www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா?

இலங்கையில் எப்பொழுது இனவன்முறைகள் ஆரம்பமாகினவோ அன்று முதல் ~~காணாமல் போனோர்|| பெயர்ப்பட்டியலும் தயாராகிவிட்டது.தெற்கில் ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சிகள் இடம்பெற்ற காலத்தில் அப்போதைய அரசுக்கு வெளிப்படையாக, ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் ஜே.வி.பி.யினரால் கடத்தப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு அந்தப்பட்டியல் நீண்டு செல்கிறது.

மாறாக வடக்குக்கிழக்குப் பகுதிகளை சிறிலங்கா இராணுவம் எப்பொழுது ஆக்கிரமிக்கத் தொடங்கியதோ அன்று முதல் இன்றுவரை தமிழ் இளைஞர்கள், யுவதிகள் காணாமற்போதல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.குறிப்பாக யாழ்.குடாநாட்டை சிறிலங்கா இராணுவம் முழுமையாக கையகப்படுத்தியதைத் தொடர்ந்து காணாமற் போதல் என்ற படலம் துரிதமாக அரங்கேறத் தொடங்கியது. 1995 ஆம் ஆண்டு குடா நாட்டை இராணுவம் ஆக்கிரமித்த கையுடன் ஆரம்பமான தேடுதல்கள், சுற்றிவளைப்புக்கள்@ அதனு}டே இடம் பெறும் ~~தலையாட்டி மனிதனின் இலக்குகள்|| என்பவற்றின் மூலம் தமிழ் இளைஞர், யுவதிகள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டனர்.

கைதுகள் அதிகளவில் இடம்பெற்ற அக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் திரும்பிவருவார்கள், ஏன் உயிருடன் இருப்பார்கள் என்று நம்பிக்கை கொள்வது கூட மிகக்கடினமே.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை விட முதலில் சித்திரவதை செய்யப்டுவார்கள் என்று கூறிவிடலாம். சித்திரவதையின் பின்னரே ஏதாவது விசாரணை. கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதையின்றி மீண்டது ஆயிரத்தில் ஒன்றாகவே இருக்கும். கைது செய்யப்பட்டவர்கள் பட்டவேதனைகளும், பட்ட காயங்களும் எழுத்தில் வடிக்க முடியாதவை. பட்ட சித்திரவதைகள் வாய்விட்டுச் சொல்ல முடியாதவை. அந்தளவிற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் இளைஞர், யுவதிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இவற்றில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பட்ட சித்திரவதைகளின் கதை வேறு. ஏ-9 வீதியைத் திறக்கும் நோக்குடன் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையின் போது முல்லைத்தீவு இராணவமுகாம் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் ஓயாத அலை 1 இராணுவ நடவடிக்கை மூலம் தகர்த்தழிக்கப்பட்டது. இதன்போது இராணுவத்தரப்பு பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது.

அதன் எதிரொலியே அப்போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடா நாட்டில், இளைஞர், யுவதிகள் வகைதொகையின்றிக் காணாமற்போன சம்பவங்களாகும். அக்காலப்பகுதியில் பல இளைஞர், யுவதிகள் தொடர்ந்து காணாமற்போய்க் கொண்டிருந்த நேரத்தில்தான் கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலைச் சம்பவம் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. அச்சம்பவம் குடாநாட்டை ஒரு கலக்குக் கலக்கியிருந்தது. சர்வதேசத்தின் பார்வையும் ஒருகணம் குடாநாட்டின் மீது குறிப்பாக செம்மணி மீது திரும்பியிருந்தது.

கிருஷாந்தியின் கொலையை அடுத்து அவரைத் தேடிச்சென்ற நான்கு பேருக்கும் நேர்ந்த கதி குடாநாட்டு மக்களைக் கிலிகொள்ள வைத்தது. அன்று முதல் செம்மணி வீதியால் செல்வதாயின் யாருமே தனியே செல்லத்துணிவதில்லை. அந்த அளவிற்கு குடாநாட்டு மக்களை அச்சம்பவம் வெகுவாகப் பாதித்திருந்தது.அதேவேளை, மேற்படி படுகொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபரான இராணுவச் சிப்பாய் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவம் இன அழிப்பையே மேற்கொண்டது என்பது நிரூபணமாக்கப்பட்டது.

இதற்குச் சான்றாக செம்மணிப்புதைகுழி தோண்டப்பட்டபோது பார்வையாளராகக் கலந்துகொண்ட வெளிநாட்டுப்பிரதிநிதி தெரிவித்த கருத்து இங்கு நோக்குதற்குரியது. 600 இற்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட செம்மணிப்புதை குழியிலிருந்து ஒரு சில எலும்புக்கூடுகளே மீட்கப்பட்டுள்ளன என வெளிநாட்டுப் பிரதிநிதியிடம் கேட்கப்பட்டபோது,குறித்த இடத்திலிருந்து ஒரு எலும்புக்கூடு மீட்கப்பட்டாலும் அது இன அழிப்பிற்கான சான்றாதாரமாக சர்வதேசத்தால் கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்.தவிரவும் செம்மணிப் புதைகுழி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும் அங்கு புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்படுவதாகவும் தோண்டி எடுக்கப்பட் மனித எச்சங்கள் இரவு வேளைகில் எரியூட்டப்படுவதாகவும், அப்போது தகவல்களில் வெளியாகியிருந்தன. அது பற்றி அப்போது எவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

புதைகுழி தோண்டப்பட்டபோது 15 வரையிலான மனித எலும்புக்கூடுகளே மீட்கப்பட்டிருந்தன.இவை ஒரு புறமிருக்க செம்மணிப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதிமன்றில் இடம்பெற்று வந்தபோது சந்தேக நபர்களை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அழைத்து வருவது பாதுகாப்பற்றது எனக் காரணம் காட்டி வழக்கு கொழும்பு நீதி மன்றுக்கு மாற்றப்பட்டது.இப்போது அது விசாரணைகளின்றிக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

கிருஷாந்தி படுகொலைக்குப் பின்னர் சாரதாம்பாள், கோணேஸ்வரி.. என பட்டியல் நீண்டு செல்கிறது. கிருஷாந்தி படுகொலைக்கு முன்னரும் சரி பின்னரும் சரி சந்திக்கு வராத சங்கதிகள் பல உண்டு. அவற்றை மீட்டுப் பார்ப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இளம் பெண்கள் குடும்பப் பெண்கள் என்ற வேறுபாடின்றி தமது இச்சையைத் தீர்க்கும் நோக்கில் இராணுவத்தினர் வீடு புகுந்து பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டனர். எமது சமூகக் கட்டமைப்பின் தோற்றத்தில் அவை வெளிக்கொணரப்படாமல் மூடிமறைக்கப்பட்டன, மூடிமறைக்க நிர்ப்பந்தக்கப்பட்டன.

எத்தனை இளைஞர்கள் தாம்பட்ட சித்திரவதைகளை வெளியில் சொல்லாமல் தமது மனதுக்குள் அடக்கிக் கொண்டர். மோட்டார் சைக்கிள் பிரிவு (பீல்ட் பைக் குறு}ப்) இராணுவத்தினரைக் கண்டால் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை வெளிப்பார்வையில் மதிப்பிட்டுவிட முடியாது. இவற்றிற்கும் மேலாக காணாமல் போய்விட்டதாக அரசினால் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிலர் சித்தப்பிரமை பிடித்த நிலையில் சிறைச்சாலைகளில் இருந்தும் வைத்தியசாலைகளில் இருந்தும் வெளிப்படுவது மனதை நெருடுவதாக உள்ளது.

நீண்ட காலமாக சித்திரவதை, தடுத்துவைப்பு, உறவுகளைச் சந்திக்க முடியாமை, உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்படல் போன்ற பல்வேறு காரணங்களினால் அவர்கள் சித்தப்பிரமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.1996ஆம் ஆண்டு படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் 2002 ஆம் ஆண்டு வவுனியா வைத்தியசாலையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் சித்தப்பிரமை பிடித்த நிலையில் உறவினரால் மீட்கப்பட்டார். இவ்வாறு இடையிடையே காணாமற்போன உறவுகள் மீண்டும் வருவது தமது உடன்பிறப்புக்களைத்தேடும் நெஞ்சங்களுக்குப் பேரதிர்ச்சியாகவும் தமது செல்வங்கள் இவ்வாறு எங்கோ ஒரு மூலையில் இருப்பார்கள் என்ற வீணவாவையும் ஏற்படுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு ~~யுத்தம் தந்த பெறுமதி வாய்ந்த பரிசு சித்தப்பிரமை|| என்று கூறினால் மிகையாகாது. காணாமற் போனவர்கள் திரும்பும்போது சித்தப்பிரமையுடன் திரும்புகிறார்கள். காணாமற் போனவர்களைத் தேடும் உறவுகளும் சித்தப்பிரமை பிடித்தநிலையில் அங்கும் இங்குமாக உறவைத் தேடி அலைகிறார்கள். பெற்ற பிள்ளையைத் தேடும் பெற்றோர், கட்டிய கணவனைத்தேடும் மனைவிபடும் வேதனைகள் சொல்லிமாளாதவை.ஊன் உறக்கமின்றி, தண்ணீர் வெந்நீர் இன்றி, எலும்பும் தோலுமாக அவர்கள் காட்சி தருகிறார்கள். குடும்பத்தில் பிரதான உழைப்பாளியை இழந்த குடும்பங்களின் கதிமிகவும் பரிதாபகரமானது.

தொலைந்த உறவைத்தேடுவதா அரை குறையாகவாவது வயிற்றுப்பாட்டைப் பார்ப்பதா? என்ற சங்கடமான நிலை அவர்களுக்கு. காணாமற் போனவர்களதை; தேடிக்கண்டுபிடிக்க இடையிடையே விசாரணைகள் நடைபெறும் ஆய்வுகளை மேற்கொள்ளபவர்கள் தகவல்களைத் திரட்டிச் செல்வது போன்றே விசாரணைக் குழுவின் விசாரணைகள் நடைபெறும. ஏதாவது முடிவு கிடைக்கும் என்றிருப்பவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கும்.

சில குடும்பங்கள் விசாரணைக்குக் கூடச் செல்வதில்லை. விசாரணை என்ற பெயரில் அந்தக் கொடூரத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த அவர்கள் தயாரில்லை. ~~தொலைந்துபோனவன் போனதுதானே|| விசாரணை நடத்தி என்ன மீட்டாதரப்போகிறார்கள். போனது போனதாகவே இருக்கட்டும் என்று தமது மனதைக் கடினப்படுத்தியவர்களாக அதிலிருந்து மீள முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள்.இவை ஒருபுறமிருக்க காணாமற் போனவர்களுக்கு ஒரு முடிவைப் பெற்றத்தாருங்கள் என்று கோரி யாழ் செயலகம் முன்பாக வருடத்துக்கு நான்கு, ஐந்து தடவைகள் மறியல் போராட்டங்கள் நடைபெறும். மகஜர்கள் சமர்ப்பிக்கப்படும்.

அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும்.அரசியல்வாதிகள் வழமையான பாணியில் உறுதிமொழியளிப்பார்கள். இறுதியில் எதுவும் நடந்தேறுவதில்லை. இதே பாணியில் காணாமற்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தினர் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைச் சந்தித்துப் பேசினர். ஒரு முடிவைப் பெற்றத்தருமாறு கோரினர்.

பிரதமரும் என்ன செய்வது, சரி தென்பகுதியிலுள்ள சகல சிறைச்சாலைகளையும் நீங்களே நேரில் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டார். கொழும்பு, நீர்கொழும்பு, அனுராதபுரம்...... இப்படியே தென்பகுதிச் சிறைச்சாலைகள் அனைத்திலும் காணாமற்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தினர் தொலைந்த உறவுகள் எங்காவது இருக்கிறார்களா? எனத்தேடினர். ஏமாற்றமே அவர்களுக்கு அங்கும் காத்திருந்தது. உயிருடன் இருப்பவர்களும் கால ஓட்டத்தில் காணாமற் போய்விடுவார்களோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்திருக்கவே செய்திருக்கும்.

பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்தமொறகொட யாழ்ப்பாணம் வருகை தந்தபோது காணாமற்போனவர்களின் உறவுகள் அவரைச் சூழ்ந்து கொண்டு கூறிய சோகக் கதைகளும் விட்ட கண்ணீரும் பார்ப்பவர்களை ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.காணாமற்போன உறவுகளின் குடும்பங்களை அந்தத் தாக்கங்களிலிருந்து ஓரளவேனும் விடுவிப்பதற்கு அக்குடும்பங்களை பொருளாதார hPதியில் வளப்படுத்துவதற்கு ஏதாவது இழப்பீடோ அல்லது நிதி உதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இழப்பீடு பெறுவதாயின் காணாமற்போனதாக வழங்கப்பட்ட சான்றிதழ் அவசியம் என்பார்கள். சான்றிதழ் காணாமல் போனால் இழப்பீடுஇல்லை என்று யாழ் அரசஅதிகாரிகள் கூறுவார்களென எதிர்பார்க்கலாம்.

இருபதுவருட யுத்தத்தில் வடக்குக் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சொத்தழிவுகள், உயிரழிப்புகள் என்பனவற்றிற்கு அரசாங்கத்தினால் நட்டஈடாக இதுவரை எதுவுமே கொடுக்கப்படவில்லை. தென்பகுதியில் ஏதாவது இழப்பீடு வழங்கவேண்டி ஏற்பட்டால் முண்டியடித்துக்கொண்டு இழப்பீடு வழங்குவார்கள். தமிழர்கள் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகிறார்கள்.

1983 யூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். கலவரம் இடம்பெற்று சுமார் 20 வருடங்கழிந்துள்ள நிலையிலேயே அது பற்றிய கதை அவிழ்க்கப்படுகிறது.காணாமற்போனவர்கள் இழப்பீடு பெறுவதற்கு இதுபது வருடங்கள் அல்ல நாற்பது வருடங்கள் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏனென்றால் தமிழர்களுக்கு இழப்பீடு வழங்குதென்பது சிங்கள அரசியல்வாதிகளுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.

இலங்கை இராணுவத்தனருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான போரில் காணாமற்போன படையினரது நிலை குறித்து அவர்களது குடும்பங்கள் படும் அவஸ்த்தையும் தவிப்பும் சகித்துக்கொள்ளக்கூடியவையல்ல. கணவனை இழந்த மனைவியாக, பிள்ளைகளை இழந்த பெற்றோராக சாதாரண சிங்கள மக்களும் சொல்லொணாத் துன்பத்தைச் சுமக்கின்றனர்.காணாமல் போன படையினர் எவரும் தம்மிடம் இல்லை. எமது பாதுகாப்பில் இருந்த படையினரையும் காலத்துக்குக் காலம் விடுவித்துள்ளோம், என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.

அரசாங்கம் காணாமற்போன படையினரின் நிலைகுறித்து எந்த விதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வெளியிடத்தயாரில்லை. ஏனென்றால் யுத்தத்தில் உயிரிழந்ததாக தெரிவித்து படைவீரரது சடலம் அவரது வீட்டிற்கு முதலில் அனுப்பிவைக்கப்படும். ஒருவாரம் கழித்தோ அல்லது ஒருமாதம் கழித்தோ சம்பந்தப்பட்ட படைவீரர் விடுமுறையில் வீட்டுக்குச் செல்வார்.... அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். இந்நிலையில் காணாமற் போனவர்களின் நிலைகுறித்து அரசாங்கம் எவ்வாறு உண்மைத்தகவல்களை வெளியிட முடியும்?
காணாமற்போன படையினரைக் கண்டுபிடிக்க ~~காணாமற்போன படையினர் சங்கம்|| என்னும் சங்கமமைத்துத் தேடுகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் யுத்தமானது சிங்களமக்களையும், தமிழ்மக்களையும் சங்கமமைத்து காணாமல் போனவர்களைத் தேடவைத்திருக்கிறது. இத்தேடலுக்கான விடை உண்மையில் மகிழ்ச்சிக்குரியதாக அமையுமா? அல்லது சோகத்தில், ஆறாத்துயரில் மூழ்கடிக்குமா? என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சமாதான முயற்சி வெற்றிபெற்று நாட்டில் சமாதானம் நின்று நிலைக்க அனைவரும் பாடுபட வேண்டும். காணாமல்போனோர் சங்கங்கள் காணாமல் போக அனைவரும் ஒன்றுபடுவோம். போரினால் ஏற்பட்ட வடுக்களையும் அதன் தாக்கங்களையும் ஆற்று.....ப்படுத்த அனைவரும் முன்வருவோம். இதுவே காலத்தால் செய்யக்கூடிய கைங்கரியமாகும்.

Copyrights Reserved by Webtamilan.com© (2002) [Used Font is Unicode]