www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

மகிந்தவுக்கு அன்ரன் பாலசிங்கம் வரிக்கு வரி பதிலடி!!

"ஒற்றையாட்சி-தாயகம் நிராகரிப்பு-சுயநிர்ணயம் நிராகரிப்பு-யுத்த ஒப்பந்தம் மீளாய்வு: மகிந்தவுக்கு அன்ரன் பாலசிங்கம் வரிக்கு வரி பதிலடி!! "

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இனப்பிரச்சனை தொடர்பாக தெரிவித்த கொள்கைகளுக்கு தமிழீழ மதியுரைஞரும் அரசியல் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

லண்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.11.05) நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமானää பேரெழுச்சியான மாவீரர் நாள் நிகழ்வில் அன்ரன் பாலசிங்கம் ஆற்றிய உரை:

எமது மண்ணுக்காகவும் எமது மக்களுக்காகவும் போராடி வீழ்ந்த எம் இன்னுயிர் மாவீரர்களதும் பொதுமக்களதும் நினைவாக இன்று நடைபெறுகிற நிகழ்ச்சியில் பங்கு பற்றி உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நான் இந்த மண்டபத்துக்கு வரும்போது எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஆனந்தசங்கரி அய்யாவும் இந்த கூட்டத்துக்கு வந்திருக்கிறார் என்று. அவர் வந்திருப்பது நல்லது. ஆனால் அவரை எங்களுக்கு ஒருமுறை அறிமுகப்படுத்த வேண்டும். அவரை கட்டிப்பிடித்து கொஞ்சம் வேண்டும் போல் ஆசையாக உள்ளது.

ஆனந்தசங்கரி அய்யா கொழும்பில் சொன்னாராம்.. நான் இந்த உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறேன்.. என் சொந்த ஊர் கிளிநொச்சிக்குப் போக முடியவில்லை என்று.

கிளிநொச்சிக்கு போக முடியலை என்று அவர் ஏன் அவசரப்படுகிறர் என்பது எங்களுக்குத் தெரியும். கிளிநொச்சியில் உள்ள கிராமத்தில் இவருக்குத் தெரிந்த 2 கிழவிகள் இருக்கின்றவாம்.

இவர் அங்கு போய் உடும்பை ரசிச்சு தின்றவராம். அதனால்தான் அங்க போக ஆசைப்படுகிறார். அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். அய்யா நீங்கள் கிளிநொச்சிக்கு எப்பவும் வரலாம். அங்க ஒரு 5 ஸ்டார் ஓட்டலை பொட்டம்மான் கட்டி வச்சிருக்கிறார். அங்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தி இருக்கிறார். அதில் பல முக்கியமான விடயங்களைச் சொல்லி இருக்கிறார்.

கடந்த வருடங்களில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்ää அதில் எமக்கு இயக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்கள்ää நிழல் யுத்தகங்கள் பல முக்கிய விடயங்கள் சொல்லி இருக்கிறார்.

இறுதியாக ராஜபக்ச பற்றியும் அவரது அரசாங்கம் பற்றியும் அவரது கொகைகள் பற்றியும் எங்களது இயக்கம் நாங்கள் மேற்கொண்டு செய்ய உள்ளது என்ன? எங்களது திட்டம் என்ன? எங்களது போராட்டப் பாதை என்ன என்பதை மிகவும் தெளிவாகவும் விரிவாகச் சொல்லி இருக்கிறார்.

இந்த உரையில் 10ää 12 முக்கிய விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

மகாவம்ச மன அமைப்பு என்று தலைவர் சொல்வது என்ன?

சிங்கள இனம் குறித்து... தலைவர் சொல்கிறார்ää சிங்கள இனம் இன்னமும் மகாவம்ச மன அமைப்பில் இருக்கிறார்கள் என்று.

மகாவம்ச மன அமைப்பு என்று தலைவர் சொல்வது என்ன?

மகாவம்சம் என்பது புத்த மதத்தவர்களது புராணக் கதை. ஒரு பித்த பிக்குவால் எழுதப்பட்ட வரலாறு. அதில் என்ன சொல்லப்படுகிறது எனில் புத்த பெருமான் இந்த இலங்கைத் தீவை சிங்களவர்களுக்கு சிங்கள இனத்துக்கு ஒரு தெய்வீக ப10மியாக எழுதிக் கொடுத்தாராம்.

தேரவாத பவுத்தம் வளருவதற்கான ஒரு புனித பூமி அது. சிங்களவருக்குத்தான் சொந்தம் என்று புத்தர் சொன்னாராம்.

ஆகவே அந்தக் காலம் தொடங்கி இந்த காலம் வரை கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளாக சிங்களவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இது எங்கள் சொந்தப் ப10மி- சிங்களருக்கென்று பௌத்தர்களுக்கு புத்த பெருமானால் கொடுக்கப்பட்ட பூமி. ஆகவே இதில் மற்றவர்களுக்கு இடமில்லை.

தமிழர்களுக்கும் இடமில்லை.. வேறு ஒவருக்கும் இடமில்லை.

இப்படியான ஒரு மகாவசம் மன அமைப்பில் (மைண்ட் செட்) சிங்களவர்கள் உள்ளன.

இதில் சிங்களவர்க்ளுக்கு யதார்த்தம் உண்மை விளங்கவில்லை.

அதாவது வட கிழக்கைத் தாயகமாகக் கொண்ட ஒரு தொன்மை வாய்ந்த இனம்-தமிழினம் தனித்துவ பண்பாடுää மொழிää கலாச்சாரம் வரலாற்றைக் கொண்டுää ஒரு தொன்மை வாய்ந்த தேசிய இனம்- வடக்கு கிழக்கில் வாழ்கிறது என்ற உண்மையை- யத்தார்த்தத்தை அன்றும் சரி இன்றும் சரி ஏற்கத் தயாராக இல்லை.

ஆகவே தலைவர் பிரபாகரன் சொல்கிறார்ää

இந்த மகாவம்ச மன உலகத்திலிருந்து இந்த மகாவம்ச சிந்தனையிலிருந்து- இந்த புராண கட்டுகதையிலிருந்து சிங்கள தேசம் மாறப் போவது இல்லை.

ஆகவே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படைச் சித்தாந்தம் இப்படிச் சொல்லும் போது தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்துää தமிழரை அங்கீகரித்துää அவர்களது தாயகத்தில் சுயாட்சி உரிமையை கொடுக்க சிங்களவர்கள் எப்போதும் தயாராக இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.

ஒரு மதத்தினது ஆணிவேரிலிருந்து இந்த கருத்துலகம் வருது.

புத்தர் சொன்னாராம்... புத்தர் யார்? புத்தர் ஒரு இந்து. அவர் இந்து பகுத்தறிவுவாதி.

அவர் சொன்ன தத்துவம்ää கடவுள் இல்லை. ஆன்மாவும் இல்லை. அடுத்த உலகமும் இல்லை.

கடவுளும் இல்லை என்று புரட்சிகரமான கருத்தைச் சொன்னவர் புத்தர். அவர் ஒரு இந்து சீர்திருத்தவாதி.

கடவுள் இல்லை என்று சொன்ன தத்துவஞானியை- அறிவாளியை நீ கடவுளாக வணங்குகிறாய்.

அப்படியான ஒரு கடவுள் இந்தத் தீவை எனக்கு எழுதி வைத்துவிட்டுப் போனதாக சிங்களவன் நம்புறான். அப்படியானால் சிங்களவனின் மேல்மாடியில் (மூளையில்) ஒன்றும் இல்லை. இப்படியான ஆட்களுடன் போய் எப்படிப் பேசுவது?

இதைத்தான் தலைவர் சொல்கிறார்...

ஏன் பேச்சுவார்த்தை?

சரி அப்ப பேசிப் பயனில்லை என்றால் சிங்கள அரசாங்கத்துடன் பேசிப் பயனில்லை என்று சொன்னால் பேசித் தீர்வைத் தரப்போவதில்லை என்று சொன்னால் அப்படி ஏன் பேச்சுவாத்தைக்கு போனீர்கள்? ஏன் பாலசிங்கத்தை அனுப்பினீர்கள்? என்பதற்கு விளக்கம் சொல்லுகிறார் தலைவர்.

நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் போனது உலகத்தினது நிர்பந்தம் காரணம் என்கிறார்.

ஒரு காலகட்டத்தில் இந்திய தலையிட்டபோது இந்தியாவின் அழுத்தம்ää நெருக்குவாரம் காரணமாகப் பேச்சுவார்த்தைக்குப் போனோம். திம்புää பெங்களுர்ää டில்லிக்குப் பேச்சுவார்த்தைக்குப் போனோம். இந்தியாவினது நிர்பந்தங்களுக்குக் கீழ் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டியது நிர்பந்தம் வந்தது.

நானும் தலைவர் பிரபாகரனும் இந்தியாவில் இருக்கும் போது இப்படியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எங்களுக்குத் தெரியும் இப்படியான பேச்சுக்களில் பேசிப் பயனில்லை. ஆனால் இந்தியாக்காரன் கழுத்தை பிடித்து நெறித்துக் கொண்டு சொன்னான். போய்.. பேசு என்று.

அடுத்தது சர்வதேச உலகத்தினது நிர்பந்தங்கள். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளோடு ரணிலோடு பேசினோம். இதற்கு சர்வதேச உலகத்தினது அழுத்தம் காரணம். சரி என்று பேசினோம்.

நாங்கள் பேசியதற்கு காரணம் என்ன என்று தலைவர் சொல்கிறார்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும்; எமது இயக்கத்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெற வேண்டும். எமது மக்களினது பிரச்சனையை எமது மக்களினது போராட்டத்தை உலக அரங்கில் அறிமுகப்படுத்த போனோம் என்று தலைவர் சொல்லியுள்ளார்.

அடுத்துää

தமிழ் மக்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் அவர்களது தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டவும் பேச்சுவார்த்தைக்குப் போனோம் என்கிறார் தலைவர். அது உண்மைதான்.

நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றோம். வெளிநாட்டு பத்திரிகை உலகத்தைச் சந்தித்தோம். ஏன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது? எங்கள் மக்களின் பிரச்சனைகள் என்ன? கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சனை ஏன் இழுபட்டுக் கிடக்கிறது என்று தெரியப்படுத்தினோம்.

ஒரு பக்கம் பேச்சுக்கு போக வேண்டிய நிர்பந்தம். மறுபுறம் எங்களுக்கும் தேவை.

சண்டையை விட பேச்சுவார்த்தையின் சிக்கல். சண்டையில் நேரடியாக எதிரியை மோதி அழித்து சாதனைகள் நிகழ்த்தலாம்.அதைச் செய்துள்ளோம்.

ஆனால் பேச்சுவார்த்தை என்பது வித்தியாசமான போராட்டம். அங்கே பொப்றிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும்.

என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சத்தியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோலாம் என்று சதிகள் இருக்கும்.

இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரணவிடயம் அல்ல.

சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள்ää சிறந்த அறிவுஜீவிகள்ää பெரிய படிப்பாளர்கள்ää சட்ட மேதைகளை அனுப்புவார்கள்.

மிகவும் நுட்பமாகää தந்திரமாகää சாணக்கியமாக கையாள வேண்டும். இல்லையென்றால் தொலைந்தோம்.

அப்படியிருந்தும் சில சமயங்களில் நெருக்குதல்களுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம்.

இந்தியாவுடன் நடந்த பேச்சு உதாரணம்.

ஜெயவர்த்தனவுடன் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் செய்கிறார். மாகாண சபை என்ற அப்ப சப்பை அதிகாரத்துடன் உள்ள திட்டம் அது.

அதைச் செய்துவிட்டு ஆயுதங்களைப் போடு என்றார்கள். நாம் ஆயுதங்களைக் கொடுத்தோம்.

மாகாண சபையை ஏற்க மறுத்தோம். அதன் பிறகு என்ன நடந்தது?

எங்களை அழிக்க இந்திய இரானுவத்தை ஏவிவிட்டது இந்திய அரசு.

அப்போது எங்களது இலட்சியத்துக்காக- எங்களது மக்கள் நலனை பேணுவதற்காக அந்த பெரிய வல்லரசையும் எதிர்த்தோம்.

நாங்கள் ஒரு சிறிய விடுதலை இயக்கமாக இருந்து பெரிய வல்லரசை எதிர்த்துப் போராடிய வரலாறு உங்களுக்குத் தெரியும். (மக்கள் பலத்த கை தட்டல்).

எங்களது இயக்கம் அழிந்தாலும் சரி..போராளிகள் அழிந்தாலும் சரி...நாங்கள் கொண்ட லட்சியத்துக்காகää மக்களைக் காப்பாற்ற எந்த சக்தியையும் எதிர்கொள்ளத் தயார் என்று பிரபாகரன் உலகுக்கு உணர்த்தினார். (கைதட்டல் அடங்கவில்லை).

ரணில்-மிலிந்த மொரகொட

ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் மிலிந்த மொரகொட.

முந்திய அரசாங்கத்தில் பொருளாதார சீர்திருத்த அமைச்சர். பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்.

அவர் தேர்தலுக்கு முன்னதாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

நாங்கள் புலிகளை பேச்சுவார்த்தைக்கு இழுத்துக் கொண்டு போய் உலக நாடுகளைக் காட்டி இழுத்தடிச்சு கடைசியாக ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிட்டோம்.

சதிவலைக்குள் அவர்களை மாட்டிவிட்டோம். இதனால் புலிகள் இயக்கம் உடைந்தது. அந்த இயக்கத்திலிருந்து இருந்து ஒருவர் இயக்கத்தை விட்டு வெளியேறி இன்னொரு அமைப்பை உருவாக்கினார். அவர் யாரைச் சொல்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.

உண்மையில் நடந்தது என்ன?

ரணில் விக்கிரமசிங்க அரசு எங்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு போனது. காட்டுக்குள்ள காய்ஞ்சு போய் இவங்கள் கிடக்கிறாங்கள். மேற்குலக நாடுகளை நாகரீகத்தைக் காட்டினால் இவர்கள் போராட்டத்தை விட்டு ஓடிடுவார்கள் என்று நினைத்தார்கள்.

பேச்சுவார்த்தை நான்தான் தலைமை வகித்தேன்.

தாய்லாந்தில் பேச்சு நடக்கிறது. முக்கியமாக நானும் பீரிசும் தான் பெடரல் பற்றி இடறல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் எங்களுடன் வந்த பொடியள் பின்னேரம் என்றால் கிளம்பிடுவார்கள். எங்க போறாங்கள் என்று பார்த்தால் இரவுதான் வருவார்கள்.

இப்படி சொப்பிங் போன ஒரு ஆள் குழம்பிட்டார். பெண்களிடம் மயங்கி குழம்பிய அவர் என்ன செய்திருக்க வேண்டும். இயக்கத்திலிருந்து விலகி போய் பாலியல் இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கலாம்.

தேர்தலுக்கு முன்பாக மிலிந்த மொறகொட சொல்கிறார்.. புலிகளுக்கு வெளிநாடுகளைக் காட்டி புலிகள் அமைப்பை உடைச்சு ஒரு தளபதியை வெளியிலெடுத்து சாதனை படைத்துவிட்டோம் என்றும் சதிவலை பின்னப்பட்டதும் என்கிறார்.

நாங்கள் ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தைகளின் சதிவலைப் பின்னல்கள்ää எந்த மாதிரி எங்களை வீழ்த்துவார்கள் என்ற சூத்திரம் எல்லாம் தெரிந்தும் பேச்சுவார்த்தைக்குப் போனோம்.

ஆகவேää இப்படியான சவால்களுக்கு முகம் கொடுத்து சாணக்கியமாக காய்களை நகர்த்தி இதிலிருந்து தப்பி வருகிறோம்.

30 வருட போராட்டத்தில் இடையிடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் இந்தியாவின் அழுத்தம். இன்னொரு கட்டத்தில் சர்வதேசத்தின் அழுத்தம்.

ஆனால் தலைவர் சொல்கிறார்ää கடைசியாக நடந்த பேச்சு 4 ஆண்டுகாலமாக் இழுபட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர்தான் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தப் பிரகனடப்படுத்துகிறார். அது சும்மா பிரகடனம் அல்ல. பலத்தில் நின்றுகொண்டுதான் அந்தப் பிரகடனம் செய்யப்பட்டது.

என்ன பலம்?

வன்னி மாநிலம் முழுக்க நாங்கள் பிடித்து ஆனையிறவு படைத் தளத்தை துவம்சம் செய்து இராணுவ சமநிலையை எங்களுக்குச் சாதகமாக நிலைநாட்டி பலத்தின் அத்திவாரத்தில் நின்று நேசம் கரம் நீட்டியதாக தலைவர் சொல்கிறார்.

அன்று தொடங்கிய பேச்சு 4 ஆண்டுகாலமாக இழுபடுகிறது.

இந்தப் பேச்சு ரணிலுடன் 6 கட்டமாக நோர்ர்வேää ஜேர்மன்ää தாய்லாந்துää ஜப்பான் என நானும் இழுபட்டுத் திரிந்தேன்.

ரணிலின் ஆட்சிப் போய் சந்திரிகாவின் ஆட்சி வந்தது.

சந்திரிகாவுடனும் பேசினோம்.

இப்படியெலாம் பேசியும் இந்த 4 ஆண்டுகாலமாக எடுத்த முடிவுகள்ää பெற்ற தீர்மானங்கள்ää செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேச சதி வலைப் பின்னல் என்ன?

சர்வதேச சதி வலைப் பின்னல் பற்றி சொல்ல வேண்டும்.

இது என்ன மாதிரி பின்னப்பட்டது எனில்

இந்தப் பேச்சுவார்த்தையை சர்வதேச வல்லரசுகளை உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்தல் என்பதுதான் சதி.

அமெரிக்காää பிரிட்டன்ää ஜப்பான்ää ஐரோப்பிய நாடுகள் போன்றவைகளை இழுத்து தாங்களாகத் தீர்மானம் போட்டுää இப்படிச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும் என்று எங்கள் மீது அழுத்தம் கொடுக்க நினைத்தார்கள்.

இங்கே 2 பேருக்கு மத்தியில்தான் பேச்சு. நோர்வேயை மத்தியஸ்தராக ஏற்றுக் கொண்டு நடத்துகிறோம்.

ஆனால் அமெரிக்காää ஜப்பான்ää ஐரோப்பிய ஒன்றியம் எல்லோரும் மேசையில் அமர்ந்து அதைச் செய்; இதைச் செய் என்று கட்டளை போடத் தொடங்கினார்கள்.

நாங்கள் சுதந்திரமாக எங்களது மக்களின் பிரச்சனையை எங்கள் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். உலகம் தீர்மானிக்க முடியாது. ஆனால் உலகம் சொல்கிறது.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு; இறையாண்மையை மீறக் கூடாது தனியரசு அமைக்கக் கூடாது இப்படியான அழுத்தங்கள்... சர்வதேச உலகம் நெருக்குவாரங்கள் போட்டு- எங்களுடைய ஆயுதங்களையும் களையும் திட்டம்தான் சதிவலை என்று சொல்கிறோம்.

இந்த சதிவலையைக் கொண்டுவந்தவர் ரணில். கடைசியாக இந்த சதி வலையில் சிக்கியது ரணில். நாங்கள் நிற்கிறோம். (மக்கள் கைதட்டல்).

கடந்த ஆண்டே போர்த் திட்டமும் பொதுக்கட்டமைப்பும்

கடந்த மாவீரர் நாளில் தலைவர் சொன்னார்....

இடைக்காலத் தீர்வும் இன்றிää நிம்மதியான வாழ்வுமின்றிää ஒரு வெறுமைக்குள்ää ஒரு சூனியத்துக்கிஉள் எங்கள் மக்களை வைத்துள்ளோம். இந்த வெறுமைக்குள் இனியும் தொடர முடியாது.

இனி மேற்கொண்டு பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தால் எங்கள் சுதந்திரத்தைப் போராட்டத்தை தீவிரப்படுத்டுவோம் என்று கூறினார்.

இப்படிச் சொல்லிட்டு எங்களது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான போர்த் திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தார்.

அவர் இப்படிக் கூறி அடுத்த மாதம் டிசம்பர் மாதம்ää சுனாமிப் பேரலை அடித்தது. தாயகத்தின் கிழக்கு கரையோர கிராமங்கள் எல்லாம் அந்த சுனாமி அள்ளிப் போனது.

தமிழ்ää முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக 20 அயிரம் பேர் உயிரிழந்தனர். 3 இலட்சம் பேர் வீடுகளைää நிலங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.

இப்படியான பேரவலம்- இயற்கையின் ஊழிக் கூத்து. எங்கள் மாபெரும் மனிதாபிமான அவலத்தை எதிர்கொண்ட போது எப்படி ஐயா சண்டை போடுவது?

எங்கள் தலைவர் முழு படையணிகளையும் களத்தில் இறக்கினார். 3ää 4 மாதமாக அனைத்துப் படையணிகளும் அற்புதமான நிவாரணப் பணிகளை செய்தனர்.

இயற்கையின் அனர்த்தத்தால் எமது போராட்ட திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் பேரழிவு உலக மன்சாட்சியை உலுக்கியது என்கிறார் தலைவர்.

பெருந்தொகை உதவி செய்ய உலகம் முன்வந்தது. 4 பில்லியன் டொலர் என்ற நியாயமான் உதவியை அளிக்க முன்வந்தனர்.

சந்திரிகா அம்மையார் நினைத்தார்... நல்ல தருணம் நழுவ விடாதே என்று சொல்வது போல் புலிகளுடன் பேசியாவது காசை எடுக்கலாம் என்று திட்டமிட்டார்.

இரண்டு பேருமாக பேசி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி வெளிநாட்டுக் காசை மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்போம் என்றார்.

எங்கள் மக்கள்தான் அதிகம் இறந்தது. சரி வெளிநாட்டு அரசாங்கங்கள் இவ்வளவு பெரிய காசைத் தரும் போது அதை வாங்கித் தர வேண்டியது எங்களது கடமை.

ஏனெனில் விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எங்களுடைய மக்களின் நலனைத்தான் பார்க்க வேண்டும்.

அல்லல்படுகிற மக்களை விட்டுவிட்டு போராட்டத்திற்கு இறங்கினால் அது சாத்தியமில்லை.

ஆகவே சந்திரிகாவுடன் பேசினோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் மாதக் கணக்கில் இதுவும் இழுபட்டது.

சமாதான செயலகங்கள் மட்டத்தில்தான் இந்தப் பேச்சு கொழும்பில் நடந்தன. இதில் சில விசயங்கள் விட்டுக் கொடுத்து பொதுக்கட்டமைப்புக்கு இணங்கினோம்.

நீண்டகாலத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கமும் சிறிலங்கா அரசும் ஒரு கட்டமைப்புக்கு இணங்கினார்கள். பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திட்டத்துக்கு பின்னர் சந்திரிகா அம்மாவின் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்ட மொட்டைகள்- புத்த பிக்குகள் மற்றும் ஜே.வி.பியும் எதிர்த்து அரசாங்கத்திலிருந்து விலகி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர்.

உயர்நீதிமன்றமும் அவர்களுக்குச் சார்பாக தீர்ப்பை அளித்தது. நிவாரணப் பணத்தை பகிர்ந்தளிக்கிற இந்தப் பொதுக்கட்டமைப்பு செயலிழந்து செத்துப் போகுது.

இதைச் சுட்டிக்காட்டுகிற தலைவர்ää தமிழர்களுக்கு சமஸ்டியும் கொடுக்கத் தேவையில்லை; சுயாட்சியும் கொடுக்கத் தேவையில்லை- பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணமாக- வெளிநாடுகள் அளிக்கிற காசைப் பகிர்ந்து கொடுக்கிற ஒரு அதிகாரமைப்பையே தர முடியாத உன்னால் எங்கள் மக்கள் பிரச்சனையை எப்படித் தீர்க்கப் போகிறாய் என்று சொல்லும் தலைவர் அடித்துக் கேட்கிறார்...

சிங்கள ஆட்சிப் பீடம் - பேரினவாதம் - ஆளும் வர்க்கம் - எங்களுடைய மக்களின் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை.

அப்படியானால் நாங்களாகத்தான் போராடி வெல்ல வேண்டும். சிங்களவனின் காருண்யத்தில் 57 வருசம் இருந்தது போதும்.

இதற்கு உதாரணமாகத்தான் சொல்கிறார் பொதுகக்கட்டைப்புக்கு நேர்ந்த கதி என்ன என்பதை.

நிழல் யுத்தம்

இது ஒரு புறம் இருக்க இந்த ஆண்டு மற்றொரு விடயம் நடந்தது என்கிறார் தலைவர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு நிழல் யுத்தம்- மறைமுக யுத்தம்.

யாரோ மறைந்து நின்று கண்ணிவெடி வைத்து கொல்லுவான். யாரென்று பார்த்தால் தெரியாது.

இந்த நிழல் யுத்தம் தொடங்கியது. இந்த ஆண்டு மிகத் தீவிரமாக நடந்தது.

எங்களின் மூத்த உறுப்பினர்கள்ää முக்கிய போராளிகள்ää ஆதரவாளர்கள்ää கல்விமான்கள்ää முக்கிய ஊடகவியலாளர்கள்ää நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படியான படுகொலை செய்து வந்தார்கள். இந்த பின்னணி தெரியலை. சூத்திரதாரி யாரென்று பார்த்தால் இராணுவப் புலனயாவுத்துறை.

அவைகளுக்குப் பின்னால் சிஙக்ள இனவாத அரசியல் தலைவர்கள். தலைவர் சொல்கிறார்.. இந்த அரூப கரங்கள்தான் இதை நடத்தின.

இது சமாதான யுகம். 4 வருசமாக போர் நிறுத்தம். நாம் அமைதி பேணுகிறோம். அவன் போட்டுத் தள்ளுகிறான் நம்மை.

இதுதான் சிங்கள ஆளும் வர்க்கத்தினது- இனவாதத்தின் நயவஞ்சகமான செயல்.

அப்படியானால் 4 வருடமாக எவ்வளவு பொறுமையோடு எங்கள் தலைவர்-தலைமைப்பீடம் இருந்திருக்கும்?

இந்தப் புறம் எங்கள் மீதுதான் விமர்சனம் வருகிறது. வெளிநாடுகளிலிருந்து எங்களுக்கு புலிகளுக்குச் சொல்கிறார்கள்- கொலைகளை நிறுத்துங்கள்.... (ளுவழி வாந மடைடiபெ)

அவன் கொல்வது யாரை? எங்களை அழிக்கிறான்.... ஆனால் உலகம் எங்களை விமர்சிக்கிறது.

தலைவர் என்ன சொல்கிறார் எனில்.. சிங்களவர்களுக்கு இராணுவத் தீர்வில்தான் நம்பிக்கை உண்டு. சமாதானத்திலோ பேச்சுவார்த்தையிலோää தமிழர்களுடன் பேசி நீதி வழங்குவதில் விருப்பம் இல்லை.

சமாதானம் என்ற மாயைக்குள் வைத்துக் கொண்டு எங்களுக்கு எதிராக நிழல் யுத்தத்தை ஒரு நாசகார யுத்தத்தை நடத்திää அழித்து இயக்கத்தை உடைக்கிறதுதான் அவர்களது நோக்கம்.

இதற்கு சிங்கள இரானுவம் நேரடியாக வரவில்லை. இதற்கு தமிழ் ஆயுதக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் கூலிப் பட்டாளம் இருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்திடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் செய்யும் கூத்துகள் இவை. இவைகளால்தான் அன்றும் இன்றும் பிரச்சனை. இங்கும் இருக்கு என்பதை இங்கே உள்ள அனைவரும் அறிவர்.

சமாதானம்ää போர் நிறுத்தம்ää பேச்சுவார்த்தை மூன்றும் சொற்பதங்களிலும் எதுவித அர்த்தமும் இல்லை என்கிறார் தலைவர்.

சமாதானம் என்று சொல்லிக் கொண்டு யுத்தம் செய்கிறீர்கள்.

முகத்தை மறைத்து இருண்ட யுத்தம்? நிழல் யுத்தம். அப்ப என்ன சமாதானம்?

போர் நிறுத்தம் என்றால் போர் நிறுத்த விதிகளை நீ செயல்படுத்தவில்லை.

இலட்சம் இலட்சமான மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் உள்ளர். இன்னமும் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து நிற்கிறாய். 10 வருடத்துக்கும் மேலாகவா நிற்பதா? கல்வீடுகளுடன் இருந்த இலட்சக்கணக்கான மக்கள் கொட்டில்களில் கிடந்து சாகிறர்கள்! இதுதானா போர் நிறுத்தம்.

போர் நிறுத்த விதிகளின் படி ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை எப்போதே பறித்திருக்க வேண்டும். ஆயுதங்களையும் பறிக்காமல் ஏவிவிவிட்டு எங்களை கொல்லச் சொல்கிறாய். இதுதான் போர் நிறுத்தம்- பேச்சுவார்த்தையாம்.

பேச்சுவார்த்தை என்றால் இழுத்தடிக்கிறது நோக்கம் . அதில் ஒரு சதிவலைப் பின்னல். உலக நாடுகளை பிடித்து எங்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் பேச்சுவார்த்தையாம். ரணில் ஜயா செய்த விளையாட்டு இதுதான்.

ரணிலும் தமிழர் வாக்களிப்பும்- சிங்களவனுக்குப் புரிந்த மொழி 'அடி"

எங்களில் பலபேருக்கு கோபம். ரணில் அய்யாவுக்குப் போட்டிருந்தால் நீங்கள் பேசப் போயிருக்கலாம் என்று சொல்கிறவர்களும் உண்டு. அவன் ஜயா ரணில் பயங்கர நரி. ராஜபக்ச பரவாயில்லை. அது ஒரு பயங்கர நரி.

ஏனென்றால் பேச்சுவார்த்தைகளில் இழுபட்டு களைச்சுப் போன மனுசன் நான் சொல்லுகிறேன். இவைகளை பிரேமதாச காலத்திலிருந்தே தெரியும்.

17 வயதில் பத்திரிகையாளனாகி இந்த அரசியல்வாதிகளோடு பழகியவன். அவர்களது சூத்திரங்கள்ää ஜில்மால்கள் எல்லாம் தெரியும்.

சிலபேர் ரணில் பரவாயில்லை.. என்னமோ பெடரல் தருவதாகச் சொல்கிறான் என்கிறார்கள்.

57 வருடமாகப் பெடரலிசம் பற்றி கதைத்திருக்கிறோம். அது என்ன புதுவிடமா ஐயா?

செல்வநாயகம் காலத்திலிருந்து பெடரல் பற்றித்தானே இடறல் பட்டுக்கிட்டு இருக்கிறோம்.

அவர்கள் பெடரலும் தரமாட்டார்கள். பெடரல் என்ற மாயைக் காட்டி ஏமாற்றுகிற வித்தை.

இந்தப் பொதுக்கட்டமைப்பையே ஒரு கிராம சபைக்கு இருக்கிற அதிகாரம் கூட இல்லாத பொதுக்கட்டமைப்பையே தராத சிங்களவன்ää தமிழர் தாயகத்தை ஏற்றுää தமிழர் சுய நிர்ணய உரிமையை ஏற்றுää உங்களைக் கொண்டு போய் சிம்மானத்திலே உட்கார வைத்து இந்தா சுயாட்சி என்றா தரப் போகிறான்.

சிங்களவனுக்குத் தெரிந்த மொழி இருக்கிறது. அது 'அடி". அடிச்சால்தான் அது விளங்கும். இது புலிகளுக்குத் தெரியும் (அடங்காத மக்கள் கை தட்டல்).

கடந்த 57 ஆண்டுகால அரசியல் வரலாறு- புலிகள் நடத்திய 30 ஆண்டுகாலம் போராட்டம்- கடந்த பல வருடங்களாகிய நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள்.. இவைகளை சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வந்தால்...

இனியும் போய் சிங்களவரிடம் கையேந்தி எனக்கு கொஞ்சம் சலுகை தாää சமஸ்டி தா என்று கேட்பதில் பிரயோசனம் இல்லை.

அதாவது சிங்கள அரசியலில் இருந்த நம்பிக்கைää சிங்கள அரசியல்வாதிகளுடன் பேசி அவர்களது காரூண்யத்திலிருந்து ஏதாவது உரிமைகளைப் பெறாலாம் என்ற அந்த நம்பிக்கை உடைஞ்சு போச்சு.

எங்களுக்கு மட்டுமல்ல. மக்களுக்கும்.

சமீபகாலமாக தமிழீழம் எங்கும் பெரிய எழுச்சியைப் பார்த்திருப்பீர்கள். மக்கள் வெளியே வந்தார்கள். பொங்கு தமிழ் விழா- தமிழ்த் தேசிய எழுச்சி விழா.

சமுத்திரமாக வந்த மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.

அந்தக் குரல் சிங்களவனுக்கு இல்லை. சர்வதேச சமூகத்துக்கு...

சர்வதேச சமூகத்துக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்....

எங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்.

எங்களுடைய தாயகத்தை ஏற்றுக் கொள்

எங்களுக்கு தன்னாட்சி உரிமை வேண்டும்.

எங்கள் மக்கள் எங்கள் மண்ணிலிருந்து உலகத்துக்கு அறைகூவல் விடுத்திருகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய பெரிய நிகழ்வுகள் நடந்தன.

கடைசியாகத் தேர்தல் வந்தது. யாருடைய தேர்தல்?

சிங்கள ஜனாதிபதியை நியமிக்கிற தேர்தல். ஏன் நாங்கள் இதில் பங்களிப்புச் செய்யனும்?

ரணில் வந்தால்... ராஜபக்ச வந்தால் பிரச்சனை தீருமா? தீராது.

இதில் எவனுக்கு வாக்கைப் போட்டு ஆட்சிப் பீடத்திலே ஏற்றிää மீண்டும் பழையபடி தாய்லாந்து போய் சுற்றிப் பார்க்கச் சொல்கிறியள்?

அப்ப இயக்கம்ää கூட்டணி எம்பிமாரை கூட்டி கதைச்சு சொன்னது.. நாங்கள் தலையை ஓட்டக் கூடாது. இதில நம்பாதீங்க. இதில் அக்கறைகாட்டதீர்கள் என்று சொன்னது இயக்கம்.

மக்களுக்கு புலிகளின் செய்தி விளங்கியது. மக்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பலை. அதுதான் நடந்தது.

ஆனாலும் ஈ.பி.டி.பி போன்றவை கள்ள வோட்டுப் போட ஒழுங்கு செய்தார்கள்.

அங்கிருக்க பல்கலைக் கழக மாணவர்கள்- பொடியனுக- சும்மா விடவில்லை இதை. இரவு இரவாப் போய் பட்டாசு கொளுத்தி விரட்டி விட்டிருக்கிறார்கள்.

அதை வைத்துக் கொண்டு உலகம் முழுக்க எங்கள் மீது விமர்சனம்.

தேர்தல் புறக்கணிப்பும் சர்வதேச சமூகமும்

'நீங்கள் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னது மக்களின் சனநாயக உரிமையை மீறுவது- ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உங்களுக்குத் தடை வரப்போகிறது" என்று மிரட்டல் விடுகிறார்கள்.

அப்படியானால் சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒன்று கேட்கிறோம்...

கடந்த 10 வருடங்களாகää சொந்த வீடுகள்ää சொந்த காணிகள்ää சொந்த கிராமங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டுää அனாதைகளாக அகதிகளாகää ஏதிலிகளாக இந்த அகதி முகாம்களிலும்ää நலன்புரி மையங்களிலும்ää இலட்சக்கணக்கான மக்கள் கிடக்கிறார்களே....

அவர்களது ஜனநாயக உரிமை பற்றி சர்வதேச சமூகமே கதைத்தீர்களா? அது ஜனநாயக உரிமை இல்லையா?

நாங்கள் ரணிலுக்கு வாக்களித்திருக்க வேண்டுமாம்...வாக்களித்திருந்தால் அவர் வந்திருப்பார். சதிவலை போடலாம் என்று அவர் காத்திருப்பார்.

தேர்தல் புறக்கணிப்பு முக்கியமான விடயம்.

இதுவரை காலம் இல்லாத முக்கிய விடயம் இது.

இதுவே முதல் முறையாக எங்கள் தமிழ் மக்கள்ää சிங்கள ஆட்சிப் பீடத்தை புறக்கணித்துää நீங்கள் யார் ஆண்டாலும் எங்களுக்குச் சம்மதமில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

சிங்கள தேசத்திலே இதனால் பெரிய தடுமாற்றம். என்ன விளையாட்டு இதுää என்று அங்கே கேள்வி எழுகிறது.

மக்களே தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஒரு தனிநபருக்காகää தனிநபர் ஆளுமைக்காகää ஒரு கட்சி கொள்கைகளுக்காக எங்கள் மக்கள் புறக்கணிக்கவில்லை. ரணிலையோää ராஜபக்சவையோ எங்கள் மக்கள் புறக்கணிக்கவில்லை.

அவர்கள் புறக்கணித்தது

சிங்கள அரசியல் அமைப்பை-

சிங்கள ஆட்சிப் பீடத்தை!

வேண்டாமய்யா.. நாங்கள் இனி தனிவழியே போகப் போறோம். நீங்கள் உங்கள் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்களது அரசியல் தலைவிதியைää அரசியல் தகமையை நாங்களாகத் தீர்மானிக்கிற காலம் வந்துவிட்டது என்ற செய்தி அங்கே சொல்லப்பட்டது. (மக்கள் அடங்காத கைதட்டல்).

மக்கள் கொடுத்த செய்தி வேறு. ஆனால் உலகம் எங்களைத்தான் விமர்சனம் செய்கிறது. உலகத்துக்கு மக்களின் விடயம் புரியவில்லை.

எனக்கு மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்....சந்திக்க வேண்டும் என்றார்..அவர்கள் கிளிநொச்சிக்குத்தான் போவதில்லை. என்னைத்தான் தேடுகிறார்கள்.

'மிஸ்டர் பாலசிங்கம்ää உங்கள் இயக்கம் மக்களைத் தடுத்து நிறுத்தி பயமுறுத்தி இந்தத் தேர்தலில் திசை திருப்பியதால் சிங்களத் தீவிரவதி ஒருவர் வந்துருக்கார். நிலைமை மாறப் போகிறது. சண்டை வரப்போகிறது. இதற்கு நீங்கள்தான் காரணம். ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் உங்களைக் கண்டிக்க தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய உங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்"- என்று அவர் சொன்னார்.

அதற்கு நான் சொன்னேன்..

நீங்கள் எங்களைத் தண்டிக்கலாம். பிரிட்டனில் தடை இல்லையா என்று.

இவ்வளவு மக்கள் இன்றைய கூட்டத்துக்கு வரலையா (மக்கள் கைதட்டல்). நீதிமன்றம் வரைக்கும் கோவணம் கட்டிப் போய் நின்றார்களே ஒன்றும் எடுபடவில்லை.

ஏனெனில் மக்களையும் புலிகளையும் எவராலும் பிரிக்கமுடியாது ஜயா. (அடங்காத மக்கள் கைதட்டல்)

இங்கிலாந்தில் எனக்கும் தடை. நான் தனியே வெளிய போனபோது ஒருவர் கேட்டார்.. என்ன பாலா அண்ணை தனியா திரிகிறியள் என்று..?

நான் சொன்னேன்...'வீட்டில் கிடந்து குளிரில் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் எனக்கு மதிப்பில்லாமல் போய் விடும். இப்படி தனியா திரியும் போது யாராலும் போட்டுத்தள்ளினால் மாவீரராக மாறிவிடலாம்" என்றேன்.

ஐரோப்பாவில் தடை வரலாம். சரி வரட்டும். ஐரோப்பியாவில் உள்ள தமிழ் மக்கள் சரியான தேசப்பற்றுள்ள மக்கள். விடுதலைப் புலிகளை உறுதியாக நம்புகிற மக்கள். அங்க தடை வந்தாலும் எங்கள் மக்கள் எங்களை கைவிடப் போவதில்லை.

நாங்கள் பகிரங்கமாகச் செய்கிற விடயங்களை வேறு வகையில் செய்வோம். நான் பிரிட்டிஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் எப்படியும் போய்விடுவேன். உண்மையில் பிரச்சனை என்னவெனில் அங்குள்ள தமிழ்ச்செல்வன்ää புலித்தேவன்தான் ஆட்கள்தான் இங்கு வர இயலாது.

மகிந்த ராஜபக்ச...

அடுத்து தலைவர் இன்னொரு முக்கிய விடயத்தைச் சொல்கிறார்..

அங்க ஒரு தேசியத் தலைவனை சிங்கள மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச என்கிற அவர் சுத்தமான சிங்கள பௌத்தர். இவரைத் தெரிவு செய்ததுமே சிங்கள பௌத்தர்கள் வாக்குகள்தான்.

சிங்கள பௌத்த தமக்களின் பெரும்பான்மை வாக்கோடுதான் மகிந்த வந்திருக்கிறார்.

ரணிலுக்கு விழுந்தது எல்லாம் மலையகää முஸ்லிம் வாக்குகள்தான். நாம் வாக்களித்திருந்தால் ரணில் வென்றிருப்பார்.

ஆனால் ஒரு சிங்கள பௌத்தர் வந்துள்ளார். அவரோடு 27 கட்சிகள் மட்டுமில்லாமல் மஞ்சள் காவி உடுத்தி மொட்டைகள்ää சிவப்புச் சட்டைகள் எல்லாம் சேர்ந்துள்ளன.

அங்கே ஒரு பெரிய சிங்கள பௌத்த மேலாண்மைவாதம் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது.

சரி...தமிழீழத்தில் என்ன நடக்கிறது?

தமிழீழத்திலும் தமிழ்த் தேசியவாதம் வீறுகொண்டு எழுந்துள்ளது.

தலைவர் சொல்கிறார்...

இங்கே ஆட்சிப்பீடம் ஒன்று இருக்கிறது.

இங்கே புலிகளின் ஆட்சிப் பீடம் இருக்கிறது.

புலிகளின் நிர்வகாம் இருக்கிறது. புலிகளின் நிழல் அரசாங்கம் இருக்கிறது.

அதுதான் தமிழ்த் தேசியத்தின் ஒரு வடிவம். ஆகவே அவர்ää தன்னுடைய ஆட்சி அமைப்பின் பரிமாணங்களைப் பற்றி சொல்கிறார்.

எங்களிடம் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உண்டு.ää வரையறுக்கப்பட்ட எல்லைகள் உண்டு. எங்கள் ஆட்சியின் பெரிய மக்கள்தொகை உண்டு. இவைகளைப் பாதுகாக்க பலம் வாய்ந்த கடற்படை உள்ளிட்ட இராணுவம் இருக்கிறது. எங்கள் நிர்வாகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேண காவல்துறை உள்ளது. நீதிää நிர்வாகம் உள்ளிட்ட அரசுக்குரிய் சகல கட்டுமாங்ன்களும் எம்மிடம் உண்டு.

இப்படியான ஒரு பெரிய பிரமாண்டமான அமைப்பை நடத்துகிறோம். எங்களுடைய தாயக பிரதேசத்தின் 70 வீதமான மண்ணை மீட்டிருக்கிறோம். அதில் இந்த ஆட்சி நடக்கிறது.

சிங்களவனுக்கு இதை பார்க்க இயலாமை-நம்பமுடியாமை உள்ளது. நம்பினாலும் ஏற்க முடியாது உள்ளது அவனுக்கு. அவனது பிரச்சாரம் என்றால் விடுதலைப் புலிகள் ஒரு சின்ன பயங்கரவாதக் குழு என்றுதான் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறான்.

இந்தப் பிரச்சரத்தை நம்பி பல உலக நாடுகள் எங்களை இன்னமும் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்கிறது.

அந்த உலக நாடுகள் சொல்கின்றன.... நீங்கள் வன்முறையை கைவிடுங்கள் என்றுதான் கூறவேண்டும்.

அதைவிட்டு விட்டு ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஒற்றையாட்சியின் கீழ் சிங்களவன் போடுகிற பிச்சையை எடுத்துக் கொண்டு போகச் சொல்வது நியாயமா?

அதற்குத் தலைவர் சொல்கிறார்...

சரி ஜயா.. இவ்வளவு காலம் எவ்வளவோ முயற்சி செய்து உலகத்துக்கு ஒரு உண்மையைக் காட்டினோம்..

என்ன உண்மை...

இவ்வளவு காலம் பேச்சுக்களில் பங்கேற்று நீ சொன்ன மாதிரி பொறுமையைக் கடைபிடித்துää எல்லைகளைக் கடந்துää சகிப்புத் தன்மையின் சிகரத்துக்குச் சென்று.. (இந்த வார்த்தைகளைத் தலைவர் பிரயோகிக்கிறார்) எல்லாம் செய்தும் ஒன்றும் இல்லையே.

மேற்கொண்டும் அவன் தரப்போறான் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

அப்படியானால் எங்களுக்கு என்ன வழி?

நாங்கள் எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கப் போகிறோம்.

எங்களுக்கு என்று ஒரு ஆட்சிப் பீடம் உள்ளது.

எங்கள் மண்ணை நாம் மீட்டெடுத்துள்ளோம்.

இன்னும் 30 வீதம்தான் வெளியே இருக்கிறது. 70 வீதத்தை நாம் மீட்டுவிட்டோம்.

அந்த அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கிற மக்கள் கூடää எங்களைத்தான் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். தேர்தலைப் புறக்கணித்தார்களே யாழ்ப்பாண மக்கள்.

40 ஆயிரம் படையினரை வைத்துக் கொண்டு உங்களால் வாக்களிக்கச் சொல்ல முடிந்ததா? தேர்தலை நடத்த முடிந்ததா? முடியாது.

பிரபாகரன் வன்னியிலிருந்து கொண்டு பகிரங்கமாகக் கூடச் சொல்லவில்லை. மறைமுகமாகச் சொன்னார்- தேர்தல் தேவையில்லை என்று.

எது பயங்கரவாதம்? பயங்கரவாத வரையறை என்ன?

அடுத்து பயங்கரவாதம்....

பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி எங்களைத் தடுத்து வைத்திருக்கிறீர்கள்.

சரி.. தலைவர் கேட்கிறார்

அப்படியானால் பயங்கரவாதம் என்றால் எது? எங்களுக்குச் சொல்லுங்கள் என்கிறார்.

ஆனால் இல்லையே...அய்யா..ஒவ்வொரு நாடும் பயங்கரவாதத்துக்கு விளக்கமாக ஒவ்வொன்றை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாக்காரனுக்கு பயம். தெளிவான வரைவிலக்கணம் கொடுத்தால்ää அங்கே நீதியின் அடிப்படையில்ääதருமத்தின் அடிப்படையில் உரிமை கேட்டுப் போராடுகிற எத்தனையோ தேசிய இனங்களினது போராட்டத்தை இந்தியாக்காரர் அமுக்கி வைத்துள்ளார்.

ரஷ்யாக்காரன் அமுக்கி வைத்திருக்கிறான்.

உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களை நசுக்கிக் கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் போய் ஒரு தெளிவான ஒரு வரைவிலணக்கத்தை போட முடியுமா? முடியாது- முடியவில்லை.

இவ்வளவு காலமாக பயங்கரவாதத்தின் பெயரில் எத்தனையோ இயக்கங்களை தடை செய்துள்ளீர்கள்.

ஆனால் உங்களால் 'பயங்கரவாதம்" என்ற வரைவிலக்கணம் தர முடியாது!

நீதிக்காக-நியாயத்துக்காக-தர்மத்துக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களை நீங்கள் பயங்கரவாதிகள் என்கிறீர்கள்.

இதை சாதகமாக வைத்துக் கொண்டு அரச பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். அதாவது அரசுகள் செய்கிற பயங்கரவாதம் பற்றி ஒருவருக்கும் கவலை இல்லை.

அமெரிக்காவினது தலைமையிலே பயங்கராவாதத்துக்கு எதிரான ஒரு இயக்கம்- இதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று இந்தியா-இலங்கை-ரஷ்யா எல்லாரும் சேர்ந்து தங்களது நாட்டில் தாங்கள் செய்கிற அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கிறார்கள்.

ஆகவே புலிகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்காக- இனப் படுகொலைக்மக்களுக்கான மக்களுக்காக- ஆயுதம் எடுத்துப் போராடி 18 ஆயிரம் போராளிகளைப் பலிகொடுத்து இன்னமும் உலகத்தையே எதிர்த்து தன்மானத்தோடு தலைவணங்கமல் நிற்கிறான் பிரபாகரன் (மக்கள் கை தட்டல்).

அப்படியான எங்களை பயங்கரவாதிகள் என்று நீங்கள் சொல்வது நியாயமா? என்று தலைவர் கேட்கிறார்.

நாங்கள் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய போராளிகள்.

எங்கள் மீது ஏன் தேவையில்லாத இந்த முத்திரை குத்துகிறீர்கள்?

ஒற்றையாட்சியை நீயே வைத்துக் கொள்... எங்களுக்கு புலி ஆட்சி இருக்கிறது

மகிந்த ராஜபக்ச...

இவர் ஜாதிக ஹெல உறுமயää ஜே.வி.பி ஆகியவைகளுடன் என்ன மாதிரியான ஒப்பந்தங்களைச் செய்தவர்? இவற்றுக்கு மகிந்தவின் சிந்தனைகள் என்கிறார்கள்.

தலைவர் சொல்கிறார்... மகிந்தாவுக்குக்கும் எங்களுக்கும் அவரது சிந்தனைகளுக்கும் எங்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்குமான இடைவெளி மிகப் பெரியது என்கிறார்.

இனி மகிந்தவின் கொள்கைகளைப் பார்ப்போம்...

அவர் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்...

ஒற்றையாட்சிக்குக் கீழ்தான் தீர்வு...ஒற்றையாட்சியை விடமாட்டோம் என்கிறார்..

நாங்கள் சொல்கிறோம்

சரி நீ ஒற்றையாட்சி வைத்துக்கொள்....நங்களும் ஒரு ஒற்றையாட்சிதான் வைத்துக் கொள்ளப் போகிறோம். (மக்கள் பேராதரவுக் கைதட்டல்)

நீ சிங்கள நாட்டில் புத்த பிக்குகளைக் கட்டிக்கிட்டு ஒரு ஒற்றையாட்சியை வைத்துக்கொள்.

எங்கள் தாயகத்தில் புலிகளின் ஒற்றையாட்சி இருக்கப் போகிறது.

இது எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஒரு புதிய தலைவன் இதை நேர்மையாகச் சொல்றான். அவர் ஒற்றையாட்சி வைப்பதில் எங்களுக்கும் பிரச்சனை இல்லை.

எங்களுக்கு யார் பிரச்சனை என்றால் சமஸ்டி ஆட்சி தருவோம்- கூட்டாட்சி தருவோம் என்று சொல்கிறவர்கள்தான்.

மகிந்தா நல்ல மனிதர். வைத்திருக்கட்டும் தனியாட்சியை... நாங்களும் தனியாட்சி வைத்திருப்போம்.

மற்றது தமிழர் தாயகம் இல்லை என்கிறார் மகிந்தா.

சரி... நீங்கள் சொன்னதால் தமிழர் தாயகம் இல்லாமலா போய்விடும்?

நாங்கள் 70 வீதத்தை மீட்டு வைத்துள்ளோமே ஜயா...அங்கே பாருங்கள் எங்கள் காவல்துறை இருக்கிறது.

நீங்கள் பிரபாகரனை சந்திக்க வரப்போவதாகச் சொல்கிறீர்கள்..நீங்கள் வந்தால் எங்கள் காவல்துறைதான் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். விசா எடுக்க வேண்டும். சும்மா வர முடியாது. (மக்கள் கை தட்டல்.. அடங்கா விசில் சப்தம்).

ஆகவே சிங்களவர்களுக்கு மேல்மாடியில் (மூளையில் ஒன்றும் இல்லை) என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

தாயகம் தரமாட்டேன் என்று சொல்கிறீரே... 70 வீதமான நிலத்தை நாங்கள் மீட்டு வைத்திருக்கிறோம் அல்லவா! அங்கே ஆட்சியும் வைத்திருக்கிறோம் அல்லவா! இன்னொரு 30 வீதம்தான் இருக்கிறது. அதற்கும் வெகுகாலம் ஆகாது. அதுவும் வந்துவிடும். (அடங்காத மக்கள் கைதட்டல்).

அதேபோல் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை தரமாட்டாராம் மகிந்த.

உன்கிட்ட யார் ஐயா சுயநிர்ணய உரிமை கேட்டது...? அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது.

இப்போது நாங்கள் முடிவெடுத்துள்ளோம். நாங்களாகவே எங்களது தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறோம். நீ என்ன செய்யப் போகிறாய் என்று பார்ப்போம்!

உங்கள் ஆட்சியமைப்பு வேண்டாம் என்று தமிழ் மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

நாங்கள் தனி வழியே போகிறோம் என்று சொல்லிவிட்டார்கள் தமிழ் மக்கள்.

ஆகவே ஒற்றையாட்சி வைத்திருக்கிறோம்- தமிழருக்கு சுய நிர்ணய உரிமை தரமாட்டோம்-தமிழர் தாயகத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்வதில் இனி அர்த்தம் இல்லை.

ஏனென்றால் நாங்கள் இனி செல்லும் பாதை வித்தியாசமானது.

நாமாகப் போராடி வென்றெடுக்கப் போகிறோம் எமது உரிமைகளை. (மக்களின் கை தட்டல்)

மகிந்த சொல்கிறார் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பேன் என்று.

என்ன என்று ஐயா நீங்கள் மாற்றி அமைக்கப் போகிறீர்?

போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது இருவர் செய்த உடன்பாடு. மேலும் சர்வதேச கண்காணிப்புக் குழுவும் உட்பட்டு இருக்கிறது. பல வெளிநாடுகள் இதில் தொடர்பு கொண்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான உடன்பாடு அல்ல. அது ஒரு சர்வதேச உடன்பாடு.

அப்படியான நிலையில் இதை நீ ஒருதலைபட்சமாக மாற்றியமைப்பேன் என்று சொன்னால் முடியுமா? முடியாது.

எங்களைக் கேட்காமல்ää எங்களது அனுமதியில்லாமல் முடியாது. அப்படி செய்தால் போர் நிறுத்தம் உடையும்.

அப்படி நீயாக போர் நிறுத்தத்தை உடைக்க விரும்பினால் உடை.

அதற்கும் நாம் தயார்!!

சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி எல்லா கட்சியுடன் சேர்ந்து பேசி முடிவெடுக்கப் போகிறாராம் மகிந்த ராஜபக்ச.

சர்வகட்சி மாநாடு என்றால் என்ன என்று எங்களுக்குத் தெரியும்.

காலம் காலமாக சிங்கள அரச தலைமைகள்ää தமிழர் பிரச்சனைகளைத் தட்டிக் கழிக்க கையாளுகிற ஒரு கருவிதான் சர்வகட்சி மாநாடு.

27 முகங்களைக் கூட்டிப் பேசி ஒரு ஒத்திசைவான தீர்மானத்தை எடுக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் நம்பத்தான் வேண்டுமா?

ராஜபக்சவுக்கு 27 கட்சிகளது ஆதரவு இருந்தாலும் சிறுபான்மை மக்களை- தமிழர்களை இவர் பிரதிநிதிப்படுத்தவில்லை.

ஆனால் ஒரு ஆளை ஒரு அமைச்சராக வைத்துள்ளார் மகிந்தா. அவர் யாரென்று தெரியும்...

அவருக்கு என்னமோ சமூக சேவை பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

என் நண்பர் சொன்னார்...சமூக சேவை அமைச்சர் இல்லை பாலா அண்ணாää சமூக விரோத சேவை அமைச்சு என்றார். (மக்கள் கை தட்டல்).

அவரது தகுதிக்கான தகுந்த பொறுப்புதான் அது.

இடைவெளியா? காலக்கெடுவா?

மகிந்தவுக்கு கடைசியாக தலைவர் என்ன சொல்கிறார்....

நான் ஒரு சிறிய இடைவெளி தருகிறேன். நீங்கள் உங்களை நடைமுறை அரசியல்வாதிää யதார்த்தவாதிää புலிகளோடு பேசப்போகிறேன்ää புதிய அணுகுமுறையை கையாளப் போகிறேன் என்று சொல்லுகிறீர்கள்.

சரி.. நீங்கள் நேசக்கரம் நீட்டும் போது நாங்களும் உம்மை தூக்கி எறியவில்லை. உனக்கும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். ஆனால் ஒரு குறுகிய காலம்தான் தருவோம்.

நீ அதற்குள் என்ன செய்யப் போகிறாய்?

சமாதானம்ää போர் நிறுத்தம்ää தமிழ் மக்களுக்கு எவ்வித நீதி வழங்கப் போகிறார் என்பதை கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்க்கிறோம். உம்முடன் மோத வரவில்லை.

உமக்கும் ஒரு சின்ன இடைவெளி தருகிறோம்.

அடுத்த வருடம் நீ வந்து எங்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தால் அடுத்த வருடம் நாங்கள் எங்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்கிறார் தலைவர். (மக்கள் ஆர்ப்பரிப்பு)

தலைவரது அறிக்கை வெளியானதும் சில செய்தித் தாபனங்கள் தலைவரது அறிக்கையை திரித்து எழுதியிருக்கின்றன.

தலைவர் சிறிது இடைவெளி கொடுத்திருக்கிறார்...அடுத்த வருசம் என்பது அடுத்த ஆண்டு இடையிலும் இருக்கலாம் அல்லது ஆரம்பத்திலும் இந்த இடைவெளி இருக்கலாம்.

ஆனால் இவர்கள் போட்டிருக்கிறார்கள்.. இந்த மாதத்துக்குள் பிரபாகரனின் காலக்கெடு விதித்துள்ளதாகவும் ஒரு மாதத்தில் சண்டை தொடங்கப் போகிறார் என்றும் செய்திகளைத் திரித்து போட்டிருக்கிறார்கள்.

அப்படி பிரபாகரன் சொல்லவில்லை. ஒரு மாத காலக் கெடுவை பிரபாகரன் விதிக்கவில்லை. ஒரு சிறிய காலம் என்றும் அடுத்த வருடம் என்கிறார். ஒரு திகதியைக் குறிப்பிடவில்லை. ஆனால் நீண்டகாலத்துக்கு பொறுக்கமுடியாது என்றும் சொல்லி இருக்கிறார்.

தலைவர் முக்கியமாக சொல்லி இருக்கிற முக்கியமான இறுதியான செய்தி

எத்தனை இடர்கள் வந்தாலும்

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

எத்தனை சவால்கள் வந்தாலும்

அதை எதிர்த்து நின்று போராடி

தாயக விடுதலையை மீட்டெடுப்போம்! என்று தலைவர் இறுதியாகச் சொல்லி இருக்கிறார்(ஆர்ப்பரிப்பு ஓயாத கைதட்டல்)

இதுதான் தலைவரின் செய்தி என்றார் அன்ரன் பாலசிங்கம்.
-நன்றி:தமிழ்நாதம்.கொம்-

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]