www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிரிப்பு

நான் வளர்கிறேனே மம்மி 2

-நாமக்கல் சிபி
அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். என் கூட விளையாடுற பையன் பேரு ரமேஷ். அன்னிக்கு பார்த்து என்கிட்ட சீக்கி (அதாங்க பஸ்ல கண்டக்டர்லாம் ஊதுவாங்களே, அதே மாதிரி பிளாஸ்டிக்ல இருக்கும்) இருந்ததுங்க. ஏதோ ஒரு பண்டிகைல வாங்குனது. எங்க வீட்டு வெளித் திண்ணைல ஒரு பெரிய மரக் கட்டில் இருக்கும். அதுலதான் என் அண்ணன், அக்காங்கள்ளாம் சேர்ந்து டூர் விளையாட்டு விளையாடுவோம். எப்பவுமே எங்க அண்ணந்தான் டிரைவரா இருப்பார். அந்த கட்டில்தான் பஸ்.

பஸ்ல(கட்டில்ல உக்காந்துகிட்டே) டீச்சர் (எங்க அக்கா ) "பசங்களா பார்த்துக்குங்க, அதுதான் கொடுமுடி முருகன் கோயில், அதுதான் ஆறு' ன்னெல்லாம் சொல்லுவாங்க. பசங்களான நாங்கள்ளாம் பஸ்ஸோட சன்னல்(!?) வழியா பார்த்துகிட்டே வருவோம். அப்புறமா பஸ்லயே எல்லாருக்கும் கிழங்கு, வேர்க்கடலை, கரும்பு எல்லாம் டீச்சர் தருவாங்க. (எங்க எல்லார் பங்கையும் சேர்த்து முன்னாடியே வாங்கி வெச்சிதுல இருந்து)

சில நாள் இது டூர் பஸ்ஸா இருக்கும், சில நாள் டிக்கெட் வாங்கணும். அவங்கவங்க ஊர் வந்தவுடன் கண்டக்டர் சொன்னவுடனும் இறங்கிக்கனும். இப்படியே விளையாடுவோம்.

இப்படித்தான் அன்னிக்கும் என் பிரண்டு ரமேஷை நான் பஸ் விளையாட்டு விளையாடலாமாண்ணு கூப்பிட்டேன். உடனே அவன் சொன்னான் "சரி விளையாடலாம்டா, நீதான் டிரைவராம், பஸ்ஸை ஓட்டணும் "ன்னான். உடனே நாம உஷாராயிட்டம்ல. நாம யாரு? "சரி டிரைவரே பஸ்ஸை ஓட்டுவாராம் அவரே சீக்கியும் ஊதுவாராம்" னு நான் சொன்னேன். அவன் மட்டும் சளைச்ச ஆளா? உடனே "சரி அப்போ நான் டிரைவரா இருக்கேன்"னு சொன்னான். நான் திருப்பி சொன்னேன், "சரி அப்போ கரெக்டா கண்டக்டர் சீக்கி ஊதுனவுடனே பஸ்ஸை நிறுத்தணும், திருப்பி ஊதினவுடன் பஸ்ஸை எடுக்கணும்"

என்ன ஆச்சுன்னு தெரியலை, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தான், திடீர்னு "நான் விளையாட்டுக்கு வரலே" ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டான். அதுக்கப்புறம் அவன் என் கூட எப்பவாவது விளையாண்டான்னா, இல்லையான்னெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு முறை அவனே ஒரு பள்ளத்துல விழுந்துட்டு, நான் தள்ளி விட்டுட்டதா அவனோட தாத்தாகிட்ட பிராது கொடுத்துட்டான். அப்ப நான் சீக்கியை அவனுக்கு ஊதத் தரலைங்கறதை மனசில வெச்சிகிட்டுத்தான் இப்படிச் செஞ்சிருப்பானோன்னு நினைச்சிகிட்டேன்.

அதுக்கப்புறமா எனக்கு கிடைச்ச ஃபிரண்டு ஸ்ரீதர், எனக்கு சீனியர்தான். அவனோட அப்பா போஸ்ட் மாஸ்டரா இருந்தாரு. அவங்க வீடேதான் போஸ்ட் ஆபீஸ். வெளித் திண்ணைலதான் அவரோட பெரிய மேசை இருக்கும். அப்போ அந்த கிராமத்துல போஸ்ட் மேனெல்லாம் கிடையாது. ஏதாவது லெட்டர் வந்திருந்தா இவரு யாருகிட்டயாவது கொடுத்தணுப்பிருவாரு, இல்லைனா சொல்லியணுப்பினா வந்து வாங்கிக்குவாங்க.

நானும், ஸ்ரீதரும் விளையாட அவரோட போஸ்ட் ஆபீஸ் மேசைதான் கார். மேசையோட கீழே ஒரு பக்கம் கப்போர்டும், இன்னொரு பக்கம் காலியாகவும் இருக்கும். கப்போர்ட் இருக்குற பக்கம்தான் எங்களுக்கு காரோட டிக்கி. இன்னொரு பக்கம் டிரைவிங்க் சீட்டும், பின் சீட்டும். பக்கவாட்டுல ரெண்டு பக்கமும் கதவு இருக்குறதா நினைச்சி திறக்கும்போதும், மூடும்போதும் "டிக் டிக்" னு வாயாலயே சத்தம் எழுப்பிக்குவோம்.

அப்புறமா ஒரு நாள் சந்தையில இருக்குற கிணத்துல ஒரு பொணம் மிதக்குறதா எல்லாரும் பேசிக்கிட்டாங்க. எல்லாரும் போய் எட்டிப் பார்த்தாங்க. எங்களையெல்லாம் பார்க்க விடலை. நானும் ஸ்ரீதரும் இந்த விளையாட்டு கூட விளையாடுவோம். திண்ணைக்கு கீழே ஒருத்தர் உக்காந்துக்கணும். திண்ணை மேல இருந்து இன்னொருத்தர் தண்ணி சேந்தணும். தண்ணி சேந்தும்போது கிணத்துக்குள்ள (திண்ணைக்கு கீழே) பார்த்துட்டு அப்படியே கயிறை(நூலை!?) போட்டுட்டுட்டு ஓடிடணும். இதான் எங்க விளையாட்டு.

அனுப்பியவர் Admin

 

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2006)
 
[பாவனை செய்யபĮ