|
கொழும்பு கம்பன் கழகம் இவ்வருடம் நடாத்திய இசைவேள்வியில்
தொடர்ந்து இரண்டாவது வருடமாக கலந்து இசை மழையில் நனையும்
பாக்கியம் கிடைத்தது.முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்த
காலப்பகுதியில் நல்லூரின் வடக்கு வீதியில் தற்காலிக கொட்டகையில்
எம்மையெல்லாம் பரவசப்படுத்தி வந்த அகில இலங்கை கம்பன் கழகமும்
அதன் அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் உம் அவரது பரிவாரங்களும்
கொழும்பு கம்பன் கழகத்துடன் இணைந்து தலைநகரில் இசைவேள்வி
நடாத்துவது பாராட்டுதற்குரியது.
வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத இடம்பெயர்வின் காரணமாக மக்கள்
இடம்பெயர்ந்து செல்ல கலைகளும் இடம்பெயர்ந்தது
தூரதிஸ்டவசமானதே.எமது தாய் மண்ணில் முன்பிருந்ததைப்போல கலைத்துறை
இன்றில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டுதான்
ஆகவேண்டும்.சினிமா,ஆடம்பரம்,நவீனம் போன்றவற்றின் ஆதிக்கத்தின்
காரணமாக கலைக்கான முக்கியத்துவம்
குறைந்துகொண்டுவருகின்றது.இந்நிலையில் உலகெங்கும் பரவிவாழும்
தமிழினம் எம் கலையினை வளர்க்கவேண்டிய தேவை இருக்கின்றது.தங்கள்
தங்கள் பிரதேங்களில் தம்மால் இயன்ற வழிகளில் கலைவளர்ப்பது
வரவேற்கப்படவேண்டியது மட்டுமல்ல ஊக்கிவிக்கப்படவேண்டிய
விடயமுமாகும்.
இவ்வாறான நிகழ்வுகள் எமதுகலைகள் பற்றி இளைய சமுதாயத்துக்கு
தெரியப் படுத்துவதற்கும் அவர்களால் முன்னெடுத்துச்
செல்லப்படுவதற்கும் வழிகோலும்.ஓருபொழுது எமது கனவுத்தாயகம்
நனவாகும்போது,எமது கலைகள் சங்கமிக்கவழிகோலும்.எவ்வாறாயினும் தமது
பரம்பரை வழியாக எங்கிருந்தாலும் கலைவளர்ப்பவர்களையும்
இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.இந்நிலையில் எமது கலைகளின்
தாயகமான தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் கலைஉறவைப்பேணுவதில்
கொழும்பு கம்பன் கழகம் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுதற்குரியது.
அங்கிருந்து விற்பன்னர்களை கொண்டுவரும் இவர்களது போக்கு(இங்கு
பலரும் இதைத்தான் செயகிறார்கள்)சிலரிடத்தில் ஏன் ஈழத்தில் இசை
விற்பன்னர்கன் இல்லையா என்ற கேள்விக்கு இடமளிக்கத்தான்
செய்கின்றது.எனினும் இது குறித்து பிறிதொரு பகுதியில் ஆராயலாம்
என்று கூறி உங்களை இசைவேள்விக்கு அழைத்துச்செல்கின்றேன்........
இசைவேள்வி பற்றி முதல்நாள்தான் பத்திரிகைவாயிலாக
அறிந்தேன்.இதுகுறித்த செய்திக்கட்டுரையினை சரியாக வாசிக்காததன்
விளைவு கலையுலக நண்பன் கூறும்வரையில்(மூன்றாம் நாள்
முடிவில்)நிகழ்வுகளின் முதற்பகுதியில் கலந்து கொள்ளவில்லை.இது
வருத்தமே.வளர்ந்துவரும் ஈழத்து கலைஞர்களின் நிகழ்வுகளை
தவறவிட்டுவிட்டேன்.பரவாயில்லை சென்றமுறை கண்டு ரசித்தேன்தானே என
தேற்றி கொள்கின்றேன்.எனவே நான் பிரசன்னமாக இருந்த நிகழ்வுகளை
உங்கள் கண்முன் கொண்டுவர முயற்சிக்கின்றேன்.
முதல் நாள் விழா கோலாகலமாக கொழும்புக்கம்பன்கழகத்தின் செயலர்
பொ.பாலசுந்தரம் தம்பதிகளினால் மங்களவிளக்கேற்றி ஆரம்பித்து
வைக்கப்பட்டிருந்தது.நான் அரங்கில் நுழையும்போது உச்சநீதிமன்ற
நீதியரசர் சி.வி.விக்ஸேவரன் தலைமையுரை
வாசித்துகொண்டிருந்தார்.தனது நீண்ட தவைமையுரையினை ரசிகர்
மன்றத்தின்முன் வாசித்தது எனக்கு நீதிமன்றத்தினை
நினைவூட்டியது(நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதி வைத்துத்தான்
வாசிக்கப்படும்).இதற்காக என்னை உள்ளேதள்ளமாட்டார் என்பது என்
நம்பிக்கை.எங்காவது நொட்டை பிடிப்பதுதானே எங்கள் வழக்கம்.
அவருடைய உரையில் நான் பொறுக்கியவைகள் இவைதாம்.......
பாகம் 02
-ஊரோடி |