|
இப்பருவத்தில் பிள்ளைகள் பலவித மனவியல்புகளைக் கொண்டிருப்பார்கள்.
அவையாவன-
1. எளிதிற் புண்படக் கூடிய மனநிலை பெற்றோர் சிறிய விஷயங்களுக்கு
கண்டித்தால் அதைப் பெரிய விஷயமாக எடுத்துத் துன்புறுவார்கள்.
2. தாங்கள் செய்வது சரி என்ற மனப்பான்மை. அதாவது நண்பர்களுடன்
தாம் போக விரும்பும் இடத்திற்குப் போக பெற்றோர் அனுமதிக்காவிடின்
தாம் போக வேண்டும் என்றும் அப்படிப் போக விரும்புவது சரி என்றும்
வாதாடுவார்கள்.
3. அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்கும் விருப்பம். உதாரணமாக
நெருப்புச் சுடும் என்று அனுபவப்பட்டவர்கள் கூறினாலும் உண்மையில்
சுடும்தானா என்று பரீட்சித்துப் பார்ப்பது இப்பருவத்திற்குரிய
இயல்பாகும்.
4. பெற்றோருக்கும் மற்றோருக்கும் பணியாத தன்மை.
5. செயல்முறைக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற
தீவிரம்.
6. வலுவற்ற அதாவது fragile மனம். அதாவது தெரியாதவர்களுக்கு
நடைபெறும் துன்பங்கள் கூட மனதைப் பாதிக்கும். வீட்டில்
பெற்றோருடன் ஏற்படும் சிறிய சச்சரவுகளுக்கு மனமுடைந்து போவார்கள்.
7. பெற்றோர் ஆசிரியரில் பிழை கண்டுபிடிக்கும் உள்ளப்போக்கு.
8. உலகத்தில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு.
உதாரணமாக பூமி வெப்பமடைதல், சூழல் மாசடைதல், ஆபிரிக்க நாடுகளில்
பஞ்சத்தால் மனிதர் இறத்தல், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்
ஆகியன பற்றி அறிந்து அது பற்றித் தீவிரமாகச் சிந்திப்பார்கள்.
9. தான் என்ற தனித்துவ உணர்வு ஏற்படுதல். அதாவது இதுவரை
பெற்றோரின் கவனிப்புக்குக் கீழ் தம்மைப் பற்றிய உணர்வின்றி
இருந்தவர்கள் இப்பருவத்தில் தங்களது தனித்துவம் பற்றிச்
சிந்திப்பார்கள்.
10. தொடர்பு சாதனங்களின் மூலம் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவித
மனப்பதிவு ஏற்படும். சினிமா நடிகர்கள், பிரசித்தி பெற்ற
பாடகர்கள், வேறும் பல பிரசித்தி பெற்றவர்கள் இப்பருவத்தவர்களது
சிந்தனையில் அதிக இடத்தைப் பெற்றுக் கொள்வர்.
11. வீட்டிலும் வெளியிலும் தமக்குள்ள உரிமைகள் எவையென அறிந்து
அவற்றைப் பெற முயற்சிப்பார்கள்.
12. மனநிலை (mood) அடிக்கடி மாற்றமடையும். எடுத்ததற்கெல்லாம்
கோபம் வரும்.
13. தமது தோற்றம் பற்றிய உணர்ச்சி முனைப்புடையவர்களாக
இருப்பதுடன் தம்மைக் கவனிக்கும் பார்வையாளர்கள் இருப்பதாக
எப்போதும்f கற்பனை செய்வார்கள். தமது சகபாடிகள் உடுப்பது போன்ற
ஆடைகளையே அணிய விரும்புவதுடன் அப்படி அணியாவிடின் அவர்கள் கேலி
செய்வார்கள் என்று மனதுக்குள் எண்ணுவார்கள்.
14. நேர்மை உணர்வு உடையவர்களாக இருப்பார்கள். அதாவது பெற்றோர்
பொய் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு ஏதோவொரு சந்தர்ப்பத்தில்
பொய் சொல்ல நேர்ந்தால் இப்பருவப் பிள்ளைகள் ஏன் பொய்
சொல்கிறீர்கள் என்று அவர்களைக் கண்டிப்பார்கள்.
15. இரண்டு வேறுபட்ட நிலைகளில் எதில் தான் இருப்பது என்ற
குழப்பம் (pole confusion) ஏற்படும். அதாவது தமிழ்ப்
பிள்ளையாயின் தான் தமிழரைப் போல இருப்பதா அல்லது அவுஸ்திரேலியர்
போல இருப்பதா என்ற குழப்பம் ஏற்படும். அதே போல தந்தை
வைத்தியராயின் அவரைப் போல வைத்தியராவதா அல்லது தனக்கு
விருப்பமானதைப் படிப்பதா என்ற குழப்பமும் ஏற்படும்.
16. தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை அறுதியாக மறுப்பார்கள்.
17. விபத்து போன்ற அவல நிகழ்ச்சிகள் அவர்களது மனதில் நன்கு
பதியும்.
18. பெற்ரோரது கருத்துக்களை மறுப்பதுடன் அவர்களை விட தமது
சகபாடிகளுடன் அதிக பாதுகாப்பு உணர்வைப் பெறுவார்கள். இதன்
காரணமாகவே சிலர் பெற்றோரை விட்டு விலகித் தமது சகபாடிகளுடன் வாழ
ஆரம்பிக்கிறார்கள்.
இப்பருவகாலத்தில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெறுகின்றன. சுய
அடையாளத்தை உருவாக்குவதற்கு இப்பருவம் மிக முக்கிய காலகட்டமாகும்.
இப்பருவத்தினரின் பழக்க வழக்கங்களில் பாரிய மாற்றங்கள்
ஏற்படுகின்றன. குழந்தைப் பருவம் முதல் பெற்றோரின் விருப்பப்படி
அவர்களது குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வந்த பிள்ளைகள்
இப்பருவத்தை அடைந்ததும் தமது சமவயதினர் அல்லது சகபாடிகளின்
பழக்க வழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர்.
பொதுவாகச் சகபாடிகளின் மொழி, இசை, ஆடை போன்றவை இப்பருவத்தினரைத்
தமது செல்வாக்குக்கு உட்படுத்தும். உதாரணமாக ஒரு பிள்ளை சிறு
வயது முதல் தமிழ் மொழியைப் பேசி வருமாயின், இப்பருவத்தில்
அம்மொழியைத் தொடர்ந்து பேச விரும்பாது தனது சகபாடிகளின் ஆங்கில
மொழியையே எப்போதும் பேச விரும்பும். அதே போல ஆங்கில இசையை
விரும்பிக் கேட்பதுடன் தனது சகாக்களைப் பின்பற்றித் தலைமயிரை
அலங்கரித்து அவர்கள் அணியும் அதே ஆடை வகைகளை அணிய முற்படும்.
இப்பருவத்தில் கிரகிக்கும் விஷயங்களை அப்படியே ஏற்காது அதனை
ஆராய்ந்து பார்ப்பது அவர்களது இயல்பாகிறது. தங்களுக்கு
விருப்பமான பொப்பாடகர்களைப் போல தம்மைக் கற்பனை செய்து அவர்களைப்
போல இருக்க முயல்வதும் இப்பருவத்தில் நிகழ்கிறது. அவர்கள்
திறமைகளைப் பெற்று வளர்ந்தோருக்குரிய பங்கை நிலைநிறுத்தும்
வேளையிலே, தமக்குரிய எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், தாம் யார்
என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் இப்பருவம் உரிய காலமாகிறது.
அவர்கள்
உணர்வு ரீதியாகவும், நடத்தை ரீதியாகவும் சுதந்திரமாக இயங்க
ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அத்துடன் ஆண்-பெண் வேறுபாட்டையும்
பகுத்துணர்கின்றனர். எதிர்ப்பாலாருடன் பழகுவதற்கான திறமையைப்
பெறுகின்றனர். தங்களுக்குரிய வாழ்க்கைத் துணை எவ்வாறு
அமையவேண்டும் என்பது பற்றிய கருத்துக்களை உருவாக்கிக்
கொள்கின்றனர். அத்துடன் வளர்ந்தோருக்குரிய பங்கை வகிப்பதற்குத்
தேவையான கல்வியையும் அனுபவங்களையும் இப்பருவத்திலேயே
பெறுகின்றனர். பெறுமதிகள் பற்றித் தீர்வு காணுவதும்f இந்தப்
பருவத்திலேயே நடை பெறுகின்றது.
அடுத்த
பகுதி(3) |