|
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி
தங்கமே தங்கம் என்று பாரதி வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியது
பொதுவாக அக்காலப் பெண்களுக்குப் பொருத்தமாகவே காணப்படுகிறது.
பெண்களுக்கு இருந்த அதீத கட்டுப்பாடும் சுதந்திரமின்மையும் பாரதி,
பாரதிதாசன் போன்ற அக்கால கவிஞர்களை மிகவும் பாதித்தது. அவர்கள்
இந்த சீர் கெட்ட நிலையில் இருந்து பெண்களை மீட்பதற்காக தமது
கவிதைகள் மூலம் பெரிதும் முயன்றனர். பெண்கள் மீது
பிரயோகிக்கப்பட்ட அக் கட்டுப்பாடுகள் எப்போது ஆரம்பமாகின? சங்க
காலம் என்று சொல்லப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தா? அல்லது
தொடர்ந்து வந்த காலங்களiலிருந்தா? இது பற்றிச் சிறிது நோக்குவோம்.
சங்க இலக்கியம் பெண்களைச் சுதந்திரமற்றவர்களாகக் காட்டவில்லை.
அவர்கள் ஆண்களுக்கு இணையாக சமூக விழாக்களiல் பங்கு பற்றினர்.
அவர்கள் கடலிலும் குளங்களiலும் நீந்தி விளையாடியதையும் ஆண்களுடன்
நீர் விளையாட்டில் ஈடுபட்டதையும் சங்க இலக்கியங்கள்
காட்டுகின்றன. தமக்கு விருப்பமான கணவனைத் தெரிவு செய்யும்
சுதந்திரம் ஓரளவில் இருந்தது. காதல் மணம் பற்றி நிறையவே
குறிப்புகள் உள்ளன. ஆயினும் ஒழுக்கத்தில் இருந்து தவறுதல் பெருங்
குற்றமாகக் கருதப்பட்டது. முல்லை போன்ற பற்களையுடைய பெண்களiன்
கற்புச் சிறப்பை சிறுபாணாற்றுப்படையும் அகநானூறும், அருந்ததியைப்
போல கற்புடைய பெண்களைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படையும்
புறநானூறும் குறிப்பிடுகின்றன. இது சம்பந்தமாக ஆய்வு செய்த
George L Hart என்பவர் Ancient Tamil Literature என்ற தனது
கட்டுரையில் -
பண்டைய தமிழில், அணங்கு எனப்படும் புனித சக்தி பெண்ணைப்
பற்றியிருக்கும் என்றும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும் வரை அது அவளுக்கும் அவளது கணவனுக்கும் வாழ்வு
தருவதுடன், சுபத்தையும் முறையான புனிதத் தன்மையையும் வழங்கும்
என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க வேண்டிய சக்தியாகும். இல்லாவிடின் அது பெரும் அழிவை
ஏற்படுத்திவிடும். பெண்கள் கற்பைக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து
வரவேண்டும் என்று கூறுகிறார்.
தொழிலாற்றுவதில் பெண்கள் கணவருக்கு அல்லது தந்தைக்குத் துணையாக
இருந்தனர். குறிஞ்சி நிலத்தில் உள்ள பெண்கள் பரணில் ஏறிக்
கிளiகளை விரட்டி பயிரைப் பாதுகாத்தனர். பிரம்பினால்
செய்யப்பெற்ற கவணிலாலும், மற்றும் கருவினாலும், கல்லெறிந்தும்,
முரசு அறைந்தும் வானிலே திரியும் பறவைகளைக் கூடுகளை நோக்கிப்
போகச் செய்தனர். இடையர் குல பெண்கள் மோரும் நெய்யும் விற்றார்கள்.
பாலைநிலப் பெண்கள் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்தி அதனை
வளம்படுத்தி நெல் விளைவித்தனர். நெல்குற்றும் போது பெண்கள்
பாடும் பாடலை மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
பெண்கள் ஈடுபடும் பல விளையாடல்கள் பற்றிய குறிப்புகளும் சங்க
இலக்கியங்களiல் காணப்படுகின்றன. கடற்கரையில் இளம் பெண்கள்
சிற்றில் பாவை இழைத்து விளையாடுவதையும் செல்வந்தர் வீட்டுப்
பெண்கள் வரிப்பந்து ஆடுவதையும் சுனைகளiல் அவர்கள் உள்ளம்
களiக்கப் பாடி குடைந்தாடுவதையும் சங்க இலக்கியங்கள்
குறிக்கின்றன. அவர்களுக்கு தமக்கு விருப்பமான வகையில்
கூந்தலையும் உடலையும் அழகுபடுத்திக் கொள்ளும் சுதந்திரமும்
இருந்தது.
சங்க காலத்தைத் தொடர்ந்து அடுத்து வந்த காலத்தில் சமண மதச்
சொல்வாக்கால் பெண்கள் பற்றிய கருத்து சமூகத்தில் மாறத்
தொடங்கியது. ஈடேற்றத்திற்கு உரிய ஒரே வழி துறவறமே என்று போதித்த
அச்சமயம் இல்லறத்தையும் பெண்களையும் வெறுத்து ஒதுக்கியது.
பெண்களை வஞ்சம் கொண்டவர்களென்றும் அவர்களை நம்பக்கூடாது என்றும்,
அவர்கள் சொல்வதை உண்மை என்று ஏற்கக்கூடாது என்றும் அக்கால
இலக்கியமான ஏலாதி கூறுகின்றது. இதே நூல் பெண்கள் கூறுவதைப்
பொருளெனக் கொள்ளாதவர் கடவுளiலும் உயர்ந்தோர் என்று கூறுகிறது.
அடுத்து வந்த காலப்பகுதியில் சைவ வைஷ்ணவ சமயங்கள் செல்வாக்குப்
பெறவே அவை சமணத்தின் பிடியிலிருந்து மக்களைத்
தம்வசப்படுத்துவதற்கு தமது கோட்பாடுகளை முன் வைத்தன. அவற்றுள்
முக்கியமானது இல்லறத்திலிருந்து கொண்டே கடவுளை அடையலாம்
என்பதாகும். இதனால் பெண்களைப் பற்றிய கருத்தும் மாற்றமடைந்தது.
அவர்களை இழிவுபடுத்தும் போக்கு மாறியது. பெண்கள் பக்தி
இயக்கத்தில் முன்னின்று உழைக்கும் நிலை உருவாகியது.
பாண்டிமாதேவியாகிய மங்கையற்கரசியார் தனது கணவனான நின்றசீர்
நெடுமாறனின் நோய் தீர்க்கவும் அவனை மதம் மாற்றவும், சம்பந்தரை
பாண்டிய நாட்டுக்கு வரவழைத்து உதவியதாலும், சைவசமயத்திற்குத்
தொண்டு செய்ததாலும், அவரது தொண்டைப் புகழந்து சம்பந்தர் ஒரு
பதிகம் பாடியுள்ளார்.
தனது இல்லறம் பிழையாகிப் போன காரணத்தால்
தனது அழகையும் இளமையையும் துறந்து தனது இனிய பக்திப் பாடல்களால்
தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய காரைக்காலம்மையாரும்
மங்கையற்கரசியாரும் நாயன்மார் பட்டியலில் இடம்பெற்றுள்ள
பெண்களாவர். பன்னிரு ஆழ்வார் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே
பெண்ணான ஆண்டாள் பக்திச் சுவை மிகுந்த நாச்சியார் திருமொழியையும்
திருப்பாவையையும் பாடியுள்ளார்.
இவர்களை விட பல பெண்கள் தமது நாயனாரான கணவருடன் இணைந்து
சைவத்துக்குத் தொண்டாற்றினர். ஆயினும் பல்வேறு சந்தர்ப்பங்களiல்
அவர்கள் தமது கணவரின் அடக்கு முறைக்கு உட்பட்டுக் கொடுமையாகத்
தண்டிக்கப்பட்டதைப் பெரியபுராணத்தில் பரவலாகக் காணலாம். மூன்று
உதாரணங்கள் இக் கருத்தைத் தௌiவுபடுத்தும். கழற்சிங்கன் என்ற
பல்லவ அரசனான நாயனாரின் மனைவி தனது கணவனைப் போலவே சைவசமயத்தில்
நம்பிக்கையும் சிவனிடத்தில் அன்பும் கொண்டவள். அவள் ஒருதடவை தனது
கணவனுடன் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தாள்.
வழிபட்டுக் கொண்டு
உள்வீதியில் வலம் வருகையில் வழியில் ஒதுக்குபுறமாக ஒரு பூ
விழுந்து கிடந்ததைக் கண்டாள். பெண்களுக்கு பூக்களiல் இயல்பாக
உள்ள விருப்பாலும், நிலத்தில் கிடந்ததால் அது பூசைக்கு உதவாது
என்று கருதியதாலும் அதனை எடுத்து முகர்ந்தாள். அப்போது
எங்கிருந்தோ வந்த செருத்துணை என்ற நாயனார் அவள் பூவை முகர்வதைக்
கண்டதும் ஒரு கூரிய ஆயுதத்தால் அதை மணந்த அவளது மூக்கை
வெட்டினார். அவள் வலி பொறுக்க முடியாது நிலத்தில் வீழ்ந்து அழுது
துடித்தபோது அவளது கணவனான கழற்சிங்கன் அங்கு வந்து தனது
மனைவிக்கு இக் கொடுமையைச் செய்தவர் யார் என்று வினவினார்.
அப்போது செருத்துணை நாயனார் முன்வந்து தான் வெட்டியதாக ஒப்புக்
கொண்டு வெட்டியதற்கான காரணத்தையும் கூறினார்.
உடனே கழற்சிங்கன்
இவ்வாறான செயலுக்கு மூக்கை மட்டும் வெட்டினால் போதாது பூவை
எடுத்த கையையும் வெட்ட வேண்டும் என்று கூறித் தனது இடை வாளை
எடுத்து தனது மனைவியின் கையையும் வெட்டினான். நிலத்தில் கிடந்த
பூவை எடுத்து மணந்த ஒரே காரணத்துக்காகத் தனது மூக்கையும்
கையையும் ஒன்று சேர இழந்த அந்த அரசிக்குப் பின்னர் என்ன நடந்தது
என்ற விவரத்தைச் சேக்கிழார் தனது புராணத்தில் கூறவேயில்லை.
அதே போல ஒரு சிவனடியார் கேட்டார் என்பதற்காகத் தனது மனைவியை
அவளது மனநிலையைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காது தானம் கொடுத்தது
மட்டுமன்றி அச்செயலைத் தடுக்க வந்த தனது உறவினர் அனைவரையும் தனது
வாளால் வெட்டிக் குவித்தவர் இயற்பகை என்ற நாயனார். ஆயினும்
பெண்ணின் கற்பு என்பது தமிழருக்கு முக்கியமான விஷயம் என்பதால்
கடைசி நிமிடத்தில் வந்த சிவனடியார் கடவுளாகி மறைவதாகச்
சேக்கிழார் கதையை நிறைவு செய்கிறார். கலிக்கம்பர் என்ற இன்னொரு
நாயானர் சிவனடியாருக்கு உணவளiக்கும் சேவை செய்து வந்தார்
அதற்காக அவரது மனைவி தினமும் அறுசுவை உணவு தயாரித்து உண்ண வரும்
அடியார்களது பாதங்களை நாயனார் கழுவுவதற்கு நீர் ஊற்றி வந்தார்.
முன்னர் அவர்களiடம் பணியாளாகி பின் கோபித்து வெளiயேறியவன்
ஒருநாள் சிவனடியாராக அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தான். அதனை
நினைத்து அவனது கால்களைக் கழுவ நீர் வார்க்க ஒரு கணம் அவள்
தயங்கிய காரணத்தால் கோபமடைந்த நாயனார் உடனே சென்று வாள் எடுத்து
வந்து அவளது கையை வெட்டினார். இக்கதைகள் பெண்கள் விடும் சிறு
தவறுகளுக்குப் பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டமையைக் காட்டுகின்றது.
அத்துடன் சோழர் காலத்தில் பிரமாண்டமான கோயில்கள் எழுந்த போது
அவற்றில் பல்வேறு விரிவான கிரியைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இறைவனை பூசையின் போது இசையால் மட்டுமன்றி நாட்டியத்தாலும் வழிபட
மன்னர்கள் மானியங்கள் வழங்கினர். இதன் காரணமாக நாட்டியமாடும்
பெண்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கோயிலிலேயே தங்கி
இறைவனுக்குப் பொட்டுக் கட்டி இறைவனையே தமது தலைவனாக ஏற்று
அவனுக்கு நாட்டிய உபசாரம் செய்வதற்காகவே தமது வாழ்வை
அர்ப்பணித்தனர். இராஜராஜனின் காலத்தில் நூற்றுக்கணக்கான நடனப்
பெண்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்ததாக அறியப்படுகிறது.
பின்னர் ஒழுக்க மீறல்கள் ஏற்பட்டதால் அந்த நடனப் பெண்கள்
தேவதாசிகள் எனப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனமாயினர்.
|