் அதனை ரைப் செய்யப்பட்ட மொழி
எழுத்துருவிற்கு மாற்ற வேண்டிய தேவை எழும். அவ்வாறு மாற்றப்படும்
போது கூட அவதானம் அவசியமாகின்றது. காரணம் ஆவணத்தில் பல்வேறு
மொழிகள் கலந்து ரைப் செய்யப்பட்டிருப்பின் குறித்த பகுதிகளை
கண்டுபிடித்து அந்தந்தப் பகுதிகளை கண்டுபிடித்து உரிய மொழி
எழுத்துருக்களுக்கு மாற்றப்படவேணடி இருக்கும். குறித்த மொழி
எழுத்துரு கணினியில் இல்லையென்றால் மிகப்பெரிய
பிரச்சினையாகிவிடும். இவற்றை எப்படி சமாளிப்பது? தகவல்
தொழில்நுட்பவியலாளர்கள் என்றும் சளைத்தவர்களல்லர்; அதற்கும்
தீர்வு கண்டிருக்கின்றார்கள் அதுதான் யுனிக்கோட்
எழுத்துரு(Unicode
font).
அப்பாடா ஒருவாறு கட்டுரையின் பிரதான பகுதிக்கு வந்துவிட்டான்
என்று நீங்கள் பெருமூச்சு விடுவது எனக்கு கேட்கிறது. இந்தளவும்
சொல்லாமல் நேரடியாக யுனிக்கோட் எழுத்துரு என்று கதைஅளக்க
ஆரம்பித்திருந்தால் எல்லாம் சுத்தசூனியம் போல் இருந்திருக்கும்
இனிப் புரியும் என எண்ணுகிறேன்.
இந்த யுனிகோட் எழுத்துரு சம்பந்தமான பொதுவான முடிவுகள் யாவும்
யுனிக்கோட் அமைப்பினால் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களால்
விசைப்பலகைகளில் வெளிப்படும்
ASCII இலக்கங்கள் குறித்த
மொழிகளுக்கு வரையறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது
ஒவ்வொரு
ASCII இலக்கமும் குறித்த எழுத்துக்கு என
வரையறுக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு மொழியில் உள்ள
குறித்த எழுத்துருக்களுக்கென இலக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அந்த இலக்கம் பிறிதொரு மொழியின் ஒரு எழுத்துக்கு உபயோகிக்க
முடியாது. உதாரணமாக 65 என்ற இலக்கம் ‘ய’ என்ற எழுத்துக்கு என
ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனை உள்ளிட்டால் வெளியீடாக ‘ய’ என்ற
எழுத்தே வரக்கூடியதாக யுனிக்கோட் எழுத்துருக்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றன,அமைக்கப்படவேண்டும் அவ்வாறு இல்லையெனில்
அது யுனிக்கோட் எழுத்துரு அல்ல.அப்படியாயின் தமிழ் எழுத்துக்கள்
எப்படி வெளியீடாகப்பெறுவது?.வழி இருக்கின்றது.தமிழ்
எழுத்துக்களுக்கு என தற்போது குறித்த
ASCII இலக்கங்கள் இந்த
அமைப்பினால் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 2946 - 3071 வரையானவை
தமிழ்மொழிக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒதுக்கப்பட்ட இடங்கள்
போதாது, என்பது ஒரு சாராரின் வாதமாயிருக்க ஒதுக்கப்பட்ட
இடங்களிலும் பிரச்சினை இருப்பதும் வேறுகதை.
தமிழுக்கு மட்டுமா இல்லை அநேக மொழிகளுக்கு இவ்வாறு ஒதுக்கப்பட்டு
வருகிறது. சிங்களத்திற்கும் 400 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
தற்போது யுனிக்கோட் எழுத்துருவிற்கான இடங்கள் வேறுவேறு
மொழிகளுக்கு கிடைத்து வருகிறது மேலும் பெற்றவர்களும் கூடுதலான
இடங்களைப்பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். எது
எப்படியாயினும் இதன் பயன்பாடும் பழைய எழுத்துருக்களை யுனிக்கோட்;
எழுத்துருக்களாக மாற்றுவதற்குமான பணிகளும் மிகவும் மந்த கதியில்
தான் நடைபெற்று வருகின்றன. என்பது மறக்க முடியாத உண்மை.
இந்த யுனிகோட் எழுத்துருக்களின் பயன்பாடு எப்படி இருக்கும்?
நியாயமான கேள்வி. ஒரு கணினியில் உள்ள எழுத்துருக்கள் யாவும்
யுனிக்கோட் எழுத்துக்கள் அல்லது ஒரு யுனிக்கோட் எழுத்துரு
ஒன்றுதான் என வைத்துக்கொள்வோம். அக்கணினியின் பிரதான (Default)
எழுத்துருவாக ஒரு யுனிக்கோட் எழுத்துரு இருக்கின்றது என்று
வைத்துக் கொள்வோம். ஏற்கனவே ஒரு யுனிக்கோட்டில் ரைப்
செய்யப்பட்ட கோப்பை திறக்கும் போது அது எந்த வடிவ யுனிக்கோட்டில்
ரைப் செய்யப்பட்டிருப்பினும் இப்போது பார்க்கக் கூடியதாக
இருக்கும். காரணம் இங்கு வெளியீடானது எழுத்துரு மென்பொருளினு}டு
பெறப்படும் குறித்த
ASCII இலக்கத்திற்குரிய குறித்த எழுத்து
மாறுபடாமல் இருக்கும்.
காரணம் என்ன? நாம் ‘Helloஅம்மா" என்ற சொற்களை யுனிக்கோட்
எழுத்துருவில் ரைப் செய்யும் போது ஆங்கிலச்சொற்களுக்காக
72,101,108,108,111 என்ற
ASCII இலக்கங்கள் உள்ளிடக்கூடிய
விசைகளினையும் அம்மா என்ற சொல்லிற்காக 2949,2990,3021,2990,3006
என்ற
ASCII இலக்கங்களை உள்ளிடக்கூடிய விசைகளையும்
அழுத்தியிருப்போம். எனவே வெளியீடும் “Hello அம்மா”என்று எவ்வித
மாற்றமுமின்றி வருவதில் ஆச்சரியமில்லைத்தானே.
ஆயினும் இந்த யுனிக்கோட் எழுத்துக்களுக்கு
Windows 98/95/Me ஆகியன ஒத்திசைவாக்கம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன எனினும்
பின்னர் வந்த அநேக ஒப்பரேட்டிங் சிஸ்டங்கள்(Operating
System)
இந்த
Unicode எழுத்துருவுக்கு ஒத்திசைவாக்கப் பெற்று
இருக்கின்றன.
Microsoft நிறுவனம் தனது புதிய வெளியீடுகளான
விண்டோஸ் XP விண்டோஸ் 2000 களில் இவ்வாறான யுனிக்கோட்
எழுத்துருக்களை சேர்த்தும் வருகின்றது. இங்குள்ள ஒரே பிரச்சினை
எல்லா மொழிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு யுனிக்கோட்
எழுத்துருக்கள் உருவாக்கப்படும் போது அவற்றின் கொள்ளளவு
அதிகரிக்க வாய்ப்புண்டு.
அதற்கு தீர்வாக குறித்த மொழிகளுக்கான எழுத்துக்களை மாத்திரம்
அவற்றின் இலக்கங்களுக்குரிய இடங்களில் கொண்ட தனித்தனி யுனிகோட்
எழுத்துருக்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அவற்றை யாதேனும்
எல்லா எழுத்துக்களுக்குமான யுனிக்கோட் எழுத்துரு மூலம்
வாசிக்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் மைக்ரோ சொப்ட்
நிறுவனம் லதா என்ற தமிழ் யுனிக்கோட் எழுத்துருவை தனது புதிய
ஒப்பரேட்டிங் சிஸ்டங்களில் அறிமுகப்படுத்திவருகின்றது.
இனிவரும் காலங்களில் எல்லா எழுத்துருக்களும் யுனிக்கோட்
எழுத்துருக்களாக மாற்றப்பட்டுவருமாயின் நாம் எந்த எழுத்துருவைப்
பாவித்தும் எந்த மொழிச் சொல்லையும் ரைப் செய்ய முடியும். அதேவேளை
எந்த எழுத்துருவைப் பாவித்தும் அதனை வாசித்தறியவும் முடியும்.
இதன் மூலம் ஒரு பொது உடன்பாட்டுக்கு கணினிப்பயன்பாடு வரும்
என்பதில் ஐயமில்லை. இன்னுமொரு முக்கிய பிரச்சனை
ASCII
இலக்கங்கள் இவ்வாறு மொழிகளுக்குரிய எழுத்துக்களுக்காக
வழங்கப்பட்டுக்கொண்டிருக்க எவ்வாறு விசைப்பலகைகள் அமையும்
என்பதுதான். உண்மையாக இது ஒரு பிரச்சனைதான். அதுவும் யுனிக்கோட்
எழுத்துருக்கள் ஒரு இறுதிவடிவம் அதாவது எல்லா மொழிகளையும்
உள்ளடக்கியதாக பெறும் வரையில் விசைப்பலகைகளை இந்த யுனிக்கோட்டில்
ரைப் செய்வதற்கு ஏதுவாக வடிவமைப்பதற்கு தயாரிப்பாளர்கள்
பின்னிற்பது தவிர்க்க முடியாததொன்று பல நாடுகளில் இந்த
யுனிக்கோட் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப்படி எல்லா மொழி எழுத்துக்களையும் வெளியீடாகத் தரக்கூடிய
வகையில் விசைப்பலகைகளை அமைப்பது என்பது எவ்வாறு சாத்தியமாகும்
என நீங்கள் எண்ணலாம். இது பற்றி முன்னரேயே விபரித்திருந்தேன்.
குறித்த
ASCII இலக்க தொகுதிகளுக்கு ஒத்திசைவாக்கம் செய்யாமல்
மேலதிக விசைகளை விசைப்பலகையில் சேர்ப்பதன் மூலம் அவற்றை
அழுத்திவிட்டு குறித்த மொழியில் ரைப் செய்ய ஏதுவாக இருக்கும்.
இது தொழில் நுட்ப பிரச்சினை அது நாளடைவில் சீர்
செய்யப்படக்கூடும்.
தற்போது சிறு செயலிகள் உருவாக்கப்பட்டிக்கின்றன. அவை நாம்
சாதாரண விசைப்பலகையில் சாதாரண பழைய தமிழ் எழுத்துருவில் ரைப்
செய்பவற்றை யுனிக்கோட்டுக்கு மாற்றியமைக்க வல்லன. அவ்வாறு
மாற்றம் செய்த பின்னர் அந்த ஆவணத்தை யுனிக்கேட் எழுத்துருகொண்டு
படித்தறிய முடியும். இந்த வகையில் தமிழிற்கென
உருவாக்கப்பட்டிருக்கும் முரசு அஞ்சல், பொங்குதமிழ் ,கீமான்
செயலிகளினைக் குறிப்பிடலாம்;. இந்த பொங்குதமிழ் செயலி
www.suratha.com/reader.htm என்ற முகவரியில் பெறலாம். முரசு
அஞ்சலை
www.murasu.com
இல் பெறலாம்.
தொடர்ந்து யுனிக்கோட்
தமிழ் பற்றி விரிவான தகவல்களை ஆராய்வோம். |