நான் வளர்கிறேனே மம்மி 3
நாமக்கல் சிபி -
அதென்னவோ தெரியலை! என்னைப் பால்வாடியில் கொண்டு போயி விட்டப்போ எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலை. அந்த ஆயாவைப் பார்த்து நான் ரொம்ப மிரண்டு போனதும் ஒரு காரணம். அதுக்கு முன்னாடி இருந்தே ஏதாவது ஒண்ணுன்னா அந்த ஆயாவைக் காட்டியே என்னைப் பயமுறுத்தியதால் அந்தப் பயம் அப்படியே இருந்தது.
பால்வாடிக்குப் பின்னாடியே பள்ளிக் கூடம். அதுல எங்கப்பாதான் தலைமை ஆசிரியர். அதனாலயே தைரியாமா பால்வாடிக்குப் போற மாதிரி பாவ்லா காட்டிட்டு பள்ளிக் கூடத்துல போய் ஒண்ணாவது படிக்கும் என் இன்னொரு பிரண்டு மாணியரசனோட போயி உக்காந்துக்குவேன். ஒண்ணாம்பு வாத்தியார் சிங்கராயன் சாரும் நான் ஹெட்மாஸ்டர் புள்ளை என்பதால் பேசாம விட்டுடுவார். ஆனாலும் பள்ளிக்கூடத்துக்குள்ள வந்துட்டா நம்ப குசும்பை எல்லாம் கொஞ்சம் அடக்கிக்குவேன். இல்லாட்டி திரும்ப பால்வாடிக்குப் போகணுமே. அப்படியும் எங்கப்பாவோ, எங்கம்மாவோ (மூணாங்கிளாஸ் டீச்சர்) என்னைப் பார்த்துட்டா அவ்வளவுதான். ரெண்டு அஞ்சாம்பு படிக்கும் சீனியர் பசங்க என்னை கையை ஒருத்தர், காலை ஒருத்தரா தூக்கிக்கொண்டுபோய்(ராக்கிங்க் !?) பால்வாடில விட்டுட்டு வருவாங்க!
கொஞ்ச நாள் ஆனதும் என்னோட படிப்பு ஆர்வத்தை(!?)ப் பார்த்துட்டு எங்கப்பாவே எனக்கு ஒண்ணாம் வகுப்பு தமிழ் புத்தகமும்(அட்டைப்படத்துல புலி போட்டிருக்கும், கடைசி பக்கத்துல காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு பாட்டு கூட இருக்கும்), ஒரு சிலேட்டு, ஒரு பலப்பம் எல்லாம் ஒரு மஞ்சல் பையில போட்டு இவன் இங்கயே இருக்கட்டும்ணு ஒண்ணாவதுல உக்கார வெச்சிட்டார்.
"இவன் இங்கயே இருக்கட்டும்ணு" சொன்னதுல இருந்த உள்குத்து அப்போ எனக்கு தெரியாம போச்சு!
வருஷக் கடைசியில வெச்சாருங்க பாருங்க ஆப்பு. நான் நல்லாப் படிச்சிருந்தும் எக்ஸாம் எழுத ஹால் டிக்கெட் குடுக்கலை. வயசு போதாதாம். அடுத்த வருஷம் பாஸானவங்க பேர் படிக்க ஒவ்வொருத்தரா ரெண்டாம் வகுப்புல போய் உட்காரணும். என் கூடவே இருந்த மணியரசனும் ரெண்டாவது போயிட்டான். நான் எவ்வளவோ அழுது அடம்பிடிச்சும் அந்த வருஷம் பெயில் (என்னைப் பொறுத்தவரை ஃபெயில்தானுங்களே) ஆனேன்.
அப்புறம் இந்த வருஷம் ஒண்ணாவதுல அஃபிஷியலா சேர்த்திக்கிட்டாங்க! தினமும் பேர் கூப்பிடுவாங்க! எக்ஸாம் எழுத ஹால் டிக்கெடடெல்லாம் பிரச்சினை இல்லாம குடுத்தாங்க! எங்களுக்கெல்லாம் சிலேட்டுப் பரீட்சைதான்.
நாலாவது, அஞ்சாங்கிளாஸ் பசங்களுக்குத்தான் அட்டைப் பரீட்சை எல்லாம்.
முழாண்டுப் பரீட்சை எழுதப்போற அன்னிக்கு எங்க அக்கா ரெண்டு பேரு, பக்கத்து வீட்டு அக்கா எல்லாரும் என்னை பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போய் திருநீரெல்லாம் பூசி விட்டு அனுப்பி வெச்சாங்க. அப்பாடா அந்த வருஷம் நல்ல வேளையா நான் பாஸ் ஆயிட்டேன். பின்னே ஏற்கனவே ஒரு வருஷம் படிச்ச சிலபஸ்தான.
இதுக்கப்புறம்தான் வீட்டுக்கு வெளியில போய் தெருவுல விளையாட ஆரம்பிச்சதெல்லாம். அப்போவெல்லாம் எங்கியாவது விஸேஷம்னாலோ, இல்லை யாராவது போய் சேர்ந்துட்டாலோ எதுவா இருந்தாலும் கண்டிப்பா மியூசிக் இருக்கும். உறுமி, தாரை, தப்பட்டை இதெல்லாம்தான் இருக்கும்.
எங்க இருந்து சத்தம் வந்தாலும் சரி! நான் வீட்டுக்குள்ள இருந்தா தானாவே ஆரம்பிச்சிருவேன். வெளியில இருந்தாலும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டாலும் கையும், காலும் நிச்சயமா நின்ன இடத்துல மியூசிக்குக்கு ஏத்தமாதிரி ஆடிகிட்டிருக்கும். ஆனா ஆடிப்பதினெட்டு அன்னிக்கு மட்டும் இந்த மியூசிக் கேட்டா எங்க இருந்தாலும் வீட்டுக்கு ஓடியாந்துடுவேன்.
பின்னே கோமாளி பிடிச்சிகிட்டு போயிட்டா.
ஆனா அந்த மியூசிக்ல இருக்குற சுகமே தனி, இப்ப கேட்டாலும் கூட அதே மாதிரிதான்.. என்னையும் மறந்துடுவேன் சில நேரம்....
"டண்டூண்டூம்..டண்டணக்கடி..டண்டூண்டூம்..டண்டணக்கடி"
"டண்டூண்டூம்..டண்டணக்கடி..டண்டூண்டூம்..டண்டணக்கடி"







