www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் - 2004

பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர். தற்போது அங்கே புவியியல்துறை முதுநிலை விரிவுரையாள ராகப் பணியாற்றிவருகின்றார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்து அவர் பல்வேறு ஆய்வுகளையும் மேற் கொண்டு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், வாக் களிக்கவேண்டியதன் அவசியத்தையும் அவ்வாறு வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் அவர் தனது கருத்தரங்குகளில் விளக்கம் தருகிறார்.

புவியியல்துறைப் பேராசிரியராக இருந்தபோதும் அரசியல் மற்றும் தேர்தல் குறித்துக் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் இந்தத் தேர்தல் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.கடந்த காலத் தேர்தல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களித்தால் அதிகூடிய ஆசனங்களைப் பெறமுடியும் என்பது பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார்.உதயன் வாசகர்களுக்காக தேர்தல் குறித்து பேராசிரியர் வரைந்த விசேட கட்டுரை பிரசுரமாகிறது.

தகுதி காண் மட்டம்

குறித்த ஒரு தேர்தல் மாவட்டத் தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெறுமானமுள்ள வாக்குகளின் எண் ணிக்கையில் 5%இற்குக் குறைவாகப் பெற்றவர்கள் மாவட்ட ஆசனப் பங்கீட்டுக் கணிப்பிலிருந்து விலக்கப்படு வார்கள். வாக்களிப்பு வீதம் உயரும்போது அதற்கேற்ப தகுதிகாண் மட்டமும் உயரும். இந்நிலையில், சிறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளன. எனினும், தேசிய மட்டத்தில் வெட்டுப்புள்ளி இல்லாத நிலையில் எல்லா வாக்குகளும் கணக்கில் எடுக்கப்படும். 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் சிஹல உறுமயக் கட்சி எல்லா மாவட்டங்களிலும் வெட்டுப்புள்ளியைத் தாண்டவில்லை. என்றாலும் தேசியப் பட்டியலில் ஓர் ஆசனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

போனஸ் ஆசனம்

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கையில் முதலாவது ஆச னம் அந்தந்த மாவட்டங்களில் கூடுதலான வாக்கைப் பெறும் கட்சிக்கு போனஸாகக் கொடுக்கப்படும். இதனையே போனஸ் ஆசனம் என்பர். வாக்குகள் அடிப்படையில் கட்சிகளுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படும் போது, போனஸ் ஆசனத்தைத் தவிர்த்தே கணிப்புகள் மேற்கொள்ளப்படும். இதனால் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சி போனஸ் ஆசனத்தை மாத்திரமல்லாமல்கடைசி ஆசனத்தையும் குறைந்தளவு வாக்குகளுடன் பெறும் வாய்ப்புண்டு. இத னாலேயே கட்சிகள் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதற்கு விரும்புகின்றன. உதாரணமாக, 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 17 போனஸ் ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 போனஸ் ஆசனங்களையும் மக்கள் முன்னணியும் முஸ்லிம் காங்கிரஸ் தலா ஒவ்வொரு போனஸ் ஆசனத்தையும் பெற்றன. கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பல கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்ததற்குக் காரணம் மக்கள் நம்பிக்கையைப் பெறும் அரசியல் வழிமுறையுடன் போனஸ் ஆசனங்களையும் மாவட்ட இறுதி ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் கூடுதலான ஆசனங்களையும் பெறும் நோக்கத்துடனேயாகும்.

2004 தேர்தலில் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து அரசியற் கூட்டு அமைத்ததன் பிரதான காரணங்களில் ஒன்று கூடுதலான போனஸ் ஆசனங்களையும் மாவட்ட இறுதி ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் கூடுதலான ஆசனங்களையும் பெறலாம் என்பதாகும்.
2001ஆம் ஆண்டுத் தேர்தலில் பொ.ஐ.முன்னணி, ஜே.வி.பி.கட்சிகளும் பெற்ற வாக்குகளைக் கூட்டிப் போனஸ் ஆசனங்களைக் கணிப்போமானால் கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், இரத்தினபுரி, மொனறாகல ஆகிய பத்து மாவட்டங்களில் பத்து போனஸ் ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருந்திருக்கும். ஐக்கிய தேசிய முன்னணி இச்சூழ்நிலையில் கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரெலியா, திருகோணமலை, புத்தளம், பதுளை, கேகாலை ஆகிய எட்டு மாவட்டங்களில் மாத்திரம்தான் எட்டு போனஸ் ஆசனங்களைப் பெற்றிருக்கமுடியும்.தமிழ்த் தேசிய முன்னணி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களில் மூன்று போனஸ் ஆசனங்களைப் பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் மாத்திரம் ஒரு போனஸ் ஆசனத்தைப் பெற்றது.

இதுபோன்று கட்சிகள் கூட்டுச் சேர்வதால் மாவட்டத்துக் கடைசி ஆசனங்களையும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.2001 தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத் தேர்தல் முடிவு மூலம் கட்சிகள் கூட்டுச் சேர்வதன் பலன் விளக்கப்படுகிறது.இங்கு மொத்தம் ஏழு ஆசனங்கள். போனஸ் ஆசனம் போக பெறுமானமுள்ள வாக்குகளை ஆறால் பிரிக்க ஓர் அங்கத்தவர் பெறவேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை 46,248 ஆகும். இதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இரு ஆசனங்கள் கொடுக்கப்பட்டு, 20,174 வாக்குகள் மிகுதியாக உள்ளன. மக்கள் முன்னணிக்கு இரு ஆசனங்கள் கொடுக்கப்பட்டு 12,679 வாக்குகள் மீதியாகவுள்ளன.மக்கள் விடுதலை முன்னணிக்கு ஓர் ஆசனம் கொடுக்கப்பட்டு 13,145 வாக்குகள் மீதியாக உள்ளன. மூன்று கட்சி களிலும் கூடுதலான எச்ச வாக்குகளை ஐக்கிய தேசிய முன்னணி கொண்டிருந்ததால் அதுவே கடைசி ஆசனத்தைப் பெற்றது.

இறுதியில் ஐக்கிய தேசியக் முன்னணி நான்கு ஆசனங்களையும் மக்கள் முன்னணி இரு ஆசனங்களையும் மக்கள் விடு தலை முன்னணி ஓர் ஆசனத்தையும் பெற்றன. மக்கள் முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டுச் சேர்ந்திருந்தால் தேர்தல் முடிவு வேறு விதமாக வந்திருக்கும். மக்கள் முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து ஐந்து ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி இரு ஆசனங்களையும் பெற்றிருக்கும். இதனடிப்படையில் தான் இவ்விரு கட்சிகளும் தற்போது கூட் டுச்சேர்ந்துள்ளன எனக் கருதலாம்.

தேசியப் பட்டியல்

மொத்த நாடாளுமன்ற அங்கத் தவர்களுள் 29 அங்கத்தவர்கள் தேசியப் பட்டியல் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். நாடு தழுவிய ரீதியில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் பெற்ற மொத்த செல்லுபடி யான வாக்குகளை 29 ஆல் பிரிக்க ஒரு தேசியப் பட்டியல் அங்கத்தவரின் பெறுமானம் கிட்டும். இது 3.448 வீதமாக அமையும். இவ்வீதத்திற்குரிய வாக்கு எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடலாம். ஆனால், அதிகரித்துச் செல்லும் போக்கே காணப்படும். 2001 தேர்தலில் 3,08,823 வாக்குகள் ஓர் அங்கத்தவருக்குரிய பெறுமானமாக இருந்தது. இதற்கேற்ப கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஆசனங்கள் பங்கீடு செய்யப்பட்டன. இறுதி 3 அல்லது 4 ஆசனங்கள் முழுமையான தானத்திற்கு இல்லாமல் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அளிக்கப்படலாம்.

உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் 1,05,246 வாக்குகளுடன் 29ஆவது ஆசனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 2000 தேர்தலில் மாவட்ட மட்டத்தில் ஓர் ஆசனத்தையும் பெறாமலும் வெட்டுப்புள்ளிக்குக் கீழ் மொத்த வாக்குகளைப் பெற்றிருந்த நிலையிலும் சிஹல உறுமயக் கட்சி ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதன் சிறப்பம்சம் யாதெனில், நாடு தழுவிய ரீதியில் சிறிய கட்சிகள் கூடச் சிதறிய தமது வாக்குகளை மொத்தமாகச் சேகரித்து, பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது ஆகும்.தேசிய பட்டியல் முறையின் இலட்சியத்தைப் பெரிய கட்சிகள் சிறந்த முறையில் நிறைவேற்ற வில்லை எனக் கருத இடமுண்டு. தேர்தலில் பங்குகொள்ள விரும்பாத ஃ முடியாத கல்வியியலாளர்கள், சட்ட நிபுணர்கள், பொருளியலாளர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களைத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அவர்களின் சேவைகளை நாட்டு நலனிற்குப் பெறவேண்டும் என்பதே.

தேசியப் பட்டியல் முறையின் முனைப்பான பண்பாகும். பிரதான முன்னணிக் கட்சிகள் இரண்டும் தேசியப் பட்டியலில் பெண்கள் எவரையும் நியமிக்காததும் கவனிக்கத்தக்கது. மேலும் தேசியப்பட்டியலில் நியமனங்களில் ஒரு சிலரை மீளநியமிப்பது, தேர்தலில் தோற்றவரை நியமிப்பதும், தேர்தலில் நின்று நாடாளுமன்றம் சென்றவர்களை நியமிப்பதும், கட்சி அரசியலில் பிரச்சினைக்கு உட்பட்டவர்களை நியமிப்பதும் தேசிய பட்டி யல் எண்ணக்கருவிற்கு முற்றிலும் முரணாக உள்ளது. எனவே, தேசியப் பட்டியல் நியமனத்தில் கட்சிகளின் கடந்த காலச் செயற்பாடுகள் பெருமளவுக்கு ஏற்புடையதாக இல்லை.

இடைத்தேர்தல்

தற்போதுள்ள தேர்தல் முறையில் இடைத்தேர்தல் இன்மை ஒரு முக்கிய அம்சமாகும். இடைத்தேர் தலின்மையால் அரசின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு வாய்ப்பு இல்லாமற்போகிறது என்பது விமர் சகர்களின் கருத்து. தற்போதுள்ள முறைப்படி, ஒரு கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர் ஒருவர் ராஜினாமா செய்யும்போது அல்லது அவருக்கு மரணம் ஏற்படுமிடத்து அவரின் வெற்றிடத்தை, முடிந்த தேர்தல் முடிவு களின் அடிப்படையில் அடுத்ததாக உள்ளவர் நிரப்புவார்.இம்முறையால் தேர்தலில் தோற்ற ஒருவர் அடுத்த தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. மேலும், கட்சிகளின் செயற்பாடுகள், கனவான்கள் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசனங்களைச் சுழற்சி முறையில் வழங்கும் நிலையும் காணப்படுகின்றது. நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படாத பட்டியலில் உள்ள ஒருவர் முறையற்ற அழுத்தங்கள் மூலம் நாடாளுமன்றம் செல்லவும் வாய்ப்பு உள்ளது. இவையாவும் இடைத்தேர்தல் இன்மையால் ஏற்படும் நிலைகளாகும்.

வாக்களிப்புப் பிரிவுகள் (Polling Division)

பழைய தேர்தல் முறைப்படி முன் னர் இருந்த 160 தேர்தல் தொகுதிகளைத் தேர்தல் நிர்வாகச் செயற் பாடுகளுக்காக 160 தேர்தல் வாக்களிப்புப் பிரிவுகளாக வகுத்துள்ளனர். இதனால் மக்கள் மனதில் சில குழப்பங்கள் இருக்கின்றன. தேர்தல் முடிவுகள்கூட முதலில் கட்டம் கட்டமாக வாக்களிப்புப் பிரிவுகள் அடிப் படையிலேயே வானொலி, தொலைக் காட்சிகளில் தரப்படுகின்றன. இப்பிரிவுகள் தேர்தல் வாக்களிப்புப்பிரிவு களாக இருப்பினும் பழைய தேர்தல் தொகுதியைப் பிரதிபலிப்பதால் உத்தியோகப்பற்றற்ற நிலையில் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்தலுக்கு முன்பும், முடிவுகளின் பின்பும், அபேட்சகர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இப்பிரிவுகளுடன் தங்களை இணைத்துச் செயற்படுவதைக் காணலாம். மாவட்ட மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் கள் சிலர் தங்களைச் சில பிரிவுகளுடன் இணைத்து (பழைய தொகுதி) செயற்படுவதைக் காணலாம். அரசியல் கட்சிகளும் தொகுதி இணைப்பாளர் என இப்பிரிவுகள் அடையிலேயே நியமனம் செய்கின்றன. இதனால் இல்லாமற்போன நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தும் மாற்று முறைகளில் பயன்பாட்டில் இருப்பதால் மக்கள் மனதில் குழப்ப நிலைகள் காணப்படுகின்றன. வாக்களிப்புப் பிரிவுகளை பொதுநிர்வாகப் பிரிவுகளுக்கு ஒத்ததாக மாற்றி இன்று நிலவும் மனக்குழப்பத்தை நிவர்த்திக்கலாம்.

வடக்கு - கிழக்கில் 2004 தேர்தல்

2004 தேர்தலில் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்து வத்தை மாவட்ட, தேசிய மட்டத்தில் அதிகரிப்பதற்கு வாக்களிப்பில் கூடு தலாகப் பங்குகொள்ளவேண்டும். 2001 தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 31.1 வீதத்தினரும், வன்னித்தேர்தல் மாவட்டத்தில் 46.8 வீதத்தினரும், மட்டக்களப்பு தேர்தல் மாவட் டத்தில் 67.5 வீதத்தினரும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 82.5 வீதத்தினரும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 79.9 வீதத்தினரும் வாக்களித்திருந்தனர். எனவே, முதல் மூன்று மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்ததைக் காணலாம். திருகோணமலை மாவட்டத்தில் வாக்க ளிப்பு வீதம் உயர்வாக இருப்பினும், தமிழ் மக்களின் வீதம் மற்றைய சமூகங்களின் வாக்களிப்பு வீதத்திலும் குறைவாக இருந்ததை அறிய முடிகிறது. இப்பின்னணியில் இன்று வடக்கு - கிழக்குத் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு இம்முறை வாக்களிப்பில் முழுமையாகப் பங்குகொள்ள வேண்டும்.இதனை அடைவதற்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் வாக்களிப்பதற்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுக்கப் படவேண்டும். வசதிகள் செய்து கொடுக்கப்படின் 2,60,000இற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் தேர்தலில் பங்குகொள்ள வாய்ப்புக்கிட்டும். இதன் மூலம் மாவட்ட, தேசிய மட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வழி பிறக்கும்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் இல.10

இம்மாவட்டம் 6,44,279 வாக்காளர்களையும் ஒன்பது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் உடையது. கடந்த தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம், வடமராட்சி கிழக்கின் தென்பகுதி மக்கள் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை. மேலும் வாக்களிப்பு வீதமும் தேசிய ரீதியில் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. ஆகவே, மாவட்ட மக்கள் இம்முறை தேர்தலில் முழுமையாகப் பங்குபற்றித், தங்களது மாவட்ட மொத்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு உதவமுடியும்.

வன்னித் தேர்தல் மாவட்டம்: இல.11

இம்மாவட்டம் 2,26,604 வாக்காளர்களையும் ஆறு பிரதிநிதித்துவத்தையும் கொண்டது. மாவட்டத்தின் இனக் கூட்டை நோக்கின், தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்தது ஐந்தாக வேனும் இருக்கவேண்டும்.ஆனால், இம்மாவட்டத்துக்குள் அடங்கும் மண லாறு நீங்கலான முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா வடக்கு, நெடுங் கேணி உதவி அரச அதிபர் பிரிவு, மன்னார் மாவட்டத்தில் மாந்தை, மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது போய்விட்டது.இதனாலேயே தமிழர் 4 பிரதிநிதித்து வத்தைப் பெற்றனர். இம்முறை தமிழ் மக்களின் முழுமையான வாக்களிப்பு இடம்பெறுமாயின் மாவட்ட மட்டத்தில் ஐந்து பிரதிநிதித்துவத்தைப் பெறுவதுடன் உயர்ந்த வாக்களிப்பு வீதம் தேசியப்பட்டியலில் மேலதிக ஆசனத்தைப் பெறவும் வழி பிறக்கும்.

திருகோணமலைத் தேர்தல் மாவட்டம்: இல.14

இம்மாவட்டம் 2,24,307 வாக்காளர்களையும் நான்கு பிரதிநிதித்துவத்தையும் கொண்டது. இங்கு மூவின மக்களும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையில் வாழ்ந்தாலும், தமிழ் மக்கள் ஏனைய இரு சமூகத் தவர்களையும்விடச் சற்றுக் கூடிய எண்ணிக்கையினராகவுள்ளனர். கடந்த தேர்தலில் மூதுார் கிழக்கு, ஈச்சிலம் பத்தை உதவி அரச பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாக்களிப்பில் பங்குகொள்ளாதபடியாலும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் தமிழர் வாக்குகள் கூடுதலாக இருந்தமையினாலும் பல கட்சிகளுக்கு தமிழர் வாக்குகள் சிதறியதனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்மை இடத்தைப் பெறமுடியவில்லை. இதனால் போனஸ் ஆசனம் இழக்கப்பட்டது. தமிழர் பிரதி நிதித்துவமும் ஓர் ஆசனத்தால் குறைந்தது இம்முறை தமிழ் மக்களின் உயர்வான, சரியான வாக்களிப்பு இருப்பின் இழந்த பிரதிநித்துவத்தை மீளப்பெற வாய்பு உண்டு. மூதுார் கிழக்கு, ஈச்சிலம்பத்தை மக்கள் வாக்களிப்பில் பங்குகொள்வது உறுதி செய்யப்படவேண்டும்.

மட்டக்களப்புத்தேர்தல் மாவட்டம்: இல.12

இம்மாவட்டம் 3,03,928 வாக்காளர்களையும் ஐந்து பிரதிநிதித்துவத்தையும் கொண்டது. மாவட்டத்தில் இனக்கூட்டை நோக்கின் தமிழர் நாலு பிரதிநிதித்துவத்தையும் முஸ்லிம்கள் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டும். கடந்ததேர்தல்களில் படுவான்கரைப்பகுதி மக்களும் வாகரைப்பிரதேசத்து மக்களும் வாக் களிக்கமுடியாமல் போனதால் 4 பிரதிநிதித்துவத்தைப் பெறமுடியாது போனது. இம்முறை இப்பகுதி மக்களும் ஏனைய பகுதியிலுள்ள தமிழ் மக்களும் உற்சாகமாக வாக்களிப்பின் நாலு பிரதிநிதிகளைப் பெறமுடியும் இதற்குப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து 9 இடங்களில் இராணுவச் சாவடியைக் கடக்கவேண் டியுள்ளது.மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்களும் வாக்களிக்க வசதிகள் செய்துகொடுக்கப்படின் தமிழர் பிரதி நிதித்துவம் அதிகரிக்க வழிபிறக்கும். தேசியப் பட்டியலில் இரண்டாவது ஆசனத்தைப் பெற அது உதவும்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்: இல.13

இம்மாவட்டம் 3,79,044 வாக்காளர்களையும் ஏழு பிரதிநிதித்துவத்தையும் கொண்டது. இங்கு முஸ்லிம்கள் 41 வீதமாகவும், சிங்களவர் 41 வீதமாகவும் தமிழர் 18 வீதமாகவுள்ளனர். மேலும் இம்மாவட்டம் முஸ்லிம் மக்களின் அரசியற் செயற்பாட்டில் ஒரு கொதிகளமாக விளங்குகிறது.இங்கு தமிழ்மக்கள் யாவரும் பிரியாது இணைந்து வாக்களித்தால் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறலாம். வாக்குகள் பிரியுமாயின், பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டியும் வரலாம். 1994 தேர்தலில் தமிழ் வாக்குகள் பிரிந்தமையால் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. பின்னர் 2000, 2001 தேர்தல்களில் மாவட்ட மட்டத்தில் அங்கத்துவ எண்ணிக்கை 6இல் இருந்து 7ஆக அதிகரித்தமையாலும், தமிழ் மக்களின் வாக்களிப்பு வீத முறையும் உயர்ந்ததாலும் ஒரு பிரதி நிதித்துவத்தைப் பெறமுடிந்தது. இம் முறை இம்மாவட்டத்தில் நாற்கோணப்போட்டி நிலவுவதால் தமிழர் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைப்பதற்கு, முதன்மை நிலை பெறுவதற்கும் சந்தர்ப்பம் உண்டு. தமிழர்கள் வாக்களிப்பில் முழுமையாகப் பங்கு கொண்டு விரயமில்லாது ஒருமுகப்பட்டு வாக்களிப்பின் மேற்கூறிய நிலைகளை அடையமுடியும்.

தென்னிலங்கையிலுள்ள 17 தேர்தல் மாவட்டங்களுள் 16 மாவட்டங்களில் இரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது. நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் இவ்விரு அணிகளுடன் மலையகமக் கள் முன்னணி, இலங்கைத் தேசிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய நான்கும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. தென்னிலங்கை தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமையும் என்பது அரசியல் அவதானிகள் கருத்து. ஆகவே, தொங்கு நாடாளுமன்றம் என்பதால் வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் பங்களிப்பு உயர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத்தில் இரண்டு பிரதான கட்சிகளுக்குத் தேசிய ஐக்கிய முன்னணி, மக்கள் கூட்ட ணிக்கு வெளியே ஜே.வி.பியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் தலா 16, 15 அங்கத்தவர்களைப் பெற்று முக்கியத்துவம் பெற்றிருந்தன. இம் முறை மக்கள் கூட்டணியும், ஜே.வி.பியும் இணைந்து மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியும், தேசிய ஐக்கிய முன்னணியும் 2 பிரதான கட்சிகளாக இருப்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  முக்கிய மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்பு உண்டு.

இரண்டு பெரிய கூட்டணிக் கட்சிகளுக்கு வெளியே தெரிவுசெய்யப்படும் அங்கத்தவர்களும் தமிழர், முஸ்லிம்களாகவே இருப்பர். இதனால் புதிய நாடாளுமன்றத்தில் தமிழர் நல்லதோர் இடத்தைப் பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.தென்னிலங்கைத் தேர்தல் பிரசாரத்தில் இனப்பிரச்சினைச் சமாதான முன்னெடுப்புக்கள் பேசப்பட்டாலும் ஊழல், வாழ்க்கைச்செலவு, வறுமை, வேலைவாய்ப்பு வெளிநாட்டுத்தலையீடுகள், நிறைவேற்று ஜனாதிபதிக்கும் - நாடாளுமன்றத்திற்கும் இடையேயான முரண்பாடுகள் போன்றன முக்கிய இடம்பெற்றுள்ளன. வடக்கு - கிழக்கு பகுதியில் தமிழர் தேசியப் பிரச்சினைகள் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு, சமாதான முன்னெடுப்பு, இறுதியான அரசியல்தீர்வுகள் பற்றிய விடயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன

இத்தகைய பின்புலத்தில் கட்சிகள் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவதால் எப்படித் தேர்தல் முடிவுகள் அமையுமெனச் சொல்லமுடியாது - பொதுவான போக்குகளை அவதானிக்குமிடத்து - ஐக்கிய தேசிய முன்னணி கொழும்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தறை, புத்தளம் ஆகிய தேர்தல் மாவட்டங்களிலும் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி கம்பஹா, கழுத்துறை காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலன்நறுவை, குருநாகல், மொனராகலை, இரத்தினபுரி, கேகாலையிலும் தமிழ்த்தேசிய முன்னணி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டங்களிலும் - முன்னணியில் நிற்பதாகக் கருத இடமுண்டு.

திகாமடுமல்ல, திருகோணமலை தேர்தல் மாவட்டங்களில் மிகவும் கடுமையான போட்டி நிகழ்வதால் முடிவுகள் எவ்வாறு அமையும் என இருந்து பார்க்கவேண்டும்.தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருப்பதால் நாளுக்குநாள், நிமிடத்துக்கு நிமிடம் மாறும் சூழ்நிலைகளால் மாற்றங்கள் ஏற்படலாம்.ஆகவே, இன்றுள்ள சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்கள் நல்ல முறையில் பயன் படுத்தி நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினை களுக்குத் தீர்வுகாண முற்பட வேண்டும்.
(முற்றும்)

நன்றி:உதயன்.கொம்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]