|
உலகத்
தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின்(உத்தமம்)
இலக்கைக்கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் இணையக்கருத்தரங்கு
இன்று(06-06-2004)வெகு சிறப்பாகவும் நூற்றுக்கணக்கிலான
ஆர்வலர்களின் பங்கேற்புடனும் கொனிமாரா விடுதியில்
நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உத்தமம்
அமைப்பின் தலைவர் திரு முத்து நெடுமாறன் சிறப்புரையாற்றியதுடன்
செய்முறை விளக்கங்களுடன் கூடிய விளக்கவுரையினையும்
நிகழ்த்தினார்.எதிர்பாராத அளவில் ஆர்வலர்கள்
பங்கெடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.கேள்வி
நேரத்தில் தமிழ் கலைச்சொல்லாக்கம் பற்றிய சர்சைக்குரிய
கேள்விகளுக்கம் யுனிக்கோட் எழுத்துரு முறைமை பற்றிய
கேள்விகளுக்கும் திரு.முத்து நெடுமாறன் அவர்கள் சளைக்காமல்
பதிலளித்தார்.இவருடைய ஜனரஞ்சகமான உரையின் மூலம் பல பயனுள்ள
விடயங்கள் தெளிவாக்கப்பட்டதுடன்,தமிழில் தகவல் தொழில்நுட்ப
வளர்ச்சி குறித்து பல புதிய இளம் ஆர்வலர்கள் திருப்திகரமான
தகவல்களை பெற்றுச்சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் கணினி,தமிழ் துறைசார்
ஆர்வலர்கள் கலந்துகொண்டதுடன் தமக்கிடையே அவர்கள் தொடர்புகளை
ஏற்படுத்திக்கொண்டதையும் அவதானிக்கமுடிந்தது.கருத்தரங்கில்
சிறப்புரையாற்றவிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள்
சுகவீனம் காரணமாக வருகைதராத போதிலும் தனது உரையினை
எழுத்து
வடிவில் அனுப்பியிருந்தார்.அவ்வுரையில் மைக்ரோசொப்ட்
நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழ் கலைச்சொல் அகராதி
திட்டத்திற்கு விமர்சனத்துடன் கூடிய சிபார்சுகள் சிலவற்றை
செய்திருந்தார்.இவரது இந்த உரை பலரையும் கவர்ந்திருந்தது.
திரு முத்து நெடுமாறனுக்கு இலங்கை உத்தமம் சார்பில்
நினைவுக்கேடயம் ஒன்றும் வழங்கப்பட்டது. தமிழ்
விசைப்பலகை,யுனிக்கோட் எழுத்துரு,தமிழ் உள்ளக
அபிவிருத்தி.உத்தமத்தின் நிலைப்பாடுகள் தமிழ் தகவல் தொழில்
நுட்பத்தின் நேற்றைய இன்றைய நாளைய நிலைகள் இன்றுள்ள பிரச்சனைகள்
எனப்பலவாறான விடயங்கள் இவரது கருத்துரையில் தொனித்தன.இவரது
உரைபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் எமது தளத்தில்
பிரசுரிக்கப்படும்.இக்கருத்தரங்கில் கைத்தொலைபேசிகளில் தமிழ்
மூல சிறு செய்திபரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பற்றிய
அறிவிப்பொன்றை அவர் செய்தது மட்டுமல்லாமல் எவ்வாறு
இதனைப்பயன்படுத்துவது எனவும் செயல் விளக்கம் கொடுத்தது
அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.ஆகஸ்ட் மாதம் இத்தொழில் நுட்பம்
வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.பத்திரிகையாளர்கள்
இந்த செயல்முறை விளக்கத்தை நிழல்படம் எடுப்பதற்கு அவர்
அனுமதிமறுத்திருந்தார்.
இலங்கையின் வடபகுதியில் இயங்கும் வன்னிரெக்,யாழ் ரைற்ரா
கணினிப்பயிற்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து கூடியளவிலான
மாணவர்கள் ஆர்வலர்கள் பங்கெடுத்திருந்தனர். இந்நிகழ்வுக்கு
தினக்குரல் பத்திரிகை,மெட்ரோ பொலிஸன்,கம்ப்யூட்டர் போக்கஸ்
கணினிச்சஞ்சிகை,ஐசிரிஏ நிறுவனம்,வெப்தமிழன்.கொம் ஆகியன அனுசரணை
வழங்கியிருந்தன.இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமும் தனது
அனுசரணைகளை வழங்கியிருந்தது மிகச்சிறந்த முறையில் இலங்கை
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த ஆர் ஜோகராஜன்
நிகழ்ச்சியின் முதல் பகுதியையும் பின் மயூரன் பிற்பகுதியினையும்
தொகுத்து வழங்கியிருந்தனர்.கொழும்பில் ஒரு கருத்துப்பரிமாற்றக்
குழுவை அமைப்பதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டது.மொத்தத்தில் காலை
9 மணிக்கு ஆரம்பித்த கருத்தரங்கு சூடும் சுவையும்(மதிய உணவும்
கூட) மிகுந்ததாக மாலை 4 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது .
இக்கருத்தரங்கில் இடம்பெற்ற சுவையான சம்பவங்கள் சிறப்புரைகள்
போன்ற விடயங்கள் விரைவில் நிகழ்விற்கு உத்தியோகபூர்வ இணையத்தள
அனுசரனை வழங்கிய வெப்தமிழன்.கொம் தளத்தில் பிரசுரிக்கப்படும் |