|
யாழ்ப்பாணம்
25.03.2004
தேசிய
எழச்சிப்பேரவையின் கொள்கை முன்னெடுப்புச் செயலாளர் ஈழவேந்தனை இல.
60, கொழும்புத்துறை, புங்கங்குளம் வீதியில் அமைந்திருந்த அவரது
வீட்டினில் சென்று சந்தித்து செவ்வி கண்டோம். அவரு டனான செவ்வி
இங்கே பிரசுரமாகின்றது.கருணா வினுடைய துரோகத்தினை நினைக்கின்ற
போது, எனக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழ் மக்களுக்கும் வேதனையை
ஏற்படுத்தி இருக்கின்றது. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி
போன்றோரின் செயற்பாடுபோல் கருணாவின்; செயற்பாடும் அமைந்துவிட்டது.
அதாவது களத்தில் பாரிய வெற்றிகளுக்கு உறுதுணையாக நின்றவர்களில்
ஒருவன் - விலைபோய் இருக்கிறான் என்றால் எங்களுக்கு வியப்பாக
உள்ளது.
கருணாவினுடைய
பிரச்சினை இன்று நிதானத்துடன் கையாளப்படவேண்டும். ஏனெனில்,
கிழக்கு நிலவரம் ஒரு ஆபத்தான நிலைமையில்
காணப்படுகின்றது.சிங்களக் குடியேற்றங்கள் ஒரு பக்கம், மறுபக்கம்
முஸ்லிம்களின் கேள்விக்குறியான செயற்பாடுகளுக்கு மத்தியில்,
கிழக்கு மக்களை மனம்குழம்பாமல் பாதுகாக்க வேண்டிய கடமையுண்டு.
சாதாரண மக்கள் ஒரேமாதிரி சிந்திப்பதில்லை. சில சமயங்களில் இந்தப்
பிரச்சினையைக் கையாளும் விதம் மக்கள் மத்தியில் குழப்பங்களைத்
தோற்றுவிக்கக் கூடும்.பிரதேசவாதம் என்பது மிகவும் ஒரு ஆபத்தான
புற்றுநோயாகும். ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை சிங்களப்
பேரினவாதிகள் கையாளும் உத்தியும் இதுவாகும்.
அதாவது, பிரித்தாளல்,
பிரித்தழித்தல் என்கின்ற உத்திமூலம், தமிழர்கள் தங்களுக்குள்
சண்டையிட்டு அழிந்து போகவேண்டும் என்பதே சிங்களப் பேரினவாத
அரசுகளின் எண்ணமாகும். இந்தச் செயலுக்குக் கருணா துணை
போயுள்ளார்.கருணாவினுடைய இந்தப் பிரதேசவாதம் என்கின்ற புற்றுநோய்
- எம்மை அறியாமல், எமக்குள் வேரோடி வளர்ந்து, இறுதியில்
பூதாகரமான பிரச்சினையாக உருவெடுக்க முன்னர் - முளையிலேயே கிள்ளி
எறியக்கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது ஒரு வகையில்
மகிழ்ச்சியான விடயமா கும்.கருணாவின் செயற்பாட்டுக்குப் பின்னால்
வெளிநாட்டுத் தீயசக்திகள் உண்டென்பது தெரியவருகிறது. அது
அமெரிக்காவாகவும் இருக்கலாம், இந்தியாவாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், கருணா இப்படிச் செயற் பட்டமைக்குக் காரணம்
இந்தியச் சிந்தனை என்பதே எனது கருத்தாகும். எமது பிரச்சினை யில்
எவ்வாறு இந்தியாவின் சிந்தனை உள்ளது என்பது நோக்கவேண்டிய
ஒன்றாகும்.
இந்திரா காந்தி
காலகட்டத்துச் சிந்தனை வேறு, ராஜீவ் ஆட்சிக்கு வந்தபோது இருந்த
சிந்தனை வேறு. இந்தியச் சிந்தனைகள் எந்த நிலையிலும் எம்மைச்
சார்ந்ததாக இல்லை. ஈழம் அமையுமாயின் இந்திய அரசியல் அமைப்பின்
யாப்பிற்கு அச்சுறுத்தலாக அமை யும் என்றே இந்தியா
கருதுகின்றது.நான் இந்தியாவில் இருந்தபோது, பல அரசியல்
தலைவர்களைச் சந்தித்து உரை யாடியுள்ளேன். எமது இனப்பிரச்சினை
தொடர் பாக - அவர்களது சிந்தனை, குறிப்பாக வட இ;ந்தியாவின்
சிந்தனை - தற்கால அடிப்படையிலோ, வரலாற்று அடிப்படையிலோ கருத்துக்
களைச் சொன்னாலும் எங்களைப் பொறுத்து நாடு பிரிந்து தனித்துவம்
பெறுவதையும், குறைந்தளவு இணைப்பாட்சியின் மூலம் பெறப்படும்
அதிகாரங்களாலும்; சரி,இந்திய அரசியல் அமைப்பை மீறியதாக இருக்கக்
கூடாது என்பதேயாகும்.
இங்கு விழப்புணர்வு
பெற்று, போராட்டத்தின் மூலம் தமிழீழம் பெற்றுவிட்டால், அது
தனக்கு அரசியல் அமைப்பில் பாதகத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா
கருதியதோ, அன்றிலிருந்து சதிவேலைகளில் ஈடு பட்டு வருகின்றது.
இந்த நாட்டிலுள்ள ஈழத் தமிழர்களின் வெற்றி - தமிழ் நாட்டின் ஒரு
உணர்ச்சியைக் கொடுக்கும். அதற்காக அங்குள்ள தமிழர்கள் தமிழ்
நாட்டையும் பிரித்துத் தரும்படி கோருவார்கள் என்று கூறுவது
முட்டாள் தனமான சிந்தனையாகும்.நாம் வளர்ந்து வரக்கூடாது
என்பதற்காக, இந்தியா பல காரணங்களைக் கொண்டு எம்மைச்
சிதைக்கப்பார்க்கின்றது. ஒரு நாய்க்கு விசர்நாய் என்று முத்திரை
குத்திவிட்டால், அந்த நாயைக் கொல்வது சுலபம். இந்தப்
பார்வையிலேயே எம்மையும் இந்தியா பார்க்கின்றது. அடிக்கடி
வெளிவிவகார அமைச்சர்கள் வந்து சென்றதும் டக்ளஸ் தேவானந்தா,
ஆனந்தசங்கரி மற்றும் வரதராஜப்பெருமாள் ஆகியோரை அழைத்துக்
கலந்துரையாடியதன் நோக்கம் - இங்கு சதி முயற்சிகளை
மேற்கொள்வதற்கான முயற்சிகள் ஆகும்.
மக்கள் மதிக்க
மறுப்பவர்களைத் தங்க ளுக்குச் சாதகமாக இந்தியா பயன்படுத்துகிறது.
இதற்கு நல்ல உதாரணம் - வரதராஜப்பெருமாளை ஈழத்தின் ஒளி என ஓங்கி
உச்சரித்து, இந்தியப்படை வெளியேறிய பின் அவரை இந்தியாவுக்கு
அழைத்து, பங்களா கொடுத்து, பணம் செலவழிக்கின்றது. ஈழத்தைப்பற்றி
உச்சரித்த வரதராஜப்பெருமாளை அழைத்த இந்தியா - அங்கிருந்து
ஈழத்தைப் பற்றி உச்சரித்த ஈழவேந்தனை நாடுகடத்தி யது. இது
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் காணப்படும் இரட்டை
வேடத்திற்கு எடுத்துக்காட்டாகும்.இந்தியா நேர்மையான வழியில்,
காந்தியத்தில் ஊறிய ஒரு நாடு என்ற சிந்தனை எல்லாம் இன்று
சிறகடிக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்
நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரமான எதிரியும்
இல்லை.இந்தியாவின் சிந்தனை எதையும் செய் யும். கருணாவையும்
மூளைச்சலவை செய்து,தனது சதி வலைக்குச் சாதமாகப் பயன்
படுத்துகின்றது.
தேர்தலைப்
பொறுத்தவரையில் எத்தனை பேர் வெற்றி பெறுகின்றார்கள் என்பதல்ல,
எமக்கு எத்தனை விகிதாசார வாக்குகள் கிடைக்கின்றது என்பதே
முக்கியமானதாகும். இது தேர்தல் அல்ல,மக்கள் கணிப்பீடு. இதை நாம்
சர்வதேச உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.தந்தை செல்வா உட்பட,
ஆங்கிலச் சொல் லாட்சி படைத்த பொன்னம்பலம், அடங்காத் தமிழன்
சுந்தரலிங்கம், வாழ்வகத்தைக்காத்த வன்னியசிங்கம், ஒருகாலத்தின்
கொள்கையோடு இருந்த அமிர்தலிங்கம் வரை - வேகாத பேச்சுகளினை எவரும்
பேசப்போவதில்லை.நாம் பேசுவது வெறுமனே நாடாளுமன்றப் பதிவேட்டில்
மட்டும் பதியப்படும். சிங்களப் பேரினவாதிகள் - எமது பேச்சில்
மனம் மாறு வார்கள் என்பது மடத்தனம், எனவே, இந்த நாடாளுமன்றத்
தேர்தல் எமக்கு ஒரு மக்கள் கணிப்பீடு என்பதை சர்வதேசத்திற்கு
வெளிப் படுத்தவேண்டும் என்பதே முக்கியமாகும். அதை விட நாம்
நாடாளுமன்றம் போகின்றோமா? இல்லையா? என்பதைவிட, யார் நாடாளுமன்றம்
போகக்கூடாது என்பதுதான் முக்கியமாகும்.
இந்தத் தேர்தலில்
ஈ.பி.டி.பியினர் மற்றும் ஆனந்தசங்கரியின் குழுவினர் - இராணுவப்
பாதுகாப்போடு, குடாநாட்டில் தேர்தல் பிரசாரங் களில் ஈடுபடுவது
மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதைத்
தெளிவுபடுத்துகின்றது.குடாநாட்டில் விடுதலைப் புலிகள் ஆயுத மற்ற
நிலையில், அரசியற் பணிகளில் மட்டும் ஈடுபடுகின்றபோது, எதற்காக
இவர்கள் இரா ணுவப் பாதுகாப்பைப் பெறவேண்டும். எனவே, இந்தச்
செயற்பாடு கோடிட்டுக்காட்டுவது யாதெனில்,இவர்களுக்குப் பின்னால்
மக்கள் சக்தி ஒன்று இல்லை என்பதேயாகும்.ஆனந்தசங்கரியின் அரசியல்
பற்றி அனை வருக்கும் தெரியும். அவர் பல கட்சிகளில் அங்கம்
வகித்தவர். 1977 ஆம் ஆண்டு சிறைப் பிடிக்கப்பட்ட ஜே.வி.பி -
சிங்களக் கைதிகளை அக்கராஐன் குளத்தில் குடியேற்ற முற்பட்டவர்.
அன்றைய மக்களது
எதிர்ப்பால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. இலங்கையில்
தமிழ்ப்பகுதிகளை தமிழன், சிங்களவன் எனப் பிரித்துப்
பார்க்கமுடியாது எனக்கூறிய இவரை, எவ்வாறு தமிழினம் நம்பமுடியும்.
எனவே, தமிழ் மக்க ளது அரசியலில் ஒரு அழுகு தொழுநோயாளியாக உள்ள
ஆனந்தசங்கரி அப்புறப்படுத் தப்படவேண்டும்.ஒதுக்கப்பட்ட இனம்
வாழமுடியும். ஆனால் ஒழிக்கப்பட்ட இனம் வாழமுடியாது. இதற்கு
எதிராக நாம் போராடி, இராணுவரீதியில் மகத் தான வெற்றிகளைப்
பெற்றுள்ளோம். இதனால் தான் இலங்கை அரசு எம்மிடம்
பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றைய
சூழலில் எமது அரசியல் பலத்தினை சர்வதேச அரங்கில் ஓங்கியொலிக்க,
தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத் தேர்த லில்
போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை நாடாளுமன்றம் அனுப்பி,
தமிழ் மக்கள் எல்லோரும் ஒரு அணியில் திரண்டு நிற்கின் றோம்
என்பதை உலகத்திற்கு உணர்த்த அனைத்து மக்களும் தமது வாக்குகளைத்
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்று முடித்தார்.
நன்றி:நமது ஈழநாடு |