யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம்
-மாசிலான் மட்டக்களப்பு ஈழநாதத்துக்காக -
அன்புக்குரிய தென் தமிழீழ மக்களுக்கு,
முழுமையான தமிழ் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தந்தை செல்வா தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டபொழுது இந்து கலாச்சாரப் பல்கலைக் கழகம் தந்தால் போதும் என்று சு.நடேசனும், பின்னர் தமிழ்க் காங்கிரசும் கோரியதைப் பற்றி முன்னர் எழுதியிருந்தேன். இதைப்பற்றியே விரிவாக இதிலும் ஆராயவுள்ளேன்.
தமிழ் பல்கலைக்கழகத்தைத் திருகோணமலையில் நிறுவுவதே நோக்கமாக இருந்தது. அவ்வாறு திருகோணமலையில் நிறுவினால் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து தமிழ்க் குடியிருப்புக்களை ஏற்படுத்தி சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பிலிருந்து திருகோணமலையை ஓரளவாவது காப்பாற்றலாம், என்பது இரண்டாவது நோக்கமாக இருந்தது. தமிழ் மக்களின் இந்த நோக்கத்தை அறிந்து கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் அதனை முறியடிப்பதற்காகவே இந்து கலாசார பல்கலைக் கழகம் என்று கூறி அதையும் யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டும் என்று தமது எடுபிடிகளின் மூலம் தூண்டி விட்டனர்.
திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பல்கலைக்கழகம் நிறுவுவதை திசை திருப்பவே அரசு விரும்பியது. சிங்கள ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக திருமலை பல்கலைக் கழகம் அமையும் என்பதே காரணமாகும். இரண்டாவதாக இந்துப் பல்கலைக் கழகம் வேண்டாம் என்று தந்தை செல்வா கூறுவதை வைத்து தமிழ் மக்களை இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள் என்று பிளவுபடுத்தலாம் என்பதுடன் கிறிஸ்தவரான செல்வநாயகம் இந்து பல்கலைக் கழகம் வேண்டாம் என்கிறார்.
இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு இவரா தலைவர் என்று கூறித் தமிழின ஒற்றுமையை சிதறடிக்கலாம் என்பதும் அவர்களது திட்டமாகும். தமிழ் மக்கள் இந்து கலாச்சாரப் பல்கலைக் கழகம் வேண்டும் என்கிறார்கள் இஸ்லாமிய மக்களை மறந்து விட்டார்கள். பார்த்தீர்களா என்று இஸ்லாமிய மக்களிடம் கூறி இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற பிரிவினையை வளர்த்து விட்டால் தந்தை செல்வா கட்டி வளர்த்த பிரதேச மத வேறுபாடுகளைக் கடந்த தமிழின ஒற்றுமையைச் சிதைத்து விடலாம் என்று கனவு கண்டனர். சிங்கள அரசின் இக் கபட நோக்கத்திற்குத் துணை போனவர்கள் தமிழர்களே என்பதுதான் வேதனையான நிகழ்வாகும்.
1970ல் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி மிகப் பெரும் பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அப்போது அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டவர் செல்லையா. குமாரசூரியராவார். இவர் ஒரு கட்டிடக் கலைஞர் ஆவார். தமிழ் மக்களுக்கு இவரை யுhரென்றே தெரியாது. அரசியல்வாதியாக இருந்தவருமல்லர். அமைச்சரான பின்னரே இவரது பெயரை தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். இனப் பிரச்சனைத் தீர்வுக்கு சிங்கள தமிழ் கலப்புத் திருமணம் சிறந்த ஒரேவழி என்று கூட்டங்களில் கூறியவர் இவர்.
இவரது இக்கூற்றை விமர்சித்த மா.க. ஈழவேந்தன் (இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்) தமிழினத்தை அழிக்கும் பைத்தியகாரக் கருத்து என்று கண்டித்தார். இதற்குப் பதிலளித்த குமாரசூரியர் பக்தி முற்றிய நிலையில் பைத்தியமாவதும் உண்டு எனக் கூறினார். ஈழவேந்தன் விடவில்லை. அவர் கூறினார் பக்தி முற்றிய நிலையில் பைத்தியமாவதுண்டு. ஆனால் பைத்தியங்கள் எல்லாம் பக்தி முற்றிய வர்கள் அல்ல என்று. இந்த வகையான அரசியல் கற்றுக் குட்டியே குமாரசூரியர் ஆவார். சிறிமாவோவின் அமைச்சரவையில் இருந்த ஒரே தமிழ் அமைச்சர் இவர். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவரல்ல இவர். செனட்டராக நியமிக்கப்பட்டே அமைச்சராகியவராகும்;.
இந்த ஆட்சியில் தான் தரப்படுத்தல் என்ற தமிழ் மாணவர்களின் உயர் கல்விக்கு ஆப்பு வைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் தான் தமிழ் இளைஞர்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் எனலாம். தமிழ் இளைஞர்களின் போராட்ட சிந்தனைக்கு உரமிட்டது சிறிமாவோ வின் புதிய அரசியல் யாப்பு ஆகும். தமிழ் மக்களை நிரந்தரமாக இரண்டாந்தர குடிமக்களாக்கிய குடியரசு அரசியற் திட்டத்தைச் சிறிமாவோ கொண்டு வந்தார். தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய இவ் அரசியல் திட்ட முன்னெடுப்புக்களால் ஏற்படும் ஆபத்துக்களை அறிந்த சில பெரியார்கள் தமிழ் மக்களை ஓரணியில் ஒற்றுமைப்படுத்த விழைந்தனர்.
தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சித் தலைவர்களை அழைத்து ஒற்றுமைப் படுத்தி ஒரே குரலில் தமிழ் மக்களது கோரிக்கைகளை அரசியல் யாப்பு சபையில் வைப்பதென தீர்மானித்தனர். அவ்வாரே தமிழ் மக்களது குறைந்த பட்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கட்சி வேறுபாடின்றி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை சிங்கள கட்சிகள் ஏற்றுக் கொள்ளாதது ஆச்சரியமல்ல. ஆனால் தமிழ் காங்கிரசின் மூலம் தெரிவான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலுக்கு மாறாகச் சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
இம்மூவருடன் இறுதியில் தமிழரசுக் கட்சின் சார்பில் வெற்றி பெற்ற மாட்டினும் இணைந்து கொண்டார். தமிழ் காங்கிரசின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த சங்கரி, அருளம்பலம், தியாகராசா ஆகியோர் சிறிமாவோ தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவார் என்றும் கிறிஸ்தவரான செல்வநாயகம் தமிழ் மக்களை வடக்கு கிழக்கு பகுதிக்குள் அடைத்து வைக்கப் போகிறார் என்றும் கூறினர். தமிழர்களது அரசியலிலே மிகவும் நேர்மையானவர் என்று எல்லாக் கடசினராலும் போற்றப்படும் தந்தை செல்வாவை காற்சட்டை போட்ட காந்தி என்றும் வேறு பலவிதமாகவும் இழித்துப் பேசியவர்களில் முதன்மையானவர் இன்றும் நம்மிடையே அரசியல் கடை விரித்துள்ள ஆனந்த சங்கரியே ஆவர். நாட்டிலே பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் இருள் சூழ்ந்திருந்த வேளையில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக ஓரணியில் நின்று குரல் கொடுத்த பொழுது ஆனந்த சங்கரியும் மற்றவர்களும் தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொண்டு இனத்துக்குச் செய்த இனத்துரோகம் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது.
மாசிலான்.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு