www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

மாவிலாறு - பலமான நிலையில் விடுதலைப்புலிகள்!

-webeelam.com-
மாவிலாறு அணையை தமிழ் மக்கள் மூடிவிட்டதைக் காரணம் காட்டி கடந்த நான்கு நாட்களாக சி;றிலங்கா இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. மாவிலாறு பகுதியை கைப்பற்றுவதற்காக தரை வழியாகவும் சிறிலங்கா இராணுவம் முன்னேற முயற்சித்தது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டன. தற்பொழுது தாக்குதல்கள் சிறிது தணிந்துள்ளன. இடையிடையே எறிகணை வீச்சுக்கள் மட்டும் நடத்தப்படுகின்றன.

சிறிலங்கா அரசுக்கு மாவிலாறு விவகாரம் ஒரு கௌரவப் பிரச்சனையாகப் போய்விட்டது. மாவிலாறு அணையை மூடியதன் மூலம் அப்பாவிச் சிங்கள விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சிறிலங்கா அரசு பிரச்சாரம் செய்து வருகின்றது. அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும், ஊடகங்களும் இப் பிரச்சனையை மேலும் பெரிதாக்கி வருகின்றன. தமிழர்களாலும் சிங்களவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியும் என்பதை இந்த இனவாத சக்திகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறிலங்கா அரசே விரும்பினாலும் கூட இப் பிரச்சனையில் இருந்து இலகுவில் விடுபட முடியாத நிலையே தற்பொழுது ஏற்பட்டுள்ளது. மாவிலாறு அணையை திறக்க முடியாது போனால், அது சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷவிற்கு மிகப் பெரிய அவப் பெயரையே உருவாக்கிவிடும்.

ஆகவே மாவிலாறு அணையை இராணுவ பலத்தைக் கொண்டு திறப்பதில் மகிந்த ராஜபக்ஷ மிகவும் ஆர்வமாகவே உள்ளார். அத்துடன் மாவிலாறு மற்றும் அதை அண்டியுள்ள ஈச்சிலம்பற்று போன்ற பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற விரும்புவதற்கு வேறு காரணங்களும் உண்டு. வெருகல் பகுதியில் உள்ள இந்த இடங்களை கைப்பற்றி தக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குமான தரைவழித் தொடர்பை துண்டாட முடியும். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் உள்ள விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த முடியும். ஆகவே தற்பொழுது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது மாவிலாறு அணை சம்பந்தப்பட்ட விடயமாக மட்டும் கருத முடியாது.

இங்கு மாவிலாறு பகுதியை கைப்பற்றக் கூடிய பலம் சிறிலங்கா இராணுவத்திற்கு உண்டா என்கின்ற கேள்வி எழுகின்றது. அதே வேளை சிறிலங்கா இராணுவத்தை முறியடிக்கக் கூடிய பலம் விடுதலைப்புலிகளுக்கு உண்டா என்கின்ற கேள்வியும் எழுகின்றது.

கடந்த நான்கு வருடங்களில் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தில் தமது பலத்தை அதிகரித்திருக்கிறார்கள். நிரந்தரமான தளப்பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரில்லா சண்டைகளிலும் மரபுவழிச் சண்டைகளிலும் உச்ச திறனை வெளிப்படுத்தக்கூடிய ஜெயந்தன் படையணியோடு பீரங்கிப் படையணிகள், உந்துருளிப் படையணிகள் போன்ற விசேட படையணிகளும் அங்கு நிலை கொண்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தரப்பை நோக்கினால், கிழக்கு மாகாணத்தில் சண்டை அனுபவம் குறைந்த சிறிலங்கா படையினரே நிலைகொண்டுள்ளனர். சண்டையிடும் திறன் படைத்த சிறிலங்கா படையினர் வட பகுதியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள எஸ்.ரி.எவ் எனப்படும் அதிரடிப் படையினரும் கொரில்லாத் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் படைத்தவர்களே தவிர, மரபுவழிச் சண்டைகளில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.

அதே வேளை மாவிலாறு பிரச்சனைக்காக சிறிலங்கா இராணுவம் வடக்கில் இருந்து படையினரையும் கனரக ஆயுதங்களையும் வரவழைத்து தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தால், அதை சமாளிக்கும் பலம் கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உள்ளதா என்ற ஒரு கேள்வி இங்கு எழுப்பப்படலாம். ஆனால் சிறிலங்கா இராணுவம் அவ்வாறான ஒரு நடவடிக்கையில் இறங்கினால் விடுதலைப்புலிகள் யாழ்குடா மீதோ, திருகோணமலை மீதோ பாய்ச்சல் நடத்துவார்கள் என்பதை சிறிலங்கா இராணுவம் நன்கு உணர்ந்தே உள்ளது. ஈச்சலம்பற்றை விட யாழ்குடாவும், திருகோணமலையும் முக்கியமானவை என்பதால், சிறிலங்கா இராணுவம் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையில் இறங்காது என்று கருதலாம்.

தற்பொழுது சிறிலங்கா அரசுக்கு இருக்கின்ற சிறந்த வழி மாவிலாறுக்கு அண்மையில் இருக்கின்ற கல்லாறு போன்ற இராணுவ முகாம்களில் இருந்து மேற்கொள்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை மூலம் மாவிலாறு பகுதியைக் கைப்பற்றுவதுதான். ஆனால் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வி கண்டு வருகின்றன. கல்லாறு இராணுவ முகாம் சர்ச்சைக்குரிய மாவிலாறு பகுதியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில்தான் உள்ளது. சில வேளைகளில் சிறிலங்கா இராணுவத்தினரால் மாவிலாறு பகுதியை நெருங்க முடியும். ஆனால் அப் பிரதேசத்தை எக் காரணம் கொண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. மாவிலாறு, ஈச்சலம்பற்று ஆகிய இடங்கள் விடுதலைப்புலிகளுக்கு சாதகமான பகுதிகள் ஆகும். இப் பிரதேசம் வடக்கே சம்பூரையும் தெற்கே வாகரையையும் காப்பரண்களாகக் கொண்டிருக்கின்றது. சம்பூரில் இருந்து மாங்கேணி வரை நீண்ட பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு சம்பூரும் வாகரையும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளப் பிரதேசங்களாகவும் உள்ளன. இத் தளப் பிரதேசங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் படையணிகள் ஆளணி, ஆயுத உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே மாவிலாறு, ஈச்சலம்பற்று பிரதேசங்களுக்குள் நுளைகின்ற இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்படும் நிலையே ஏற்படும்

ஆகவே மாவிலாறு பிரச்சனையில் சிறிலங்கா அரசு தோல்வியையே தழுவப் போகிறது. இதன் மூலம் கடந்த நான்கு வருடங்களில் கிழக்கில் விடுதலைப்புலிகள் பெற்றுள்ள வளர்ச்சியும் உணரப்படும்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]