|
சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம்
பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு
விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை.
நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான
சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும் எம்மவர்
ஒருவரைப் பார்த்ததும் மெல்லிய சோகத்தனம் மனத்தில் தோன்றத்தான்
செய்தது.
ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் கதை சற்று வேறு கோணத்தில்
திரும்பியது.
ராதிகா வானொலியில் பாட்டைப் போட்டு விட்டுச் சமைக்கும் விதமும்,
கறியை கையில் ஊற்றி சுவை பார்க்கும் விதமும் மிகவும்
யதார்த்தமாகவும், ராதிகாவின் முகம் ஏதோ ஒன்றை இழந்த அதிருப்தியான
தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தன.
குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு சிறு பொறியொன்றே போதும்.
இங்கு அது நண்பனின் வடிவில் பஞ்சாபியாக வந்திருந்தது. ஆனாலும் ஒரே
ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் தொலைத்து
விட்டுக் குமுறி, கறியை எரிய வி;டுமளவுக்கு பாரது}ரமானதாக
இருக்காது.
அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல்
தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது.
புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கு வருவதற்கான புரிதல் நிலைக்கே அவகாசம்
இல்லாமல், அவர்களையும் தாண்டிய குடும்பச் சூழ்நிலைகளால் பணம் என்ற
ஒன்றைத் தேடி வேலை வேலை என்று ஆண் திரியும் போது, ராஜவாழ்க்கை,
காதல் கணவன்... என்ற கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வந்து
தனிமையே துணையாகி, அதனால் ஏற்படும் விரக்தியில் பெண் வாடிக்
கொண்டிருப்பது.. புலத்தில் இன்று நேற்றல்ல. இது தொடர்கதையாய்..
தொடர்கிறது. அதன் ஒரு பதிவுதான் நிழல்யுத்தம்.
இயந்திரங்களின் நடுவே இயந்திரமாகிப் போனவர்தான் பாலகிருஸ்ணன். அவரை
மணம் செய்து கொள்ள என்று தாய்நிலத்திலிருந்து வந்து அவரோடு
வாழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா. இவர்களுக்கிடையேயான நிழல்யுத்தம்
எமது புலம் பெயர் சமூகத்தின் ஒரு பிரதிபிம்பம்.
இந்தப் படம் பார்த்து ரசிப்பதற்கான வெறும் குறும்படமாக மட்டுமாக
இல்லாமல், புலம்பெயர்ந்த குடும்பங்களில் தொடர்கதையாகும்
நிழல்யுத்தங்களின் காரணங்களைக் கண்டு திருந்திக் கொள்ள ஏதுவான
கருவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.
தம்மைத்தாமே புரிந்து கொள்ளாத.. திருத்திக் கொள்ளக் கூட முயலாத
நிலையில் உள்ள தன்மைகள் கொண்ட பாத்திரங்களை இப் படத்தில் கண்டு
கொள்ள முடிந்தது. இது பார்ப்பவர்கள் மனதில் சிந்தனையைத் து}ண்டி
அவர்தம் பிழைகளை உணர வைக்குமென்றே நம்புகிறேன்.
உதாரணமாக பாலகிருஸ்ணன் களைத்துத்தான் வீடு திரும்புகிறார். இல்லை
என்று சொல்வதற்கில்லை. அவருக்கு இந்த வாழ்க்கை சில வருடப்
பழக்கமாகி விட்டது. ஆனால் அவர் மனைவி ராதிகாவோ சுற்றம், சூழலை
விட்டு இப்போதான் வந்திருக்கிறாள். கணவனில் இருந்து தனிமை வரை
அத்தனையும் புதிது. அவள் மனநிலையை உணர்ந்து கொள்ளும் தன்மையில்
பாலகிருஸ்ணன் இல்லை.
தனியே பஞ்சாபி விடயத்தைப் பார்த்து விட்டு அவளைத் திட்ட முடியாது.
நான் மேலே குறிப்பிட்டது போல, ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும்
மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி, கறியை எரிய வி;டுமளவுக்கு
பாரது}ரமானதாக ஒரு போதும் இருக்காது. அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே
அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே
தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. அதற்கான காரணம்
எங்கே என்று தெரிய வேண்டும். அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்
கூடிய வேறு சம்பவங்கள் அங்கு நடந்திருக்க வேண்டும். பாலகிருஸ்ணன்
அதற்கான சரியான விளக்கங்களை அங்கு அவளுக்குக்
கொடுக்காதிருந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் கள்ளம்
பிடிபட்டுப் போச்செண்டு.. என்ற வார்த்தைகளை அவள் கொட்டியிருக்கத்
தேவையில்லை.
வேலையிடத்தில் அவன் நாய் மாதிரி... இங்கை வந்தால் நீ வெறி பிடிச்ச
நாய் மாதிரிக் கத்திறாய்... இவை பல ஆண்களின் வாயில் இருந்து வரும்
அநாகரிகமான வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் எந்தளவு
து}ரத்துக்கு ஒரு மனைவியைப் பாதிக்கும் என்பதை அவர்கள் எண்ணிப்
பார்க்கத் தவறி விடுகிறார்கள்.
நண்பன் வீடு மாற உதவி செய்தவன் மனைவி காத்திருப்பாள் என்பதை
எண்ணியிருந்தால் ஒரு தடவை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது நிலையை
அவளுக்கு விளக்கியிருக்கலாம். நான்கு சுவர்களுக்குள்ளான
தன்னந்தனியான அந்தக் காத்திருப்பு என்பது அந்தப் படத்தில்
காட்டியதையும் விட- மனதில் அதி விரக்தியையும் வேதனையையும்
வெறுப்பையும் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். போகும் போதாவது இன்று
நண்பனுக்கு உதவி செய்ய வேண்டிய பிரச்சனை ஒன்று உள்ளது. நான் வரத்
தாமதமாகலாம் என்ற முன்னறிவிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கலாம்.
எனக்கு மட்டுந்தான் பிரச்சனை. நீ இவைகளை அனுசரி என்பது போலல்லவா
பாலகிருஸ்ணனின் செயல்கள் அமைந்துள்ளன.
இப் படத்தின் மூலம் ஆண்கள் இப்படியான தவறுகள் பலதைத் தாம்
செய்கிறோம் என்பதை உணர்ந்து தம்மைத் தாமே திருத்திக்
கொள்வார்களேயானால் அதற்கான நன்றி அஜீவனையே சென்றடையும்.
மற்றொரு கோணத்தில் நின்று பார்த்தால்..
வேலை முடிந்து வீட்டுக்கு பாலகிருஸ்ணன் வந்த போது கறி எரிந்து
சட்டியும் கரியாகத் தொடங்கியிருந்தது. பாலகிருஸ்ணனின் தலையாட்டல்
இது இன்றைக்கு மட்டுமல்ல, அடிக்கடி நடந்து அவனை
வெறுப்பூட்டியிருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறது. அந்த
சந்தர்ப்பத்திலும் சரி, காத்திருந்து காத்திருந்து அலுப்பாகி,
வெறுப்பாகி,... வெளிச் செல்லும் உடையுடனேயே படுக்கையில் கோபமாகப்
படுத்திருந்த மனைவியிடம் சாட்டுச் சொல்லும் போதும் சரி
பாலகிருஸ்ணனின் நடிப்பு யதார்த்தமாக அமைந்திருந்தது.
ஆனால் கட்டிலில் சாட்டுச் சொல்லும் போது கூட அவர்களுக்கிடையேயான
உறவு சற்று எட்ட நிற்பது போலவே தோன்றுகிறது. அந்தச்
சந்தர்ப்பத்தில் பாலகிருஸ்ணன் இன்னும் சற்று ஆதரவாக ராதிகாவை
நெருங்கியிருக்கலாம்.
காலை அவள் கண்ணாடி கழுவிக் கொண்டிருந்த நேரத்திலிருந்து இந்த
நிமிடப் பொழுது வரை அவள் தன்னந்தனியாகத்தான் அந்த வீட்டில்
இருந்திருக்கிறாள்.
தோலைபேசி கூட இயங்கவில்லை. அவளுக்கு இப்போ வேண்டியது
பாலகிருஸ்ணனுக்குக் கிடைக்க வேண்டிய உடல் ஆறுதலை விடப் பன் மடங்கு
அதிகமான மன ஆறுதலும் அன்பான அரவணைப்பும்.
இப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இதை ஒவ்வொரு
பார்வையாளனாலும் புரிந்து கொள்ள முடியும்.
ஒருவரின் தவறை மீண்டும் மீண்டும் ஒரு குற்றச் சாட்டுப் போல
சுட்டிக் காட்டுவதை விட ஒரு கதை மூலமோ, படம் மூலமோ எடுத்துக்
காட்டிப் புரிய வைப்பது மிகவும் ஆரோக்கியமானதும் பயனானதும். அந்தப்
புரிவில் அவர்களுக்குத் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற
எண்ணம் நிட்சயம் தோன்றும். அந்த வகையில் அஜீவனின் இந்தப் படைப்பு
புலம் பெயர் சமூகத்துக்குக் கிடைத்த ஒரு அரிய படைப்பு. இன்றைய
காலத்தின் ஒரு பதிவும் கூட. இதில் ஒரு பெரிய பிரச்சனை சில
நிமிடங்களுக்குள் மிகவும் யதார்த்தமாக முன் வைக்கப் பட்டுள்ளது.
படத்தின் மற்றைய விடயங்களை ஆராய்ந்தால் இயக்கம், தொழில் நுடபம்
போன்ற விடயங்களில் மிகுந்த அவதானம் செலுத்தப் பட்டிருப்பது
தெரிகிறது. தேவையற்ற விரிசல்களோ, ஒடிசல்களோ ஏற்படாதவாறு கன
கச்சிதமாக வெட்டல்களும், ஒட்டல்களும் செய்யப் பட்டுள்ளது. இது
இந்தத் துறையில் அஜீவனுக்குள்ள அனுபவத்தையும் திறமையையும்
காட்டுகிறது. கண்டிப்பாக அவரைப் பாராட்ட வேண்டும் என்றே
தோன்றுகிறது.
உரை வடிவமும் எந்த வித செயற்கையும் கலக்காமல் மிகவும்
யதார்த்தமாகவே அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.
காரிலே போகும் போது இப்படிச் சண்டை போடுகிறார்களே..! ராதிகா இந்தக்
கட்டத்தில் பொறுமை காக்காலாமே..! ஒரு பெரிய விபத்துக்கு இது
வழியாகலாமே..! என மனசு அந்தரப் படுகையில் விபத்து நடப்பதாகக் கனவு-
நன்றாகவே அமைந்துள்ளது.
இன்னும் இப்படத்துக்குள் நிறையவே தேடலாம். புரியலாம்.
படத்தின் வெற்றிக்குப் பாத்திரமான ஒவ்வொரு படைப்பாளிக்கும்
சமூகத்தின் சார்பாக நிறைந்த பாராட்டுக்கள்.
அஜீவனிடமிருந்து சமூகப்பிரக்ஞை நிறைந்த இப்படியான படங்கள் இன்னும்
வரும் என எதிர் பார்க்கிறேன்.
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி.
30.7.2003 |