www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

மாவிலாறு விவகாரத்தின் உண்மையான பின்னணி!

-Webeelam.com-
திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு காரணமாக மாவிலாறு அணை விவகாரத்தை சிறிலங்கா அரசு கூறுகிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரித்தும் பல குளங்களை அழித்தும் நாசம் செய்த சிறிலங்கா அரசு மாவிலாற்றின் அணை மூடப்பட்டதற்காக போர் தொடுத்துள்ளது. இந்த அணை மூடப்பட்டதால் பாதிக்கப்படும் சில ஆயிரம் விவசாயிகள் சிங்களவர்களாக இருப்பதே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளதற்கு காரணம் ஆகும். ஆனால் தமிழ் மக்கள் எதற்காக மாவிலாற்றின் அணையை மூடினார்கள்? இதன் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளோடு திருகோணமலை மாவட்டத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலனை அணுகினோம். அவர் எமக்கு கூறிய தகவல்களின் படி நடந்தது இதுதான்.

தமிழர் தாயகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவிய காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு மூதூர் பகுதியில் நீர் வினியோகத்திற்கான திட்டமிடல்கள் நடைபெற்றன. ஆனால் இத் திட்டங்கள் அனைத்தும் சிங்களப் பகுதிகளுக்கு நன்மை ஏற்படும் விதத்திலேயே உருவாக்கப்பட்டிருந்தன. இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழர் பகுதிகளிலும் நீர் வினியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி அளித்தது.

இந்த வேளையில் நிலைமைகள் மோசம் அடையத் தொடங்கின. திருகோணமலையில் தமிழர் வாழும் பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுக்கும் பீரங்கித் தாக்குதலுக்கும் இலக்காகின. பல அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் மேலும் பலர் அகதிகளாக அல்லல்படுகின்ற அவலமும் உருவானது. இந்த மக்களுக்கு சிறிலங்கா அரசு எவ்வித நிவாரணங்களையும் வழங்காது தவிக்க விட்டது. பொருளாதாரத் தடையையும் விதித்து கொடுமைப் படுத்தியது. இந்த நேரத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று ஒரு அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டது. கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற சிங்கள அரசு சிங்களவர் வாழும் பகுதிகளில் மட்டும் நீர் வினியோகம் நடைபெறும் என்று அறிவித்தது.

இதனால் சீற்றமுற்ற தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்ட தீர்மானித்தனர். கடந்த 20ஆம் திகதி சிங்களவர்கள் அதிகமாக வாழும் செருவில் பகுதிக்கு நீர் பாசனம் வழங்கி வந்த மாவிலாற்றின் அணையை தமிழ் மக்கள் மூடிவிட்டனர். மாவிலாறு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வெருகல் ஆற்றில் உற்பத்தியாகி சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் சேருவில் நோக்கி பாய்கிறது. அங்கிருக்கும் குளங்களை நிரப்புவதோடு, அப் பகுதியின் விவசாயத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. தமிழ் மக்களது மனிதாபிமானப் பிரச்சனைகளைக் கூட கண்டு கொள்ளாத சிறிலங்கா அரசுக்கு ஒரு எதிர்ப்பினைக் காட்டுவதற்கான அடையாளமாகவே மாவிலாற்றின் அணையை தமிழ் மக்கள் மூடினர். நீண்ட காலத்திற்கு அணையை மூடும் திட்டம் தமிழ் மக்களிடம் இருக்கவில்லை.

உடனடியாக கண்காணிப்புக் குழு இப் பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்ய முற்பட்டது. தமிழ் மக்கள் நிவாரணம், நீர் வினியோகம் போன்ற தமது அடிப்படைப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டால், அணையை திறந்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இதை அடுத்து புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சகத்துடன் பேசிய கண்காணிப்புக் குழுவினர் தமிழ் மக்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் என்ற எழுத்து மூல உறுதி மொழியை பெற்றுக்கொண்டனர். இவ் உறுதி மொழி கண்காணிப்புக் குழுவினரால் விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களோ கண்காணிப்புக்கு குழு நேரில் வந்து தமக்கு உறுதி அளித்த பின்னரே அணை திறந்து விடப்படும் எனக் கூறிவிட்டனர். ஆனால் அடுத்த நாள் கண்காணிப்புக் குழு வருவதற்குள் சிறிலங்கா அரசு தாக்குதலை தொடங்கி விட்டது.

ஆகவே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்க கூடிய ஒரு பிரச்சனைக்கு சிறிலங்கா அரசு இராணுவ வழியை நாடியிருக்கிறது என்பதுதான் உண்மை. சிறிலங்கா அரசு ஒரு நாள் பொறுத்திருந்தால் கூட பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும். ஆனால் யுத்தத்தில் நாட்டம் கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பழி வாங்கத் துடிக்கும் இராணுவத் தளபதி சரத் பென்செகோவும் யுத்தத்தை ஆரம்பித்து விட்டார்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. நேற்று வரை 7 விடுதலைப்புலிகள் வீரச் சாவடைந்திருக்கிறார்கள். அத்தடன் கண்காணிப்புக் குழு மக்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதே சிறிலங்கா விமானப்படை மக்கள் மீது குண்டு வீசியிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தரைச் சண்டையையும் சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்து விட்டது. நேற்று மட்டும் 3 முறை தரை வழியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறிலங்கா இராணுவம் முன்னேற முயற்சித்துள்ளது. கடைசியில் விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாது இராணுவம் பின் வாங்கியது. ஆனால் மாவிலாறு பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை தாக்குதல்கள் தொடரும் என்று சிறிலங்கா அரசின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இன்றுடன் மாவிலாறு பகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெரும் யுத்தத்திற்கு தயாராக விடுதலைப்புலிகளும் நிற்கிறார்கள்.

இதுவரை உக்கிரம் அற்ற முறையில் நடந்து வந்த நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரமான முறையில் ஆரம்பித்து விட்டது போன்றே தெரிகிறது.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]