கவிதை :பாட்டி கதை
-திலகபாமா: சிவகாசி-
வடை சுட்ட பாட்டி இறந்த பின்னும்
கதை சொன்ன முப்பாட்டனுக்கப்புறம்
மூணு தலைமுறை கல்லூரி போன பின்னும்
இன்னும் கண்ணில் படுகின்றன
காகங்கள் வடையோடும்
காலடியில் பல நரிகளோடும்
காகம் மனம் திறந்து
பாடும் கானம் சுகந்தமென்று
காத்திருப்பதாய்
எச்சில் ஒழுக நரிகள் கதைக்க
வடை பறிபோகும் பயத்தில்
கால் மாற்றியும் அலகு மாற்றியும்
நரிகளுக்காய் பாடித் தொலைக்கும் காகங்களை
முட்டைக்குள் சிறை இருக்கும்
நாளைய காகங்கள் கேலி செய்கிறது
இத்தனை பிரயத்தனங்களோடு
நரிகளுக்கேன் நம் கச்சேரி என்று
திறக்கின்ற பாடல்களின் போது
வடைகளோடு காகமும்
விழுந்து விட வேண்டுமென்ற
பிரார்த்தனைகளோடு நரிகளும்







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு