www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

திருமணமாம் திருமணம் -1  (பாகம்1)-(பாகம்2)
-சந்திரலேகா(அவுஸ்ரேலியா)-

எமது பண்பாட்டில் திருமணம் என்ற நிறுவனம் இன்னும் முழுமையாக நிலைத்துள்ளது. திருமணம் செய்யாது கூடி வாழ்தல் (Living together) என்ற முறை மேலைநாட்டில் பெருமளவு செல்வாக்குப் பெற்றுள்ள போதும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இதுவரை அதன் செல்வாக்குக்குப் பெருமளவில் உட்படவில்லை என்றே கூறவேண்டும். ஆயினும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டன என்பது மிகவும் சோகத்துக்குரிய விஷயம்.

தற்போது திருமணங்கள் அதிகமாகத் தோல்வியில் முடிவதற்கு என்ன காரணம் என்பது பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. எமது அடுத்த சந்ததியினரை திருமணம் என்ற நிறுவனத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கும் அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உரிய வழி வகைகளைச் சொல்லிக் கொடுப்பதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இந்த உலகில் எத்தனை இனங்கள், பண்பாடுகள் உள்ளனவோ அத்தனை விதமான திருமண முறைகளும், சடங்குகளும் உள்ளன. சில பண்பாடுகளில் திருமணம் வாழ்வில் ஒரேயொரு முறைதான் வரும். சிலவற்றில் மனித மனம் எத்தனை தடவைகள் மாறுமோ அத்தனை தடவைகள் திருமணம் நடைபெறும். பொதுவாகப் பெரும்பான்மையான பண்பாடுகளில் ஒருவர் வாழ்வில் ஒரேயொரு தடவைதான் திருமணச் சடங்கு இடம்பெறும்.

அதிகமான பண்பாடுகளில் தனக்கேற்ற துணையைத் தானே தேடிக்கொள்ளும் முறை இருந்த போதும் சிலவற்றில் இன்றும் பெற்றோர் தெரிவு செய்து திருமணம் செய்து வைக்கும் முறை உள்ளது. அல்லது பெற்றோர் அங்கீகரிக்கும் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்யும் முறை உள்ளது.

காதலாயினும் ஏற்பாடு செய்யும் திருமணமாயினும், மேலை நாட்டவராயினும் கீழை நாட்டவராயினும் திருமண பந்தம் வெற்றி பெறுவதற்குச் சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. கணவன் மனைவியிடையே நிலவும் நட்புறவு, மனப் பொருத்தம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒன்றுபட்டுப் பொறுப்பெடுக்குந் தன்மை, பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, உறுதிப்பாடு என்பன இல்லறம் ஆயுட் காலம் வரை நிலைப்பதற்கு அவசியமான இயல்புகளாகும். அத்துடன் ஒருவரில் இல்லாத திறமை மற்றவரில் இருப்பின் அது வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

அதாவது ஒருவர் தனக்கு ஒரு திறமை இல்லையே அது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அந்தத் திறமையுடன் கூடிய ஒருவர் மனைவியாக அல்லது கணவனாகக் கிடைப்பின் அவர் தனது மிஸஸிநங லிநக கிடைத்ததால் மகிழ்ச்சியாக வாழ்வார். அதே நேரம் மற்றவரில் இல்லாத திறமை அவரிடம் இருந்தால் இன்னும் அந்த வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு வாய்ப்புண்டு. அதாவது ஒருவர் மற்றவருடன் இணையும் போதுதான் தனது வாழ்க்கை முழுமையடைவதாகக் கருதுவாரானால் அது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி கோலும்f.

அண்மையில் திருமணத்தின் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடிய சில அவுஸ்திரேலிய தம்பதிகள் தமது திருமண வெற்றிக்கு பரஸ்பர அன்பு, நம்பிக்கை, தாம் இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதி எல்லாவற்றிற்கு மேலாக இருவரிடையேயும் காணப்பட்ட உற்ற நட்பு ஆகியனவே காரணங்கள் என்று கூறியுள்ளனர். பணமே இன்றைய அவுஸ்திரேலியாவில் விவாகரத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் ஒருவரில் ஒருவர் அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளனர் அதனால் திருமணங்கள் நிலைப்பதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அது ஓரளவில் உண்மையாகவும் இருக்கலாம் போல தெரிகிறது. அண்மையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வாசகர் கடிதம் பகுதியில் இப்போதெல்லாம் பெண்கள் ஆறிலக்க ஊதியமும், றுமுஞு காரும், வசதியான சொந்த வீடும் உள்ள ஆண்களையே விரும்புகிறார்கள். என்னைப் போன்ற சாமானியன் பெண்ணுக்கு எங்கே போவது என்று ஒருவர் அங்கலாய்த்திருந்தார். அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றான போதும் ஒருவரில் ஒருவர் அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு கொள்வதும், இவரை விட சிறந்தவர் ஒருவரை தேடமுடியும் ஏன் இவருடன் வாழவேண்டும் என்ற கேள்வி சிறிது முரண்பாடுகள் வந்தவுடனேயே ஏற்படுவதும்f பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடியக் காரணமாகின்றன எனலாம்.

இதே நேரத்தில் திருமணம் செய்யாது தனித்து வாழும் முறை அவுஸ்திரேலியரிடையே மிகச் செல்வாக்குப் பெற்று வருகிறது. திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் அழுத்தம் இப்பொழுதெல்லாம் இல்லாது போய்விட்டதே இதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. அத்துடன் முன்னர் ஒருவர் தகுந்த வயதை அடைந்துவிட்டார் என்பதை திருமணம் குறித்து நின்றது. ஆனால் இப்பொழுது ஒருவர் திருமணம் செய்வதை வைத்து அவர் முழு ஆணாகி விட்டார் அதாவது aடஉலதஹுஒஒட க்கு வந்துவிட்டார் என்று ஒருவரும் கருதுவதில்லை.

இப்பொழுது வாழ்க்கையில் வெற்றியடைவதே முக்கியம், திருமணமும் குடும்பமுமல்ல என்ற கருத்து பெண்களிடையேயும் ஆண்களிடையேயும் வலுப்பெற்று வருகிறது. 2001ம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பின்படி 75.6 வீதமான 20க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதையுடைய ஆண்கள் திருமணம் செய்யவில்லை. 1980ல் 26 ஆக இருந்த திருமண வயது 2000 மாம் ஆண்டில் 30 ஆகியுள்ளது. 29 வீதம் ஆண்கள் ஓருபோதும் திருமணம் செய்ததில்லை.

குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்பை ஏற்காது சுதந்திரமாக வாழ்வதே சிறந்தது என்று ஆண்களும் பெண்களும் கருதுகிறார்கள். இவ்வாறு இருந்த போதும் மிகுதியாயுள்ளவர்கள் குடும்பமாகவே வாழ்கிறார்கள். இவை இங்கு வாழும் ஆங்கிலேயர் பற்றிய கணிப்பாக இருந்த போதும் இங்கு வாழும் தமிழ் இளைஞர்களும் பெண்களும் இத்தகைய செல்வாக்குக்கு உட்படுவது பற்றிப் பல தமிழ்ப் பெற்றோர் அங்கலாய்ப்பதை அடிக்கடி கேட்க முடிகிறது.

மேலைநாட்டுக் கலாசாரத்தில் தானே தனக்குரிய துணையைத் தேடிக் கொள்ளும் முறை காணப்பட்டபோதும் திருமணத்தின் பின்னர் பலர் நிலையாக இணைந்திருப்பதில்லை. கீழை நாட்டுக் கலாச்சாரங்களில் இன்று மேலைத்தேய செல்வாக்கு பெருமளவில் ஏற்பட்டுவிட்ட போதும் திருமண பந்தம் ஓரளவில் சாசுவதமானதாகவே கருதப்படுகிறது. காதல் திருமணங்கள் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் விவாகரத்து எமது சமூகத்தால் இன்னும் மிகுந்த தயக்கத்துடனேயே அங்கீகரிக்கப்படுகிறது.

காதல் நிலையில் சந்தோஷமாக இருக்கும் சிலர் திருமணத்தின் பின் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களது திருமணமும் விரைவில் முறிந்து போகிறது. வேறுபட்ட இருவர் ஒன்றாக வாழ முற்படும் போது பல விஷயங்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. அந்த நிலையில் முரண்பாடுகளை சுமுகமாகத் தீர்க்க முடிந்தவர்களது திருமணம் நிலைக்கிறது. அவ்வாறு தீர்க்கமுடியாதவரது திருமணம் முறிகிறது.

இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப்படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.

ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில்f மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.

ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.

இலங்கையில் திருமண உறுதிப்பபாட்டுக்குப் நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவர்களை நாடி பெண்ணைப் பெற்றவர்கள் ஓடினர். கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவர்கள் முன்னிடத்தை வகித்தார்கள்.

அவர்களில் ஒருவரைத்f தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலர் பண அடிப்படையில் போட்டி போட்டார்கள். அதிக பணம் கொடுக்க வல்லவர்கள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனர். இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞர்களது பெற்றோர் பெண்ணைப் பெற்றவர்களைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலர் கறந்து விடுவார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவர்கள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆயினும் பின்னர் நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞர்களும் பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.

இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோர் வயது முதிர்வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவர்கள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவர்கள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.

சாதகம் பார்த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் சாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை சாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன.

திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் மூலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் சாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலர் எண் பொருத்தமும் பார்ப்பதுண்டு. சாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பார்த்தல் பலருக்கு உதவியது எனலாம்.

முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பார்ப்பதற்கும் அவனைப் படித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னர் பெற்றோர் ஓரளவில் அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனர். ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோர் ஆளாகினர்.

பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோர் அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]