|
இன்றைய
காலகட்டத்தில்
பெற்றோரே சிந்தியுங்கள். இன்றைய காலகட்டத்தில்
பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகளின் காரணிகளில்
இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.ஒரு பெண் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும்
பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான
புரிந்துணர்வு பலபெற்றோர்களிடம் இல்லை.இந்தநிலையில் நாம் இது பற்றிப்பேச வேண்டியதொரு கட்டாயத்தில்
இருக்கிறோம். இந்த 21ஆம் நூற்றாண்டில் இத்தனை தூரம் நாம் பல்வேறு
துறைகளிலும் வளாந்துவிட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள்
அவசியங்களா? சாமத்தியச்சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம்
பிடித்துக்கொண்டது? போன்றதான கேள்விகளுக்கு மிகத்தெளிவான
கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறையில்
கிடைக்கவில்லை. பலபெரியவர்களுடன் பேசிப்பார்த்தபோது, ஒவ்வொருவரும்
சொன்ன காரணங்கள் ஒவ்வொரு விதமாகவே இருந்தன.
ஆண், பெண் பாகுபாடின்றி விளையாடித்திரிந்தவளை ஆண்களில் இருந்து
பிரித்து வைப்பதற்காக.எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார் பெண்கேட்டு
வரலாம் என்பததைத் தெரியப்படுத்துவதற்காக.ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற
உடல்ரீதியான அங்கீகாரம்
சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்பதற்காக.... என்பது போன்றதான
பல்வேறுபட்ட காரணங்கள் சொல்லப்பட்டன.இப்படியான கருத்துக்களின் மத்தியில் இவள் இனி உங்கள் பிள்ளை
நீங்கள்தான் அவளைக் காக்கவேண்டும் என்று சொல்லி ஊர்மக்களிடம்
பிள்ளையை ஒப்படைப்பதற்காக சாமத்தியச்சடங்கு நடக்கிறதென்றும்
ஒருபுலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.
இப்படியானதொரு கருத்தைக்கேட்க... சிரிப்பாக இல்லை.... கற்றவர்
ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்கபூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார்
என்று தான் எதிர்பார்த்தேன். கருத்துக்கள் தருவது அவரவர்
சுதந்திரம். ஆனால், எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான
உப்புச்சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூகத்தை எமது
கலாசாரத்தை எமது பண்பாட்டை நாமே அவமானப்படுத்துவதற்குச்
சமானமாகிறது.குறைபிடிக்கவும், குற்றம் பிடிக்கவும், பருவம் பார்த்துத்திருமணம்
தேடிப்பெண்ணைச்சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக்கூட்டம்
காத்திருக்கும். ஊரவர்தான் இப்படியென்றால் உள்ளுக்குள்
அதைவிடக்கேவலம்.
அநேகமான பாலியல் வன்முறைகளும், பாலியல் துஷ்பிரயோகங்களும்
வீட்டுக்குள்தான் நடக்கின்றன. மாமாவால், சித்தப்பாவால், அக்காவின்
கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால்... இப்படித்தான்
பெரும்பான்மையான பாலியல் வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும்
அரங்கேறியுள்ளன. இன்னும் இன்னும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு
வருகின்றன. ஆனால் எம்மவரிடையே இதை குமுறல்களாகவும், கோபங்களாகவும்,
ஆற்றாமையாகவும் பெண்களுக்கள் அடங்கிக்கிடக்கின்றன.இவைகளை வெளியில் சொல்லிக்கலாசாரம், பண்பாடு, என்று வாயளவில்
உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின்
முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிடம் தைரியம்இல்லை.வெளியில்
தெரிந்தால் சமூகமும் அதன் கலாசாரமும் அதன் பண்பாடும்
பாதிக்கப்பட்ட பெண்ணையே பாழுங்கிணற்றில் தள்ளிவிடும் என்ற பயம்.
இந்த நிலையில் நன்கு யோசித்துப்பாருங்கள். ஒரு பெண்
தன்னைக்காத்துக்கொள்ள எமது கலாசாரமும், பண்பாடும் உதவுகிறதா?
அல்லது விழிப்புணர்வும், தைரியமும் உதவுகிறதா? என்று.தமிழர்களாகிய எமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காத்து, எமது
முகங்களை அழியவிடாது காப்பது ஆண் - பெண் இருபாலாரதும் கடமை.
அதற்காகப்போலிகளை கலாசாரம் பண்பாடு என்று பொய்யாகப்பெயர்சூட்டி
பெண்களில் திணித்து அவர்களை அடக்க நினைப்பது மடமை.இந்தப்பொய்களின் வேசம் புரியாது போலிக்கலாசாரங்களில்
தம்மைப்புதைத்துக்கொள்வது எம் பெண்களின் அறியாமை.
முதலில் எமது பெண்பிள்ளைகளிடம் எந்தப்பிரச்சினையையும்
பெற்றோருடன்பேசி தம்மை நெருங்கும் துட்டர்களிடமிருந்து
தம்மைக்காத்துக்கொள்ளும் தைரியம் வரவேண்டும்.பெற்றோர்களுடன் அவர்கள் இப்படியான விடயங்களை இயல்பாகப்பேசும்துணிவு
ஏற்படும் படியாகப்பெற்றோர் நடந்துகொள்ளவேண்டும்.எமது முன்னோர்கள் வரையறுத்த அநேகமான கோட்பாடுகள் அர்த்தமுள்ள
அவசியமான விடயங்களுக்காகவே இருந்தன.அவைகள் ஒவ்வொன்றுக்குமான கரு ஆரோக்கியமானதாகவும் அழகியதாகவும்
இருந்தன. ஆனால் நீண்டகால ஓடடத்தில் காரணங்கள் திரிபுபட்டது
மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்த தொரு
சுயநல நோக்குடன் கட்டாயமாகத்திரிக்கப்பட்டு இன்றைய காலகட்டத்தில்
ஏன் எதற்கு என்ற சிந்தனைகளெதுவுமின்றி உண்மையான தேவையான விடயங்கள்
புறக்கணிக்கப்பட்டு கலாசாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான
விடயங்கள் தொடர்கின்றன.
வருத்தமான விடயம் என்னவெனில், அநேகமான பெண்களுக்க இந்தப்பொய்யான
திணிப்புகளின் போலிவடிவம் புரிவதில்லை.உண்மையில் சாமத்தியச்சடங்கை கோலாகலமாக ஹோல்
எடுத்துவிழாவாகச்செய்யும் அநேகமான பெற்றோருக்குச் சாமத்தியச்சடங்கு
செய்வதற்கான காரணம் என்னவென்றே தெரியாது.வீடியோ கமராவில் எடுப்பதற்கும்
என் வீட்டுச் சாமத்தியவீடு மற்றையவர் வீட்டை விடப்பெரிதாக
நடந்ததெனக் காட்டுவதற்கும்
இப்படிப்பெரிதாக செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்பதான போலி
கௌளரவத்துக்கும்
கொடுத்த அன்பளிப்பை திரும்பப்பெற்றுக் கடன் கழிப்பதற்கும்.....என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக் கொண்டுதான் பூப்படைந்த
பெண்ணைக் காட்சிப்பொருளாக வைத்து இன்று பெரும்பாலான
சாமத்தியச்சடங்குகள் நடைபெறுகின்றன.இதற்கு வெறுமே கலாசாரம் பண்பாடு என்று போலி முலாம்பூசப்படுகிறது.
அவ்வளவுதான்.
-சந்திரா
செல்வகுமரன்
நன்றி நமதுஈழநாடு(29-08-2003) |