|
நான்காம் நாள் நிகழ்வுக்காக விழுந்தடித்து வந்து
சேர்ந்தேன்.நேற்றிரவு நிகழ்வு முடிந்து வருகையில்தான் எனது
நண்பன் மெற்றாஸ் கஜன் நிகழ்வுகள் 5மணிக்கே ஆரம்பமாவதாகவும்
முதல்பகுதியில் ஈழத்துக்கலைஞர்கள் பங்கேற்பதாகவும் இன்று
அகிலனின் பாட்டுக்கு தான் மிருதங்கம் வாசிக்க இருப்பதாகவும்
கூறியிருந்தான்.இவர்கள் எனது நண்பர்கள் என்றவகையிலும் நான்
நேரத்தோடு வரவேண்டியிருந்தது.ஆவலுடன் அரங்கினுள் நுழையும்போது
நேரம் 5.04 சுமார் நூறு நூற்று ஜம்பது ரசிகர்கள் வரையில்
கூடியிருந்த அரங்கில் சௌகரியமான(போர் அடிக்கும்வேளையில் கால்
கைகளை கொஞ்சம் அங்கு இங்கு அசைக்கும் வசதியுள்ள)கரையோர
இருக்கையில் இருப்பது எனக்கு சிரமமானதாக இருக்கவில்லை.
ஈழத்து அதுவும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ரசிகர்களிடையேயான
வரவேற்பு இதுவோ என
எண்ணத்தோன்றினாலும்,வீட்டுஅலுவல்கள்,அலுவலகவேலைகள் முடித்து
இந்த நேரத்துக்கு இங்கு வருவது என்பது பலருக்கு சிரமமானதாகக்கூட
இருக்கலாம்தானே.சரி இனி நிகழ்வில் சங்கமிப்போமா? நான்
நுழையும்போதே சி.அகிலன் இராகம் இழுக்க ஆரம்பித்து
விட்டிருந்தார்.அணிசெய் இசைக்கலைஞர்களாக மிருதங்கம் மெற்றாஸ்
கஜன்,வயலின் எஸ்.திபாகரன்,முகர்சிங் க.நந்தகுமார் ஆகியோர்
பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
முதல்பாட்டு எனக்கு என்னவோ களைகட்டியதாக
தெரியவில்லை(ஒவ்வொருவருடைய இரசனையும் வேறுபட்டது)ஆயினும்
இரண்டாம் பாடலினூடாக எனது ரசனை எல்லைக்குள்
புகுந்துவிட்டீருந்தார்.அடுத்து வந்த பாடல்கள் கீர்த்தனைகள்
பாராட்டக்கூடியவகையிலேயே இருந்தன.இந்த இடத்தில் ஒன்றை நான்
குறிப்பிட்டேயாகவேண்டும்.அகிலன்,மற்றும் மெற்றாஸ் கஜன் ஆகியோர்
எனது நண்பர்கள் என்றவகையில் இங்கு விமர்சனம்
எழுதவில்லை.தனிப்பட்ட முறையில் அவர்களை நன்றாக தெரிந்தவன் என்ற
வகையில் நோக்காமல் கலைஞர்கள் என்ற வகையில் தான்
நோக்குகின்றேன்.அகிலன் வாய்ப்பாட்டில் முன்றேவேண்டும் என்று
துடிப்பதினை அவருடைய இராக ஆலாபனையில் என்னால் நன்றாக உணர
முடிந்தது.உண்மையில் இராக ஆலாபனைதான் ஒரு நல்ல வாய்ப்பாட்டு
கலைஞனை இனங்காட்டும்.
முதல் நாள்நிகழ்வுகளில் இராக ஆலாபனையில் தூள் கிளப்பிவிட்டு
சென்றவர்களினால் கவரப்பட்டிருந்த இரசிகர்களின் வரவேற்பை
பெறக்கூடிய வகையில் பாடியதன் மூலம் தனது திறமையினை அகிலன்
காட்டியிருந்தார்.எது எப்படியிருந்தாலும் வளர்ந்து வரும் ஈழத்து
இளங்கலைஞர் என்ற வகையில் மிகச்சிறப்பாக பாடிய இவருக்கு நல்ல
எதிர்காலம் உண்டு என்பதை அறிவிப்பாளர் தனது முடிவுரையில் "ஈழத்தில்
நாம் கண்டெடுத்த முத்து" என்று கூறியதின்மூலம்
பிரதிபலித்தார்.இவருடைய விடயத்தில் எனக்கு நெருடலை ஏற்படுத்திய
விடயம் ஒன்றிருக்கிறது.அதாவது பாடல் எழுதப்பட்ட தாளை சிலதடடைவை
கையில் தூக்கிவைத்து பாடியதுதான்.அநேகமாக எல்லோரும் தாம் பாடும்
பாடல்களை தம் பார்வையில் படும்வகையில் வைத்திருப்பார்கள்.இதில்
ஏதும் தவறில்லை.எல்லாவற்றையும் பாடமாக்கி பாடவேண்டும் என்று நாம்
எதிர்பார்ப்பது முறையற்றது தானே(எனக்கு சிலதடவை கணித வாய்ப்பாடே
மறந்து விடுவதுண்டு).ஆனால் பார்ப்பதை சபை பார்க்காமல் பார்ப்பது
அழகாய் இருக்கும் என நான் நினைக்கிறேன்.இதனை அவர் கருத்தில்
கொள்வார் என நம்புகின்றேன்.இது வெறுமனே அவருடைய செய்கையில் கண்ட
குறையே அன்றி நிகழ்ச்சியில் கண்ட குறையல்ல.
நேரம் இங்கு பெரிய பிரச்சனையாயிருந்தது.ஈழத்து கலைஞர்களுக்கு
வழங்கப்பட்டிருந்ததோ 1 மணித்தியாலம் மட்டுமே.இதற்குள் இவர்கள்
திறமையினை காட்டவும்வேண்டும் வளர்க்கவும்வேண்டும்.அகிலன் இந்த
நேரக்கட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதனை
அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்த்துப்பாடியதில் இருந்து
அறியமுடிந்தது.ஒருமுறை உச்ச ஸ்தாயியில் கையை உயர்த்தி பாடும்
வேளையில் அக்கையில் இருந்த கடிகாரத்தைப்பார்த்தார்(?) என்றால்
நேரம் அவரை எந்தளவுக்கு அச்சுறுத்திக்கொண்டிருந்தது. என்று உணர
முடியும்.
கஜன் நிகழ்வைப்பொறுத்தவரையில் சிறப்பாகவே
செய்திருந்தார்.என்றாலும் அவருடைய மிருதங்கத்துக்கு சரியான தீனி
கிடைக்காமல் போனது தூரதிஸ்டவசமே.நான் சொல்ல வந்தது தாள
லயத்தைப்பற்றித்தான்.நேரமின்மையால் இதற்கான சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை.கஜனின் மிருதங்கத்திறமை முன்பு பல கச்சேரிகளில்
என்னிடத்தில் வரவேற்பைப்பெற்றிருந்தது இங்கு
குறிப்பிடத்தக்கது.என்றாலும் கொடுக்கப்பட்டிருந்த
சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளுத்து வாங்கினார் என்பதை
மறுக்கமுடியாது.
திபாகரனின் வயலின் பரவாயில்லை என்றே சொல்லலாம்.நாகை சிறீராமின்
வயலின் இசையினால் பரவசநிலைக்கு உள்ளாகியிருந்த என்போன்றவர்கள்
இப்படித்தான் சொல்வார்கள்.என்றாலும் வளர்ந்து வரும் இளங்கலைஞர்
என்றவகையில் சிறப்பே இனிவரும் காலங்களில் இதைவிட இன்னும்
சிறப்பான இசையினை ரசிகர்களுக்கு தருவார் என
எதிர்பார்கின்றேன்.முகர்சிங் வித்துவான் குறைகாணுமளவில்
குளறுபடிகள் ஏதும் செய்யவில்லை என்றே சொல்வேன்.தன்
நிலைக்கேற்றவாறு சிறப்பாகவே செயலாற்றினார்.ஆனால் நிகழ்வு
முடிந்து எழும்வரையில் அவர் எனது பார்வைக்கு மறைந்து
காணப்படடார்.இந்தப்பணியினை(மறைத்தல்) செய்தவர் வயலின்
திபாகரன்(இவர்மீது எனக்கு எந்தவித கோபமுமில்லை).எப்போதும்
பின்னணிக்கலைஞர்கள் மறைந்திருப்பது சகஜமே.
மொத்தத்தில் இந்த இளங்கலைஞர்களின் கச்சேரி சிறப்பாக அமைந்து
எம்மையெல்லாம் திருப்திப்படுத்தியது என்றால் மிகையாகாது.இவர்கள்
தான் நாளை பெரும் கலைஞர்களாக வரப்போகின்றவர்கள்.விமர்சனங்கள்
இவர்களை வளப்படுத்தவேயன்றி வதைப்பதற்கல்ல.மேலும் நான்
முன்பிருந்தே கூறிவருவது போல ஓரிரு கச்சேரிகளில் இருந்து ஒரு
கலைஞனை ஒரு ரசிகனால் எடைபோட்டு விடமுடியாது.
5.45 மணிக்கே அறிப்பாளர் மேடை ஓரம் தென்படத்தொடங்கிவிட்டார்.இது
இவருக்கு வழமையாக வரும் பழக்கம்.6மணிக்கு
சூடாகிவிடுவார்.நேரக்கட்டுப்பாட்டில் இவர் மிகவும் இறுக்கம்
என்றே சொல்லலாம்.வரவேற்கத்தக்கதே(கலைஞர்கள் எம்மை வதைக்கும்
நேரங்களில் மாத்திரம்).அகிலன் 6 மணிக்கு பாடல்ஒன்றை பாட
ஆரம்பித்தபோது அறிவிப்பாளர் அசௌகரியத்துக்குள்ளானதை என்னால்
நன்றாய் அவதானிக்க முடிந்தது.6.05க்கு அகிலன் திருப்புகழ்பாட
ஆரம்பித்தபோதுதான் அறிவிப்பாளர் அடங்கி மெல்ல மெல்ல
ஒலிவாங்கியருகில் வந்தார்.கலைஞர்களுக்கான சந்தன நிற ஆடை
போர்ப்பதன் மூலமான கௌரவிப்புடன்(ஒவ்வொரு நாளும் இது
நடைபெறுகின்றது) விழாவின் முதற்பகுதி முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பகுதி சுவாரஸ்யம் நிறைந்தது.......
(தொடரும்)
-ஊரோடி |