www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

நாங்கள் தப்பிஓட எங்கள் தந்தை கார் அனுப்பினார்
ஜோர்தானில் தஞ்சம்புகுந்துள்ள சதாமின் மகள்கள் பேட்டி.

ஈராக்கிலிருந்து தப்பியது பற்றி ஜோர்தானில் அடைக்கலம் புகுந்துள்ள சதாமின் மகள்கள் உருக்கமான பேட்டி அளித்துள்ளனர். அதில் தாங்கள் தப்பி ஓடுவதற்குத் தந்தை கார் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜோர்தான் நாட்டில் அண்மையில் அடைக்கலம்புகுந்துள்ள சதாமின் ரகத்,ரானா ஆகியோர்,தலைநகர் அம்மானில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுக்கு சொந்தமான ஒரு அரண்மனையில் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டிருந்தபோது துபாயைச் சேர்ந்த அல் அரபியா மற்றும் அமெரிக்க சி.என்.என்.தொலைக்காட்சி ஆகியவற்றிற்குப் பேட்டி அளித்துள்ளனர்.

பேட்டியில அவர்கள் கூறும்போது "எங்கள் தந்தையை நாங்கள் தவறவிட்டுவிட்டோம்.அவரது இழப்பு எங்களுக்குப் பெரியதாகும் என்பதை அவருக்குச் சொல்லிக் கொள்கின்றோம்.இந்தக் கடுமையான சோதனையிலிருந்து கடவுள்தான் அவரைக் காப்பாற்றவேண்டும்.நாங்கள் கடைசியாக அப்பாவைப் பார்த்தநாள் நினைவுக்கு வருகிறது.அவர் அந்த நாளில் இதுவரை இல்லாத அளவு கம்பீரமாக இருந்தார்.எல்லாம் அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக உறுதியாக நம்பினார்.எதுவும் தவறாக நடக்காது என்று எண்ணினார்.எங்கள் குழந்தைகள் அவரைச் சுற்றிலும் இருந்தார்கள்.அவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் கொடுத்து அப்பா உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருந்தார்"எனத் தெரிவித்தனர்.

மூத்த மகள் ரகத் மேலும் கூறுகையில் "போர் தொடங்கிய பிறகு இரவு முழுவதும் நானும் என் தங்கை ரானாவும் ரேடியோ முன்தான் உட்கார்ந்துகொண்டிருந்தோம்.எல்லாம் முடிந்துவிட்டது என்று தங்கையிடம் நான் சொன்னேன்.அதற்குப் பின் 12மணி நேரத்தில் அப்பா எங்களை தப்பி ஓடிவிடச்சொல்லி அவரது தனிப் பாதுகாப்புப் படையில் இருந்து கார் அனுப்பினார்"

"நாங்கள் ஈராக்கிலிருந்து தப்பிய தருணங்கள் உணர்ச்சிப் பிரவாகமானவை.குழந்தைகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்கள்.பெண்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து அடுத்த கட்டநடவடிக்கை எடுப்பது பற்றித் தீர்மானித்தோம்.என் அம்மா எங்களைப் பிரிந்து ஆளுக்கொரு இடத்துக்குப் பரவலாக ஓடிவிடச் சொன்னார்.அதுமுதல் நாங்கள் பிரிந்துதான் வாழ்கிறோம்" என்று கூறினார்.

இளைய மகள் ரானா கூறும்பொது,"அப்பாவுக்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன்.அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.ஒவ்வொரு விநாடியும் அப்பாவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.கடவுள் அவரைப் பாதுகாத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.அப்பா இப்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.அப்பாவுடன் யாருக்கும் தொடர்பு இருக்காது.அப்பாவை எனக்கு நன்கு தெரியும்.அவர் எங்கு இருக்கிறார் என்பதை யாருக்கும் சொல்லமாட்டார்.என் அம்மாவுக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோ கூட அவர் சொல்லமாட்டார்"என்றார்.

சதாமின் இந்த இரு மகள்களினதும் கணவன்மார்கள்,தேசத்துரோகக் குற்றச்சாட்டில் முன்பு சதாமால் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தங்களுடைய பிள்ளைகளுடனேயே இவர்கள் ஜோர்தானில் தஞ்சம்புகுந்துள்ளார்கள்.மனிதாபிமான அடிப்படையிலேயே அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளதாக ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் இவர்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.அவர்களுக்குப் பலத்த பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]