www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  
அன்புள்ள ஆனந்த சங்கரி அண்ணனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள அண்ணன் ஆனந்தசங்கரிக்கு வணக்கம்,

நீங்கள் தமிழ் மக்களுக்கு வரைந்த கடிதத்தை 2004.02.22 ஆம் திகதி "வீரகேசரி'யில் கண்ணுற்றேன். தமிழ் தேசிய மக்கள் மீது நீங்கள் கொண்ட பாசத்தின் வீச்சைக் கண்டேன்; உண்மைக்கு புறம்பான விடயங்கள் கண்டேன்: தமிழ்தேசிய அன்னையின் துகிலினை பேரினவாதிகள் மத்தியில் உரித்திடும் காட்சியைக் கண்டேன். நெஞ்சு பொறுக்குதில்லை. அதனாலே இம்மடல்.

உங்களுக்கு என்னைத் தெரியும். ஆனால், பிரபாகரனுக்கு என்னை யாரென்று தெரியாது. புலி உறுப்பினர் யாரையும் நான் அறியேன். எவ்வித தொடர்புகளும் இல்லை. நன்றாக தெரிந்த உங்களை விமர்சிக்கிறேன். ஏன்? தமிழ் தேசியத்தின் மேல்வைத்த மட்டற்ற பற்றுத்தான்.

1959 ஆம் ஆண்டு நடைபெற்றது கொழும்பு மாநகரசபை தேர்தல். அத்தேர்தலில் நீங்கள் எல்.எஸ்.எஸ்.பியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்யின் சுகததாசாவை எதிர்த்துப் போட்டியிட்டீர்கள். அன்று தொட்டு 1970 ஆம் ஆண்டுவரை நீங்­கள் ஒரு கொம் றேட்டாக கலாநிதி என்.எம்.­பெரேராவின் பின் சென்றீர்கள். ஒரு சோசலிசவாதியாக அரசியலிலிருந்தீர்கள். தமிழரசுத் தந்தை செல்வாவை கன்னாபின்னா என்று திட்டித்தீர்த்தீர்கள். கிளிநொச்சித் தொகுதியில் இருமுறை என்.எம்.மின் கட்சியிலே போட்டியிட்டீர்கள்


.1970 ஆம் ஆண்டு, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிளிநொச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றீர்கள். அன்றும் தந்தை செல்வா உங்களது கண்டனங்களிலிருந்து தப்பிப்பிழைக்கவில்லை.

1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாகிவிட்ட பொழுது அதனுடன் இணைந்துகொண்டீர்கள். கிளிநொச்சி தொகுதியிலே வெற்றியும் கண்டீர்கள்.

""தந்தை செல்வா ஒரு புனிதர். அந்த புனிதரைப் பற்றி வாய்கூடாது வசைபாடி நிற்கின்றார்கள்'' என்று கவலை கொண்டதாக எழுதியுள்ளீர்கள். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர் கூட்டணி உருவாகும் வரைக்கும் நீங்கள் பாடாத வசை­யையா இன்றைய குமரகுருபரன் பாடிவிட்டார்? இன்று ஏன் இந்தக் கண்ணீர் துளிகள்? தேர்தல் காலத்தில் சிந்தும் கண்ணீரா? அல்லது தேர்தல் காலத்தில் மட்டும் பிறக்கும் தேர்தல் ஞானமா?

தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க சாத்வீக நெறிநின்ற அரசியல் புனிதரை, மந்திரிப் பதவி கிடைக்காததினால்தான் தமிழ் காங்கிரஸைவிட்டு விலகினார் என்று குமரகுருபரன் வசை பாடுகின்றார் என்று கூறுகின்றீர்கள். தேர்தல் காலத்தில்தான் கவலை கொள்கின்றீர்கள். குமரகுருபரன் அவ்வாறு கூறிய பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள்? பத்திரிகையில் அவர் கூறியது பிழையென்று அறிக்கைவிடத் தெரியவில்லையா? தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களைக் கூட்டி அல்லது அவரது கூற்றினை பிழையென்று ஆதாரத்துடன் காட்டியிருக்கின்றீர்களா? தந்தை செல்வா மீது சேறுபூசுவதால் தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைக் குலைக்கின்றார் என்று கண்டனத்தை தெரிவித்ததுண்டா?, ஒற்றுமையாக இருக்கின்றோம். வேற்றுமையை கிளறாதே, என்று அவர் வாயை மூட நீங்கள் என்ன செய்தீர்கள்? அன்று கொடுப்புக்குள் சிரித்துவிட்டு தேர்தல் வந்த பின்பு புனிதரை வையலாமா? என்று கேள்வி எழுப்புகின்றீர்கள்.

உண்மைக் காரணத்தை "வீரகேசரி'யில் எழுதியுள்ளேன். அதன்பின்பு தமிழ் காங்கிரஸ் தொண்டர்கள் என்னுடன் கதைப்பதில்லை. நீங்கள் அவ்வாறு ஏன் அன்று எழுதவில்லை?

அக்காலத்தில் பண்டா செல்வாவின் ஒப்பந்தத்தை கேலி செய்யாமல் நீங்கள் கூட்டங்கள் நடத்தியதுண்டா? 65 ஆம் ஆண்டு டட்லி செல்வா ஒப்பந்தத்திற்கெதிராக உங்கள் அன்றைய தலைவர் என்.எம்.பெரேராவும் சிறிமாவும், பீற்றர் கெனமனும் கொழும்பு நகரில் ஊர்வலம் சென்று தந்தை செல்வாவை வசைபாடியபொழுது நீங்கள் என்ன செய்தீர்கள்?

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் நியமனக் குழு மூலம் வேட்பாளர்களை நேர்முக விசாரணையின்பின் தேர்ந்தெடுத்தது என்று விளம்புகின்றீர்கள். குமார் பொன்னம்பலம் இரவு 11.30 மணிக்கு வட்டுக்கோட்டை தொகுதி தனக்கு வேண்டாம் என்ற பொழுது இரவு 12 மணிக்கு திருநாவுக்கரசை நேர்முக விசாரணைக்கு அழைத்ததாகக் கூறுகின்றீர்கள். அவரை 2 மணி வரைக்கும் விசாரணை செய்ததாக கூறுகின்றீர்கள். இரண்டு மணித்தியாலங்களாக விசாரணையா? அண்ணே, உண்மை அதுவல்ல.

முதலில் செனட்டர் நடராஜாவுக்கு காங்கேசன்துறை தொகுதி கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் அகமகிழ்ந்து ஆதரவுதிரட்ட முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அவ்வேளை அண்ணன் அமிர்தலிங்கம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, காங்கேசன்துறை தொகுதியில் திருநாவுக்கரசை நிற்பாட்ட நினைப்பதால், நடராஜாவை விட்டுக்கொடுக்கும்படி வினயமாக கேட்டுநின்றார். கோபம் கொப்பளிக்க வாக்குவாதம் நடந்தது. அருகில் நின்ற அன்பர்கள் திகைத்தனர். "தந்தை செல்வா நின்ற தொகுதியில் திருநாவுக்கரசா? வேண்டுமானால் நீ வா. அன்றேல் எதிர்த்து போட்டியிடுவேன்' என்று கர்ஜித்தார் நடராஜா. அதன்பின் நிலைமை மாறியது.

அண்ணன் அமிர்தலிங்கம் காங்கேசன்துறை தொகுதிக்கு தன்னைத்தானே தெரிவுசெய்தார். குமாருக்கு வட்டுக்கோட்டைத் தொகுதியை தருகின்றோம் என்று கூறப்பட்டது. அதன்பின் உள்ளக சித்து விளையாட்டு நகரத் தொடங்கியது. திருநாவுக்கரசு குமாரைக் கண்டார், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குப் போகாதே தோற்றிடுவாய். அமிர்தலிங்கமே பயந்து காங்கேசன்துறைக்குச் செல்கின்றார். யாழ்ப்பாணத் தொகுதியில் கட்டாயம் வெல்லுவாய். யாழ்ப்பாணத் தொகுதியைக் கேள் என்று புத்தி கூறினார். குமார் யாழ்ப்பாணத் தொகுதியைக் கேட்டார். 1970 ஆம் ஆண்டு எந்தத் தொகுதிகளை எந்தக் கட்சி வென்றதுவோ அந்தத் தொகுதிகளை அக்கட்சிக்கே கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. வவுனியாத் தொகுதி அவ்வாறு ஒதுக்கப்படவில்லையென்று கூறி குமார் போர்க் கோலம் கொண்டார். இதுதான் நடந்த உண்மை.

""இதுதான் தேர்தல் நியமனம் தொடர்பான கட்சிப் பாரம்பரியம்'' என்று எழுதுகின்றீர்கள். அவ்வாறாயின், எவ்வாறு கூட்டணி நியமனத் தேர்தல் குழு மட்டக்களப்பிற்கு கவிஞர் காசி ஆனந்தனை தமிழரசுக் கட்சியில் நியமித்தது? தந்தை செல்வா ஒருபொழுதும் நினைக்காததை கூட்டணியேன் செய்தது? கூட்டணி வேட்பாளர் இராசதுரைக்கு போட்டியாக நியமனம் கொடுத்தது எப்படி? கூட்டணி மத்திய குழுவின் உறுப்பினர் மூவரை கவிஞருக்காக பிரசாரம் செய்ய கூட்டணி அனுப்பியது எவ்வாறு? செல்வா என்ற பத்திரிகையை தேர்தல் முடியும்வரை வெளியிட்டு, கவிஞரை ஆதரித்து மட்டக்களப்புத் தொகுதியில் மட்டும் விநோகிதம் செய்தது யாராலே? எங்கே அண்ணே, நேர்மை நெறி நின்று செயல்பட்டீர்கள்? நீங்கள் உடைத்தால் மண்சட்டி; வேறு யாரும் உடைத்தால் பொன்சட்டியா?

அண்ணே, உங்களுக்குத் தெரியுமா? பொத்துவில் கனகரத்தினம் கூட்டணியில் நின்று தேர்தலில் வென்றபின் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தாவிய கதை. அவர் இறந்த பின்பு எக்கட்சி வேட்பாளரை பொத்துவில் தொகுதிக்கு நியமிக்க வேண்டுமென்ற பிரச்சினை தோன்றியது. அதன் நிமித்தம் கூட்டணி மேன்முறையீட்டுமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்தது. அந்த மனுவைத் தயாரித்தவன் நான்தான், அண்ணே!

கனகரத்தினம் கூட்டணியில் இருந்ததற்கு ஆதாரம் இருக்கவில்லை. கூட்டணியில் நின்றதற்கான அவர் செய்த விண்ணப்பப்படிவம் இருக்கவில்லை. அவ்வாறான ஆவணங்கள் இருக்கவில்லையென்று அன்றைய தலைமையினால் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றிற்கு கூட்டணியின் தலைவரும் செயலாளரும் சத்தியகடுதாசி கொடுத்­ தனர். ஆனால், கனகரத்தினம் கூட்டணியின் உறுப்பினர் என்று மட்டும் கூறினர். அதற்கு மறுமொழியாக, ஐக்கிய தேசியக் கட்சி கனகரத்தினத்தின் விண்ணப்பப்படிவம் முதல் உறுப்­பினர் பட்டியல் வரை ஆதியொடு அந்தம் வரையுள்ள ஆவணங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பித்தது. அந்தோ பாருங்கள். எமது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எங்கே உங்கள் நேர்மையான பாரம்பரிய தேர்தல் நடைமுறை?

"தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலில் நிற்கட்டும். கூட்டணிக் கட்சியையும் உதயசூரியன் சின்னத்தையும் பயன்படுத்தட்டும்' என்று கூறும் நீங்கள், உதயசூரியன் சின்னத்தை ஏன் பறித்தீர்கள்?

கட்சியை புனிதப்படுத்தும்வரை தேர்தலிலிருந்து விலகி நிற்பது நல்ல பலனைத்தரும் என்று கூறிநின்ற உங்களுக்கு, தேர்தலில் நிற்கும்படி கீதா உபதேசம் செய்தது யார் யாரோ? அம்மையார் அரசாங்க வானொலி மூலம் உங்களுக்கும் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றார். அவ்வாறாயின் தேர்தலின்பின் விடுதலைப் புலிகளுக்கு உந்து சக்தியாக எவ்வாறு செயல்படுவீர்?

இன்னும் பல கயிறு திரிப்புகள் உங்கள் கடிதத்தில் உண்டு. இடவசதி இல்லையென்று குரல் எழுப்புவதினால் இடைவழியில் முடிக்கின்றேன்.

கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்

அண்ணாவே, அண்ணாவே ஒன்று மட்டும் தெரிந்திடுங்கள். தமிழ்தேசிய உணர்வும் அதன் தலைமையும் கட்டிமுடிக்கப்பட்ட உயர்ந்ததொரு கோபுரம் ஆகும். அந்தக் கோபுரத்திற்கு உளிகொண்டும் திருத்தப்பணி செய்யலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்பது எல்லோருக்கும் தெரியும்.

வடக்கில் ஓர் உளி, கிழக்கில் ஓர் உளி. தமிழ் தேசிய இளஞ் சிறார்களின் அங்கத்தையும் இரத்தத்தையும் குழைத்து கட்டி முடிக்கப்பட்ட அந்த மாபெரும் கோபுரத்தை உடைக்க முயற்சிக்கின்றீர்கள். இக்கோபுரம் உடைக்கப்பட்டால் தமிழர் பலம் ஏது? சமாதானப் பேச்சின் பலாபலன்தான் ஏது? வெண்ணெய் திரண்டுவர தாழியை உடைக்கின்றீர்கள். ஒற்றுமையைக் குலைக்கின்றீர்கள். தமிழ் தேசிய அன்னை கதறி அழுகின்றாள். 2 ஆம் திகதி தன் கண்ணீரைத் துடைக்கும்படி கும்பிட்டு நிற்கின்றாள்.

அண்ணே, சூது தமிழ்தேசிய ஒற்றுமையை கவ்வியது. ஆனால் 2 ஆம் திகதி தமிழ் தேசிய மக்களின் ஒற்றுமை, வடக்கென்றும் பாராது, கிழக்கென்றும் பாராது மீண்டும் தலைதூக்கும். இது சத்தியம்.

2 ஆம் திகதி நடைபெறும் அந்தப் புனித திருப்பணிக்கு தத்துவங்கள் பலபேசும் உங்கள் பங்கென்ன? ஒரேயொரு பங்குதான் உண்டு. தேர்தலில் நின்று விலகி தமிழ் தேசிய ஒற்றுமையை வளர்த்திடுவதுதான் நீங்கள் செய்யும் உந்து சக்தி. செய்வீர்களா?

கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ் மக்களுக்கு எழுதிய கடிதத்துக்கு சட்டத்தரணி சி.வி.விவேகானந் தன் எழுதிய பதில் கடிதம் இது.


சி.வி.விவேகானந்தன்

நன்றி:வீரகேசரி

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]