www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

மானத்துடன் விமானம் ஏறி அவமானத்துடன் திரும்பும் பெண்கள்.

குடும்ப சூழ்நிலைகாரணமாக - சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று பிழைப்பைத்தேடும் பல பெண்கள் பல்வேறு இச்சைகளுக்கு ஆளாகிறார்கள். எஜமானர்களுக்கு ஏற்ப இணங்க மறுத்தால் அடி, உதை, சிகரட் சூடு. இந்த அக்கிரமத்தை வீட்டு எஜமானியிடம் கூறினால் வாயில் சூடுவைக்கின்றாள் எஜமானி.இப்படியான கொடுமைகளுக்கு மத்தியில்தான் பல இளம்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பொண்களாகப் பணிபுரிகின்றனர்.வறுமையின் காரணத்தாலும், குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் எமது பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். பெற்றோரை, பிள்ளைகளை, கணவன்மாரைவிட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்லும் இப்பெண்கள் பல்வேறு கற்பனைகளுடனேயே விமானத்தில் ஏறுகின்றனர்.

சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு பெற்றோரைக் காப்பாற்றலாம். பிள்ளைகளைப் படிக்கவைக்கலாம். வயது வந்த பெண்பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைக்கலாம். தமக்கென ஒரு சிறு வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்ற ஆசைகளுடனும் திட்டங்களுடனும் செல்லும் இப்பெண்களுள் எத்தனை பேருடைய ஆசைகள் நிறைவேறுகின்றன. எத்தனை பேருடைய மனக்கோட்டைகள் தவிடு பொடியாகுகின்றன என்பது வெளியில் தெரியாது.தங்க நகைகளையும், சிலர் வீடுகளையும் கூட அடமானம் வைத்து முகவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து வெளிநாடு செல்கின்றனர்.பணத்தைப் பெற்றுக்கொண்ட முகவர்கள் கட்டுநாயக்காவில் எங்களை விமானம் ஏற்றிவிடடதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர்.விமானத்திலிருந்து இறங்கிய எங்களை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்கத்தேவையில்லை. சாதாரண மனிதர்களாக எங்களை மதித்தாலே போதும்.

முன்பின் வந்திராத, மொழிபுரியாத, வழிதெரியாத நிலையில் விமானநிலையத்தில் இறக்கிவிடப்படும் எங்களை அழைத்துச் செல்ல முகவர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட எஜமான்கள் உடனடியாக வருவதில்லை. அபூர்வமாக ஒரு சிலரே வந்து அழைத்துச்செல்கின்றனர்.இதனால் ஏனையோர் இரண்டு மூன்று நாட்கள் விமானநிலையத்தில் பசியும் பட்டினியுமாக ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். விமானநிலையத்தில் உயிருள்ள ஒரு ஜீவன் என்றே எவரும் எம்மை மதிப்பதில்லை. ஒரு ஜடப்பொருளைப் பார்ப்பது போன்றே பார்ப்பார்கள். ஒருபாடாக குறிப்பிட்ட எஜமானர்களுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் வந்து எம்மை அழைத்துச் செல்கின்றனர்.விமான நிலையத்தில் வாடிவதங்கிப்போய் இருக்கும் எங்களைக் கண்டதும் வீட்டு எஜமானர்களும் அரைகுறை மனதுடனேயே அழைத்துச் செல்கின்றனர். இங்கேதான் ஆரம்பிக்கின்றது எங்களுடைய அடிமை வாழ்க்கை.பலவருடங்கள் அடிமைகள் போன்று பணிபுரிகின்றோம். எந்த ஒரு வீட்டிலாவது நீ சாப்பிட்டாயா, ஏன் சாப்பிடவில்லை? என்று எந்த ஒரு எஜமானியும் கேட்டதில்லை.

நள்ளிரவு இரண்டு மணிவரை வேலைசெய்யவேண்டும். மீண்டும் 4 மணிக்கு எழுந்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். 20 - 22 மணிநேரம் வரை வேலை செய்தே ஆகவேண்டும்.வேலை அசதியினால் சிறிது அமர்ந்துவிட்டாலோ, அல்லது கண் அயர்ந்துவிட்டாலோ கொதிநீர் அபிஷேகம்தான். இவ்வளவும் செய்தும் கூட ஒழுங்கான உணவு கிடைப்பதில்லை. தினமும் சமைத்துக்கொட்டுவோம். அதைப் பார்க்க மட்டும்தான் முடியுமே தவிர ருசி பார்க்கக்கூட முடிவதில்லை.எஜமானி கொடுமைப்படுத்தும்போது எஜமான் எங்களுக்கு ஆதரவாக இருப்பார். அவர் வெளியே சென்றவுடன் அடிஉதை இரும்புக்கம்பி சூடு என்பனதான் எஜமானிடமிருந்து பரிசாகக்கிடைக்கும். மயங்கிவிழுந்தால் சுடு தண்ணீரை மேலே கொட்டுவார்கள்.இப்படியான கொடுமைகளில் இருந்து தப்ப சுவர் ஏறிக்குதித்தால் எங்களைக் கைதுசெய்யும் பொலிஸார் பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் நாம் முன்பிருந்த வீட்டாரிடமே ஒப்படைத்துவிடுகின்றனர்.

மீண்டும் சித்திரவதை. நாங்கள் திரும்பவும் தப்பிவிடாமல் இருப்பதற்காக இரும்புச் சங்கிலியால் கட்டிப் பூட்டுப்போட்டு விடுவார்கள்.முன்பு ஆதரவுகாட்டிய எஜமான்கள் இப்பொழுது தனது திருவிளையாடல்களைக் காட்ட ஆரம்பித்துவிடுகின்றனர். உடல் hPதியாக சில்மிசங்களைச் செய்கின்றனர். உன்னை விலைகொடுத்துத்தான் வாங்கியுள்ளோம். எங்கள் விருப்ப்படிதான் நீ நடக்க வேண்டும் எனப்பலாத்காரம் செய்வார்கள். இப்படி வீட்டு எஜமானர்களால், எஜமானிகளால் பல பெண்கள் நாடுதிரும்ப முடியாமல் தவிக்கின்றனர். கர்ப்பத்தைக் கலைக்க கொடுத்த மருந்துகளினால் பலர் சித்தப்பிரமை பிடித்தவர்களாக தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர்இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கமுடியாமல் உயிர் தப்பினால் போதும் என்று நள்ளிரவு நேரத்தில் தப்பி ஓடி இலங்கை து}தரகத்தை அடைகிறோம். அங்கே என்ன செய்கிறார்கள்? எல்லா விவரங்களையும் பதிந்துகொண்டு சில நாட்கள் நன்றாகப் பலாமரிக்கின்றனர். சவூதி நாட்டுச் சட்டத்தின்படி அங்கே தனியான அகதிமுகாம்களை நடத்த முடியாது.

எனவே, அரசினால் நடத்தப்படும்தடுப்பு முகாமுக்கு அனுப்பிவிடுகின்றனர். இந்த முகாம்களுக்கு து}தரக அதிகாரிகள் கூட வரமுடியாது. இதைத்தடுப்பு முகாம் என்று கூறுவதைவிட சித்திரவதைக்கூடம் என்றும் கூறலாம். அடிமைக்குகை என்றம் கூறலாம். இந்தத் தடுப்பு முகாமைஇப்பெண்கள் அரேபிக் காம்ப் என்று கூறுகின்றனர்.இந்த முகாமுக்குள் வந்து சேர்பவர்கள் தாச்சியில் இருந்து நெருப்புக்குள் விடும் நிலையிலேயே உள்ளனர். அழகான பெண்கள் விலைபேசி விற்கப்படுகின்றனர். தினசரி முகாம் அதிகாரிகளினால் கட்டாயப்பாலியல் வல்லுறவு வேறு.இவற்றுக்கு இடம் கொடுக்காவிட்டால் பட்டினி, அடி, உதை, சித்திரவதை. இணங்கிவிட்டால் மகாராணிபோல் வாழலாம். நாம் அதற்கு இடம்கொடுக்காததனாலேயே இப்படித்துன்பப்படுகின்றோம்.இப்படி இரத்தக்(?) கண்ணீர் வடிக்கின்றனர் இப்பெண்கள்.சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் மஹிந்த சமரசிங்காவின் முயற்சியால் சவூதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களுள் 25பேர் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இப்பெண்கள் கூறிய கண்ணீர்க்கதைகளில் தணிக்கை செய்யப்பட்வைதான் மேலே கூறிய விவரங்கள். இப்பெண்கள் எழுத்தில் எழுதமுடியாத அளவுக்கு கொடுமைகளை அனுபவித்துள்ளனா. பட்டினியாகக் கிடந்து இலங்கையில் செத்துமடிந்தாலும் பாதகமில்லை. சவூதிக்குப் பெண்கள் போகவேகூடாது என்று இவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.நாடு திரும்பிய இப்பெண்களிடம் அவர்கள் பட்ட வேதனையை மீண்டும் மீண்டும் நாம் கேட்டபோது அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனரே அன்றி கதைக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.ஆனாலும், ஒரு சில பெண்கள் தைரியமாகக்கூறிய சில விடயங்களை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் மிகவும் சுருக்கமாகத் தருகிறோம்.

மதிவதனி
இவருக்கு வயது 29 தாயார் இல்லை. தந்தை மட்டுமே. வறுமை காரணமாக தந்தையின் வற்புறுத்தலின் பேரிலேயே சவூதி சென்றேன் என்கிறார் இவர்.~~ஓரு வீட்டில் ஐந்து மாதங்கள் வேலை செய்தேன். ஒருநாள் கூட வயிராற சாப்பிடவில்லை. ஒருமாதச் சம்பளம் தந்தார்கள். அதிலும்மருந்துச் செலவுக்கென பெரும்பகுதியைப் பிடித்துக்கொண்டனர். மீதிச் சம்பளத்தைக் கேட்டதற்கு வாயில் கொதிநீரை ஊற்றினார்கள். கட்டிய துணியுடன் சுவர் ஏறிக்குதித்து தப்பிச் சென்றேன். பொலிஸிலும் அரேபிக் காம்பிலும் பட்ட அவஸ்தையின் பின்பு இலங்கைத் து}தரகம் மூலம் இப்போது இங்கு அழைத்து வரப்பட்டுள்ளேன். இப்பொழுது புசல்லாவைக்கு செல்லப் பயப்படுகின்றேன். ஏன் திரும்பி வந்தாய் என்று என் தந்தை என்னை அடிப்பாரே என்று பயமாக இருக்கிறது என்றார்.

குசுமாவதி
இவர் திருணம் முடித்தவர். ஐந்து பிள்ளைகள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என வெளிநாடு சென்றேன். ஒன்பது வருடங்கள ;சவூதியில் ஒரே வீட்டில் வேலை செய்தேன். இரண்டு வருடச்சம்பளம் மட்டுமே கொடுத்தார்கள். அதன்பின்பு கொடுத்தடிமை போலவே நடத்தினர். (உடலெல்லாம் காணப்பட்ட சூட்டுத் தழும்புகளை இவர் காட்டுகின்றார்) உயிர் பிழைத்தால் போதும் என தப்பிவந்தேன். எனது ஏழு வருடசம்பளப்பாக்கியைப் பெற்றுத்தரவேண்டும் என்றார்.

சரோஜா
இவர் பொலன்னறுவையைச் சேர்ந்தவர். சவூதிக்குச் சென்று ஐந்தே மாதங்கள். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்யவேண்டும். சம்பளம் சாப்பாடு மட்டும் கேட்கக்கூடாது. தினசரி அடிஉதை. இந்த சித்திரவதையைப் பொறுக்கமுடியாமல் தப்பி ஓடினேன். பொலிஸில் ஒருமாதம். அரேபிக் காம்பில் ஒருமாதம். பின்பு இலங்கைத் து}தரகம் மூலம் இங்கு அழைத்து வரப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது. ஐந்து மாதம் வேலை செய்து ஐந்து சதம் கூட இல்லாமல் நாடு திரும்பி உள்ளேன் என்கிறார்.

மன்னாரில் இருந்து அகதிகளாக வந்து கல்கமுவயில் குடியேறிய கே.எம்.முஹாஜிரின் (வயது 31) அவரது மனைவி வை.சி.றிஸாரா (வயது 29) இருவரும் கணவன் மனைவியாகவே சவூதி சென்றனர். அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குழந்தை ஒன்றும் உண்டு. வீட்டு சாரதியாகவும் பணிப்பெண்ணாகவுமே இவர்கள் சவூதி சென்றனர். சாரதியாக சென்றவர் ஆடு மேய்க்க வேண்டும். தினசரி 50 புல்லுக்கட்டுக்களைச் சுமக்க வேண்டும். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே. கணவன் மனைவி ஒரு அறையில் தங்க முடியாது. மனைவியை குசினியில் சங்கிலியில் கட்டிப்போட்டுவிடுவார்கள். மாடாக உழைத்தும் சம்பளம் இல்லை.

மானம் மரியாதை இல்லை. உயிர் தப்பினால்போதும் என இரவோடிரவாகத் தப்பிவிட்டோம். என் கணவர் பாஸ்போர்ட் இல்லாமல் காம்ப்பில் அடைக்கப்பட்டுள்ளார். நான் து}தரகம் மூலம் இங்கு அழைத்து வரப்பட்டேன். என் குழந்தையைப் பார்க்கவேண்டும். கணவன் இல்லாமல் எப்படி வீடு திரும்புவது. எனது கணவனை மீட்டுத்தாருங்கள் இப்படிக்கூறிக் கண்ணீர் வடிக்கிறார். எங்களுக்கு ஊரில் 3 லட்சம் ரூபா கடன் உண்டு. இதை எப்படி அடைப்போம் என்றும் பதறினார்.

நஸீர் பாத்திமா
இவர் புத்தளத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே மூன்றுதடவைகள் சவூதி சென்றுவந்தவர். ஆனால் இம்முறை வகையாக மாட்டிக்கொண்டார். இவருக்கு மொழி தெரியும். சற்றுத்தைரியசாலி. ஐந்து மாதங்கள் வீட்டு எஜமானியுடன் அடிபிடிப்பட்டுக் கொண்டே இருந்தவர். சமயம் கிடைத்தபோது வீட்டு எஜமானியைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவந்துவிட்டார்.இப்படி ஒரு அனுபவம் இதுவரை எற்பட்டதில்லை. அரபு நாடு என்கிறார்கள். முஸ்லிம்களான எங்களுக்கே இந்த சித்திரவதை. அரேபிக் காம்ப்பில் நோன்பு பிடிக்கக்கூட அனுமதி இல்லை. சோற்றுடன் கோழி இறைச்சி என்று தருவார்கள். கிண்டினால் இறைச்சியில் இரத்தம் வடியும். து}க்கி எறிந்துவிட்டு பட்டினியாகக் கிடப்போம் என்கிறார்.
நாடுதிரும்பிய இவர்கள் கூறியகதைகள் அனைவரையும் கண்ணீர் வடிக்கச்செய்துவிட்டன.

தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்தப் பெண்களை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். சகல உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.இப்பெண்கள் தமது சோகக்கதைகளை அமைச்சரிடம் கூறினர். வறுமையின் காரணமாக உழைக்கச்செல்கிறோம் என்பதால் தலை குனிந்து வாழ முடியாது. எதிர்காலத்தில் சவூதிக்குப் பெண்கள் செல்வதைக் குறைத்து ஆண்களுக்கான தொழில் வாய்ப்புகளைப் பெற நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தார் அமைச்சர்.அமைச்சரின் இந்த திட்டம் வெற்றி பெற்றால் நாட்டுக்கும் நல்லது@ நமக்கும் நல்லது.


(நன்றி:சுடரொளி ஜனவரி 07-13-2003)

Copyrights Reserved by Webtamilan.com© (2002) [Used Font is Unicode]