|
கல்லுாரி,
பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்
றெரன்ரோ, கனடா
பங்குனி 24, 2004
எமது அன்பார்ந்த தமிழீழ உறவுகளே!
எமது இறைமை வேண்டிய விடுதலைப் பயணத்தில் ஏதிலிகளாக்கப்பட்டு
புலம்பெயர்ந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கனடா நாட்டில்
நாம் வாழ்ந்தாலும், எங்கள் நினைவுகள் உங்களைச் சுற்றியே உள்ளன
என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
உங்களின் குரலாக சர்வதேச அரங்கில் உரிமைக்குரல் எழுப்பிக்
கொண்டிருந்த நாம், எமது தாயக மண்ணில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதி
நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, எம்மண் விரைந்ததும், உங்களைத்
தரிசித்ததும், எம் துறைசார் வல்லமையை எமது தேசக்கட்டுமானத்தில்
இணைத்துக் கொண்டதும், எமது தரிப்பின் போது நீங்கள் காட்டிய
அன்பும், பரிவும் எமது நினைவுகளை நீக்கமற நிறைத்து நிற்கின்றன.
கனடிய கல்லு}ரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துறைசார் கல்வி
கற்றலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஐயாயிரத்திற்கு மேற்பட்ட
தமிழ் இளையவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தி நிற்கும் எம்
அமைப்பில் பலர் இந்த கனடிய மண்ணில் பிறந்தவர்கள் அல்லது தமது
இளம் பராயத்தில் இங்கு வந்தவர்கள். எனினும், தாயகப் பற்றும்,
தமிழின உணர்வு கொண்டவர்களாகவும், அதேவேளை தமிழீழத் தேசியத் தலைமை
மீது அசையாத பற்றுறுதியும், தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி நாம்
நிற்பதற்கும் தாயக உறவுகளாகிய நீங்களே காரணம்.
இதுவரை இறைமை வேண்டி நீங்கள் நடாத்திய புனிதப் போரில் 18,000
மாவீரர்களையும், 80,000 மக்களையும் தமிழீழ மண்ணில்
விதைத்துவிட்டே, தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள இராணுவப்
பலத்தின் துணைகொண்டு சர்வதேச அரங்கில் நீதியை வேண்டி நிற்கும்
மக்களாக நிமிர்ந்து நிற்கின்றீர்கள். இன்று சர்வதேசமும், தனது
பார்வையை உங்களை நோக்கித் திருப்பியிருக்கிறது. இந்நிலையில்
எங்களுடைய அடிப்படை அபிலாசைகளை மீண்டும் ஒருமுறை சனநாயக மரபு
தழுவி வெளிப்படுத்த சமயம் வாய்த்துள்ளது.
பொங்கு தமிழ் எழுச்சி என தமிழர் தாயகத்தின் பட்டி தொட்டி எல்லாம்,
நீங்கள் திரண்டு, பிரதேச, மத, சாதி, வர்க்க வேறுபாடுகளைப்
புறந்தள்ளி, ஒற்றுமைப்பட்ட தமிழினமாக ஒரே குடும்பமாக உங்கள்
உணர்வுகளை வெளிப்படுத்தினீர்கள். நாங்கள் பேருவகை கொண்டோம்.
தற்போது சிறிலங்கா பாராளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலை தமிழர்
தேசத்து அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாற்றியுள்ளீர்கள்.
இதற்காக தமிழர் தேசியக் கூட்டமைப்பின் கீழ் அணிவகுத்து
ஒன்றுபட்ட சக்தியாக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட சந்தர்ப்பம்
பூண்டுள்ளீர்கள். புலிகளே தமிழர், தமிழரே புலிகள் என முரசரைந்த
நீங்கள் அதனை வாக்களிப்பு ஒன்றினு}டாக உறுதி செய்ய விழைந்து
நிற்பது எமக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது. அத்துடன் தமிழர்
தாயகம், தமிழர் தேசியம், தமிழர் சுயநிர்ணயம் என்ற அடிப்படை
நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதுடன், சிதைத்து
அழிக்கப்பட்டுள்ள தாயகத்தை கட்டியெழுப்ப, இடைக்கால நிர்வாக அலகை
தமிழர் தலைமை வேண்டியது போன்று அமைக்க வேண்டும் எனவும் ஆணை
வழங்கப் போகின்றீர்கள்.
எமது இறைமை நோக்கிய விடுதலைப் பயணத்தின் முக்கியமான ஒரு
காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம். இன்று எங்களுடைய
ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளமுடியாத அல்லது
அதனால் கிலி கொண்டுள்ள தமிழின விரோத சக்திகள், எமக்கு உள்ளும்,
புறமும் பிரிவினையை ஏற்படுத்தி, எம்மை சிதைத்துவிட முனைந்து
நிற்பதுவும் நீங்கள் நன்கறிந்ததே. அச்சவாலை எதிர்கொள்ளும்
ஆற்றலும், உறுதியும் தாயக மண்ணில் உங்களிடமும், புலம்பெயர்ந்த
மண்ணில் எங்களிடம் இருக்கிறது.
எனவே தமிழ் அன்னையை மனதில் நிறுத்தி, எங்கள் மாவீரர்களின்
நினைவுகளை மனதில் சுமந்த வண்ணம் ஏப்ரல் 2 ஆம் நாள் வாக்குச்
சாவடிகளுக்குச் செல்லுங்கள். அங்கு தமிழ்த் தேசியத்தின்
அபிலாசைகளை வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம்
வெளிப்படுத்துங்கள். அதனு}டாக வலுப்பெற்று நிற்கும் தமிழர்
தேசியத்திற்கு ஆணை வழங்குங்கள்.
தற்சமயம் கல்வியாண்டின் இறுதிப் பரீட்சைக்காக இளையவர்கள் நாம்
கனடிய மண்ணில் தயாராகிக் கொண்டிருப்பதால், இந்த வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியில் உங்களுடன் இருக்க
முடியவில்லை. எனினும் தமிழர் தேசிய அபிலாசைகளுக்கு வரலாறு காணாத
ஆணையை வழங்கிய மக்களாக உங்களை விரைவில் தரிசிப்போம் என உறுதிகூறி,
எங்கள் நினைவுகள் எப்ரல் 2, வரலாற்று நிகழ்வுக்காக உங்களைச்
சுற்றியே வலம்வந்து கொண்டிருக்கும் என்பதையும் வலியுறுத்தி
இம்மடலை முடிக்கின்றோம்.
உணர்வுள்ள மாணவர் சமுதாயம்!
தலைவர்
திவாகர் பரம்சோதி
கல்லுரரி, பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் கனடா.
College, University Tamil
Students Union Canada
(416) 892-2704 |