www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இன்பத்தமிழ்

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-1

தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை பாசாங்கின்றி பதிவு செய்தவர் அதுவரை பேசப்படாதிருந்த சகலவிதமான சமூக மௌனங்களையும் தனது தனித்துவமான தலித்மொழியினால் கலைக்க முயற்சித்தவர்.
--------------------------------------------------------------------------------
புத்தகம் பேசுது என்னும் இதழுக்கு பாமா அளித்த பேட்டியின் ஒரு பகுதி

பாமா (இந்தியா)


நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?

பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.

இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.


உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..?

இதுவரை தமிழ்ப்படைப்பாளிகள் எல்லாம் ஆண் மொழியில் தான் எழுதிகிட்டிருந்தாங்க இவங்க என்னுடைய தலித் மொழியை ஏற்றுக் கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. தமிழ் இலக்கிய பிhதாமகர்கள் ஒரு வகையான மொழிநடை சுகமான வாசிப்பு என்று வைத்திருக்கிறார்கள். அதைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கணும் என்கின்ற எதிர்பார்ப்பு இவங்களுக்கு இருக்கு. ஏன் ஏன் அப்படித்தான் இருக்கணும்? புதியமொழி, புதியநடை, புதிய சொல்லாடல் இருக்க்கூடாதா? இதை ஏன் இவங்களாலே சகிக்க முடியல்லே இதையே ஆதிக்க சாதியினரோ ஆண்களோ எழுதியிருந்தால் சிலாகித்திருப்பார்கள்.


இன்றைய குடும்ப அமைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இப்போது இருக்கிற குடும்ப அமைப்பு பெண்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடியது இன்றைய சராசரி வளர்ப்பு முறையில் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை வந்துவிடுகிறது. இது மாறணும் பெண் குழந்தைகள் திருமணத்துக்காக வளர்க்கபப்பட வேண்டிய ஒரு பொருள் என்கிற கண்ணோட்டத்தை விட்டு;ட்டு வளர்த்து வந்தோம்னா அது வளர்ந்த பிறகு அதுவே முடிவு செய்து கொள்ளும்.

உங்க கருக்கு நாவல் இலக்கிய வட்டாரத்திலே எந்த மாதிரியான கவனிப்பை பெற்றது?

நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய வீச்சு கிடைச்சுது. அதன் வடிவம் மொழிநடை, விசயம் எல்லாம் புதிசா இருக்கிறதா பரவலா ஏத்துகிட்டாங்க சில பேர் இது நாவலா? என்ன மொழி நடை இது என்கிற மாதியான விமர்சனத்தை வைச்சாங்க அதைப் பற்றி எல்லாம் நான் பெரிய அளவுக்கு கவலைப்படலே. ஏன்னா நான் இலக்கியவாதிகளுக்காக அதை எழுதல அதனால எனக்கு அது பெரிய விசயமா தெரியல. சர்ச் சைடுலேருந்து பெரிய எதிர்ப்புக்கள் வந்துச்சு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நடந்தைத்தானே எழுதியிருந்தேன்.


சங்கதி நாவல்லே கடைசி அத்தியாயத்திலே நானு பறச்சியாய் பெறந்தது ரொம்ப நல்ல காரியமாத்தான் தெரியுது. ஆனா எம்புட்டுத் தடவ இந்தச் சாதில பெறந்ததுக்காக வெக்கப்பட்டுக்கிட்டு வருத்தப்பட்டு இருந்திக்கேன்னு நினைச்சு கிட்டேன்னு பெருமையா சொல்லியிருக்கீங்க. நீங்கள் சங்கதியில் வாசகர்களுக்கு சொல்ல வந்த சங்கதி இது தானா?

இந்த மாதியான கஷ்டமான சூழலிலே நாங்கள் இருந்தாக் கூட அதையெல்லாம் உடைச்சிகிட்டு வாழ்ந்து காட்டக்கூடிய பாத்திரப் படைப்புக்கள் அதிலே இருக்கு. அந்தப் பலத்துக்கு காரணம் தலித் பண்பாடு என்பதை கோடிட்டு காட்டுறேன். அந்தப் பண்பாட்டு ரீதியான புரட்சியை செய்யும் போது இந்த மாதிரிப்பட்ட ஒரு கஷ்டத்திலேயும் கூட விடுதலை அடைந்த பெண்களோட சரித்திரம் தான் இது என்கிற மெஸேஜா இருக்கு.


இப்போது உங்களுக்கும் உங்கள் கிராமத்துக்கும் ஆன தொடர்பு எப்படி இருக்கு?

நான் எட்டாவது படிச்சுட்டு 13 வது வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியே போயிட்டேன். அதுக்கு பிறகு லீவுக்கு போறது தான் அதுக்கு பிறகு நிரந்தரமா அங்கு போய் வாழ்றது இல்லே. நான் பிசிக்கலா இங்க இருக்கேன்னாலும் உணர்வுரீதியா அங்கே தான் இருக்கேன்.. சமூக தளத்திலே இல்லன்னா எழுதுறது கஷ்டம்.

கருக்கு 1992ல் வந்தது சங்கதி 1994ல் வந்தது. இடையிலே நிறைய கதைகள் எழுதியிருக்கீங்களே?

சிறுகதை எழுத முடியும்னு நான் நினைக்கலே அதுக்காக நான் முயற்சியும் பண்ணலே. கருக்கு வந்த பிறகு இந்திய டுடெல தான் இலக்கிய மலருக்காக ஒரு சிறுகதை கேட்டாங்க அப்போதான் அண்ணாச்சி என்கிற கதையை எழுதினேன். அது எல்லோருக்குமே பரவலா புடிச்சிருந்தது. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது. அந்தக் கதை தான் என்னால கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கி;ச்சு.

உங்க ஊர் மக்கள் என்ன மாதிரி பீல் பண்ணாங்க?

கடுமையான எதிர்ப்பு வந்தது அது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. ஊருபேரை மட்டும் மாற்றி எழுதியிருந்தேன். ஆனா லொககேசனை வைச்சு இந்த ஊர்தான்னு புரிஞ்சிருக்கலாம்.மனுசங்க பேரையெல்லாம் அப்படி அப்படியே வைச்சிருந்தேன். பட்டப் பெயரையெல்லாம் வைச்சு எழுதிட்டேன். அது அவங்களுகு;கு கஷ்டமாயிடுச்சு அங்கே ரொம்ப பேருக்கு வாசிக்கத் தெரியாது. வாசிச்ச கொஞ்சப் பேரும் இத எவ்வளவு பேரு படிப்பாங்க என்கிற மாதிரி ஏத்தி விட்டுட்டாங்க நான் வெளியூருல இருந்ததால எங்க அப்பாவைக் கூப்பிட்டு சண்டை போட்டுருக்காங்க எங்க ஊருக்குள்ளேயே நான் போக முடியல.


தொடரும்...

அனுப்பியவர் வெப்தமிழன்

 

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளு&#