கங்குலி சதம்! லக்ஷ்மண் அபாரம்! ஆஸி.க்கு இந்தியா சரியான பதிலடி!!
இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலியின் அற்புதமான சதமும், வெங்கட் சாய் லக்ஷ்மணின் அழகான ஆட்டமும், வீரேந்திர ஷேவக் கொடுத்த அதிரடித் துவக்கமும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிர்பாராத, சரியான பதிலடியாக அமைந்தது!
ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிராக பிரிஸ்பேன் போன்ற வேகமான ஆட்டக்களத்தில் 50 ஓவர்களாவது இந்திய அணி தாக்குப் பிடிக்குமா என்று கிண்டலாக சந்தேகம் எழுப்பியவர்களுக்கெல்லாம் தங்களுடைய திறனை முழுமையாக வெளிப்படுத்தி இந்திய அணி பதில் தந்து வாயடைத்துவிட்டது.
ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பௌன்ஸர்களை தாக்குதல்களை தாங்குவாரா? அவர்களுடைய வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிப்பாரா என்றெல்லாம் ஆஸ்ட்ரேலிய பத்திரிகைகள் விட்ட கட்டுக்கதைகளுக்கு அபாரமாக ஆடி சதமடித்து பதில் தந்தார் சௌரவ் கங்குலி.
ஆஸ்ட்ரேலிய அணியை 323 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை எடுத்துள்ளது.
இன்று காலை இந்திய அணிக்கு ஒரு அதிரடியான துவக்கத்தை தந்தார் வீரேந்திர ஷேவக். 5 பௌண்டரிகளுடன் 51 பந்துகளில் 45 ரன்களை எடுத்த வீரேந்திர ஷேவக்கின் ஆட்டத்தின் உதவியால் முதல் விக்கெட்டிற்கு இந்திய அணி 61 ரன்களை எடுத்தது.
நடுவர் ஸ்டீவ் பக்னரின் தவறான முடிவு!
ஆனால், ஷேவக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ஆட வந்த ராகுல் திராவிட், கில்லஸ்பி வீசிய அருமையான பந்திற்கு 1 ரன்னிலேயே ஆட்டமிழந்ததும், அதன் பிறகு ஆட வந்த சச்சின் டெண்டுல்கருக்கு நடுவர் ஸ்டீவ் பக்னர் தவறாக எல்.பி.டபிள்யூ கொடுத்து ஆட்டமிழக்கச் செய்ததும் இந்திய அணியை நெருக்கடியில் தள்ளியது.
ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து சச்சின் டெண்டுல்கரின் பேடின் மேல் பகுதியை மட்டுமே தாக்கியது. விதிப்படி அதனை எல்.பி.டபிள்யூ முடிவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் பந்து ஸ்டம்பின் உயரத்திற்கும் மேலே செல்லக் கூடியது என்பது தெளிவாகத் தெரிந்தது. அவ்வாறு இருந்தும் சச்சினுக்கு-மிகத் தாமதமாக-ஸ்டீவ் பக்னர் எல்.பி.டபிள்யூ கொடுத்தது சந்தேகத்தைக் கிளப்பியது.
சோப்ராவின் பொறுப்பான ஆட்டம்!
62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஆட வந்த அணித்தலைவர் கங்குலி, எவ்வித தயக்கமும் இன்றி அடித்தாட வேண்டிய பந்துகளை அடித்தாடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். மறுமுனையில், துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா மிகவும் நிதானித்து கங்குலிக்கு உறுதுணையாக நின்றாடினார்.
இவர்கள் இருவரும் இணைந்து அடுத்த 20 ஓவர்களில் 65 ரன்களை எடுத்து அணியை ஸ்திரப்படுத்தினர். அதுவரை மிக நன்றாகக் கணித்து ஆடிக் கொண்டிருந்த சோப்ரா, கில்லஸ்பியின் பந்தை முன்னால் சென்று தடுத்தாட முயன்றபோது, பந்து மட்டையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.
127 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்திருந்த நிலையில், லக்ஷ்மண் ஆட வந்தார். இவர்கள் இருவரும் ஆடும் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியாவின் தலைவிதி அமையும் என்று உறுதியானது. ஆனால், இருவருமே எவ்வித சிரமமுமின்றி ஆஸ்ட்ரேலிய அணியின் பந்து வீச்சை நன்றாக எதிர்கொண்டு அடித்து ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.
அடுத்த 34 ஓவர்களில் கங்குலியும், லக்ஷ்மணும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 146 ரன்களைக் குவித்தனர்.
சௌரவ் கங்குலி அருமையாக ஆடி 130 பந்துகளில் தனது 11-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அவர் எடுத்த முதல் சதம் இது.
ஆனால், கங்குலி சதம் எடுத்த சிறிது நேரத்திலேயே லக்ஷ்மண் ஆட்டமிழந்தார். 113 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 பௌண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்த லக்ஷ்மண், மேக்கில்லின் பந்தை கட் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்.
சதமடித்த பிறகும் சௌரவ் கங்குலி, நிதானமாகவே ஆடி ரன்களை உயர்த்தத் தொடங்கினார். அடுத்து ஆட வந்த பார்த்தீவ் பட்டேலுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு மேலும் 56 ரன்களைக் குவித்த பிறகு கங்குலி ஆட்டமிழந்தார்.
ஆஸ்ட்ரேலிய அணியின் இந்தியப் பயணத்தின்பொழுது சிறப்பாக பந்து வீசிய ஆன்டி பிக்கலை ஷேவக்கில் இருந்து கங்குலி, லக்ஷ்மண் வரை அனைவரும் வெளுத்துக் கட்டினர். 23 ஓவர்களை வீசிய பிக்கல், 118 ரன்களைக் கொடுத்துள்ளார்.
இந்திய அணித்தலைவர் கங்குலி 116 பந்துகளில் 18 பௌண்டரிகளுடன் 144 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு இணை சேர்ந்த பார்த்தீவ் பட்டேலும், அஜித் அகார்கரும் கடைசி வரை நிதானமாக நின்றாடி அணியின் எண்ணிக்கையை 362 ரன்களுக்கு உயர்த்திய நிலையில், மைதானத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் 4-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்திய அணி நாளை 440 முதல் 450 ரன்கள் வரை குவிக்கும் என்று அணித்தலைவர் சௌரவ் கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.