www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

சம்பூரை கைப்பற்றுவதன் மூலம் கடற்பாதையை திறக்க முடியுமா?

-Veerakesari-
வடக்கு -கிழக்கில் முழு அளவிலான போரில் படையினர் இறங்கியுள்ளனர்.திருகோணமலையில்n தற்போது மேற்கொள்ள nப்பட்டு வரும் பாரிய படை நகர்வானது மேலும் மேலும் மோதல்களுக்கு வழி வகுப்பதாகவே இருக்கப் போகிறது. மாவில் ஆற்றுப் பிரச்சினையானது மனிதாபிமானமாகத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்க்கப்பட்டிருந்தால் சிங்களவரின் தண்ணீர் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த மனிதாபிமானப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்திய அரசு, அதனைப் பின்னர் இராணுவமயப்படுத்தியது.

10 ஆயிரம் விவசாயிகளுக்கான தண்ணீர்ப் பிரச்சினையெனக் கூறி மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து இன்று துரத்தப்பட்டுள்ளனர்.

சிங்களவருக்காக, இங்கு தமிழருக்கெதிரான கடும் போரில் அரசு குதித்தது. இந்தப் போர் திருமலையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வீடு வாசல்களையிழந்து அகதிகளாக்கப்பட்டு அந்தந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய இந்த யுத்தமானது தமிழ்ப் பிரதேசங்களை நிர்மூலமாக்கி, அங்குள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றி திருகோணமலையை எப்போதுமே ஒரு சிங்களப் பிரதேசமாக மாற்ற வேண்டுமென்ற குறிக்கோளிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தரப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அதற்கேற்ப, பாரிய படை நகர்வின் மூலம் மக்கள் குடியிருப்புகள் அனைத்தையும் அழித்து அவர்களுக்கு எதிர்காலத்தில் வாழ்விடங்களை இல்லாது செய்து மக்களை விரட்டியடித்து பெருமளவு பிரதேசங்களை சுடுகாடாக்கி அவற்றை மக்களற்ற சூனியப் பிரதேசங்களாக அல்லது தங்களது ஆக்கிரமிப்பு பிரதேசங்களாக வைத்திருக்க வேண்டுமென்பதே அரசினதும் படையினரதும் திட்டமெனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருகோணமலை கடற்படைத்தளம், விமானப் படைத்தளம் மற்றும் துறைமுகத்துக்கும் சம்பூரில் நிலை கொண்டுள்ள புலிகளால் பெரும் அச்சுறுத்தலேற்பட்டுள்ளதாலேயே அந்த அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக சம்பூரைக் கைப்பற்ற வேண்டிய அவசிய தேவையிருப்பதாகக் கூறி மூதூர் கிழக்குப் பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்தப் பாரிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 12 தமிழ் கிராமங்களுள்ளன. இவற்றில் ஒன்றுதான் சம்பூர். இங்கிருந்தே புலிகள் ஆட்லறி ஷெல்களை ஏவி திருமலை கடற்படைத் தளத்தையும் விமானப் படைத் தளத்தையும் துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்வதாகக் கூறி இந்தப் படை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

சம்பூரிலிருந்து புலிகளைப் பின்தள்ளுவதன் மூலம் மட்டும் திருமலை துறைமுகத்துக்கான புலிகளின் அச்சுறுத்தலை தவிர்த்து விட முடியாதென்பதால் மூதூர் கிழக்கில் பெரும்பாலான தமிழ்க் கிராமங்களைக் கைப்பற்றுவதன் மூலம்,புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதல் தூரத்திலிருந்து திருமலைத் துறைமுகத்தை பாதுகாத்து விட முடியுமெனப் படைத்தரப்பு கருதுகின்றது.

தற்போதைய பாரிய படை நடவடிக்கை மூலம் திருமலைத்துறைமுகத்தை பாதுகாப்பதென்பதுடன் திருமலையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்களை விரட்டியடிப்பதும் பின்னர் அந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி திருமலை நகரை சிங்களப் பிரதேசங்களால் சுற்றிவளைப்பதும் இனவாதிகளின் திட்டமாகும்.

திருமலைத் துறைமுகத்துக்கு சம்பூரிலுள்ள புலிகளால் ஆபத்தெனக் கூறி இந்தப் பாரிய படை நடவடிக்கையில் படையினர் இறங்கியுள்ளனர். ஆனால், சம்பூர் உட்பட மூதூர் கிழக்கை துவம்சம் செய்து பெரும் போரைத் தொடக்கியதே படைத்தரப்புத்தான்.

ஏப்ரல் 29 ஆம் திகதி கொழும்பில் இராணுவத் தலைமையகத்தினுள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து முப்படைகளும் இணைந்து சம்பூரை மையமாக வைத்தே மூதூர் கிழக்கை துவம்சமாக்கின. எதற்காக தங்கள் மீது தாக்குதல் நடைபெறுகின்றதென்றே தெரியாமல் இந்தப் பிரதேச மக்கள் ஒரு இரவிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்குப் பிரதேசம் அடிக்கடி முப்படையினரதும் தாக்குதலுக்கிலக்காகியது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தத் தாக்குதலால் மூதூர் கிழக்குப் பிரதேசமே சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான், கடந்த மாதம் 11 ஆம் திகதி சம்பூரிலிருந்து திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தினர்.

தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வந்ததாலேயே, அந்தத் தாக்குதல் நடத்தும் படை நிலைகளை அழிப்பதற்காக தாங்கள் இந்தத் தாக்குதல்களை ஆரம்பித்ததாக புலிகள் தெரிவித்தனர்.

புலிகளின் இந்தத் தாக்குதலால் திருமலைத் துறைமுகமும் செயலிழந்தது. யாழ்.குடாநாட்டுக்கு திருமலைத் துறைமுகத்தினூடான கடல் வழிப் பயணங்களும் ஸ்தம்பிதமடைய யாழ்.குடாநாட்டுக்கான கடல்வழி விநியோகப் பாதையும் முடக்கப்பட்டது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி பிற்பகல் திருமலை கடற்படைத் தளம் மீதான புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதலையடுத்து அன்று மாலை யாழ்.குடாவில் பெரும் சமர் வெடித்தது. பலாலி விமானத் தளம் மீதும் காங்கேசன்துறை துறைமுகம் மீதும் ஆட்லறி ஷெல்கள் விழவே திருகோணமலைக்கும் யாழ்.குடாவுக்குமிடையிலான படையினரின் கடல்வழி விநியோகப் பாதை முழுமையாகத் தடைப்பட்டது.

சம்பூரிலிருந்து புலிகள் திருகோணமலைத் துறைமுகத்தினுள் ஆட்லறி ஷெல்களை ஏவி இந்தத் துறைமுகத்தை ஸ்தம்பிதமடையச் செய்த அதேநேரம், பூநகரியிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஆட்லறி ஷெல்களை ஏவி அந்தத் துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்தனர். இவ்வேளையில் பலாலி விமானப் படைத் தளத்தினுள்ளும் ஆட்லறி ஷெல்கள் விழவே யாழ்.குடாவில் விமானப் படைத்தளமும் செயலிழந்தது.

அதுபோல் திருகோணமலை சீனன்குடா விமானத் தளத்தினுள்ளும் சம்பூரிலிருந்து ஏவிய ஆட்லறி ஷெல்கள் விமானத் தளத்தையும் செயலிழக்கச் செய்ய யாழ்.குடாநாட்டுக்கான கடல் வழி மற்றும் வான் வழிப் போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டன.

இதனால், யாழ்.குடாவினுள் நிலை கொண்டிருக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினருக்கான விநியோகங்கள் தடுக்கப்பட்டடன. தென்மராட்சியின் முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் நடைபெற்ற கடும் சமரில் இந்தப் படைத்தளங்கள் புலிகளிடம் வீழ்ந்திருந்தால் 40 ஆயிரம் படையினரதும் நிலைமை மிக மோசமாகியிருக்கும்.

இந்த நிலையில் தான் யாழ்.குடா மோதல்கள் சற்றுத் தணிய யாழ்.குடாவுக்கான தரை வழிப்பாதையை (ஏ-9) திறக்குமாறு வற்புறுத்தல்கள் அதிகரித்தன. `ஏ-9' வீதியைத் திறக்க புலிகள் எந்நேரமும் தயாராயுள்ள போதும் அரசும் படைத்தரப்பும் இதற்கு சம்மதிக்க மறுத்துள்ளன.

`ஏ-9' வீதியை திறக்காமல் யாழ்.குடாவுக்கு இனி கடல் வழியான போக்குவரத்தை மட்டுமே நடத்த அரசும் படைத் தரப்பும் திட்டமிட்டுள்ளன. `ஏ-9' வீதியைத் திறப்பதாயின், யாழ்.குடாவில் இனிமேல் எவ்விதத் தாக்குதலையும் நடத்தமாட்டோமென்றும் `ஏ-9' வீதியூடாக குடாநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு வரி அறவிடமாட்டோமென்றும் புலிகள் எழுத்து மூல உத்தரவாதம் தர வேண்டுமெனப் படைத் தரப்பு நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசின் இவ்விரு நிபந்தனைகளையும் புலிகள் ஒரு போதும் ஏற்கமாட்டார்களென்பது தெளிவு. இதனையே அரசும் படைத்தரப்பும் எதிர்பார்க்கின்றன. இந்தப் பாதையைத் திறக்க புலிகளே தடையாக இருப்பதாக இதன் மூலம் வெளியுலகுக்குக் காட்டி `ஏ-9' வீதியை திறக்காமல் செய்வதே அரசினதும் படைத்தரப்பினதும் திட்டமாகும்.

அதேநேரம், கடல்வழிப் பாதையை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதன் மூலமே `ஏ-9' வீதிக்கு மாற்றாக கடல்வழிப் பயணங்களை மேற்கொள்ள முடியுமென வெளியுலகத்திற்குக் கூறலாம். அதற்காக திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு திருமலைத் துறைமுகத்திலிருந்து யாழ். குடாநாட்டுக்கு கடல்வழிப் பயணங்களை மேற்கொள்ள முடியுமென்பது அரசினதும் படைத்தரப்பினதும் எண்ணமாகும்.

வன்னியூடான (ஏ-9) பயணங்களை நிறுத்துவதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளையும் நிறுத்தி படையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான தொடர்புகளை அதிகரிக்கலாமென்பதுடன் வன்னியின் முக்கியத்துவத்தை இல்லாது செய்து, புலிகளை ஓரளவு தனிமைப்படுத்துவதுடன் தினமும் `ஏ-9' வீதிப் பயணம் ஊடாக அவர்களுக்கு கிடைக்கும் பெருமளவு வரியையும் தடுத்துவிடலாமெனவும் படைத்தரப்பு கருதுகிறது.

இதனால், `ஏ9' வீதிப் போக்குவரத்துக்கு மாற்றீடாக உடனடியாக யாழ். குடாநாட்டுக்கு கடல்வழி போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வதாயின் திருகோணமலைத் துறைமுகத்துக்கு சம்பூரிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தலை தடுத்து திருமலைத் துறைமுகத்தை புலிகளின் முற்றுகையிலிருந்து விடுவிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதற்காகவே சம்பூரையும் மூதூர் கிழக்கையும் உடனடியாகக் கைப்பற்றி திருமலைத் துறைமுகத்தை மீண்டும் செயற்படச் செய்து யாழ். குடாநாட்டுக்கான கடல்வழிப் போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிக்க அரசு தயாராயுள்ளதாகக் காண்பிக்க வேண்டிய தேவையுமுள்ளதால் மூதூர் கிழக்கை கைப்பற்றி புலிகளைப் பின்னுக்குத் தள்ளி திருமலைத் துறைமுகத்தை உடனடியாகத் தயார் நிலைக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், திருமலைத் துறைமுகத்தை மட்டும் செயற்பட வைத்து யாழ். குடாநாட்டுக்கான கப்பல் சேவைகளை நடத்திவிட முடியுமென அரசும் படைத்தரப்பும் கருதுவது குறித்து மேலும் கேள்விகள் எழுகின்றன. பூநகரியிலிருந்தும் கல்முனையிலிருந்தும் புலிகளின் ஆட்லறி ஷெல்கள் காங்கேசன்துறை துறைமுகத்தை செயலிழக்கச் செய்து வருவதால் இந்தக் கப்பல் போக்குவரத்துக்கு காங்கேசன்துறை துறைமுகம் உடனடியாகத் தயாரில்லை.

`ஏ-9' வீதியை மூடி விடுவதன் மூலம் கிளாலி, முகமாலை மற்றும் எழுதுமட்டுவாளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி புலிகள் இந்தப் பிரதேசங்களூடாக குடாநாட்டுக்குள் நுழைவதையும் தடுத்துவிட முடியுமெனவும் படைத்தரப்பு கருதக்கூடும். இம்முறை யாழ். குடாச் சமரில் கிளாலி மற்றும் எழுதுமட்டுவாள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளைப் புலிகளால் தகர்க்க முடியாமல் போனதே அவர்களால் முற்றுகையை முழுமையாக்க முடியவில்லை எனப் படைத்தரப்பு கருதுகிறது.

அரசும் படைத்தரப்பும் இவ்வாறு சிந்தித்தாலும் யாழ். குடாவுக்கான கடல் மார்க்கம் பெரும்பாலும் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வடமராட்சி கிழக்கு முதல் பருத்தித்துறை வரையான கடற்பரப்பில் நடைபெற்ற பல மணிநேர கடற்சமரில் கடற்படையினருக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு எட்டுமணி முதல் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிவரை வடமராட்சி கடற்பரப்பின் பெரும் பகுதியை கடற்புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். வடபகுதி கடற்படைத் கட்டளைத் தலைமையகமான காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு மிக நெருக்கமாகவும் காரைநகர் கடற்படைத் தளத்திற்கு சற்று அப்பாலுமே இந்தக் கடற்சமர் பலமணிநேரம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கடற் சமரின் போது வடமராட்சி பகுதியில் கரையோர படைமுகாம்களிலிருந்தும் காவலரண்களிலிருந்தும் படையினர் சற்று பின்வாங்கிச் சென்றுவிட்டு நேற்றுக் காலையே பழைய நிலைகளுக்குத் திரும்பியதாகவும் கூறப்படும் நிலையில், வடபகுதி கடற்பரப்பில் கடற்படையினரின் போக்குவரத்து பாதுகாப்பானதாயில்லையென்பது தெளிவாகியுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான அல்லது கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கு மிடையிலான பயணிகள் கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்து உடனடியாகச் சாத்தியப்படும் வாய்ப்புகளில்லையென்பதும் தெளிவு.

வெள்ளிக்கிழமை இரவு வடமராட்சிக் கடற்பரப்பில் இடம்பெற்ற பெரும் கடற்சமரில் இரு அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டு, இரு டோரா பீரங்கிப் படகுகள் பலத்த சேதமடைந்ததுடன் பல கடற்படையினர் கொல்லப்பட்டும் 30 இற்கும் மேற்பட்ட படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடற்புலிகளின் 18 படகுகளை தாங்கள் அழித்துவிட்டதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர்திருமலைத் துறைமுகம் மீதான கடற்புலிகளின் அச்சுறுத்தலைத் தடுக்கும் பாரிய படை நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருவதாக படைத்தரப்புகள் கூறும் அதேநேரம், வடபகுதி கடற்பரப்பில் தங்கள் கை ஓங்கியிருப்பதை விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றனர். இதனால், யாழ்.குடாவுக்கான விநியோகப் பாதையானது தொடர்ந்தும் புலிகளின் பிடியிலேயே இருக்கப்போவதும் புலனாகிறது.

பலாலி விமானப்படைத்தளம் மற்றும் ஓடுபாதைகள் மீது தொடர்ந்தும் புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தி வருவதால் குடாநாட்டுக்கான வான் வழி விநியோக மார்க்கமும் நிச்சயமற்றே உள்ளது.

இந்த நிலையில், சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கை கைப்பற்றுவதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான படையினர் இங்கு முடக்கப்படும் அதேநேரம், மூதூர் கிழக்கில் படையினர் நிலைகொள்ளும் பகுதிகளும் தொடர்ந்தும் புலிகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகப் போகின்றன. சிறுசிறு பற்றைக் காடுகளையும் பெரும் வெளிகளையும் கொண்ட இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான படையினர் இங்கு நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது.

அதேநேரம், இங்குள்ள புவியியல் அமைப்பானது புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்களுக்கும் வாய்ப்பாகுமென்பதால் படையினர் எதிர்வரும் நாட்களில் இப்பிரதேசத்தில் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

படையினரின் தற்போதைய நகர்வு கூட பலத்த நெருக்கடிகளைச் சந்திக்கிறது. தோப்பூரிலிருந்து கிழக்கே நேராக கடற்கரை நோக்கிச் சென்ற மூதூர் கிழக்கின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியாது தற்போது படையினர் பச்சனூரிலிருந்து செல்வா நகரூடாக வடக்கே கட்டைபறிச்சானுக்குச் சென்று, அங்கிருந்து சம்பூர் செல்ல முயற்சிக்கின்றனர்.

இதனால், புலிகளின் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலைச் சந்தித்து வருகின்றனர். அதேநேரம், கட்டைபறிச்சான், பச்சனூர், தோப்பூர் பகுதிகளிலிருந்தும் திருகோணமலையின் பலமுகாம்களிலிருந்தும் புலிகள் மீது கடும் தாக்குதலைத் தொடுக்கும் படையினர், சம்பூர் கடற் பரப்பிலிருந்தும் பின்புறமாக புலிகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர்.

சம்பூரை கைப்பற்றுவதன் மூலம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு புலிகளால் ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தலை தடுத்துவிட முடியுமென படையினரும் அரசும் மார்தட்டினாலும் திருமலைத் துறைமுகத்திலிருந்து இயக்கும் கப்பலை வடபகுதிக்கு கொண்டு செல்ல முடியாதளவிற்கு வடபகுதிக் கடற்பரப்பில் கடற்புலிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.

மூதூர் கிழக்கில் மேற்கொள்ளப்படும் பாரிய நடவடிக்கை, வடமராட்சி கடற்பரப்பில் இடம்பெற்ற பாரிய கடற் சமர் போன்றன போர்நிறுத்த உடன்பாடு இனி அமுலிலில்லை என்பதை தெளிவாக்கிவிட்டன. இதனால் கண்காணிப்புக் குழுவுக்கு மட்டுமல்ல, இந்த உடன்பாடு முறிவடைந்த பின் இங்கு நோர்வே அனுசரணையாளர்களுக்கும் வேலையிராது.

தென்பகுதியில் பெரும்பாலானோரும் இனவாதிகளும் விரும்பியது இதைத்தான். முழு அளவிலான போர் வெடிக்க வேண்டும். நோர்வே இங்கிருந்து விலக வேண்டுமென விரும்பிய இவர்கள், இந்தப் பெரும் போரில் தமிழர்கள் மட்டுமே அழிய வேண்டுமென்றும் விரும்புவதுதான் பெரும் அறியாமை. புலிவாலைப் பிடித்துவிட்டதால் இனி அழிவு அவர்களுக்கும் தான்.


By விதுரன்

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]