|
ஏழாண்டு முன் எனக்கு வயது
பதினாறு தானிருக்கும்
தோழர் தோளோடு தோளுரசி
காலார நடந்து கல்லூரி சென்றதனை...
ஆங்கிலப்பாடம் அடுத்ததென்று
அவசரமாய் வெளியேறி - கல்லூரி
குறுக்கு மதிலேறி
சறுக்கி விழுகையிலே எதிரில் நின்ற
முறுக்கு மீசை மாஸ்டரிடம்
இறுக்கமாய் வாங்கியதை....
வெடிச்சத்தம் கேட்டவேளை
படித்த பாட நூலுடன்
பங்கருக்குள் பாய்ந்ததனை
பழையவற்றை நினைக்கின்றேன்.
செல்லடியில் சிதைந்துபோன
பள்ளிக்குழந்தைகளை
அள்ளி - அவசரமாய்
அம்புலன்ஸில் போட்டுச்சென்று
ஆசுப்பத்திரியில் அன்றிரவு
அயராதிருந்ததனை நினைக்கின்றேன்.
நல்லூர் திருவிழாவில்
நண்பர் படையோடு
வில்லுப்பாட்டு கேட்டுவிட்டு
வீடு சென்ற வனிதயரை
நையாண்டி பண்ணியதை
நான் நினைத்துப் பார்க்கின்றேன்...
விக்கி அழுதவர்களாய்
முக்கி முனகி மூன்றுநாள் நடந்து
தப்பித் தடுமாறிப் படகேறி
வன்னி மண்ணேறியதை
எண்ணிப்பார்க்கின்றேன்..
பரீட்சை வந்து நிற்க
பாஸ் பண்ணி வந்தால்
பிள்ளையாரே நான் உனக்கு
பத்துத்தேங்காய் உடைப்பனென்று
பொய்யாக நேர்ந்த கதை
மெய்யாக நினைக்கின்றேன்..
வெட்டுப்புள்ளியில் வெட்டுப்பட்டு
குட்டிக்கொண்டிருந்தவரின் குகைக்குள்ளே
சத்தியமாய்
படிக்கத்தான் வந்தேன் - சந்தேகத்தில்
பிடிக்கப்பட்டுச்சென்றேன்..
அடியுதை விழுந்தபோதும்
ஐசியை நான் விடவில்லை
நான் செய்த குற்றம் அது
குண்டு வெடிக்கையிலே
குழறியடித்துக்கொண்டு
குதிக்காலில் ஓடியதுதான்...
செத்துப்போயிருந்தால்
இத்தனைக்கும் காரணம் இவன் தானென்று
முத்தெழுத்தில் அச்சாகியிருக்கும்
தப்பிப்பிழைத்ததால்
களுத்துறையில் காலந்தள்ளினேன்...
எப்படியோ வந்த புரிந்துணர்வால்
இப்போ நான் விடுதலையானேன்
அம்மா அப்பா உறவுகளை
இப்போதாவது பார்ப்பமென்று
நப்பாசை கொண்டதெல்லாம்
தப்பானதென்று
இப்போதுணர்ந்து கொண்டேன்..
என்வீடு இருந்தஇடம்
எனக்கே தெரியவில்லை
என்னதான் இருந்தாலும்
என்மண்ணில் இறங்கியதால்
எனக்குள் ஓர் சந்தோசம்...
-புங்கையூரான்ா
|
அன்னையர் தினம் இன்றென்று
நன்றாகத் தெரிந்ததனால்
நின்றுகொண்டே நித்திரை செய்தவரும்
ஒன்றுபட்டுக் குரலெடுத்து
நன்றியுணர்வுடன் நல்வாழ்த்துக் கூறுகிறார்.
பிறப்பெத்தனை எடுத்தாலும்
மறப்பேனா உனையென்று
உறைப்பாக உரைப்பதற்கு
நிறையவே தமிழுண்டு நீண்ட கவிகளுண்டு
சென்று வா மகனே வென்றுவா
என்று திலகமிட்ட
சங்கத்தாயவளை சரித்திரத்தில் படித்ததுண்டு
இங்கும் அவள்போல் சிலபேர்கள் இன்றுண்டு..கடந்த காலத்தை கவிபாடிப்பயனென்ன
நடப்பவற்றில் சிலதுளிகள் சிந்திப்போம்
நித்திரைக்குப்போக அடம்பிடித்த தன்மகனை
நிலாச்சோறு}ட்டி நிறையவே கதைசொல்லி
பத்திரமாய் படுக்கவைத்த பாமரத் தாயவளை
சத்தியமாய் எத்தனைபேர் பார்க்கின்றார்?
தொலைபேசியில் கூட,
தொலைதூரம் வாழ்கின்றபிள்ளை -
நிலையறிய முடியாமல்
ஓலைக்குடிசையிலே ஒட்டாண்டியாக
நாளைக்கடத்துகின்ற தாய்மார்கள் எத்தனைபேர்?
செல்வீழ்ந்து வெடிக்கையிலே
பிள்ளையைக் காக்கவென்று
அள்ளி அணைத்தவளாய் அட்டாங்கம் செய்தவேளை
உயிர் போன தாய்மார்கள் எத்தனைபேர்?
வேலைக்கு சென்ற துணை வேளைக்குத்திரும்பாமல்
வேறாளைத் தேடுகையில்..
வேலைக்குச்சென்றுழைத்து வேளைக்கு சோறுபோட்ட
தாயைத்தவிக்கவிட்டோர் எத்தனைபேர்...
குடிகாரக்கணவன் கால் -
அடியுதைகள் தான் வாங்கி
முடிச்சுக்குள் முடிந்து மிச்சம்
பிடித்தவைகள் தானெடுத்து
குடித்திடக் கஞ்சி தந்த
இடிதாங்கும் தாயுமுண்டு.கஞ்சி
குடித்தே பொடி வளர்ந்து
வெஞ்சினத்தில் தாயவளை
வஞ்சித்த சம்பவங்கள்
நெஞ்சில் இன்றும் நினைவிலுண்டு.
அப்பனிடம் அடிவாங்கி,
தப்பியோடி ஒளிந்திருக்க
எப்படியோ தேடிவந்து
சாப்பிடவா என்றவளை,
எப்படியோ வாழென்று தப்பியோடிப்போனவர்கள் எத்தனைபேர்...
உப்பிய வயிற்றிலெமை
பத்துமாதம் பேணிவைத்து
இப்புவியில் பிரசவித்த
கோயில் அந்த தாயவளை
வாயில் வந்த வார்த்தைகளால்
வசைபாடி வாழ்கின்றோர் எத்தனைபேர்...
உள்ளிருந்து என்பிள்ளை
உதைக்கிறான் என வயிற்றை
மெல்லிதாய் தடவி வாழ்ந்த
சொல்லிவிட முடியுமா உள்ளம் படைத்தவளை
சொல்லிலென்ன செயலிலென்ன
தள்ளிவிடக்கூட
தயாராக பலருள்ளார் - பொய்யல்ல
இடுப்பிலே மகவேந்தி
தடுப்பு மருந்தேத்தவென
கடுக்க நடந்தவளை
அடுப்பங்கரை உனக்கே
கொடுத்த இடமென்று
மிடுக்காக நடத்துகின்றோர்
இருக்கின்றார் இது உண்மை.
பெத்தவளை விட்டெறிந்து
இத்தரையில் வாழ்கின்றோர் பிறப்பு
எத்தனை எடுத்தாலும் - பாவத்தால்
மறக்கப்படமாட்டார்கள்.
-புங்கையூரான்
(அன்னையர் தினம் அன்று எழுதப்பட்டது) |