www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

அடுத்த மேற்கு ஆபிரிக்கா இலங்கையா ? -கி.செ.துரை

-சூரியன்-

இந்த நிகழ்வு சென்ற மாதம் நடைபெற்றது.
கொழும்பு புறக்கோட்டையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருட்களை வாங்கும் யாருக்குமே அவற்றின் உண்மை விலை தெரியாது. ஆளுக்கு ஒரு விலையில் பொருட்கள் விற்பனையாகின.

அங்கு கடைவைத்திருந்த ஒரு சிங்கள வாலிபரிடம் பயணப்பை ஒன்றை ஒருவர் விலை கேட்டார். வாலிபர் இரண்டாயிரம் ரூபா விலை சொல்ல இவர் நானூறு ரூபா கேட்டார்.

அதற்கு பதில் தந்த சிங்கள இளைஞன், இவ்வளவு தூரம் நீங்கள் விலையைக் குறைத்தால் என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. நானும் துப்பாக்கி எடுத்து கூலிக்கு ஆட்களைக் கொல்லும் தொழிலுக்குத்தான் போக வேண்டிவரும். மனச்சாட்சிக்குப் பயந்துதான் நான் இப்படி வெய்யிலில் நின்று வியாபாரம் செய்கிறேன் என்றார்.

அந்த இளைஞரின் குரல் நேர்மையானது என்பதால் அந்த நபர் 2500 ரூபா கொடுத்து அந்த பயணப்பையை வாங்கினார். இலங்கைத் தீவு எங்கே போகிறது என்பதை அறிய விரும்புவோர்க்கு அந்த இளைஞர் கூறிய கருத்து நாளை நடப்பதைக் காட்டும் பளிங்குபோல பல செய்திகளைச் சொல்லுகிறது.

வரும் 2010 ல் இலங்கை எப்படியிருக்கும் என்று சிந்திப்போர்க்கு திரைப்படம் போல அது பல காட்சிகளைக் காட்டும். நாட்டை முன்னேற்ற எந்தவொரு பணியையும் முன்னெடுக்க முடியாத நெருக்குவாரம் உருவாகும், வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படும், பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்து வங்குரோத்து நிலையை அடையும், இன்று மேற்கு ஆபிரிக்க நைஞர் நாடு அடைந்துள்ள பட்டினிச்சாவு அவலம்தான் நமது நாட்டிலும் தரிசனமாகும் என்று படிப்படியாக எண்ணங்கள் விரிவடையும்.

எண்ணங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, நைஞர் போன்ற நாடுகள் எவ்வாறு இப்படியான நிலையை அடைந்தன என்று முதலில் சிந்திக்க வேண்டும். அந்த நாடுகள் பின்வரும் பாதாளப் படிகளால் இறங்கியே இன்றைய அவலப் புள்ளியைத் தொட்டன. முதலாவது தொடர்ச்சியான உள்நாட்டுப் போர். இரண்டாவது போரினால் மக்கள் செயலூக்கமற்று அகதிக் கூடாரங்களில் ஒதுங்க, வெளிநாடுகள் போடும் நிவாரணமே அவர்களின் வாழ்வாக மாறியது. மூன்றாவது நிவாரணங்களுக்கான காத்திருப்பு வாழ்வாகி, இறுதியில் பட்டினியிலும், பாண்டு நோயிலும் சமுதாயம் சிக்குண்டது.

இந்த நிகழ்வுகள் அங்கு நிகழும்போதே சம காலத்தில் மேலும் பல பக்க விளைவுகள் உருவாகின. ஒன்று கூலிக்குக் கொலை செய்வது, இரண்டு திருட்டுக்காக கொலை செய்வது, மூன்று போதை வஸ்த்து, நான்கு சிறுவரைப் பாலியல் வக்கிரத்திற்கு பலியாக்குவது போன்ற காரியங்கள் கிளை நதிபோல ஓடிச் சென்றன. இவைகள் பெருவாரியாக நடைபெற்று இப்போது அவைகளையும் நடாத்த வழியின்றி, நடாத்தினாலும் பயனின்றி மேற்கு ஆபிரிக்காவின் வறுமைக்கோடு பூஜ்ஜிய மட்டத்தையும் தாண்டிப் போய்விட்டது. இதுதான் மேற்கு ஆபிரிக்க வறுமையின் பொதுவான கதை. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே மேற்கு ஆபிரிக்காவின் கடைத்தெருக்களில் கேட்டுக் கொண்டிருந்த அதே வாசகத்தைத்தான் இப்போது புறக்கோட்டையில் நின்ற சிங்கள இளைஞரும் பேசியிருக்கிறார்.

இந்த அபாயமான தொனிகள் சிங்கள ஆட்சியாளருக்கு தெரியாது, ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்துவிட்டது என்று நாம் நினைத்துவிடக்கூடாது. அவர்களுக்கும் இது தெரியும், ஆனாலும் அவர்களிடம் வேறுவழியில்லை. நதி பாதாளத்தை நோக்கிப் போனாலும் அதை எதிர்த்து படகை வலிக்க முடியாமல் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு நதியோடு நதியாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இடையில் சுனாமி வந்தது -

பெருமளவு உதவிகள் நாட்டை நோக்கி வந்தன. உண்மையில் அந்த உதவிகளல்ல, சிறீலங்கா அரசுக்கு சர்வதேச நாடுகள் வைத்த பரீட்சை என்றுதான் கூறவேண்டும். கிடைத்த உதவிகளை சரியான முறையில் ஊழல் இன்றிப் பகிர்ந்தளிப்பது ஓர் ஆட்சிக்கலை. சிறீலங்கா அரசுக்கு அது தெரியவில்லை, துறைமுகங்களில் உதவிகள் தேங்கிக் கிடக்க என்ன செய்வதென்று தெரியாமல் அது தலையைச் சொறிந்தது. எட்டு மாதங்களுக்குப் பிறகு சுனாமிக்கட்டமைப்பு பற்றி பேசத் தொடங்கியிருக்கிறது.

நாம் பாடுபடாமல் யாரோ தர்மத்திற்கு கொடுத்த உதவிகளையே பகிர்ந்தளிக்க இயலாதவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து, போரினால் உண்டான அழிவுகளை மீளக் கட்டியமைக்கும் பணிகளை எப்படி முன்னெடுப்பார்கள் ? இது இன்னொரு கேள்வியாகும்.

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக பல கேள்விகள் -

நேற்று முன்தினம் நைஞர் நாட்டு அதிபர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் நைஞரில் வறுமை இல்லை என்றார். பின் அதற்கான காரணத்தை போசாக்கின் தலையில் போட்டு நிறைவு செய்தார். ஆனால் அவருடைய கருத்தில் ஒரு உண்மை இருக்கிறது, சர்வதேச உதவிகளை உரிய இடங்களுக்கு ஊழல் இல்லாமல் பாயச் செயதால் அவர் கூறியதுபோல நைஞர் வறுமை இல்லாத நாடுதான். ஆனால் அவரால் அது முடியவில்லை. நைஞர் மட்டுமா அனைத்து மேற்கு ஆபிரிக்க நாடுகளின் நிலையும் இதுதான். பற்றாமையை விட, கிடைத்த வளங்களைப் பிரித்தளிக்கும் கலையை அடியோடு தெரியாதிருப்பதே அவர்களின் பட்டினி மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.

எவ்வளவு உதவிகளை வழங்கினாலும் பட்டினியால் மரணிப்போர் தொகை குறைவடையாமலே இருக்கக் காரணமென்ன ? இதுபற்றி நீண்டகாலமாக சிந்தித்த மேலைநாடுகள் ஒரு நாள் உண்மையைக் கண்டு பிடித்தன. உதவிகள் உரியவருக்கு போய்ச் சேராமையே அங்குள்ள அடிப்படைப் பிரச்சனை என்பதையும் கண்டு கொண்டன. அதைச் சீர் செய்ய ஒரு வலையாக்க வேலைத்திட்டம் இருக்கிறது. அதை அமுல் செய்ய வேண்டுமென உதவி வழங்கும் நாடுகள் கோரின. ஆனால் அதனால் தமக்கு இலாபம் இல்லை என்பதால் ஆபிரிக்க அரசுகள் அதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில் வேறு வழியின்றி ஆபிரிக்க ஏழைகளை மேலை நாடுகள் இப்போது மெல்ல மறக்க ஆரம்பித்துவிட்டன. ஆபிரிக்காவில் மட்டுமா பாலஸ்தீனத்திலும் அதுதான் நடைபெற்றது. யாசீர் அரபாத் சிறந்த தலைவராக இருந்தும், உதவிகளை பகிர்ந்தளிப்பதில் அவருடைய ஆட்சியும் திறமை குன்றிய ஒன்றாகவே இருந்தது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வறிய மரணத்திற்கு பகிர்ந்தளிப்பதில் ஊழலும், பகிர்ந்தளிக்கத் தெரியாமையும், பெருந் தொகையான மக்கள் உழைப்பின்றி உதவிகளுக்காக காத்திருந்து வாழ்ந்த வாழ்வுமே பிரதான காரணங்களாகும். இப்படி நைஞர் போல வறிய நிலைக்கு ஒரு நாடு போனால் போனதுதான் பின் அதை எந்த விலை கொடுத்தும் பழைய நிலைக்குக் மீட்டுவர இயலாது. எனவேதான் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை மக்களின் வாழ்வு சுனாமிக்குப் பின்னர் பெரு மந்தமான நிலையில் உள்ளது. உதவிகள் வரும் என்ற காத்திருப்பில் வாழ்வு கரைகிறது. எந்தவிதமான சுய செயற்பாடுகளுமற்று நிவாரணத்திற்காகவும், வெளிநாட்டு உதவிகளுக்காகவும் காத்திருப்பதும், வெளிநாட்டில் இருந்து உறவுகள் அனுப்பும் பணத்தில் வாழ்வதும் காத்திருப்பின் அடையாளங்களாகும். இப்படியான நிகழ்வு மிகவும் ஆபத்தானது. காத்திருத்தல் என்பது சமுதாய வாழ்வின் கழுத்தை முறிப்பது போல ஓர் ஆபத்தான பகுதி.

இது குறித்து புலம் பெயர் தமிழ் மக்கள் கூடுதல் கவனமெடுத்து சிந்திக்க வேண்டும். அரசுகளின் செயல்களையும் போட்டி பொறாமைகளையும் கேள்விப்பட்டு சோர்ந்து விடாமல் தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு வெறுமனே பணத்தை அனுப்பி சேம்பேறிகளாக்கக் கூடாது. அவர்களை செயற்பாடுள்ள மனிதர்களாக மாற்றும் பணிகளையும் முடுக்கிவிட வேண்டும்.

ஐரோப்பாவின் பொருளாதாரப் போக்கு புலம் பெயர் மக்கள் முன்னரைப்போல பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு செழிப்பாக அமையவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகையால் பெரும் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார மந்தமும் அருவமாக வளர ஆரம்பித்துள்ளன. இந்த எதிர்மறை நிலை உறவுகளுக்கு உதவிகளை வழங்க இயலாத நிலையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எனவேதான் சகல விடயங்களையும் ஆழ அகலமாகச் சீர் தூக்கி ஒவ்வொருவரும் தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளை செம்மையாக வழி நடாத்த வேண்டும். வெறும் நுகர்வோராக இல்லாமல் செயற்பாட்டுத் திறனுள்ளவர்களாக உங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

நீங்கள் யார் யாருக்கெல்லாம் உதவுகிறீர்கள் என்று பட்டியலிடுங்கள். அந்த உதவியால் ஏதாவது சிறு அளவிலாவது உற்பத்தி நடைபெறுகிறதா என்றும் எண்ணிப்பாருங்கள்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]