கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?
[புதினம்.கொம்] [கொழும்பு நிருபர்]
சிறீலங்காவின் நம்பிக்கைச் நட்சத்திரமாகத் திகழ்ந்த ஒரு நாயகன் என்ற புகழாரத்தை, அதன் அரசுத் தலைவர் சந்திரிகாவிடம் பெற்றபடி விடைபெறுகிறார் சிங்களத்தின் இராஜதந்திரி லக்ஸ்மன் கதிர்காமர்.
இவரது சேவைக்கான புகழாரம் இது என்று எண்ணி புறம் தள்ளிவிட முடியாதபடி இதற்கும் மேலான புகழாரத்தை கதிர்காமர் உயிருடன் இருந்தபோதே சந்திரிகா வழங்கியிருக்கிறார்.
1998 ஆம் ஆண்டு போரில் இறந்த படையினரை நினைவுகூர்வதற்கான ஒன்றுகூடலில் பேசிய சந்திரிகா,
...இவ்வளவு நாட்களும் தமிழர்களின் போராட்டத்தில் நியாயம் இருப்பதாகவே தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழும் நாடுகள் கருதி வந்தன. இதன் காரணமாக எமது கருத்தை அவை செவி சாய்க்கவில்லை....
.... ஆனால் எங்களது வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் அவர்கள் சளையாது ஆற்றிய அரும்பெரும் பணி காரணமாக அந்நாடுகளின் போக்கில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்....
ஆம்... சிங்களத்தின் தேவைக்கு மேலதிகமாக சேவகம் செய்த ஒரு அடிமை என்கிற பொருட்படுகிற மேற்படி புகழாரம் கதிர்காமரின் காலத்தில் சிங்களத்திற்கான இராஜதந்திர சேவைகள் எவ்வாறு விரிவு பெற்றன என்பதற்கான ஒரு சான்று.
அதையே கதிர்காமர் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் தானாகவே ஒப்புக்கொண்டிருந்தார். தான் எவ்வாறான மேதாவி என்பதைக் காட்டுவதற்காக, அவர் உதாரண ஒப்பிடுகை ஒன்றை அப்பேட்டியில் வழங்கிருந்தார்.
... நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, கனடாவில் ஏராளமான தமிழர்கள் இருந்தார்கள். ஆனால்... அவர்களின் பெயர்ப்பட்டியலையோ அல்லது அவர்களுடனான எந்தத் தொடர்பையோ அங்குள்ள தூதரகம் கொண்டிருக்கவில்லை... இப்போதே படிப்படியாக அதனை உருவாக்கி வருகிறோம். அதேபோல ஏனைய நாடுகளிலும் செய்து வருகிறோம்....
ஆம். கதிர்காமர் சிங்களத்தின் சேவகனாக எவ்வாறு பிரபல்யம் பெற்றார் என்பதற்கான அவரது நேரடி வாக்குமூலமே இது.
இவ்வாறாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம், உங்கள் நாடுகளிலிருந்து செல்லும் பணத்தால் தான் புலிகளால் போராட முடிகிறது. உங்கள் நாடுகளிலிருந்து புலிகளிற்குச் செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துங்கள். புலிகளும் போராடத்தை விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவார்கள். அதனைப் பயன்படுத்தி நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று விதந்துரைத்தார்.
இவரின் விருப்பில் நியாயமிருப்பதாகவே பல நாடுகள் கருதின. சாம, தான, பேத முறைகளிலான அழுத்தங்களை அவையும் விடுதலைப் புலிகள் மீது பிரயோகித்தன. அதனொரு கட்டமாகவே பயங்கரவாத இயக்கமாகவும் அறிவித்தன. கனடா உள்ளிட்ட சில நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கமால் சில பல அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.
குறிப்பாக, கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் தூதர்கள் தமிழர் தரப்புடன் அக் காலகட்டத்தில் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றாலோ அல்லது அவர்கள் தொடர்பான சாதகமான கருத்தை வெளியிட்டாலோ அரசுத் தலைவர் மற்றும் கதிர்காமரால் அழைக்கப்பட்டு இராஐதந்திர வரப்புமுறைகளை மீறுவதாக (Diplomatic Protocols) கண்டிக்கப்பட்டனர்.
ஆனால் மேற்படி நாடுகள் தாங்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டோம் என்ற உணர்வை அவை பெறுவதற்கான சந்தர்ப்பமாக சிறீலங்கா அரசின் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களும், விடுதலைப் புலிகளின் தொடர் வெற்றியும் அமைவு பெற்றன. அதுவே நோர்வேயின் சமாதான முயற்சி என்ற அமைதிக்கட்டத்திற்குள் இரு தரப்பையும் இட்டுவந்தது.
மறுபுறமாக அதன் பின்னரான காலத்திலான கதிர்காமரின் எந்தவொரு நடவடிக்கையும் பிரபல்யம் பெறவில்லை என்றதோடு, அவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் நேர்மைத் தன்மையுடையனவாக நோக்கப்படவுமில்லை.
குறிப்பாக, இவர் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆதரவுகளை இழந்த ஒருவராகவே இருந்தார். குறிப்பாக கிறிஸ்ரினா றொக்கா சமாதான முயற்சி காலத்தில் சிறீலங்காவிற்கு இருமுறை விஐயம் செய்த போது, அரசுத்தலைவரான சந்திரிகா அவரைச் சந்திக்காது தவிர்த்திருந்தார்.
இதற்கான காரணம் ரணிலுடனான ஜோர்ஜ் புஸ் நிர்வாகத்தின் ஒட்டுறவே என்பதேயாகும். சில பல காரணங்களைக் கூறித் தவிர்க்கப்பட்ட இவ்விவகாரத்திற்கான சூத்திரதாரி கதிர்காமர் என்பதாலேயே இவர் அமெரிக்க வெறுப்பிற்கு உள்ளானார். சந்திரிகா பலமுறை அமெரிக்காவிற்குச் சென்ற போது ஜோர்ஜ் புஸ்சைச் சந்திக்க உத்தியோகபூர்வமாக் கோரியிருந்தும் கூட அது தவிர்க்கப்பட்டது.
அதேபோன்று பொதுநலவாய நாடுகளின் செயலர் பதவிக்கு நியூசிலாந்தின் டொன் மக்கினனை எதிர்த்துக் கபடமான முறையில் போட்டியிட்ட கதிர்காமர் தான் இங்கிலாந்தின் ஆதரவைப் பெற்றதாக மேற்கொண்ட பொய்ப்பரப்புரை இங்கிலாந்தில் இருந்தும் அவரைத் தள்ளி வைத்தது (இந்தியாவும் வாக்களிப்பதாகக் கூறிவிட்டு வாக்களிக்கவில்லை என்று கதிர்காமர் புலம்பியது வேறு விவகாரம்).
இத்தோடு தற்சமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் ஆட்சியிலிருக்கும் பழமை தழுவிய கட்சிகள் ரணிலை ஆதரிப்பதானது இவரது புகழை இன்னமும் மங்கச் செய்தன. இந்நாடுகள் அண்மையில் ரணிலை ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பழமை தழுவிய கட்சிகளின் தலைவராக நியமித்தமை இதற்கான வலுவான ஆதாரம்.
இவ்வாறு ஒருபுறத்தே வீழ்ச்சியுற்று வந்த சிங்களத்தின் இராஜதந்திரியான கதிர்காமர் மறுபுறத்தே இந்தியாவின் அரவணைப்பைப் பெறுவதற்கான முயற்சியை விடாப்பிடியாக மேற்கொண்டு வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தடவைகள் இந்தியப் பயணத்தை மேற்கொண்டதுடன், அருகிலுள்ள பிராந்திய வல்லரசான இந்தியா சமாதான முயற்சிகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என அறிக்கைகள் விட்டதுடன், சிறீலங்கா அரசின் செலவில் டெல்லியில் பல கருத்தரங்குகளையும், ஆய்வு அமர்வுகளையும் இம் முயற்சியில் மேற்கொண்டிருந்தார்.
அத்தோடு இந்துவின் ஆசிரியரான ராம் ஊடாக டெல்லியிலுள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் ஜெயராம் ஜெயலலிதான போன்றோருடைய உறவையும் வலுப்படுத்தி இம் முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார்.
எனினும் தனது இராஜதந்திரத் தோல்வியைச் சீர் செய்யுமுகமாக கதிர்காமர் மேற்கொண்ட முயற்சிகளில் இந்திய அரசு சிக்காமால் இன்றுவரை வெகுகச்சிதமாகப் போக்குக் காட்டி வந்து கொண்டிருந்தது.
இவ்வாறாக தான் எடுத்த எந்த முயற்சியிலும் தோல்வியைத் தழுவும் ஒருவராக இறுதிக் காலத்தில் இருந்த கதிர்காமர், கடந்த காலத்தில் பெற்ற வெற்றி யாதெனில் சிறீலங்கா அரசுடன் அதன் தூதரகங்களுடன் இணைந்து வேலை செய்யத் மேற்குலகில் வசிக்கும் தமிழர்களிடையே சில அடிவருடிகளை உருவாக்கியது தான்.
கதிர்காமர் கூறியதை மீண்டும் படியுங்கள்...
... நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, கனடாவில் ஏராளமான தமிழர்கள் இருந்தார்கள். ஆனால்... அவர்களின் பெயர்ப்பட்டியலையோ அல்லது அவர்களுடனான எந்தத் தொடர்பையோ அங்குள்ள தூதரகம் கொண்டிருக்கவில்லை... இப்போதே படிப்படியாக அதனை உருவாக்கி வருகிறோம். அதேபோல ஏனைய நாடுகளிலும் செய்து வருகிறோம்....







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு