www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்-1 -சந்திரலேகா

இளம் பிள்ளைகள் இல்லாத வீடுகள் மிகக் குறைவு. Adolescent பருவத்தில் அதாவது வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளித்துச் சரியான வழியில் வளர்ப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான வேலை. எமது நாட்டில் என்றால் பெற்றோரது சொற்களுக்குக் கட்டுப்படாத பிள்ளைகளை தகப்பனின் சகோதரன் அல்லது தாயின் சகோதரனிடம் அனுப்பி நான் சொன்னா இவன் துப்பரவாய் கேட்கிறானில்லை. நீங்கள் எண்டாலும் ஒருக்கா புத்திமதி சொல்லுங்கோவன் என்று சொல்வதுண்டு.

தமது சொல்லைக் கேட்காவிடினும் மாமனின் அல்லது பெரிய அல்லது சிறிய தகப்பனின் சொற்களைப் பிள்ளைகள் கேட்டு நடப்பார்கள் என்று பெற்றோருக்கு நம்பிக்கை. அது பெருமளவில் உண்மையும் கூட. உறவினரிடையே நெருக்கமான பந்தம் வளர்ந்திருந்ததால் பிள்ளைகள் பெற்றோரின் சகோதரர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவர்களுடன் கதைப்பது பெற்றோருடன் கதைப்பதை விட பிள்ளைகளுக்கு இலகுவாக இருந்தது. சில பெற்றோர் பிள்ளைகளுடன் கடுமையாக நடப்பதும் சில சமயங்களில் அடிப்பதும் உண்டு. விடலைப் பருவம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்தப் வளரிளமைப் பருவத்தில் ஒருவரின் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் அதிகம்.

அறிவாலும் உடலாலும் பெருமளவில் இந்தப் பருவத்தில் தான் வளர்ச்சி ஏற்படுகிறது. Peer pressure எனப்படும் நண்பர்களின் அழுத்தம் அதிகம் இடம் பெறுவதால் பெற்றோர் சொல்வது வேண்டாத விஷயங்களாகவே பெருமளவில் தென்படும். என்ன நெடுக friendsஓட சுத்திக் கொண்டிருக்கிறாய். சோதினை வருகுதில்லே.

வீட்டில இருந்து ஒழுங்காய் படியன் என்று பெற்றோர் கூறுவதும், சும்மா எந்த நேரமும் படி படி எண்டு சொல்லிறதைத் தவிர இவைக்கு வேறை ஒண்டும் தெரியாது என்று பிள்ளைகள் வாய்க்குள் முணுமுணுப்பதும் நாளாந்தம் யாழ்ப்பாண வீடுகளில் நடைபெறுவது ஒன்றே. இந்தப் பருவத்தில் பிள்ளைகள் நண்பர்களுடன் தம்மை அடையாளம் காணுவதால் அவர்கள் கூறுகிற விஷயங்களே அவர்களுக்கு வேத வாக்காகப்படும்.

புலம் பெயர்ந்த பின்னர் இந்த வளரிளமைப் பருவப் பிள்ளைகளுடன் பழகுவது பெற்றோருக்கு இன்னும் சிக்கல் நிறைந்ததாக ஆகியுள்ளது. இரண்டு கலாச்சாரத்தில் பிள்ளைகள் வாழ்வதால் அவர்கள் இந்தப் பருவத்தில் பாடசாலையிலும் வெளியிலும் தாம் பழகும் பெரும்பான்மை இன பிள்ளைகளுடன் தம்மை இனம் காண முற்படுகின்றனர்.

இதனால் பிள்ளைகள் தங்களது கலாசாரத்தை விட்டுத் தவறான வழியில் போய்விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. பிள்ளைகளுக்கும் தமது தமிழ் பெற்றோர் கூறும் விஷயங்கள் வேண்டாதவையாகப் படுகின்றன. மொழி பண்பாடு பற்றிய பெற்றோரின் அறிவுரைகள் அவர்களை எரிச்சலுட்டுகின்றன.

எல்லாப் பிள்ளைகளும் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்றில்லை. பெற்றோரது மனம் கோணாது அவர்களது விருப்பப்படி நடக்கும் பிள்ளைகள் சிலர் இருப்பார்கள்f. பலர் இந்த மாற்றங்களினூடாகச் செல்லும் போது வேறு விதமாகவே பெரும்பாலும் நடந்து கொள்வார்கள். சில பிள்ளைகள் தமது பெற்றோரை நாகரிகமற்றவராகக் கருதி அவர்களைத் தமது நண்பர்கள் காணுவதையே விரும்ப மாட்டார்கள்.

இது பல ஆங்கிலக் குடும்பங்களிலும் நடைபெறுவதுண்டு. இது இந்த வயதில் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒரு உணர்வு. பிள்ளைகள் மாற்றங்களினூடாக வளர்ச்சி அடைகிறார்கள் என்பதை உணர்ந்து பெற்றோர் அவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இத்துறையில் ஆய்வு செய்த அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே இன்று இந்த வளரிளமைப் பருவத்தில் இடம் பெறும் மாற்றங்கள் என்ன என்று சிறிது விளங்கிக் கொள்வோம்.

வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம் அதாவது adolescent பருவம் எல்லோரது வாழ்விலும் வருவதொன்றாகும். இப்பருவம் பற்றி நாம் பூரணமாக அறிந்து கொண்டால் தான் ஒவ்வொருவரும் தத்தமது பிள்ளைகள் இப்பருவத்தைக் கடக்கும் போது அவர்களது நிலையை நன்குணர்ந்து அவர்களுக்கு உதவ முடியும். Adolescence என்ற ஆங்கிலச் சொல் adolescere என்ற லற்றீன் சொல்லிலிருந்து உருவாகியதாகும். இந்த லற்றீன் சொல்லின் பொருள் வளர்ச்சி அல்லது முதிர்ச்சி பெறுதல் என்பதாகும்.

வளரிளமை பருவம் என்பது ஒருவர் பிள்ளை நிலையிலிருந்து வளர்ந்தோர் நிலையையடையும் மாற்றத்திற்குரிய பருவமாகும். இப்பருவத்திற்குரிய வயதெல்லை 10 தொடக்கம் 20 வயது வரை என்றும் 12 தொடக்கம் 18 வரை என்றும் இரு வேறு கருத்துக்கள் அறிஞரிடையே காணப்படுகின்றன. இப்பருவத்தில் உடலிலும் எண்ணப்போக்கிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம் மாற்றங்கள் அனைத்தும் அவரவர் சமூக, குடும்பப் பின்னணிக்கேற்பவே நடைபெறுகின்றன.

இக் காலத்தில் உடலில் விரைவான வளர்ச்சியும் மாற்றங்களும் ஏற்படுகின்றன. பொதுவாக பெண்களுக்கு 11 வயதிலும் ஆண்பிள்ளைகளுக்கு 13 வயதிலும் இம்மாற்றங்கள் இடம்பெற ஆரம்பிக்கும். 12-15 வயதுகளுக்கிடையில் பெண்களின் உயரம் ஏறக்குறைய 5 அங்குலங்களும் எடை 12 கிலோக்களும், ஆண்பிள்ளைகளின் உயரம் ஏறக்குறைய 9 அங்குலங்களும் எடை 25 கிலோக்களும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாற்றங்களின் உச்சமாகப் பூப்படைதல் நிகழ்கிறது. இது பொதுவாகப் பெண்களுக்கு 12 வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் இடம்பெறும்.

வளரிளம் பருவத்தினரது இந்த உடல் வளர்ச்சியானது அவர்களது சுய கருத்து உருவாக்கத்திற்கு உதவுகிறது. பண்டைக்காலத்தில், உடல்ரீதியான வளர்ச்சியும் பாலுணர்வு வளர்ச்சியும் மட்டுமே இந்த வளரிளம் பருவத்தில் ஏற்படுவதாக நம்பப்பட்டது. ஆனால் இன்றைய ஆய்வுகளின் படி இந்த வளர்ச்சிகள் மட்டுமன்றி தமக்கென உலகத்தில் ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்வதற்காகத் தம்மை மதிப்பீடு செய்தலும், ஒன்றைச் சாதிப்பதற்கு உறுதி பூணுதலும் இப்பருவத்தில் இடம்பெறுகின்றன எனக் கருதப்படுகிறது.

அடுத்த பகுதி(2)

All rights Reserved for Webtamilan.com© (2003) [Used Font is Unicode]