www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

சுட்டாலும் சுட்டார் வெட்டாமல் சுட்டார்

"மெல்லத்தமிழ் இனி இணையத்தில் அலைமோதும்" என்ற தலைப்பில் கட்டுரையொன்று இலங்கையில் நல்ல விலைபோகும் பத்திரிகையின் 25-01-2004 திகதிய வாரவெளியீட்டில் வெளியாகியிருந்தது.சுட்ட கட்டுரையை வெட்டாமல் போட்டதனால் விட்டார்கள் பிழையை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்தியப்பத்திரிகையான தினமணி கதிரில் சுகதேவ் என்பவரால்"இணையத்தமிழ் இனி எப்படி இருக்கும்"என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் முதல் 75 வீதமான பகுதியினை இந்திய ஊடகம் ஒன்றில் சுட்டுத்தாளிக்கப்பட்ட, இன்னும் ஒரு கட்டுரையுடன் அப்படியே அட்சரம் பிசகாமல் ஒட்டி பிரசுரித்திருக்கிறார்கள்.

இதில் இன்னும் ஒரு சிரிப்புத்தரும் விடயம் குறித்த தினமணிக்கதிர் கட்டுரையின் பிறிதொருபகுதியில் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பகுதி புதிய கட்டுரையின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது.அதில் யாரோ துரைபாண்டி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.அவர் யார் என்று  தெரியவில்லை.

இந்தவிடயம் இங்கு முக்கியமான ஒன்றாக குறிப்பிடப்படுவதற்கு காரணம் இருக்கின்றது.கட்டுரை யாரால் எழுதப்பட்டது அல்லது எங்கிருந்து சுடப்பட்டது என்பது எவ்விடத்திலேனும் குறிப்பிடப்படவில்லை என்பதேயாகும்.தகவல்கள் தொகுத்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதில் எமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை.ஆனால் தகவல் முலம் அல்லது ஆசிரியர் விபரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இன்று இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் காணப்படுகின்றன.

தமிழில் தகவல்களை இணையம் மூலம் புலம்பெயர் தமிழர்களும் இந்தியத்தமிழர்களும் தான் பெரும்பாலும் வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.இவை ஈழதமிழர்களை சென்றடைவதில் உள்ள பிரச்சனைகள் யாவரும் அறிந்ததே.இதற்காக கிடைத்தவற்றை சுட்டு அப்படியே ஈழத்தமிழர்களிடையே தீத்துவதற்கு இலங்கையின் சில முன்னணி மக்கள் ஊடகங்கள் வரிந்துகட்டிக்கொண்டிருப்பதை அண்மைக்காலமாக அவதானிக்கமுடிகின்றது.இதற்கு காரணம் பக்கம் நிரப்பும் நோக்கமா?அல்லது படைப்புக்களின் வறுமைத்தன்மையா?அல்லது நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கமா?எது என்று எமக்குப்புரியவில்லை.

இவர்களது இவ்வாறான சுட்டு ஒட்டும் பணிகள் தம்மைத்தவிர(சுட்டான்கள்)ஈழத்தமிழர்கள் ஓருவரும் இணையத்தளங்களே பார்வையிடுவதில்லை,அனைவரும் இவர்களின் பத்திரிகைகளைத்தான் தவம் என்று கிடக்கின்றார்கள் என்ற நினைப்போ?அவ்வாறு நினைத்தார்களாயின் அது மிகப்பெரிய தவறு.குறித்தகட்டுரை எழில்நிலா.கொம்,திசைகள்.கொம்,வெப்தமிழன்.கொம் போன்ற இணையத்தளங்களில் மறு பிரசுரமாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டாலும் சுட்டார்கள் இலங்கையில் மக்களுக்கு ஏற்றவகையில் சிறப்பாக மாற்றியிருப்பார்களாயின் ஓரளவு நன்றாயிருக்கும்.ஓரிடத்தில் மத்திய அரசு மாநில அரசு என்ற பதங்கள் கூட அப்படியே கிடக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அந்தளவுக்கு அவர்களுக்கு இலங்கைத்தமிழர்கள் இளிச்சவாயர்களாகிவிட்டார்கள். .இவர்கள் ஓர் உதாரணமே.இங்கு பல தமிழ் ஊடகங்கள் இதைத்தான் செய்கின்றன.இதற்காக தமிழர்களுக்குள் இந்தியா இலங்கை பாகப்பிரிவினையாக நாம் பேசுகின்றோம் என்று கருதக்கூடாது.

என்னதான் இருந்தாலும் தூயதமிழில் இலக்கிய,மற்றும் இதர படைப்புக்களைப் படைப்பதில் ஈழத்தமிழர்களுக்கு நிகர் எவருமில்லர் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.இதனை இங்குள்ள சில ஊடகங்கள் மாற்றியமைக்க தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றார்கள் என்றே சொல்லவேண்டும்.

இந்நிலை மாறவேண்டும்,ஈழத்தமிழர்களுக்கேற்ற வகையில் தகவல்கள் வழங்கப்படவேண்டும்.சொந்தப்படைப்புக்கள் வரவேண்டும்.இங்குள்ள பிரச்சனைகள் பற்றி முக்கியமாக பேசப்படவேண்டும்.தொழில் நுட்பத்தில் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் இடர்கள் பற்றி ஆராயப்படவேண்டும்.அந்தவிடயத்தில் இணையத்தளங்களைவிட மக்களின் வீட்டு வாசல்வரை செல்லும் பத்திரிகைகள்தான் கூடிய பங்காற்ற முடியும்.சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

-வெப்தமிழன்-

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]