|
இன்று
நாம் அறிவியல் சமூக முன்னேற்றத்தில் கொடிகட்டிப் பறக்கும் (?)காலப்பகுதியான
21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நாகரீக வளர்ச்சி
என்ற போர்வையில் அநாகரீகத்தின் இறுக்கமான பிடியில்
இருந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
இன்றுள்ள சமூக முன்னேற்றத்தினால் நாம் நல்ல பல விடயங்களை
பெற்றிருக்கின்றோம் என்று பெருமிதம் அடையும்வேளையில் பல
விடயங்களை நாம் இழந்திருக்கின்றோம் என்பதையும்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.ஒன்றைப் பெறுவதற்காக ஒன்றை
இழக்கவேண்யிருப்பது வாழ்வில் நியதியே.எமது முன்னோர்கள்
காரணத்தோடு அறிமுகப்படுத்திய பல விடயங்கள் பின் வந்த நாட்களில்
திரிபுபடுத்தப்பட்டு காரணம் தெரியாமல் பின்பற்றப்பட்டு,நாளடைவில்
எதற்காக சில பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ
அதற்கு முற்றிலும் அப்பாற்பட்டு ஒரு சமூக நடைமுறையாக
கருத்தப்பட்டு பிழையான வழியில்
பின்பற்றப்பட்டன,படுகின்றன.இக்காலப் பகுதியில் சிந்திக்கப்பட்ட
சமூகத்தினால் இவ்வாறான பல பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள்
கொச்சைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருக்கின்றன.
இது
வரவேற்கத்தக்கதே.காரணம் தெரியாமல் முற்றிலும் பிழையான முறையில்
பின்பற்றிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும்
நிச்சயமாக கைவிடப்படவேண்டியவையே.இன்னும் பல
களைந்தெறியப்படவேண்டிய நடைமுறைகள் மூடநம்பிக்கைகள் உள்ளன.ஆயினும்
ஒன்றை நாம் மனதில் நிலைநிறுத்தவேண்டிய அவசியம்
இருக்கின்றது.காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள்
நம்பிக்கைகள் அவை திரிபுபடுத்தப்பட்டிருக்கின்ற போதிலும்
அவற்றின் பின்னால் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயம் இருக்கின்றது.அவை
ஆராய்ச்சிக்குரியவை.உண்மை விளக்கங்கள் இன்றும் விஞ்ஞான ரீதியில்
நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அதற்காக எல்லாவற்றுக்கும்
அர்த்தம் இருக்கின்றது என்றும் கொள்ள முடியாது.
எனினும் பழமைகளை களைதல் என்ற போர்வையில் முற்றாக பழமையினை
வெறுத்தொதுக்குவது நல்லதல்ல.அது நிறுத்தப்படவேண்டும்.பழமையில்
புதுமை புகுத்தப்படுவதே இப்பொழுது தேவையாயிருக்கின்றது.அந்த
வகையில் காலம் காலமாக எம்மிடையே காணப்படும் கலாச்சார பண்பாட்டு
நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள்பற்றி சிறு ஆய்வில்
ஈடுபட விரும்புகின்றோம்.இதன் மூலம் அழிந்துவரும் எமது
கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றோம்.எனவே
உங்கள் உங்கள் பிரதேசங்களில் கடைப்பிடிக்கப்பட்ட,வருகின்ற
இவ்வாறான விடயங்கள் பற்றியும் அவற்றுக்கு நீங்கள் அறிந்து
வைத்திருக்கும் விளக்கங்கள் பற்றியும் எமக்கு
அனுப்பிவைப்பதன்மூலம் இதில் நீங்களும் பங்குகொள்ளமுடியும்.
நீங்கள் வாசித்தவைகளாயிருந்தாலும் எமக்கு
தெரியப்படுத்துங்கள்.சரி பிழை பார்ப்பது பின்னர் உங்கள்
முயற்சியை நீங்கள் தொடங்குங்கள்.
முதலாவதாக ஒரு நடைமுறை பற்றியும் அதற்கான விளக்கம் பற்றியும்
நாம் அறிந்துள்ளது பற்றி இங்கு குறிப்பிடுவதன்மூலம் இந்த ஆய்வை
ஆரம்பித்து வைக்கின்றோம்.
1.தமிழர்களின் திருமண நிகழ்வின்போது மணமகள்,மணமகள் ஆகியோர்
மஞ்சள் நீர் நிரப்பப்பட்ட வாளியினுள் மோதிரம் தேடி எடுப்பார்கள்.
காரணம்:இருவரிடையேயும்
விட்டுக்கொடுப்பினை பரிசோதிப்பதே இந்நிகழ்வு.ஒரு முறை மாப்பிள்ளை
எடுத்தால் மறுமுறை பெண்ணுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவேண்டும்
என்பதே எதிர்பார்ப்பு.
|