தற்போதைக்கில்லை!
-நிதர்சனம்.கொம் -
விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சமிஞ்ஞைகள் எதுவும் தெரிவதாக இல்லை. சமாதான ஏற்பாட்டாளர்களான நோர்வே தரப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் - குறிப்பாக, நோர்வேயின் வெளிவிவகார மற்றும் பிரதிவெளிவிவகார அமைச்சர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பு வருவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இருப்பதாகவும் இல்லை. சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 'தேசிய சமாதான ஆலோசனைக்குழு" ஒன்றை அமைத்திருப்பினும் சரி, அரசாங்கத் தரப்பில் இடைக்கால நிர்வாக நகல் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறிக்கொண்டாலும் சரி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், தேசிய சமாதான ஆலோசனைக்குழுவினராலோ அன்றி அரசாங்கம் தயாரித்துள்ளதாகக் கூறப்படும் இடைக்கால நிர்வாக சபை நகல் திட்டத்தினாலோ சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படப் போவதில்லை என்பது அரசாங்கத்திற்குத் தெரியாததொன்றல்ல. ஏனெனில் இவற்றால் அரசியலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படுவதற்கான அரசியல் சூழ்நிலை தற்பொழுது இல்லை என்பது அரசாங்கத்திற்கு நன்கே தெரியும்.
அவ்வாறு இருந்தும், அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஏற்பட்டுள்ள தேவையின் நிமிர்த்தத்தின்ஆகும். அதாவது, தற்போதைய சூழ்நிலையில் இனப்பிரச்சினை விடயத்தை இழுத்தடித்தல் என்பது மட்டுமே அவரது தேவையாகவுள்ளது.
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் பொறுத்து இன்று அனைத்திலும் தலையாய பிரச்சினை தமது அதிகாரத்தைய தொடர்ந்தும் எவ்வாறு தக்கவைப்பது என்பதே. சனாதிபதியாகவோ அன்றி பிரதமராகவோ எவ்வாறு பதவியில் தொடர்வது என்பதே ஆகும். அதாவது, அடுத்த ஆண்டில் முடிவுறும் சனாதிபதிப் பதவிக் காலத்தின் பின்னர் அதிகாரத்தில் எவ்வாறு இருப்பதென்பதே ஆகும். இக்காலப்பகுதிக்குள் அவர் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடிப்பதற்கான வழி வகைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் தனது பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை என்பது சனாதிபதி சந்திரிகாவிற்கு நன்கு தெரியும். ஆகையினால், ஏதேவொரு வழி முறையிலாயினும் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கான முயற்சியே அவரது முக்கிய குறிக்கோளாகும். இதற்கு எத்தகைய வழிவகைகளையும் அவர் பரிசீலிக்கத் தயாராகவே உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வழிவகைகளையோ அன்றி பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வழிவகைகளையோ கண்டறிதல் அல்லது சனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பிரதமராகப் பதவி ஏற்பதற்குரிய வழிவகைகளைத் தேடுவது என்பதே சனாதிபதி சந்திரிகாவினதும், அவரின் ஆதரவாளர்களினதும் முக்கிய நோக்கமாகவுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு நெருக்கடி தரக் கூடியதான எந்தவகையிலான செயற்பாடுகளிலும் இறங்குவதற்கு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தயாராக இல்லை. அதாவது, விடுதலைப்புலிகளுடன் இடைக்கால நிர்வாகம் தொடர்பாகப் பேச்சுக்களை ஆரம்பிக்க அவர் தயாராக இல்லை. ஏனெனில், இத்தகையதொரு முயற்சி ஜே.வி.பி.யுடன் முரண்பாட்டைத் தீவிரமாக்குமகையால் சமாதானப் பேச்சுவார்த்தை என்பதை அவர் தற்போது முதன்மையானதாகக் கொள்ள தயாராக இல்லை.
ஆகையினால், இவ்வாண்டின் இறுதிக்குள்ளோ அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள்ளோ சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இல்லை. அவ்வாறு ஆரம்பிப்பதானால் சனாதிபதி சந்திரிகா நாட்டின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் கூடிய தீர்மானங்களை மேற்க் கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும். ஆனால், சனாதிபதி அதிகாரத்தில் நீடிப்பதற்குக் காட்டும் ஆர்வம் நாட்டிற்காக அர்ப்பணிப்புச் செய்வதில் காட்டியதாக அவரின் கடந்த கால வரலாற்றில் பதவிகள் இல்லை.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு