முகமாலை கள யதார்த்தம் என்ன?
[Puthinam] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். முகமாலை களம் குறித்து ஊடகங்கள் பலவும் பரபரப்பான விடயங்களை வெளியிட்டு வரும் நிலையில் கள யதார்த்தம் என்ன என்பது குறித்தை விவரிக்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.
சிறிலங்கா இராணுவத்தினரின் அதிஉயர் தாக்குதல் பலத்துக்கு எதிராக முகமாலை களத்தில் விடுதலைப் புலிகள் மோதிக்கொண்டிருக்கின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தின் முழுமையான வலிந்த தாக்குதல் பலம் குவிக்கப்பட்டு முகமாலை களத்தில் இராணுவம் நிற்கின்றது. அதிலும் ஒரு வலிந்த தாக்குதல் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலைத்தான் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஊடகங்கள் பல காட்டும் பெரும் பரபரப்புக்குரிய விடயங்கள் எதுவும் களத்தில் அரங்கேறவில்லை.
சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதல்-
வலிந்த தாக்குதலை இராணுவம் தொடர்ந்து நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மீதான விடுதலைப் புலிகள் தாக்குதல்-
ஆகியவையே தற்போது நடைபெற்று வருகின்றன.
- முகாமலையில் இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலை முறியடித்து
- முகமாலை முன்னரணை தகர்த்து
- இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் பின் தள்ளியிருக்கின்றனர்.
- இராணுவத்தினர் டாங்கிகள் சகிதம் தொடர்ச்சியாக முன் நகர முயன்று வருகின்றனர். அவை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்படுகின்றன.
முகமாலையில் வலிந்த தாக்குதலுக்காக இராணுவத்தின் உயர்தாக்குதல் அணிகளான 53 ஆம் டிவிசன், 55 ஆம் டிவிசன் படையணிகள்தான் களமுனையில் நிற்கின்றன. இவைதான் சிறிலங்கா இராணுவத்தின் உச்ச தாக்குதல் வலு. இதற்கு மிஞ்சி சிறிலங்கா இராணுவத்திடம் தாக்குதல் உச்சவலு இல்லை. இராணுவத்தின் உச்ச வலுவுடன்தான் விடுதலைப் புலிகள் பொருதியவண்ணமுள்ளனர்.
முகமாலையில் இரு முன்னரண்களை சிறிலங்கா இராணுவத்தினர் பேணி வருகின்றனர்.
பிரதான முன்னரண்
- முகமாலை சோதனை நிலையத்துடன் கிழக்கே நாகர்கோவில் வரையும் மேற்கே கிளாலி வரையும் நீண்டு செல்கின்றது.
இரண்டாவது முன்னரண்
- முதலாவது முன்னரணை விட பலமாக எழுதுமட்டுவாளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் சிறிலங்காவின் முழு இராணுவ வளமும் இந்தப்பகுதியில்தான் சிறிலங்கா இராணுவத்தினரால் திருப்பப்பட்டுள்ளன.
குடாநாட்டின் இராணுவ டாங்கிகள் பெரும்பான்மையானவை இந்தப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. மேலும் ஆட்டிலெறிகள், மோட்டார்கள், கட்யுசா ரொக்கட் குண்டு செலுத்திகள் எல்லாம் இங்குதான் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாண இராணுவ வளமும் முகமாலை களமுனையில்தான் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த களமுனையின் இருபுறங்களிலும் உள்ள கிளாலி படைத்தளம் மற்றும் நாகர்கோவில் படைத்தளம் ஆகியவை மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் நடைபெறவில்லை.
கிளாலி மற்றும் நாகர்கோவில் படைத் தளங்களில் சிறிலங்கா இராணுவத்தின் 51 ஆம் 52 ஆம் டிவிசன்களின் பிரிகேட்கள் நிலை கொண்டுள்ளன.
மண்டைதீவு சமர்
இதேவேளை மண்டைதீவு "வேலுசுமண" கடற்படைத் தளத்திலிருந்து பூநகரியை நோக்கி எறிகணைகள் மூலம் தாக்குதவற்கான தயார்படுத்தலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
ஆனால் மண்டைதீவில் விடுதலைப் புலிகள் நுழைந்து "வேலுசுமண" கடற்படைத்தளத்தையும் அவர்களின் தாக்குதல் ஏற்பாடுகளையும் அழித்தனர். மண்டைதீவு, அல்லைப்பிட்டிப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்கா கடற்படைத்தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள் தங்களின் தளங்களுக்கு திரும்பிவிட்டனர்.
இது கடற்புலிகளின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஈருடக படையணியின் நடவடிக்கையின் போது அல்லைப்பிட்டியிலிருந்து மண்கும்பானுக்கு சிறிலங்கா கடற்படையினர் பின் நகர்ந்திருக்கின்றனர்.
யாழ்ப்பாண நகரத்துக்கு இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மண்டைதீவு உள்ளது.
மண்டைதீவும் தளபதி கொப்பேகடுவவும்
1992 இல் அராலித்துறை கண்ணிவெடியில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவ உயர் தளபதி டென்சில் கொப்பேகடுவ, யாழ்ப்பாண நகரைக் கைப்பற்ற அதற்கு நெருக்கமான மண்டைதீவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுக்க "வலம்புரி நடவடிக்கை" நடத்தப்பட்டு அது ஆக்கிரமிக்கப்பட்டது.
ஆனால் "ஒபரேசன் பைனல் கௌன்ட் டவுண்" நடவடிக்கை என்ற "மண்டைதீவிலிருந்து யாழ். நகரை கைப்பற்றுவதற்கான" நடவடிக்கைக்கான இறுதி உறுதிப்படுத்தலை செய்வதற்காக அராலித்துறைக்கு வந்தபோது தான் கொப்பேகடுவ கொல்லப்பட்டார். அவர்களின் திட்டம் அம்பலமாகிவிட்டது.
1990 இல் விடுதலைப் புலிகளால் யாழ். கோட்டை முற்றுகையிடப்பட்டபோது ஊர்காவற்றுறையில் இராணுவத்தை கொப்பேகடுவ தரையிறக்கி "திரிவிடபலய" நடவடிக்கை மூலம் மண்டைதீவை ஆக்கிரமித்து கோட்டை படையினரை மீட்டுக்கொண்டு சென்றார்.
இது மண்டைதீவின் கடந்த கால வரலாறு.
முகமாலை கள யதார்த்தம்
தற்போது நடத்தப்பட்ட தாக்குதலானது சிறிலங்கா இராணுவத்தினரது தாக்குதல் ஏற்பாடுகளை சீர்குலைத்து விடுதலைப் புலிகளின் வலுவை நிருபித்துள்ளது.
மற்றொரு புறம் சிறிலங்கா இராணுவத்தின் உச்ச தாக்குதல் வலுவானது முகமாலை களத்தில் விடுதலைப் புலிகளால் எதிர்கொள்ளப்பட்டு பதில் தாக்குதல்கள் வலுவாக நடத்தப்படுகின்றன.
முன்னர் ஆனையிறவை எப்படி சிறிலங்கா படைத்தரப்பு பலமாக வைத்திருந்ததோ இப்போது முகமாலையையும் அதேமாதிரி சிறிலங்கா இராணுவம் கிட்டத்தட்ட வைத்திருக்கின்றது.
முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தின் கள இழப்புக்களை ஈடுசெய்ய குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் திரட்டப்படுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மட்டும் 25 ஆயிரம் பேர் இருப்பதாக தெரிய வருகின்றது. சிறிலங்கா இராணுவத்தின் 51 ஆம் டிவிசன், 52 ஆம் டிவிசன், 53 ஆம் டிவிசன், 55 ஆம் டிவிசன் ஆகியவை களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதில் தென்மராட்சி மற்றும் முகமாலை களமுனைகளில் 52, 53, 55 ஆம் டிவிசன்கள் நிற்கின்றன.
முகமாலை களமுனையை இழந்தால் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா இராணுவம் இழக்க வேண்டிவரும். அப்போது குடாநாட்டில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் தப்புவதற்கே வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் சிறிலங்காத் தரப்பு தனது உச்ச பலத்தை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் இப்போதைய கள யதார்த்தம்.
இந்த இராணுவத்தினரை இழப்பதுதான் சிறிலங்கா இராணுவத்தினரின் அந்திமமாக இருக்கும்.








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு