www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

கலாசாரம் பேணும் கோயில் வீதியில் விலாசம் காட்டும் வெளிநாட்டவர்.

"எங்கடை ஆள்களின்ரை எடுப்பாலை இந்த முறை நல்லூர்த்திருவிழா நாறப்போது" அலுத்துக்கொண்டார் விநாசியார்."விநாசியார் அண்ணை புலம்பிறதைப் பார்த்தால், பெரிய விஷயம் போல இருக்கும். கடைசியாக சின்ன விஷயமாகிவிடும" என்றான் லோகன்."மச்சான், அவர் சொல்லுறதை முழுவதும் கேட்டுப்போட்டு கதைக்கவேணும்" நண்பனைக் கண்டித்தான் டானியல்."அதுக்கு.... அவரை முழுக்கதையையும் கெதியில் சொல்லச்சொல்லு" என்றான் லோகன்.

"சொல்லுறன் தம்பி, திருவிழா தொடங்கியும் சனத்துக்குள்ளை ஏன் இடிபடுவான் என்று, இவ்வளவு நாளும் நல்லூர்ப் பக்கம் போகேல்லை. கார்த்திகைத்திருவிழா அன்று தான் போனனான். முந்தின காலத்திலை நாங்கள் வீட்டிலை இருந்து கோவிலுக்குப்போகும்போது வெறுங்காலோட போனனாங்கள். ஆனால், இப்ப சாமி சுற்றும்போதுகூட கோவில் வீதியிலை குதி உயர்ந்த செருப்போட ஆட்டம் காட்டுகினம" விசயத்தை சொன்னார் விநாசியார்.

"அதுக்கு என்ன செய்யிறது? வேறு மதங்களைச் சேர்ந்தவை தங்கடை முறைப்படி வழிபாட்டுத்தலத்துக்கு செருப்போட வருகினம். அவை என்ன கோயிலுக்குள்ளேயே போகினம்? வீதியிலைதானே நிற்கினம். அது பிழையே?" என்றால் லோகன்."தம்பி அப்படியிருந்தால் நான் கதைத்திருக்கமாட்டேன். வெளிநாட்டில் இருந்து வந்த எங்கட ஆள்களெல்லே செருப்புக்காலோட நின்று ஒரு நிமிஷம் கும்பிட்டு, ஒன்பது நிமிஷம் வீடியோ எடுக்கினம்" என்றார் விநாசியர்."உது வெளிநாட்டுக்காரலிலை பொறாமைப்பட்டு கதைக்கிற கதை" விடாமல் கூறினான் லோகன்.

"தம்பி.... அவையை மாதிரி காஞ்சமரக்கறியையும், பக்கற்றில அடைச்ச இறைச்சியையும் தின்றுபோட்டு, குளிருக்குள்ள வாழவேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்கடை மண்ணிலை எனக்கு பொறாமையில்லை. அதோடை வெளிநாடுகளிலையிருந்து வாற எல்லோரும் பழசுகளை மறக்கிறதேயில்லை. சிலர்தான், தாங்கள் ஏதோ ஐரோப்பிய பரம்பரை மாதிரி நடிக்கினம். இவை கோவிலுக்க செருப்போடை வாறதை பற்றிக்கூடக்கவலைப்படுறதில்லை. ஆனால் சனத்துக்குள்ளை சப்பாத்தாலும் செருப்பாலும் அடுத்தவையின்ரை கால்களையெல்லே மிதிச்சுத்தள்ளுகினம். அது தான் பிரச்சின" பேசி நிறுத்தினார் விநாசியார்.

"அப்ப யாரோ காலைப்பதம் பார்த்தபடியால்தான் விநாசியண்ணை இந்தப்புலம்பல் புலம்பிறார" சிரித்தபடி சொன்னான் டானியல்."தம்பி இதுமட்டுமில்லை, நாங்கள் இங்கேயிருக்கிறவையை விட வித்தியாசமானவை என்று காட்ட அவை வெள்ளைக்காரப்பழக்கங்களை கொண்டு வந்து இங்கே பழக்குகினம். அது எங்கடை கலாசாரத்தை எல்லே சீரழிக்குது" குற்றஞ்சாட்டினார் விநாசியர்."உந்தப் பழசுகளோட இதுதான் பிரச்சினை. நாகரீகமாக நடக்கத்தெரியாது. மற்றவை அப்படிநடந்தாலும் பிடிக்காது" என்றான் லோகன்.

"தம்பி, நுணிப்புல்மேஞ்சா இப்பிடித்தான். ஆழமாகயோசித்துப்பாரும்.... வெள்ளைக்காரர் மருந்து மாதிரி சாப்பாட்டு நேரத்திலை குடும்பத்தோடை இருந்து குடிப்பினம். அதைப்பார்த்துப்போட்டு இங்கு வந்து தகப்பன், தாய், தமக்கையோடை பியரும், விஸ்கியும் வயிறுமுட்டக்குடிச்சுப்போட்டு, மட்டுமரியாதையில்லாமல் நடக்கிறது சரியோ? அதைவிடும்..... வெளிநாட்டிலை இருந்து வாற பெட்டைகளிலை சிலர், தாங்கள் ஏதோ நாகாPகத்தின் உச்சியிலை இருந்து கொண்டு ஷோஷியலாகப் பழகிறம் என்றபடி பொடியளை நெருங்கித் தொட்டுப் பழகுகினம். உண்மையிலை ஷோஷயலாகப் பழகுறது மனதைப்பொறுத்தவிஷயம். ஆனால், செம்மண்ணிலை வளர்ந்த மனமும், லண்டனிலை கொப்பியடிச்ச பழக்கமும் கனக்கப்பிரச்சினையை கொண்டுவரும் தம்ப" கூறிமுடித்து மூச்சு வாங்கினார் விநாசியார்.

அதுவரை அமைதியாக இருந்த மாஸ்டர் தொண்டையைக் கனைத்தபடி பேச ஆரம்பித்தார்."என்னைப்பொறுத்தவரை விநாசியார் சொல்லுற விசயங்களை கவனத்தில் எடுக்க வேணும்தான்.ஆனால் இப்படி எடுப்புக்காட்டுறவை கொஞ்சப்பேர்தான். மற்ற ஆள்கள் கனகாலத்துக்குப் பிறகு வந்து தன்ரை ஊருக்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஏதாவது உதவி செய்ய வேணுமென்றும், தங்கடை சொந்த பந்தம் நண்பர்களோடை, சேர்ந்து பழகி சிரிச்சு கதைக்சு மகிழ வேணும் என்று விரும்பித்தான் வருகினம். ஆனபடியால்தான் வெளிநாடுகளிலை இருந்து வாறவை எல்லோரும் பிழையாக நடக்கினம் என்று சொல்ல ஏலாத என்றார் மாஸ்டர்."அப்பநான் சொல்லுறது பிழையோ?" விநாசியார் கேட்டார்.

"விநாசியார் ஆத்திரப்படக்கூடாது. நீ சொன்ன மாதிரியான ஆள்கள் கொஞ்சப்பேர் என்றுதான் சொல்லுறன். ஆகையால் எங்கடை ஆள்களாலை வெளிநாட்டிலை இருந்து வாறவைக்கும் பிரச்சினைகள் இருக்கு. அதையும் நாங்கள் கவனத்திலை எடுக்க வேணும் என்றுதான் சொல்லுறன். "கோபப்பட்ட நண்பரை சமாதானப்படுத்துபவர் போலச் சொன்னார் மாஸ்டர்.நீங்கள் எங்களிலை பிழைபோடுறியள் போல இருக்க"என்றான் டானியல்."நீர் சொல்லுறது பிழை தம்பி. அதைவேற, நாங்கள் வேறை என்று நினைக்கிறதே தவறு தம்பி.

இப்படி நினைச்சுக்கிறதே தவறு தம்பி. இப்படி நினைச்சுக்கொண்டு, வெளிநாட்டிலை இருந்து வாறவை ஏதோ காசை மரத்திலை பிடுங்கிக்கொண்டு வருகினம். அதிலை எங்களுக்கும் பார்த்துப் பாராமல் தந்தால் என்ன? என்று இங்கே இருக்கிறவை கருதுகினம். வெளிநாடுகளிலை சம்பாதிக்க வாய்ப்புக்கூடத்தான். அதேநேரம் செலவழிக்கவேண்டிய கட்டாயமும் அங்க இருக்கு. இங்கே மழைகாலத்தில் வேட்டியை இழுத்துப் போத்தினால் போதும். ஆனால் அங்கே ஹீற்றர் இல்லாவிட்டால் உடம்பு விறைக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் செலவு தான். அதேநேரம் வெளிநாட்டிலை இருக்கிறவை, குளிரிலும் இரவு பகலாக உழைக்கத்தான் காசு தேடுகினம். அவையிற்றை முடிஞ்சவரைக்கும் வறுக நினைக்கிறது மனசாட்சி இல்லாத செயல்" கூறினார் மாஸ்டர்.

"ஆனாலும் அவை இங்கேயிருந்து போனவைதானே. இங்கே வந்தவுடன் அது சரியில்லை. இது சரியில்லை என்று நொட்டை சொல்லுகினம்" தலையை குனிந்து கொண்டே முணுமுணுத்தார் விநாசியர்."அதுகும் பிழையில்லை விநாசி. கரண்ட் இல்லாத காலத்திலை கிணத்திலை அள்ளிக் குளிச்சவை, இப்ப கரண்ட் வந்த பிறகு கிணத்திலை அள்ளச் சொன்னால் அள்ளுகினமோ? அது மாதிரி பத்துப்பதினைஞ்சு வருஷமாகசுகத்தை அனுபவிச்சவை திரும்பி இங்கே தங்கிறதென்றால் கஷ்டம்தான். அதைவிட வெளிநாடுகளிலை இருந்துவாற பிள்ளைகளிலை பெரும்பாலானவை அங்கேயே பிறந்து வளர்ந்ததுகள். அதுகள் இங்கேயிருக்கிற கஷ்டங்களை சகிக்க வேணும் என்று எதிர்பார்க்கிறது எந்த விதத்திலை நியாயம்?" கேட்டார் மாஸ்டர்.
மாஸ்டர் சொல்லுறதும் நியாயம்தான். இன்றைக்கு எங்கடை போராட்டம் வளர, குளிரிலும் பனியிலும் கஷ்டப்பட்டு உழைச்ச காசை அதுகள் மனம் கோணாமல் குடுத்ததும் ஒரு காரணம் எல்லே?" என்றபடியே கடையைக் கட்டினாள் சின்னாச்சி.
தேரடி கலைந்தது.

நன்றி உதயன்(31-08-2003)

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]