www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம்-வெங்கட்(கனடா)

சமீபத்திய மைக்ரோஸாப்ட் அறிவிப்பின்படி அதனுடைய FAT கோப்பு அமைப்பிற்கு இனிமேல் பயனுரிமைக் கட்டணம் வசூலிக்கப்போகிறது . ஆதிகாலத்தில் பேசிக்(BASIC) என்ற மொழியில் எழுதப்பட்ட FAT கோப்புகள் சேமிக்கும் முறை மைக்ரோஸாப்டால் எம்எஸ் டாஸின் அடிப்படையில் அமைந்த வின்டோஸ் 3.11, 95, 98,(Me) எம்.ஈ போன்ற இயக்கு தளங்களில் கோப்புகளை ஒழுங்கமைக்கும் முறையாக மைக்ரோஸாப்டால் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் வின்டோஸ் என்.டி போன்ற சக்தி வாய்ந்த இயக்கு தளங்கள் உருவாக, புதிதாக NTFS என்ற கோப்பு அமைப்பு தயாரிக்கப்பட்டது. இது என்.டியின் தொடங்கி, 2000, எக்ஸ்பி, 2003 உள்ளிட்ட இயக்குதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மைக்ரோஸாப்ட் எம்.ஈ-க்குப் பிறகு டாஸ்(DOS) அடிப்படையிலான இயக்குதளங்களை முழுவதுமாகக் கைவிடுவதாக அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் ·பேட் அமைப்பு பின்-ஒப்புமைக்காக மாத்திரமே பயன்படும் என்று பலரும் நினைத்திருந்தார்கள் (மைக்ரோஸாப்ட் உட்பட).ஆனால் பெருகிவரும் மின்னணுச் சாதனங்களான டிஜிட்டல் காமெரா, எம்பி3 இயக்கிகள், யுஎஸ்பி நினைவுக் கருவிகள், எனப் பலவற்றிலும் ·பேட்(FAT) அமைப்பு கையாளப்பட்டது.

இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு, மைக்ரோஸாப்டின் அனைத்து இயக்கு தளங்களிலும் ·பேட் படிக்கும் வசதி உண்டு, தவிர மக்கின்டோஷ், லினக்ஸ், போன்ற இயக்குதளங்களிலும் ·பேட் அமைப்பில் சேமிக்கப்பட்ட கோப்புகளைப் படிக்கவியலும். NTFS, ext2 (linux) போன்றவற்றில் கட்டுப்பாடுகள் அதிகம். இந்த நிலையில் ஒரு டிஜிட்டல் காமெராவை யூஎஸ்பியில் கோர்த்துவிட்டு உடனே கோப்புகளைத் திறக்க முடியாது. எனவே பலரும் FAT அமைப்பைக் கையாளத் தொடங்கினார்கள்.

திடீரென, மைக்ரோஸாப்ட் எங்கள் கண்டுபிடிப்பான FAT அமைப்பைப் பயன்படுத்துபவர்கள் எல்லோரும் எங்களுக்குக் காப்புரிமைத் தொகை தரவேண்டும் என்று சொல்கிறது. அவர்கள் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கேட்பது சட்டப்படி எந்த வகையிலும் குற்றமில்லை. என்றாலும், பயனிழந்து போன ஒரு கண்டுபிடிப்பைப் பலரும் வேறு விஷயங்களுக்காகக் கையாளும்வரையில் பொறுத்திருந்துவிட்டு, பின்னர் அது பிரபலமான உடன் அதற்குக் கப்பம் கேட்பது தரக்குறைவான செயலாகப்படுகிறது.

ஒரு சின்ன கதை; எங்கள் ஊரில் ஒரு கஞ்சர் (என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது, கஞ்சன் என்றே அழைப்போமே). அவர் வீட்டுச் சுவற்றில் சினிமா சுவரொட்டிகளை ஒட்டுவார்கள். பிறகு ஒரு முறை, தமிழகத்தின் தனிப்பெரும் நடிகராகக் கருதப்பட்டவர் ஒருவர் மூஞ்சியில் சாணி பூசப்பட்டிருந்தது. ரசிக சிகாமணிகள் மிகவும் கஷ்டப்பட்டு அதை அழித்துவிட்டுப் போனார்கள். சில நாட்கள் கழித்து அவருக்குப் போட்டியாகக் கருதப்பட்ட இன்னொரு திலகத்தின் சுவரொட்டி அங்கே வந்தது.

விடுவார்களா? சிம்மக்குரலுடன் கத்திக் கொண்டு சுவரில் மீண்டும் சாணியடித்தார்கள். பொன்மனத்தின் மூஞ்சியில் சாணியா? உடனே அது துடைத்தெறியப்பட்டது. பின்னர், இதே நிலை மாறி மாறி வந்தது. கடைசியாக ஒருமுறை அளவுக்கதிகமான சாணி எந்தத் திலகத்தின் படம் என்று தெரியாமல் முழுவதாக மறைக்கும் வகையில் தேய்க்கப்பட்டது. இந்த முறை, ரத்தத்தின் ரத்தங்கள்கூட நாற்றம் பொறுக்கமுடியாமல் ஓய்ந்து போனர்கள்.

பல நாட்கள் கழித்து சாணி நன்றாகக் காய்ந்து வறட்டியாக மாறிப்போயிருந்தது. தெருவில் காய்கறி விற்கும் கிழவி ஒரு நாள் இரவு அந்த வறட்டியைப் பெயர்த்து எடுத்துப்போக முயற்சி செய்துகொண்டிருந்தாள். அது கஞ்சப்பிரபு கண்ணில் பட்டுவிட்டது. "இந்தம்மா, அத எடுக்காதே, எங்க வூட்ல மரத்தூள் அடுப்புக்கு கிருஷ்ணாயில் ஊத்திப் பத்தவைக்க வேணும்" என்று கஞ்சம் கத்தியது. அந்தக் கிழவி, "ஏஞ்சாமி, சும்மாதான கெடக்குது நான் எடுத்துப் போறேனே" என்று கெஞ்சினாள்.

"நல்லா எடுத்துகிட்டுப் போவயே, அப்புடி வேணும்னா நாலணா கொடுத்து வாங்கிகிட்டுப் போ" என்று பதில் வந்தது. கிழவி காதில் சரியாக விழவில்லை. இல்லையென்றால் அவள் மூர்ச்சைபோட்டு விழுந்திருப்பாள். கஞ்சனின் குணம் தெரிந்த கிழவி, எடுத்துப்போறேனே, என்று சொல்லும்போதே அந்த இடத்தைவிட்டு நகரத் தொடங்கியிருந்தாள்.

கிட்டத்தட்ட அப்படித்தான், FAT அமைப்பே காய்ந்துப் போன சாணிதான் (இதைவிட நல்ல கோப்பு அமைப்புகள் திறந்த வடிவில் இலவசமாகக் கிடைக்கின்றன). மைக்ரோஸாப்ட் ராஜா காய்ந்த சாணியையும் காசுபண்ணப் பார்க்கிறார்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]