|
கணினியியலின் ஒரு கிளையாக வளர்ந்ததுதான் நகல் ஞானம் என
சொல்லபப்டும் Artificial Intelligence. அறிவார்ந்த ஒ ரு
செயல், சுயமாக மனிதர்கள் அல்லது மற்ற உயிருள்ள பொருட்களின்
துணையின்றி, செயல்படக்கூடிய ஆற்றலையே நகல் ஞானம் என்று
கூறுகின்றோம். உயிரற்ற பொருட்களுக்கு Intelligence என
சொல்லபப்டும் ஆற்றல் இல்லை. மனிதர்கள் மென்பொருட்களைக் கொண்டு
உயிரற்ற இயந்திரங்களை இயக்க முனையும் போதுதான் இது
சாத்தியப்படுகினறது. உலகின் பல மூலைகளிலுமுள்ள ஆய்வுக் கூடங்கள்
நகல் ஞானத்தினால் உருவாகும் பயன்களைக் கருதி இந்தத் துறையில்
புதிய புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோட்களைப் பற்றி
விபரிப்பவர்களெல்லாம், அதனை ஒரு வகையான முட்டாள் இயந்திரம் என்றே
சொல்லி வந்தனர். இந்தக் கருத்து இப்போது மாறிக் கொண்டே
வருகின்றது. ஒரு ரோபோவினால் அதுவும் குறிப்பாக இயந்திரத்
தொழிற்சாலைகளில் பணிபுரியும் ரோபோக்களால் பேசமுடியாது, அவற்றால்
கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாது என்ற பல குற்றச்சாட்டுகள்
இருந்து வந்தன; இன்னமும் இருக்கின்றன. அதன் இயந்திரத்தன்மை
மிகுந்த வெளித்தோற்றம் கொடுக்கும் பயங்கர உணர்வு போன்றவையே
ரோபோக்களை சாதாரண மக்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி வைத்து
பார்க்கவும், உறவாடவும் செய்தன.
சில 'பயங்கர' ரோபோட்கள்
ஆனால்
கடந்த சில ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கும் ரோபோட் துறையின்
அபரித வளர்ச்சி இந்தக் கூற்றுக்களைப் பொய்ப்பிக்க ஆரம்பித்து
விட்டன.
நகல் ஞானம் என்பதை முதலில் புரிந்து கொள்வோம். ஒரு மனிதன் அல்லது
ஒரு விலங்கு அல்லது உய ிருள்ள
ஒரு பொருள், ஒரு செயலை செய்ய முயற்சிக்கும் போது அடிப்படையில்
தேவைப்படுவது அறிவு. நீரிலிருந்து நீந்தி வெளியே வந்து மணல்
தரையில் தொடர்ந்து ஊர்ந்து செல்லும் ஒரு ஆமையை எடுத்துக்
கொள்வோம். நீரில் தனது கால்களைக் கொண்டு நீரினை அழுத்தமாகத்
தள்ளுவதற்கு ஒரு வகை அறிவு தேவைப்படுகின்றது. பிறகு நீர்மட்டம்
குறைந்த பகுதியிலிருந்து வெளியேறி மணல்பரப்புக்கு உடலை உராசித்
தேய்த்துக் கொண்டே வரும் போது மற்றொரு வகை அறிவு
தேவைப்படுகின்றது. இந்த வகை அறிவு என்பது பயிற்சி அளிக்கப்பட்டு
வரக்கூடிய வகையிலான அறிவு அன்று; அது சுயமாக அந்த ஜீவன்
கொண்டிருக்கும் அறிவு. ஆறறிவு படைத்த மனிதனுக்கு இந்த அறிவு
இயற்கையாகவே அமைந்திருக்கின்றதா என்றால், பதில் 'இல்லை'
என்பதுதான். பசித்தால் அழ வேண்டும்; வலித்தால் அழ வேண்டும்;
அழும் போது கண்களில் நீர் வடிதல் போன்றவை மனிதருக்கு சுயமாக
அமைந்திருக்கும் அறிவுகள். ஆக உயிருள்ள ஜீவன்களை ஒப்பிடும் போதே
பல்வேறு வகைப்பட்ட அறிவுகள் இருப்பதை உணர முடிகின்றது.
ஆக, உயிரற்ற, சலனமற்ற, ஒரு பொருள் இயங்க ஆரம்பிக்கும் போது
அதற்கு அடிப்படையாக அமைவதுதான் இந்த நகல் ஞானம் எனப்படுவது.
இந்த நகல் ஞானம் சம்பந்தப்பட்ட துறை என்பது உயிருள்ள பொருட்களை
உதாரணமாகக் கொண்டு, அவற்றைப் போலவே இயங்கும் வகையில் இந்த
உயிரற்ற இயந்திரங்களை இயங்க வைப்பதுதான்.
இயந்திரங்களை இயங்க வைப்பதற்கு முன்னர் மிக முக்கிய அம்சமாக
ஆய்வாளர்கள் கருதுவது, எவ்வாறு உயிருள்ள பொருட்கள் இயங்குகின்றன
என்பதைக் கண்டுபிடிப்பதுதான். அதேபோல ரோபோக்கள் இயங்கும் தன்மையை
ஆராயும் போது மனிதர்கள் அல்லது மற்ற உயிருள்ள பொருட்கள் எவ்வாறு
இயங்குகின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ரோபோக்களின் வரிசையில் புதிய வரவுகள் வந்து கொண்டேதான்
இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட,
இன்றளவும் பரவலாகப் பேசப்பட்டுவருகின்ற ELIZA வைப் பற்றி நாமும்
தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். ELIZA மென்பொருட்களில் பல
பகுதிகள் இருக்கின்றன. ELIZA மருத்துவர் என்பது அதில் ஒன்று.
இந்த ELIZA மருத்துவர் ஒரு உளவியல் ஆலோசகரைப் போல மனிதர்களுடன்
உரையாடக் கூடிய தன்மை வாய்ந்த ஒரு ரோபோ.
இன்றைய அவசர உலகத்தில் சில வேளைகளில் மனிதர்களாகிய நாம் ஒருவர்
மற்றவரோடு உறவாடுவதற்குக் கூட நேரமில்லாத, இயந்திரத்தனமான
வாழ்க்கையை வரித்துக் கொண்டு விடுகின்றோம். குடும்பத்தில் ஒருவரை
மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை, கணவன்
மனைவிக்கிடையேயான உறவில் சிக்கல்; குழந்தைகள்
தனிமைப்படுத்தப்பட்டு ஆலோசனையும் அரவணைப்பும் இல்லாத நிலையில்
போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் நிலை போன்ற சமுதாயப்
பிரச்சனைகள் கண்முன்னே பரவிக் கொண்டே வருவதை மறுக்க முடியாது.
ஆக இந்த உளவியல் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பதற்கும்,
பேசுவதற்கும் மனிதர்கள் இல்லாத போது ELIZA மருத்துவர் போன்ற
இயந்திர நண்பர்கள் துணையாகின்றனர்.
ELIZA மருத்துவர் வர்த்தக நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒன்றல்ல.
மாறாக விளையாட்டு நோக்கில் புதுமையாக செய்ய வேண்டுமே என அந்த
அறிவு ஜீவி மென்பொருளை உருவாக்கினார் Joseph Weizenbaum.
ELIZAவிடம் நடத்தப்பட்ட ஒரு சிறிய உரையாடல் பகுதியை தமிழாக்கம்
செய்திருக்கிறேன். அது இதோ!
Eliza: உனது பிரச்சனை என்ன?
X: நான் கணினிகளை வெறுக்கிறேன்.
Eliza: கணினிகள் உன்னைத்
துன்புறுத்துகின்றனவா?
X: ஆமாம்!
Eliza: உண்மையாக?
X: ஆமாம்!
Eliza: தயவு செய்து மீண்டும்
மீண்டும் அதையே சொல்லாதே!
X: ஏன் சொல்லக் கூடாது?
Eliza: ஏன் இப்படி என்னைக் கேள்வி
கேட்கிறாய்?
X: சொல், நீ ஒரு கணினிதானே?
Eliza: நான் ஒரு கணினி என்று எது
உன்னை நினைக்க வைத்தது?
X: எனக்குத் தெரியவில்லை.
Eliza: நீ தெரியாது என்று சொல்வது
எதிர்மறையாக பதிலளிக்க வேண்டும் என்பதற்காகத்தானே?
X: நிச்சயமாக இல்லை.
Eliza: நீ கொஞ்சம் எதிர்மறையாகவே
இருக்கிறாயா?
X: நான் எதிர்மறையாகவே சிந்திக்கிறேன் என்று எது உன்னை
சொல்லவைத்தது?
Eliza: நீ எதிர்மறையாகவே
இருப்பதால்தான் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தாயா?
X: நீ எப்போதுமே ஒரு கேள்விக்கு மற்றொரு கேள்வியைத் தான்
பதிலாகத் தருவாயா?
Eliza: நாம் கலந்துரையாடிக்
கொண்டிருக்கின்றோம். நீ... நானில்லை!
X: நான் உன்னைப் பற்றி பேச விரும்புகிறேன்.
Eliza: ஓ, என்னைப்பற்றியா...?
X: நீ ஒரு கணினி. அப்படித்தானே!
Eliza: நீ என்னைப்பற்றி பேசவில்லை.
அப்படித்தானே!
X: ஆமாம். உன்னைப் பற்றித்தான் பேசுகிறேன்.
Eliza: சொல், உனக்கு ஏதாவது
உளவியல் பிரச்சனை இருக்கின்றதா..?
X: இல்லை, ஆனால் உனக்கு இருக்கின்றது.
Eliza: நாம் கலந்துரையாடிக்
கொண்டிருக்கின்றோம். நீ... நானில்லை!
X: நான் இந்த உரையாடலை தொடரப்போவதில்லை...
Eliza: இதற்கு என்ன அர்த்தம்..?
எலிஸா -வுடன் கலந்துரையாடல் செய்யக்கூடிய சிறிய உதாரணம்
வலைப்பக்கத்திலும் இருக்கின்றது. அங்கேயும் நீங்கள் ஆங்கிலத்தில்
உங்கள் கேள்விகளைக் கொடுத்து எலிஸா கொடுக்கும் பதில்களைப்
பார்க்கலாம். அதன் சுட்டி
இதோ
ஜப்பான் ஐரோப்பா போன்ற நாடுகளில் தனிமை விரும்பிகளாகவே பல
பெரியவர்களும் வயதானவர்களும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக
எனது சுய அனுபவத்தில் ஜெர்மனியைப் பொருத்தவரை குழந்தைகள்
கல்லூரிக்குப் போகும் வயது வந்தவுடனேயே தனியாகப் போய்விடுவது
அங்கீகரிக்கப்பட்ட வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் பெற்றோரும்
கூட தனிமையையே விரும்புகின்றனர்.
வயது வித்தியாசத்தால் ஏற்படுகின்ற
குழந்தைகளின் வாழ்க்கை முறை வேறு, பெரியவர்களின் வாழ்க்கை முறை
வேறு. ஆக இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட வகையில், தனிமை வாழ்வு
என்பது அவர்களுக்கு மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும்
அளிக்கும் வாழ்வாகவே ஆகிவிடுகின்றது. ஆனாலும் அவ்வப்போது
பேசுவதற்கும், இனிமையான சிறிய உரையாடல்களுக்கும் இந்த ரோபோக்கள்
மாற்று நிவாரணியாக வந்து கொண்டிருக்கின்றன.
கனடாவில் தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு மே
மாதம் வெளியிடப்பட்ட Dr.Robo இவ்வகை தனிமையிலே இனிமையான
வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு உற்ற நண்பராக அமையும்
என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. |