டிஸ்யூம்
காதலில் மட்டுமே முரண்பாடுகள் உடன்பாடுகளாகும் சாத்தியம் உண்டு என்பதை இன்னொருமுறை உணர்த்தும் படம். மொத்தப்படத்தில் 90 சதவிகிதம் புது புது காட்சிகளை இயக்குனர் கையாண்டிருப்பதில் வீட்டு மல்லியை கோர்த்து கூந்தலில் வைத்த சந்தோஷம்.
திரைப்படத்தில் ஹீரோக்களுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேன் ஜீவாவும் ஆர்ட் காலேஜ் ஸ்டூடண்ட் சந்தியாவும் திடீர் சந்திப்பில் நண்பர்களாகின்றனர். ஒருநாள் ஓவியம் வரைவதற்கு ஜீவாவை மாடலாக நிற்கவைக்கிறார் சந்தியா.
தயக்கங்களுக்கு பிறகு சட்டையை கழற்றினால், ஜீவாவின் உடம்பில் ஓலைக்குடிசைவாசியின் ஒட்டுத்துணியை போல சல்லடை சல்லடையாய் காயங்களின் அடையாளம். பைட்டர் தொழில் எத்தனை ஆபத்து என்பதை உணரும் சந்தியா, "உனக்கென்று ஒருத்தி இருந்தால் ரணங்களுக்கு மருந்தாக அமையும்" என்கிறார்.
'அப்படீன்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?' கொஞ்சம் கூட யோசிக்காமல் குழந்தைத்தனமாக ஜீவா கேட்கும் கேள்வி சுருக்கென்று தைக்கிறது சந்தியாவுக்கு.
உனக்கும் எனக்கும் ஒத்துவராது என்று உதறித்தள்ளும் சந்தியா, ஒருவேளை உன்மேல் எனக்கு காதல் வந்தால் கழுத்தை நீட்ட தயங்கமாட்டேன் என்று நழுவுகிறார்.
காலப்போக்கில் இருவருக்குமிடையே பல விஷயங்களில் முரண்பாடுகள் முளைவிட, அவ்வப்போது மனசுக்குள் எட்டிப்பார்த்த நட்பும் காதலும் என்னவாகிறது என்பதே க்ளைமாக்ஸ்.
டைட்டில்கார்டு முடிந்ததும் போர்கால நடவடிக்கைகள்போல படத்தின் சண்டைக்காட்சிக்காக தயாராகும் வேலைகளை காட்டும் போதே வித்தியாசப்பட்டு நிற்கிறார் இயக்குனர் சசி.
ஜீவா-சந்தியாவின் காதலையும் நட்பையும் புதுப்புது காட்சிகளால் செதுக்கியுள்ள சசி, போகிற போக்கில் சினிமா பைட்டர்களின் எதார்த்தங்களையும் தொட்டிருப்பது அழகு.
ரிஸ்க் பாஸ்கர் கேரக்டரில் ஜீவா மிகச்சரியாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறார். காதலின் சுவடே தெரியாதவரின் மனசுக்குள் சந்தியா காதல் நங்கூரமிட்டதும் தான் பார்க்கும் காட்சிகள் யாவும் சந்தியா மயமாகும் இடங்கள் ரசனை.
ஓவியமாக வரைந்த படகுவீட்டை காட்டி 'இதை பார்க்கும் போது என்ன தோணுது?' என்று சந்தியா கேட்டதும் 'பெட்ரோல் ஊற்றி கொளுத்தி சூப்பரா பைட் சீன் எடுக்கலாம்' என்று தனது தொழிலுக்கேற்ற ரசனையை ஜீவா வெளிப்படுத்துவதும் கலகல.
'காதல்'க்குப் பிறகு சந்தியாவின் நடிப்புக்கு இதில் கொழுத்த வேட்டை. எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவருக்குள் ஜீவா மேல் மெல்ல மெல்ல பூக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்பது புரியாமல் கண்கள் வழியே அவஸ்தைகளை பிரதிபலிக்கும் போது கிரேட்.
திருக்குறள் அடி சைஸில் இருந்துகொண்டு புதுமுகம் பத்ரூ செய்யும் சேட்டைகள் முன்னணி காமெடியன்களுக்கு வயிற்றில் புளியை கலக்கும். தண்ணீர் பிடிக்கும் சின்ன பாத்திரத்தையே நீச்சல் தொட்டியாக மாற்றி தண்ணீர் அடித்துக்கொண்டே குளிக்கும் காட்சியில் தியேட்டர் முழுவதும் ஹா... ஹா....
பயர்சர்வீஸில் இருக்கும் நாசர், கணவரின் ரிஸ்கான தொழிலை நினைத்து அவ்வப்போது நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் மாளவிகா இருவரும் சந்தியாவின் பெற்றோராக பளிச்சிடுகின்றனர்.
அறிமுக ஒளிப்பதிவாளர் ஸென்டோனியோ டெர்ஸியோவின் பெயர்தான் வாயில் நுழையாத அளவில் இருக்கிறதே தவிர அவரது ஒளிப்பதிவு கண்களுக்கு நெருடல் இல்லாத விருந்து வைக்கிறது.
விஜய் ஆன்டனியின் இசையில் வைரமுத்து எழுதிய 'நெஞ்சாங்கூட்டில்', 'பூமிக்கு' பாடல்களும், குகை.மா. புகழேந்தி எழுதிய 'பூ மீது..' என்ற பாடலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.
கனவுப்பாட்டு, ஆக்ஷ்ன் விருந்து படைக்க சண்டை என ஆங்காங்கே இயக்குனர் சசியும் மசாலா அரைத்துள்ளார். எனினும் அதில் அம்மியில் அரைத்த ருசி.







