|
அந்நியர் ஆட்சிக்காலம்
முதல் இன்றைவரை எமது நாட்டில் வதைகள் மலிந்து கிடக்கின்றன.மேலைத்தேய நாகரிகத்தையும் விஞ்சியதாக இன்று அவை
பரிணமித்துவிட்டன.இங்கு வதைகள் என்று குறிப்பிடுவது சித்திரவதை,பகிடிவதை ஆகிய இரண்டையும்தான். அரசியல் நகர்த்தலுக்கும் பாதுகாப்புக் கெடுபிடிக்கும் முக்கிய
துரும்பாகப் பயன்படுத்தப்பட்டது.சித்திரவதை என்பதில்
வியப்பில்லை.அமுலில் இருக்கின்ற உடன்படிக்கை சற்று தற்காலிகமாக அதை
இடைநிறுத்தியிருக்கின்றது என்பதோடு நாமும் அதைப் புறம்தள்ளி
பகிடிவதைக்குள் நுழைந்து அலசுவோம்.இன்றைய தேவைப்பாடும் அதுவே. பகிடிவதையும் ஒருவகையான சித்திரவதைதான்.பாதிக்கப்படுபவர் ஒரு
புறம் அனுபவிப்பார்.பின்பு அதற்குக் காரணமானவர் மறுபுறம்
அனுபவிப்பார்.பகிடிவதைகள் பல மட்டங்களிலும் பல இடங்களிலும் பல
சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது.படையினர் பயிற்சி முகாம்கள்,தொழிற்பயிற்சி நிலையங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.எனினும் இவைகளின் விபரீதங்கள் குறித்த மதிப்பீடு குறைவான
பதிவுகளாகவே காணப்படுகின்றன. பகிடிவதைகள் உக்கிரமடைந்ததும்,பகிடிவதைகள் சித்திரவதைகளாக
பரிணமித்ததும் அதிகமாக மாணவர் சமூகத்தில் என்பது மறைக்கமுடியாத
உண்மை.மாணவர்கள் சமூகம் என்பது பாடசாலை சமூகத்தையும் பல்கலைக்கழக
சமூகத்தையும் உள்ளடங்கலாக குறிப்பிடப்படுகின்றது.பாடசாலை
மட்டத்தில் வயதையும் மீறிய பகிடிவதைகள் இடம்பெற்றாலும் அவைகள்
கட்டுப்படுத்தக்கூடியதாக அல்லது கட்டுப்பட்டுவருவதாக உள்ளது.ஆனால் அணை கடந்த வெள்ளம் போல் பல்கலைக்கழக மாணவர்களின்
பகிடிவதைகள் கட்டுக்கங்காதது.காணப்படுவதே புதிய மாணவர்கள்
மத்தியில் வேதனையைத் தூண்டுகின்றது.பகிடி வதை செய்யக்கூடாது.மீறியும் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் இடைநிறுத்தப்படுவர் என
சட்டங்கள் தோன்றியபோதும் பகிடிவதைகள் மறையவில்லை. பகிடி வதைகள்
சித்திரவதைகளாக,கொலை அச்சுறுத்தலாக,தற்கொலைக்கு வழி
சமைப்பவையாக பட்டப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பவையாக,பாலியல் சேஷ்டைகளாக பழிவாங்கலாக கடந்த காலங்களில் நடைபெற்று
அரங்கேறிய அனுவங்கள்,அவை தவிர்க்கப்படவேண்டும் என பல
மட்டங்களிலும் வற்புறுத்தப்பட்டுவந்தபோதிலும் அவை
நிறுத்தப்படவில்லை.க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்கள்
சித்தியெய்தி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான நிலையில் அல்லது
பரீட்சை முடிவு வந்த கையோடு அம்மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களால்
இம்சிக்கப்படுகின்றனர்.
கோயில்,குளம் ராக்கிங் என்ற பெயரில் பகிடிவதைகள்
இடம்பெறுகின்றன.போதாக்குறைக்கு வீகளுக்கு தேடிச்சென்று பெற்றோர்,உறவினர் முன்னிலையில் பகிடிவதைகள் செய்யப்படுவது பொறுக்க
முடியாத உண்மைகள்.பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது பல்கலைக் கழகத்தில்
பிரச்சினைகள் தோன்றிவிடக்கூடாது என்று சில பெற்றோர்கள்
சகித்துக்கொள்கின்றனர்.இப்பவே இப்படி என்றால்,அங்கு சென்றால்
எப்படியிருக்கும் என்று எண்ணிப் பிள்களை பட்டப்படிப்புக்கு
முழுக்குப்போடவைக்கும் பெற்றோர்களும் உண்டு.இவற்றையும்
தாண்டிச்சென்றவர்கள் மேலும் கொடுமைகள் தாங்கமுடியாது தற்கொலை
செய்துகொண்டதுமுண்டு.அதையும்தாண்டி மரணத்தில் முடிந்த கதையும்
உண்டு. இவையெல்லாம் இலங்கைத் திருநாட்டில் அரங்கேறிய அசிங்கங்கள்.கடந்த சில தினங்கள் மற்றும் சில வாரங்களுக்கு முன்பு கண்ணுற்ற
சில விடயங்களில் சுட்டிக்காட்டவேண்டிய நிலை உள்ளது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் அத்துடன் அவர்களைச் சார்ந்தவர்கள்
பொலிஸில் முறையிடுவதைத் தவிர்த்து ஊடகங்களுக்குத்
தெரிவிப்பதன்மூலம் பகிடி வதைகளின் சீத்துவம் நன்றாகத் தெரிகிறது.பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலையும் பயில்பவர்கள் அல்லது
அறிபவர்கள் என்று சொல்லப்படுகின்றது.ஆனால் பாலியல் சேஷ்டைகள்
புரிவதற்கு அல்லது ஓர் உயிர் பலியாவதற்கு பல்கலைப் படிப்பு
காரணமாகும் என்றால் அப்படி ஒரு கல்வி தேவைதானா? அதையும் தாண்டி விருப்பமில்லாது திணிக்கப்படுவது பற்றியே இப்போது
பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் சமுதாயத்தை உருவாக்குபவர்கள்,வருங்காலத்துத் தூண்கள்,ஒற்றுமைப்பட்ட சமுதாயத்தை உடையவர்கள்,எதிர்காலத் தலைவர்கள்
என்றெல்லாம் வியாக்கியானம் சொல்லப்படுகின்றது.இவை ஆரம்பநிலை
மாணவர்களுக்கு பொருத்தமாக இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு
எந்தளவுக்கு பொருந்தும் என்பது கேள்விக்குறிதான்? பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் ஒரு காலத்தில் தனி மரியாதைதான்.ஆனால் இது இன்று குறைந்துகொண்டேவருகின்றது.பகிடிவதைக்கு
மட்டுமல்ல,புகைப்பிடித்தல்,மது அருந்துதல்,பகிஷ்கரிப்பு,ஆர்ப்பாட்டம்,மறியல்போராட்டம் என்று எதற்கு
எடுத்தாலும் வீதியில் இறங்குவது அவர்கள் மீது உள்ள மரியாதையைக்
குறைக்கின்றது.தேசியப் பிரச்சினை,உரிமைப் பிரச்சினைகளுக்கான போராட்டங்கள்
விதிவிலக்காகக்கொள்ளல்.சில மாற்றுக் கட்சிகள் பல்கலைக்
கழகங்களுக்குள் நுழைந்துகொண்டு மாணவர்களை ஆட்டிப்படைப்பது
வேதனையே. இத்தகைய சாக்கடை அரசியல்கள் புகுத்தப்படாது.பாதுகாத்துக்கொள்ளவேண்டிது புத்திஜீவிகளின் கடமை.கடந்த ஆகஸ்ட்
மாதம் க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்த
கையோடு சித்தியடைந்ததாகக் கூறப்பட்ட மாணவர்கள் பல இடங்களில்
பகிடி வதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வீதிகள்,வீடு வாசல்கள்
என்று உறவினர்களுக்கு மத்தியில் மேற்கொண்ட பகிடி வதைகள் பலரை
வியப்புக்கு உள்ளாக்கியதோடு ஆவேசத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது.பல்கலைக்கழகம் புகக்கூடிய தகுதி பெற்றவர்கள் எல்லாரும்
பல்கலைக்கழகம் செல்வார்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு
முட்டாள்தனம். வெளிநாடு செல்லல்,திருமணம்,வேலைவாய்ப்பு,இறப்பு,விருப்பமின்மை இவைகளில் ஏதாவது ஒரு காரணத்தினால் பல்கலை செல்ல
முடியாது இருக்கலாம் என பல்கலை அறிவாளி மாணவர்கள் ஏன்
நினைப்பதில்லை?கடந்த 19ஆம் திகதி பிரசித்திபெற்ற ஆலயம் ஒன்றில் சிலர்(பல்கலை
மாணவர்கள்)பரீட்சை முடிவு கண்ட மாணவர்களை பேட்டி எடுத்தனர்.கோவில் நெரிசலில் பக்தர்கள் செல்ல முடியாது
திக்குமுக்காடுபட்டுக்கொண்டிருந்தபோது இவர்கள் ஆலய வீதியல்
ராக்கிங் செய்கின்றனர்.இவையெல்லாம் எத்தகைய நாகரிகத்தில்
சேர்ப்பது என்பது புரியவில்லை. கூச்சம் தெளியவைப்பதாகக்கூறி அழவைத்து ரசிப்பது
காட்டுமிரண்டித்தனமான கலாசாரம் என்றே சொல்லத்தோன்றுகிறது.அவர்களுக்கு உண்டான சலுகைகள் உரிமைகளாகக்கொண்டு பகிடிவதைகளை
வீட்டுவாசல் வரை கொண்டுசெல்வது கல்விச் சமூகத்துக்கும்,மாணவர்
சமூகத்திற்கும் இழிவைத் தேடித்தரும்.நீங்கள் செய்ததாக நாங்கள் சொல்லவில்லை.சிலர் செய்ததாக
பாதிக்கப்பட்டவர்கள் சொல்கின்றனர்.இனியாவது படித்தவர்கள்
சிந்திப்பார்களா?
நன்றி:(மிதுசன்) மெட்ரோ நியூஸ் |