|
தலைப்பு: தமிழை வளர்ப்பது யார்?
-சிறப்பு பட்டிமன்றம்
பங்கு பெறுபவர்கள்: திரைப்பட பாடலாசிரியர், கவிமுரசு ராஜமுத்து,
இலக்கியவாதி 'குழப்பிஸம்' குமாரவேல் குணசேகர், அரசியல்வாதி
தமிழ்ப் பித்தனார், சென்னை தமிழ் வல்லுநர் ஆட்டோ கஜா.
நடுவர்: வேட்டி வேப்பையா.
வேப்பையா: வணக்கம்னேன்.
(சபையோர் எல்லோரும் சிரிக்கிறார்கள்)
கஜா: நைனா என்னா அது? அல்லாரும் ஜிலிப்புறாங்க. ஜோக் வுட்டாரா?
குமாரவேல்: பதிவாகாத எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தின் நிகழ்வு
வெளிப்பாடுதான் இது.
கஜா: என்னாமோ போ. அல்லாம் புச்சா கீது.
நடுவர்: தமிழை வளர்ப்பது யார் என்றேன், நான் என்றார் கவிமுரசு.
நான் என்றால் பட்டர் நானா, ப்ளெய்ன் நானா என்றேன். (சிரிக்கிறார்.
அவையோரும் சிரிக்கிறார்கள்) கவிமுரசு வருக. தமிழ் முரசைத் தருக.
தமிழ்ப் பித்தனார்: இந்த நடுவரை தண்ணியில்லா காட்டுக்கு
மாத்திரனும். முதல்ல அவனை பேசக் கூப்பிடறான். (முணுமுணுக்கிறார்)
கவிமுரசு: அவையோருக்கும் சுவையோருக்கும் என் ராஜவணக்கம். இந்தப்
பொங்கல் உங்களுக்கு ராஜ பொங்கலாக இருக்கட்டும். தமிழை வளர்த்துக்
கொண்டிருப்பது திரைப்பட பாடலாசிரியர்கள்தான். தமிழுக்கு
தினந்தோறும் புதுப்புது வார்த்தைகளைத் தந்துக்
கொண்டிருக்கிறார்கள்¢. இவை எந்த நூற்றாண்டு கவிஞருக்குமே
தோன்றாத கவித்துவம் மிக்க வார்த்தைகள், ராஜ வார்த்தைகள். 'ஜிம்புலக்கா,
ஜிம்புலக்கா', 'டாலாக்கு டோல் டப்பி', 'ஹில் கூரே ஹில் கூரே', 'ஸ்மையியாயி'
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். கர்வத்துடன் சொல்லவில்லை,
கவனத்துடன் சொல்கிறேன். இந்த சபையில் வேறு யாரும் இந்தக்
காரியத்தை செய்திருக்கிறார்களா?
நடுவர்: முரசை பலமாக கொட்டிவிட்டார் கவிமுரசு. அதற்கு சிரசால்
பரிசு தரப் போகிறவர் இலக்கிய சிறுசு குமாரவேல். (தன்னுடைய எதுகை
பிரயோகத்தை நினைத்து அவரே கைத்தட்டி சிரித்துக் கொள்கிறார்)
குமாரவேல்: வெகு ஜனத் தமிழின் வெளிப்பாட்டு நிலை உம்பர்ட்டோ
ஈக்கோ சொன்னது போல் களம் மாறி பதிவு செய்யப்பட்ட நிகழ்வாக
இருந்தாலும் போஸ்ட்மாடர்னிஸ தமிழின் சுருக்கம், உள் மன ஓரங்களில்
கசிந்து க்யுபிஸ தன்மையை வெளிக் கொணரும் முடிவாய் இருக்கிறது.
இருந்தபோதும் மக்லுகனின் உலகக் கிராமம் கோட்பாடின் க்யுபிஸம்
சிறு பத்திரிகைகளின் வாயிலாகதான் சிந்தனைக்குள் செல்லும் திறன்
பெற்றிருந்தாலும், மன வெளியின் எல்லைக்கு அப்பாற்பட்டு டாலியின்
சர்ரியலிஸ கனவாகத் திரிகிறது. இந்த இஸங்களின் தன்மையை நாம்
ஸ்ட்ரச்சரலிஸம் உள்ளீடு வழியாக பதிவு செய்து மேஜிக் ரியலிஸத்தின்
குறியீடுகளுடன் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் தமிழிஸம் வளரும்.
கஜா: வாத்யாரே, அல்வாக்கடை ரஸத்தைலாம் சொல்ற. நம்ம முனைக் கடை
பருப்பு ரஸத்தையும் இஸ்த்துவுடு. (சத்தமாய் குரல் கொடுக்கிறார்)
நடுவர்: 'குழப்பிஸம்' குமாரவேலை அடுத்து அரசியல் பெருமகனார்
தமிழ்ப் பித்தனாரைப் பேச அழைக்கிறேன்.
(தமிழ்ப் பித்தனார் மேடைக்கு வந்ததும் எதுவும் பேசாமல் நின்று
கொண்டே இருக்கிறார்)
நடுவர்: பேசுங்கள் தமிழ்ப் பித்தனாரே.
தமிழ்: யாரும் பொன்னாடை போர்த்தவே இல்லையே எப்படி பேசறது?
கஜா: அய்ய. ஆளைப் பாருடா. டவுசர் பார்ட்டிலாம் டமுக்கி
அடிக்கிறான்க.
தமிழ்: இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் நடுவர் பெருமகனாம்
நீதித் திருமகனாம் வேட்டி வேப்பையாவுக்கு என் தலைவணங்கி
வணக்கங்கள். அவருக்கு அடுத்து அமர்ந்திருக்கும் கவிமுரசு, எனது
ஆருயிர் தம்பி ராஜமுத்துவுக்கு தமிழ் வணக்கம்.
பக்கத்திலிருக்கும் அன்புத் தம்பி இலக்கியச் செம்மல் குமாரவேல்
அவர்களுக்கு வணக்கம். ஓட்டுவது ஆட்டோ என்றாலும் என் மனதில்
விமானம் ஓட்டும் ஆட்டோ கலைஞர் கஜாவுக்கு அன்பான வணக்கம். இங்கு
அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் கோடானு கோடி தமிழ் வணக்கங்கள்.
என்னை இந்தத் தமிழ் மேடையில் பேச அழைத்தமைக்கு நன்றி. மீண்டும்
என் தமிழ் வணக்கத்தைக் கூறி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.
நடுவர்: நல்லது. தமிழில் வணக்கத்தையும் நன்றியையும் வளர்ப்பது
தாங்கள்தான் என்று சொல்லாமல் சொல்லிய பித்தனாருக்கு இந்தக்
கொத்தனாரின் வாழ்த்துக்கள் (சிரிக்கிறார்).
தமிழ்: அதெல்லாம் ஒண்ணுமில்லே. தலைப்பு மறந்துடுச்சு அதான்.
நடுவர்: அடுத்து ஆட்டோ வல்லுநர், கலைஞர் கஜாவை கருத்துச் சொல்ல
அழைக்கிறேன்.
கஜா: அல்லாருக்கும் வணக்கங்க. பேசுனதும் மொதல்ல மெரிசல்
ஆயிட்டேன். அப்பாலே ஆப்பக் கடை ஆயாதான், அய்ய ஆம்புளப் பிள்ளயா
இருந்துக்கீனு ஜபூர் வுடறியேனு சொன்னதுக்கோசரம்தான் ஆட்டோவை
தள்ளிட்டு வந்துட்டேன். நான் எப்பவும் தமிளுதாங்க பேசுறது.
நம்மாண்டை வெள்ளைக்காரனுங்க, இந்திக்காரனுங்க ஏர்னா தமிழ்தான்
இஸ்த்துப்புடுவேன். பார்ட்டிங்க அப்படியே ஆஃப் ஆய்டும்.
நம்மாண்டை கில்மா காட்னா கைமா ஆய்டும். தமிள்ல அல்லா கவிஞரும்
எனக்குத் தெரியுங்கோ. வூட்டாண்டா கோழி ரவினு நம்ம தோஸ்த்
ஒருத்தர் பாட்டுலாம் எழுதுவார். அவர்கிட்ட அப்பப்ப நம்ம லவ்
மேட்டர் சொல்லி பாட்டு வாங்கிப்பேன். அத நம்ம டாவுக்கிட்ட சோ
காட்டுவேன். சிரிப்பா சிரிக்கும். ரெண்டு பேரும் கவிதைப் படிச்சி
தமிளை வளர்க்கிறோம்ங்க.
நடுவர்: மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறேன். இவர்கள்
அனைவருமே தங்கள் பங்குக்கு தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பது அவர்களது பேச்சிலேயே இஸ்த்துவிட்டார்கள். மன்னிக்கவும்
சொன்னார்கள். எனவே தமிழை வளர்ப்பது இவர்கள் எல்லோருமே என்று கூறி...
''சார் நிறுத்துங்க... நிறுத்துங்க... ஸ்டாப் ஸ்டாப்'' என்று
கத்திக்கொண்டே வேகமாய் ஒரு பெண் அரங்கத்துக்குள் ஓடி வருகிறாள்.
''என்னை விட்டுட்டீங்களே. யு ஹேவ் லெஃப்ட் மீ''
நடுவர்: யாரும்மா நீ?
''என் பேரு நளாயினி. டமில் டிவிலலாம் காம்பியரிங் பண்றேன்.
நீங்கள் கேட்டீங்களா? தமிள்க்கு நான் நிர்யோ பண்ணியிருக்கு.
நடுவர்: ''நீ என்னம்மா பண்ணியிருக்கே?''
நளாயினி: நா டமில் பேஸ்வேன். அப்பப்ப ஸ்ஸெய்திகள் பட்பேன். டமில்
ஜனங்களுக்கு பாட் போட் காட்வேன். தென், நான்ஸ்டாப்பா டமில்ல
பேஸ்வேன். கடி ஜோக் அட்பேன். டமில்லேயே சிர்ப்பேன் (சிரித்துக்
காட்டுகிறார்)
(நடுவரும் அவையோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்)
-ரஞ்சன
நன்றி அம்பலம்.கொம் |