www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

கதிர்காமரும் இனவாதமும்

-பிரவீனா மட்டக்களப்பு ஈழநாதத்துக்காக -

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தற்போது சிறிலங்கா அரசுக்கும், அம்மையாருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. யார் தாக்குதலை நடாத்தினார்கள் என்பதை விட எவ்வாறு சுலபமாக இதனைச் செய்து முடித்தார்கள் என்பது இங்கு முக்கியம்.

சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் உயர் பாதுகாப்பின் மத்தியில் சொகுசாக வாழ்ந்து வந்த கதிர்காமர் மிகச் சுலபமாக சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது சிறிலங்காவின் உயர் தலைவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அத்தோடு சமாதான வழிமுறைகளைத் தீவிரப்படுத்தி பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்காது தமிழ் மக்கள் மீது போரைத் திணித்திருக்கும் சந்திரிகா அரசுக்கு கதிர்காமர் படுகொலை வரலாற்றுப் பாடமாகப் புகட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வி மறுபுறம் எழுகின்றது. இனி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமொன்றை இந்தப் பத்தி நினைவூட்டுகின்றது.

சமாதானத்தின் அவசியம் தமிழ் மக்களால் வலியுறுத்தப்பட்ட காலம், தமிழினம் வடக்கிலும், கிழக்கிலும் பொங்கி எழுந்து தமது தாயக உரிமைக்காக பொங்கு தமிழ் நடாத்திய காலகட்டம். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொங்கு தமிழ் நடை பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தினரின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட அந்த நிகழ்வில் ஆயிரமாயிரம் மக்கள், மாணவர் சமூகம், இளையவர், முதியவர் என்ற வேறுபாடுகளின்றி பெரியதொரு சனக்கூட்டம்.

அந்தப் பொங்குதமிழ் உணர்வு பூர்வமாக நடைபெற்றவேளை நடுவே பெரியதொரு இரைச்சல் கல்லுகள், தடிகளுடன் ஆத்திரம் கொண்ட முகத்துடன் மக்கள் குழுமி நிற்பதைப் பார்த்தால், ஏதோ ஒரு கலவரம் நடந்து கொண்டிருக்கின்றது என்றுதான் எண்ணத் தோன்றும்.

ஊடகவியலாளர்கள் அந்தக் குழாம் நிகழ்வை தமது ஒளிப்பதிவுக் கருவிக்குள் அடக்கிக் கொண்டிருக்க கிட்ட நெருங்கி அவதானித்தேன். அங்கே ஒரு கொடும் பாவியை கல்லால் எறிந்து பொல்லால் அடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கொடும்பாவியைச் சித்திரவதைப்படுத்திப் பார்த்து அந்த மக்கள் குழாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறது. பள்ளிச் சிறார்கள் தொடக்கம், வயோதிபர் வரை மகிழ்ச்சிக்குக் காரணம் கதிர்காமரின் கொடும்பாவி தான்.

ஏன் இப்படி ஆத்திரம் கொண்டு கல்லால் பொல்லால் அடித்து, எரித்து மகிழ்ந் தார்கள் என்பதை இப்போதைக்கு அதாவது கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னர் நினைவூட்டிப் பார்ப்பது அவசியம்.

‘கதிர்காமர் சும்மா ஆளா? எங்கட விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்துற மாதிரி இவருதானே உலக நாடுகளுக்குச் சென்று புலிகளைத் தடை செய்யுங்கள், தடை செய்யுங்கள் எனக் கத்தித் திரிகிறாரு. எங்கட விடுதலைப் போராட்டத்தை இப்படி அவதூறாகப் பேசுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கின்றது’ இது அங்கே கல்லோடு பொல்லோடு நின்று கொடும் பாவியை எரித்த ஒரு மாணவன் உணர்வு பொங்க சொன்ன வார்த்தை.

சந்திரிகாவுடன் தாளம் போடுவது கதிர்காமர்தான். வெளிநாடுகளுக்குக் கதிர்காமரை அனுப்பி விடுதலைப் புலிகளை, விடுதலைப் போராட்டத்தைச் சிறு மப்படுத்துவது போன்ற வார்த்தைகளைப் பேசி அங்கே ஆயுதங்களையும், கப்பல்களையும் வாங்குவதற்கு இவர் அல்லவா தரகர். இவ்வாறு தமிழ்த் தேசியத்திற்குத் துரோகத்தனம் செய்யும் நபரை தாங்கள் கொடும்பாவி கட்டி எரிப்பது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்வதற்காகத்தான்.

இப்படி ஒரு பல்கலைக்கழக மாணவி தமது உணர்வுகளை வார்த்தைகளாகக் கொட்டிக் குவித்தார். இது கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கதிர்காமர் கொடும்பாவி எரிக்கப்பட்டது என்பது யதார்த்தம்.

ஒட்டுமொத்த தமிழினமும் ஒருவரை வெறுத்து ஒதுக்குவது என்பது சாதாரண விடயமல்ல. அப்படி ஒதுக்குகிறார்கள், வெறுக்கிறார்கள் என்றால் அதற்கு நிறையவே நியாயங்கள் உள்ளன. ஆனால் கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னர் அவருக்குத் தெரிவிக்கப்படும் அனுதாப உரைகளில் அவரைச் சமாதானத்தின் நாயகனாக, சமாதானத்திற்காக, தமிழ் மக்களுக்காகப் பாடுபட்டவராக வெளிக்காட்ட நினைப்பது கேலிக்குரியது.

சிங்கள தேசியத்தில் ஒட்டி உறவாடியிருந்தவர் கதிர்காமர். அவர் தமிழ் மக்களின் உரிமைகளையோ, உணர்வுகளையோ, மதித்தவரல்ல, சிங்கள தேசிய வாதத்தைப் பருகி அதிலே திளைத்திருந்தவர் என்றால் மிகையாகாது. பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலம் அது. 1994ம் ஆண்டு தொடக்கம் 2001ம் ஆண்டு வரை அந்த ஆட்சி நீடித்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருந்த கதிர்காமர் சந்திரிகாவின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவராகவும், ஆலோசகராகவும் செயற்பட்டார். கதிர்காமருக்கு சந்திரிகா அம்மையார் வெளியுறவு அமைச்சுப் பதவியை வழங்கினார்.

ஈழப்போர் முனைப்போடு முன்னெடுக்கப்பட்ட காலமது. அப்போது யு-9 வீதியைத் திறப்பதாகக் கூறி சூளுரைத்தார். சிறிலங்காவின் பிரதிபடைத்துறை அமைச்சரும் சந்திரிகாவின் மாமனாருமான ரத்வத்தை, இறுதியில் ஜயசிக்குறு சமர் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. தோல்வியோடு வந்து சேர்ந்தார் ரத்வத்தை. இந்தக் காலகட்டங்களில் பதிலுக்குத் தமிழின அழிப்புக்கள் சிங்களப் படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போது அது தொடர்பான மனித உரிமை மீறல்களால் அரசுக்குரிய நற்பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் கதிர்காமர் அக்கறை காட்டியதுடன், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியிருந்தார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு கதிர்காமரின் பிரசாரம் தான் காரணம் என்பது தமிழ் மக்களது குற்றச்சாட்டு.

கதிர்காமரும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு தமது பிரசாரமே காரணமென பேசியிருக்கின்றார். இந்தச் செயற்பாடு காரணமாக ஜனாதிபதியவர்களால் மிக்க விருப்புக்குரியவராக மாறிய

கதிர்காமர் தமிழ், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதுடன், சிங்கள தேசியவாதத்தினை அரசியல் ரீதியான கொள்கையாகக் கொண்டிருந்தாரே தவிர, தமிழர் தாயகத்தின் மக்களின் உணர்வுகளை அவர் மதிக்கவில்லை. இது தென்னிலங்கையில் அவரைச் செல்வாக்கு மிக்க பிரஜையாக்கியது.

தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராகச் சமாதானத்திற்கு எதிராகத் தீவிர போக்குக் கொண்ட சிங்கள வர்க்கத்தினர் மத்தியில் கதிர்காமருக்கான செல்வாக்கு அதிகரித்ததுடன் நம்பிக்கையும் வளர்ந்தது. பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தபோது கடந்த 2001ம் ஆண்டு ஜனாதிபதி கதிர்காமரைப் பிரதமராக்கும் யோசனையை முன்வைத்தார். தன்மீது நம்பிக்கையும், விசுவாசமும் வைத்திருக்கும் கதிர்காமரை பிரதமராக்குதவன் மூலம் தனது சொற்களை மீறிகதிர்காமர் செயற்படமாட்டார்.

எனவே பெயரளவில் பிரதமராகக் கதிர்காமர் இருந்தாலும், இயக்குகின்ற பொறுப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறையாகவும் சிறு பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரதமர் பதவியை வழங்குவதன் மூலம், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையில் சாதகமான நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் அம்மையார் கருதியிருந்தார்.

எனினும் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி. கதிர்காமர் பிரதமராவதை விரும்பவில்லை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். எனினும் கதிர்காமருக்கு மீண்டும் வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டு முகாமில் இனவாதக் கட்சியான ஜே.வி.பி. போர்நிறுத்த உடன்படிக்கை, நோர்வேயின் அனுசரணை, சமாதானப் பேச்சு ஆகிய விடயங்களில் கடும் போக்கான கருத்துக்களைத் தெரிவித்த போது கதிர்காமரும் அதனை அங்கீகரித்தார்.

இதனால் இனவாதக் கூட்டுப் பலப்பட்டது. நோர்வேயின் அனுசரணைப் பணியினை கண்டிப்பதற்கும் நிறையவே காரணங்களிருக்கின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகித்துக் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்தது போன்று வேறு நாடுகளில் செய்ய முடியாத நிலையில் கதிர்காமர் காணப்பட்டார்.

அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர்வாழ் உறவுகளால் வழங்கப்படும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட கதிர்காமரால் முடியாது போய் விட்டது.

பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்திற்கும் தற்போதய காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை, சர்வதேச சமூகம் ஆழமாக உணர்ந்து விட்டது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை இப்போது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்ட விடயம்.

அத்துடன் சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிவிக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகியது. இந்நிலையில் கதிர்காமரின் கனவு பலிக்கவில் லை. தமிழ் மக்களின் யதார்த்தத்தை சர்வதேச சமூகம் ஆழமாக உணர்ந்து விட்டது. ஆனாலும் கதிர்காமரின் நடவடிக்கைகள் ஓய்ந்துவிடவில்லை. அண்டை நாடான இந்தியாவுடன் உறவினைப் பலப்படுத்தி, தமிழ் மக்களது பிரச்சினையில் தலையிட வைப்பதற்கு நோர்வேயின் அனுசரணையை தகர்த்தெறிந்து இந்தியாவை உள் வாங்குவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதும் அதுவும் கைகூடவில்லை என்று தான் கூற வேண்டும்.

இன்று அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் குறித்துத் தெரிவித்திருக்கும் அனுதாப உரைகளில் தமிழ் மக்களின் பிரச்சினையை சமாதான வழிமுறையில் தீர்வு காண்பதற் கும், விட்டுக் கொடுப்போடும் செயற்பட்ட வீரபுருசர், யுகபுருசர் என இனவாத சக்திகள் புகழாரம் சூட்டுகின்றனர். இது பொறுப்பற்ற வார்த்தைகள். இதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால் அவர் இறுதியாகக் குறிப்பிட்டதை ஞாபகமூட்டுகின்றேன். அதாவது விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அதன் பின்னர்தான் சமாதானத்தைக் கொண்டு வருவது சுலபமாக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக் கூட தமிழ் மக்களிடையே விசனத்தையும் வேதனையையும் அளித்தன.

தமிழ் மக்களின் பலத்தில் போர்நிறுத்தமுள்ளது என்றால், அதனைச் சிதைப்பதற்காகவா இவர் இவ்வாறான விதண்டாவாதங்களை முன் வைக்கின்றார் என மக்கள் குறைபட்டுக் கொண்டனர். அவர் இனவாதியாகவே வாழ்ந்துள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் மீது நிழல் யுத்தமொன்று திணிக்கப்பட்டு போராளிகள், பொதுமக்கள் இலக்குவைத்து, தாக்குதலுக்கு இலக்காகி போர் நிறுத்தம் அபாயகட்டத்தை அடைந்துள்ள நிலையில் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யார் செய்தார்கள்? எவ்வாறு செய்தார்கள்? என்பதை அறிய முன்பு அவசரப்பட்டு படுகொலைச் சம்பவம் நடந்து முடிந்த உடனேயே கொலைக்குக் காரணம் புலிகள்தான் எனப் பொறு ப்பற்ற தனத்தில் அறிக்கைகளை விடுத்து விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் பாணியிலான சம்பவங்கள் சிறிலங்காவின் தலை நகரில் நிறையவே நடைபெற்றுள்ளன. அந்த அடிப்படையில்தான் கதிர்காமர் மீதான தாக்குதலுக்கும் புலிகள்தான் பொறுப்பு என அரசாங்கம் அறிவித்திருப்பதுடன் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியிருப்பது கவலைக்குரியது.

ஏனெனில் தற்போது தோன்றியுள்ள போர் ஓய்வு நிலையைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்தின் மீது விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதறடிக்கச் சில சக்திகள் மேற்கொண்ட கொலையாகக்கூட இது இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஏற்கனவே தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வந்த கதிர்காமர் தமக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகித்து வந்துள்ளார். அவர் செய்வது அவருக்கே நியாயமானதாகத் தென்படவில்லை.

இந்நிலையில் கதிர்காமரைப் படுகொலை செய்தால் அது விடுதலைப் புலிகள் செய்ததாகவே கருதப்படும் எனக் கொலையாளிகள் கருதியிருக்கலாம் அல்லவா? இதனைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும், அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கின்றார்.

எனவே கொலையாளிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாது தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, போக்குவரத்துக்களைத் தடை செய்து, மக்களை இம்சைப்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இன்னும் தமிழ் மக்களை விரோத உணர்வுடன் நோக்குவதும் சிறிலங்க வல்லாதிக்கத்தையே வெளிக்காட்டுகின்றது. எனவே உயர் பாதுகாப்பு மிக்க கொழும்பு நகரில் முக்கிய அமைச்சர் அதுவும் அதிகூடிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட அமைச்சர் சுலபமாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் என்றால் சிங்கள தேசத்தின் பாதுகாப்பில் ஓட்டை விழுந்துள்ளதையே இது வெளிக்காட்டுகின்றது.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]