சமாதானத்தின் திறப்பு யாருடைய கையில்.
- நிலாந்தன் ஈழநாதம் -மூலம்: சூரியன்.கொம்-
புலிகளின் தூதுக்குழு ஜரோப்பாவில் நின்றிருந்தவேளை நோர்வேயின் தூதுவர்கள் அங்கு அவர்களைக்கண்டு கதைத்தார்கள். அதன்பின் நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வெதார் கெல்கிசன் இந்தியாவுக்கு வந்தார். அங்கே அவர் இந்திய அரசின் பிரதானிகளையும் கொள்கை வகுப்பாளர்களையும் கண்டு கதைத்தார்இ அவர் இந்தியாவுக்க வந்த வேளை ரணில்விக்ரமசிங்காவும் இந்தியாவுக்கு போனார். அங்கே ரணில் இந்திய அரசின் பிரதானிகளையும் எதிர்க்கட்சிப்பிரதானிகளையும கெல்சிசனையும் கண்டு கதைத்தார். இதே காலப்பகுதியில் சுவிற்சலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மிச்சலின் காமீரி கொழும்புக்கு வந்தார். இங்கே அவர் அரசு தரப்பு பிரதானிகளையும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஏனைய சில முக்கிய பிரமுகர்களையும் கண்டு கதைத்தார்.
இப்படியாக கடந்த இரு கிழமைகளாக கிளிநொச்சியிலிருந்து தொடங்கி ஜரோப்பா, புதுடில்லி, கொழும்பு என்று நான்கு முனை ராஜதந்திர நகர்வு ஒன்று துரிதகதியில் நிகழ்ந்து வருகிறது.
இதில் அதிகம் கவனத்தையீர்க்காததும் ஆனால் முக்கியத்துவம்மிக்கதுமாகிய ஒரு நகர்வு சுவிற்சலாந்தின் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் ஆகும்.
ஜரோப்பாவின் மிகப்பெரிய செல்வந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் எத்தகைய பரபரப்பும் இன்றி அமைதியாக கொழும்பு வந்து திரும்பியிருக்கிறார். சுவிற்சலந்தில் புலிகளின் பிரதானிகளுடன் அந்த நாட்டின் உயர்அதிகாரிகள் கண்டு கதைத்திருந்ததின் ஒரு பின்னணியில் அவருடைய கொழும்பு விஜயம் நிகழ்ந்திருக்கிறது. அவர் புலிகள் தரப்பு தகவல் எதையாவது கொழும்புக்கு கொண்டுவந்திருக்கலாம் என்றே பரவலாக ஊகிக்கப்படுகின்றது. அதன்படி புலிகள் தமது இடைக்கால தன்னாட்சி அதிகரசபை பற்றிய வரைபில் பெருமளவுக்கு நெகிழ்ந்து கொடுக்க தயாரில்லை என்ற ஒரு செய்தியை அவர் கொழும்புக்கு கொடுத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. ?பந்து இப்பொழுது உங்களுடைய கையில் அதை புலிகளை நோக்கி ஏறிவதா இல்லையா என்பதை நீங்களளே தீர்மானிக்கவேண்டியிருக்கிறது? எனவே அரசாங்கம் என்ன செய்யவிரும்புகிறது. என்பதை தீர்மானிக்க வேண்டியது அரசாங்கத்தைப் பொறுத்த விசயமே?? என்று அவர் கதிர்காமரிடம் சொன்னதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இதில், அவர் கொண்டுவந்த செய்தி என்ன? அல்லது அந்த செய்திக்கான அரசாங்கத்தின் எதிர்வினை என்ன? என்பவற்றைவிட முக்கியமானது, அவர் தமிழர் தரப்பு உணர்வலைகளைக் காவிவந்து அரசாங்கத்திடம் கொடுத்திருப்பார் என்று நம்பப்படுவதே.
இது ஜரோப்பா எவ்வளவு தூரத்திற்கு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் அக்கறையோடும் ஈடுபாட்டோடும் உள்ளது என்பதைக் காட்டுகிறது. புலிகளை அவர்கள் விருந்தோம்பிய விதத்திற்கூடாகவும் புலிகளை சந்தித்த அந்தந்த நாடுகளின் பிரதானிகளின் பதவிநிலை தகுதிநிலை என்பவற்றிற்கூடாகவும் இது காட்டப்பட்டிருக்கிறது. சமாதானத்தை பாதுகாப்பது என்றால் அவர்களுக்கு மூன்று வழிகள் உண்டு. முதலாவது அரசாங்கத்தின் மீது நிர்பந்தங்களை பிரயோகிப்பது. இரண்டாவது அவ்வாறு நிர்பந்தங்கள் பிரயோகிக்கப்படும் போது அரசாங்கம் இந்தியாவின் பக்கம் போகக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால், இது விசயத்தில் இந்தியாவை ஏதா ஒரு விதத்தில் சமாதானத்தின் ஆகக்குறைந்தபட்ச பங்காளியாக்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கலாம் என்ற துணிச்சலில் சமாதானத்தை முறித்து விடாதபடி பார்த்துக் கொள்வது. மூன்றாவது, புலிகளை அரவணைப்பதன் மூலம் அவர்களை சர்வதேச சமூகத்திற்கு பொறுப்புகூறும் கட்டுப்பாடுடையவர்களாக மாற்றுவது.
கடந்த இருவாரகாலமாக முடுக்கி விடப்பட்டிருக்கும் இந்த மும்முனை அணுகுமுறை வெற்றிபெறுமா? இதன் மூலம் மெலிந்து கொண்டே போகும் சமாதானத்தை பாதுகாக்க முடியுமா? இக்கேள்விகளுக்கு விடைகாண்பது என்றால் சிறிது அழமாகப்போக வேண்டியிருக்கும்.
இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே சமாதானத்திற்கான மேற்கின் மூலோபாயமாக இந்த மும்முனை அணுகுமுறையே இருந்து வருகிறது. இம்முறை யுத்தநிறுத்தம் வழமைக்கு மறாக நீண்டதாக அமைந்ததற்கும். அது ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலையும் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் தாங்கும் சக்திமிக்கதாக அமைந்ததிற்கும் இம்மும்முனை அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவியிலிருந்தவரை இந்த அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவு சோதனைக்குள்ளாகவில்லை. எனினும் குறிப்பாக வெஷிங்கடன் மாநாட்டில் புலிகள் நிராகரிக்கப்பட்டபோது இம்மும்முனை அணுகுமுறையின் சமநிலை குழம்பியது. ஆனாலும் அது யுத்த நிறுத்தத்தை முறிக்கும் ஒரு கட்டத்திற்கு வளரவில்லை.
ஆனால் கடந்த ஆறுமாதகாலமாக மேற்படி அணுகுமுறை கடும் சோதனைக்குள்ளாகிவருகிறது. முக்கியமாக மூன்று காரணங்கள் அதைச் சோதனைக்குள்ளாக்கின. முதலாவது, ரணிலின் ஆட்சி பறிக்கப்பட்டது. இரண்டாவது கருணாவிவகாரம், மூன்றாவது இந்தியாவில் நிகழந்த ஆட்சி மாற்றம்.
முதலாவதின் படி ரணில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும். இந்த மூன்று முனைகளில் ஒருமுனை தளம்பத்தொடங்கியது. புதிய அரசாங்கம் அதன் பிறப்பாலேயே சமாதானத்திற்கு விரோதமானதாக காணப்பட்டது. ரணில் செய்துவந்த சமாதானத்தை பலியிட்டே இப்புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்த அரசாங்கம் சமாதானத்தை பாதுகாப்பது என்றால் அது அதன் பிறப்பியல்புக்கு மாறான ஒன்று.
சந்திரிகாவின் இறுதி இலக்கு இப்பந்தியில் தெடர்ச்சியாக கூறப்பட்டுவருவது போல யுத்தமும் அல்ல சமாதானமுமல்ல தொடரந்தும் ஆட்சியில் இருப்பதற்கான ஒரு அரசியலமைப்பு மாற்றமே அவருக்குத் தேவை. அதை அடைவதற்கு ஒரு கருவியாக அவர் யுத்தமும் செய்யலாம் சமாதானமும் செய்யலாம். அதாவது அவருடைய தனிப்பட்ட ஆசைகளின் வலைக்குள் சமாதான சிக்குண்டு விட்டது. அதை எப்படி விடுவிப்பது என்பதே இப்பொழுதுள்ள பிரச்சினை, அதாவது சமாதானத்தின் மூன்று முனைகளில் ஒரு முனையாகிய அரசாங்கத்தின் முனை தொடர்ந்தும் எதிர்வு கூறமுடியாததாக எளிதில் கையாள முடியாததாக தளம்பலானதாக் காணப்படுகிறது என்பதே இப்போதுள்ள மெய்நிலை.
இரண்டாவது, கருணாவின் பிரச்சினை, இதன்படி புலிகளின் பேரம்பேசும் சக்தி குறைந்துவிடும் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது. கருணாவை கையாள்வதன் மூலம் சந்திரிகா புலிகளின் பேரம்பேசும் சக்தியை உடைத்தவிடலாம் என்று நம்பினார். இது ஒரு மென்தீவிர யுத்தத்தை தொடக்கிவைத்தது.
ஆனால் புலிகள் தமது உள்வீட்டுப் பிரச்சினையை தமக்கேயான பாணியில் தீர்த்துக்கொண்டதையடுத்து இந்த மென்தீவிர யுத்தம் தற்சமயம் தணிந்துவருகிறது. மேற்கு நாடுகளின் மும்முனை அணுகுமுறைக்கு உட்படும் ஒருமுனையில் ஏற்பட்ட சிறுதளம்பல் குறுகிய காலத்துள் சீர் செய்யப்பட்டுவிட்டது. தமது பேரம்பேசும் சக்தி கேள்விக்கிடமற்றது. என்பதை புலிகள் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள். அதாவது மூன்றுமுனைகளில் மற்றொரு முனையாகிய புலிகள் முனை ஸ்திரமாகவே உள்ளது.
மூன்றாவது, இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம். இந்தியாவில் இப்பொழுது மன்மோகன்சிங்தான் பிரதமர் எனினும் சோனியா காந்தியே ?கிங்மேக்கர்? எனவே தீர்மானிக்கும் சக்தியாக சோனியா காந்தியே இருக்கும் அரசாங்கத்துடன் சேர்த்த ஒத்தழைப்பதன் மூலம் புலிகளை மடக்கிவிடலாம் என்று இலங்கை அரசாங்கம் நம்பியது. மறுபடியும் ஒரு யுத்தம் மூண்டால் புலிகளை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்தியாவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை செய்து கொள்ளமுடியும் என்று கொழும்பு இப்பபொழுதும் நம்புகிறது.
ஆனால், இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு மன்மோகன்சிங்கின் அரசாங்கம் சமாதானத்திற்கு நேர்எதிரான வெளிப்படையான ஒரு நிலைப்படையான இன்னமும் எடுக்கவில்லை. சோனியா காந்தியை ?சென்ரிமென்ரலாக?க் கையாளலாம் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பும் இதுவரை நிறைவேறவில்லை. அண்மையில் டில்லிக்குபோன ரணிலுக்குக் கிடைத்த அளவு வரவேற்பும் மதிப்பும் ரணில் போவதற்கு சிறிது காலத்திற்கு முன்புபோன அனுராபண்டாரநாயக்காவுக்கு கிடைக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். முன்னைய இந்திய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் வெளிப்படையாக சமாதான முயற்சிகளை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தையே காட்டிவருகிறது. சந்திரிகா முதலில் கற்பனை செய்தது போல புதுடில்லியை இன்னமும் இந்த சமாதானச்சிக்கலில் எளிதில் மாட்டிவிடமுடியவில்லை. இதை சமாதானம் செய்யும் நாடுகள் மிக வாய்ப்பான ஓர் அம்சம் என்று நம்புவது தெரிகிறது.
அதாவது மேற்கு நாடுகளாள் கையாளப்படவேண்டிய மூன்றாவது முனையும் ஓப்பீட்டளவில் பெரிய மாற்றங்களின்றியே உள்ளது. எனவே ஒப்பிட்டளவில் ஸ்திரமாக காணப்படும். இரண்டு முனைகளையும் அதாவது கிளிநொச்சியையும் புதுடில்லியையும் அதிகம் கவனமெடுத்து கையாள்வதன் மூலம் தளம்பிக் கொண்டிருக்கும் மூன்றாவது, முனையாகிய கொழும்பை ஓரளவிற்காவது தமது செல்வாக்கு வீச்செல்லைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு மேற்கு நாடுகள் காய்களை நகர்த்துவது தெரிகிறது. மேற்கின் விசுவாசிகளான ரணிலும் மிலிந்த மொறகொடவும் புதுடில்லிக்கு போனதையும் அங்கே அவர்கள் கெல்கிசனைச் சந்தித்ததையும் .இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ளவேண்டும். இது தவிர சந்திரிகா விரைவில் இந்தியாபோகவிருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
அதாவது, சமாதானத்திற்கு எதிரான ஒரு பகிரங்க கூட்டில் இணையும் முடிவை இந்தியா இன்னமும் எடுக்கவில்லை. மேற்கு நாடுகள் இதை ஒரு சாதகமான அம்சமாக கருதி காய்களை நகர்த்துவது தெரிகிறது. இந்தியாவுக்கு ஊடாக இலங்கை அரசாங்கத்தை கையாள்வது என்ற ஒரு தெரிவு அவர்களுக்கு மிக வசதியானதாகுவும் யதார்த்தமானதாகவும் இருக்கலாம். புவிசார் அரசியல் யதார்த்தமும் அப்படித்தான் இருக்கிறது. சமாதானத்தின் திறப்பு இந்தியாவிடம்தான் உள்ளது.
ஒரு புறம் புலிகளின் அரசியல் அந்தஸ்தை உயர்த்துவது. இன்னொருபுறம். இந்தியாவை இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் கொள்கைரீதியலான பங்காளியாக மாற்றுவது. இந்த இரண்டு வழிகளின் ஊடாகவும் தான் தேங்கிநிற்கும் சமாதானத்தை ஒரளவுக்கேணும் அசைக்கலாம். இதிலும் கூட அதிகம் ஆசைப்பட முடியாது சமாதான முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்பது இப்போது நிலவும் யுத்தநிறுத்தம் ஒரு யுத்தத்திற்குச் திரும்பிச்செல்வதை தடுப்பது மட்டுமே. இதற்குமப்பால் சமாதனாத்தை குறித்து வீணான கற்பனைகளை வளர்த்துக்கொள்ள முடியாது ஏனெனில் இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்தை பொறுத்தவரை யுத்தத்தை ஒத்திவைப்பதே சமாதானம் எனப்படுகிறது. இதில் வரக்கூடிய ஒரே ஒரு கேள்வி எவ்வளவு காலத்திற்கு யுத்தத்தை ஒத்திவைக்கலாம் என்பதே.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு