www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி

-டி.சிவராம் (தராக்கி) நன்றி: வீரகேசரி-

'வீரமும் களத்தே போட்டு வெறுங் கையோடு இலங்கை புக்கான்" இது கம்பனின் அழிக்கமுடியா கவிதை வரிகளில் ஒன்று.

கருணாவினுடைய செயல்களை எண்ணும்போது கம்பனின் இவ்வரிகள் என் எண்ணத்தில் தோன்றும்.

நான் மட்டக்களப்பில் வாழைச்சேனையிலிருந்து நீலாவணை வரையும், கொக்கட்டிச்சோலை கரடியனாறு எனவும் ஒரு கிழமையாக பல இடங்களிலும் சுற்றித் திரிந்தேன். அப்போது என்னை ஆங்காங்கு இனம் கண்டுகொண்ட அன்பர்கள், ஆர்வலர்கள், உறவினர்கள் எனப்பலரும் 'உங்களுக்கென்ன பைத்தியமா? கருணா குழுவினர் நீங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்தால் உங்களை கொன்றுவிடுவார்கள்" - என்று என்னிடம் கூறினர்.

மட்டக்களப்பு நான் பிறந்து வளர்ந்த மண். எந்த வெளிநாடு சென்றாலும் மட்டக்களப்பின் வாவியோரம் மாலை நேரத்தில் வீசும் தென்றல் உலகத்தின் எந்த நவீன சொர்க்கங்களிலுமே கிடைக்கப்போவதில்லை. மீண்டும் மீண்டும் அங்குதான் நான் செல்வேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. உலகம் முழுதும் சுழலும் என் பயணங்களின் முடிவு மட்டக்களப்பில்தான்.

சிறீலங்கா வான்படையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆலடிச்சோலையில் நான் புதைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் அவா. என்னுடைய ஆவலை அரசியல் இலாபத்துக்காகவும் சுயநலநோக்கத்திற்காகவும் சிறீலங்கா படைகளுடன் சேர்ந்து தடைசெய்ய முற்படும் எந்த ஒரு அற்ப பதரும் தடுத்துவிடமுடியாது. என்னிடம் மட்டக்களப்பில் இருந்து உடனடியாகப் புறப்படும்படியும் இல்லையெனில் என்னை சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயல்படும் கருணா குழுவினர் கொன்றுவிடுவார்கள் எனவும் கூறிய அனைவரும் ஒரே அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். அவர்களுள் படையினருடன் வேலை செய்யும் முன்னாள் இயக்க உறுப்பினர்களும் அடக்கம்.

மட்டக்களப்பில் புலிகளுக்கு எதிரான பல இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. அவர்கள் எவருமே (ராசிக் உட்பட) மட்டக்களப்பிலிருந்து பெரும்பாலான பத்திரிகையாளர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு அராஜகம் புரிந்தவர்கள் அல்லர். ஆனால் இன்று பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் கூட அபிப்பிராய பேதமின்றி 'கருணா என்றால் பத்திரிகையாளர்களை கொன்றழிக்கும் அல்லது மிரட்டியடிக்கும் பேர்வழி" என கூறுகின்றனர்.

வடக்கிலே சிறீலங்கா படைகளை விரட்டியடித்த புலிகளின் சிறப்புமிக்க கட்டளைத் தளபதியாக வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் ஏன் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்ட கருணா, கேவலம் இன்று நிராயுதபாணிகளான தம் எழுத்தைத் தவிர எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாத நடேசன் போன்ற எழுத்தாளர்களை கொலைசெய்கின்ற ஒரு நபராகவும், துரைரட்ணம், சண். தவராசா, வேதநாயகம் ஆகிய மட்டக்களப்பு எழுத்தாளர்களை கொலை செய்ய திட்டமிடும் சிறீலங்கா இராணுவ புலனாய்வுத்துறையின் இன்னுமொரு கையாளாகவும் மட்டக்களப்பு மக்களால் கருதப்படுகின்ற நிலைக்கு இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது.

வீரம் விளைந்த நிலமென்று கருணாவால் புகழாரம் சூட்டப்பட்ட மட்டக்களப்பு மண் சிறீலங்கா இராணுவத்திற்கு இன்னுமொரு கைக்கூலியை கொடுத்துவிட்டோம் என வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.

மட்டக்களப்பு மண்ணின் விடுதலைக்காக என கருணா எதைச் செய்திருந்தாலும் அதை இரண்டாம் பேச்சிற்கு இடமின்றி முன்னின்று ஆதரித்திருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான மண்ணின் மைந்தர்களில் என்னையும் கணக்கில் எடுக்கலாம்.

ஏனெனில் மட்டக்களப்பு மண்ணின் விடிவுபற்றி கருணாவிற்கு திடீரென ஞானோதயம் தோன்றுவதற்கு சரியாக 22 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிற்கென தனி இயக்கம் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். என்னுடைய வீட்டிலிருந்த துப்பாக்கிதான் மட்டக்களப்பு கச்சேரியில் 200க்கு மேற்பட்ட ஆயுதங்களை அபகரித்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரே ஒரு ஆயுதம் (எங்களுடைய செயல்பாடுகளை அறிந்து மிரண்ட என் தாயார் அத்துப்பாக்கியின் தோட்டப்பெட்டிகளை மறைத்ததும் பின்னர் எமக்கெல்லாம் அன்புடன் உணவளித்ததும் மறக்கமுடியாத வேறுகதை)

நாங்கள் இவ்வாறு மட்டக்களப்புக்கென இயக்கம் தொடங்கிய காலத்தில் ஏதும் அறியா பாலகனாக பா. சின்னத்துரையுடன் புறப்பட்டுச் சென்று புலிகளோடு இணைந்து இந்தியா சென்ற கருணா திடீரென மட்டக்களப்பு பிரதேசவாதம் என்ற ப10ச்சாண்டியை கிளப்புவது எனக்கு விநோதமாக இருக்கின்றது.

மட்டக்களப்புக்காகப் போராடவேண்டும்; அந்த மண்ணிற்காக பல வேலைகளைச் செய்யவேண்டும்; சிங்களப் பேரினவாதத்திலிருந்து அதன் எல்லைகளைக் காக்கவேண்டும் என்ற இலட்சியவெறியோடு எங்களுடைய இயக்கம் அன்று இயங்கியது. இதற்கென எங்களுக்குத் தேவையான பல முக்கிய வரைபடங்களை தந்துதவியவர் எனது அன்பு நண்பர் ஞானரதன். பிடிபட்டால் தனக்குத் தொழில் இல்லை. ஒய்வூதியம் இல்லை என்பதை நன்றாக தெரிந்தும்கூட பயமின்றி உதவிசெய்த அந்த அன்பனை நான் என்றும் மறக்கமுடியாது.

எமது மட்டக்களப்பு இயக்கத்தின் உயிர்நாடியாக இருந்தவன் சுரேஷ் என்றும் பின்னர் பயஸ் என்றும் அறியப்பட்ட எனது அன்பு நண்பன். என்னுடைய வீட்டில் பலநாள் பதுங்கி வாழ்ந்தவன். இன்று கனடாவில் வாழ்கின்ற 'கல்லடியான்" தங்கவடிவேலைக் கேட்டால் சுரேஷைப்பற்றி இன்னும் பல கதை சொல்வான். எங்களுடைய மட்டக்களப்பு இயக்கத்தின் உயிர்மூச்சாக இருந்த சுரேஷ் ஒரு யாழ்ப்பாணத்தான் போராளி இயக்கம் என்றாலே நடுத்தர வர்க்கங்கள் பயந்து ஒதுங்கிய காலத்தில் தன்னுடைய தொழிலையும் குடும்பத்தையும் சிந்தியாது எமக்குதவிசெய்த ஞானரதன் ஒரு யாழ்ப்பாணத்தான். சுரேஷ் பின்னர் புலிகளில் இணைந்து இந்தியா சென்று பயிற்சிபெற்று மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து 1985ஆம் ஆண்டு மாவீரனாகிப் போனான்.

மட்டக்களப்புக்கென்று நாங்கள் இயக்கம் தொடங்கியபோது எங்களிடம் தன்னம்பிக்கையையும் மண்வெறியையும் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. மட்டக்களப்பில் நெடுஞ்சாலைத் திணைக்களத்தில் இருந்த வெடிக்கவைக்கும் கருவியை (Exploder) எடுக்கச்சென்றபோது எங்களிடம் ஒரு பாண் வெட்டும் கத்தியையும் ஒரு சிறுகட்டுக் கயிறையும் தவிர எதுவுமே இருக்கவில்லை. எங்களிடம் இருந்தது மாவீரனாகிப்போன சுரேஷ் தந்த தன்னம்பிக்கை மட்டும்தான். ஆனால், மட்டக்களப்பு மண்ணின் நன்மைக்காக புலிகளிடமிருந்து பிரிகின்றேன் என்று கூறிய கருணாவிடம் இருந்த வளங்களுக்கு அளவுகணக்கில்லை. ஆனால் நடந்தது என்ன?

தனியாகப் போகின்றேன் என கருணா பிரகடனப்படுத்தி நான்கு நாட்களின் பின்னர் கொழும்பில் ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று பதிவுசெய்யப்பட்டது. நிறுவனத்தின் பெயர் 'மகாஜால ஏற்றுமதி இறக்குமதி கம்பனி" பதிவிலக்கம்:N (PVS) 36846 பதிவுசெய்யப்பட்ட திகதி: 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி. இதற்கான ஆவணங்களை தயார்செய்தவர் சட்டத்தரணியும் நொத்தாரிசுமான எஸ். துரைராஜா இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வித்யாபதி முரளிதரன், நிர்வாக முகாமையாளர் கந்தையா சந்திரசேகரம் கல்லடியைச் சேர்ந்தவர். வித்யாபதியின் தந்தை, வித்யாபதி என்பது கருணாவின் மனைவி நிராவின் சொந்தப் பெயராகும்.

மட்டக்களப்பிற்காக அதன் மக்கள் மீது கொண்ட அக்கறைக்காக - விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிகின்றேன் எனக்கூறிய கருணா ஏன் தன் மனைவியின் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் தொடங்கவேண்டும்?

தனது மனைவியின் பெயரில் இரண்டரைக் கோடி ரூபாவை வெள்ளவத்தையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏன் வைப்புச் செய்யவேண்டும்? இது மட்டுமன்றி மட்டக்களப்பில் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தும் முதலாளி ஒருவரிடமிருந்தும் பெறப்பட்ட மூன்று கோடி ரூபாவை கருணா என்ன செய்தார்?

மட்டக்களப்பு மீது பேரன்பு இருந்திருந்தால் மேற்படி கோடிக்கணக்கான பணத்தை அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழை விதவைகளுக்கு வழங்கியிருக்கலாமே!

கருணாவிற்கு உதவிசெய்து தங்கள் சொத்துக்களையும் வாழ்வையும் இழந்த எத்தனையோ அன்பர்கள் இருக்க தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அலிஸாஹிர் மௌலானவை மட்டும் ஏன் கருணா நம்பவேண்டும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகள் உண்டு.

என்னைக் கொல்வது அவற்றிற்கு மறுமொழியாகிவிடாது. வெளிநாட்டு வானொலிகளுக்கு அறிக்கை விடுவதை விடுத்து மட்டக்களப்பு மக்களுக்கு விளக்கம் அளிப்பது கருணாவின் கடமை. ஆனால், அதற்கு அவருடைய போசகர் இடமளிப்பாரா என்பது கேள்விக் குறி.

போன கிழமை நான் ஆங்கிலத்தில் 'டெய்லி மிரர்" பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையின் தழுவல் என என்னுடைய பெயரில் (தராக்கி) வீரகேசரி வாரவெளியீட்டில் ஒரு ஆக்கம் வெளியாகியிருந்தது. இதில் நான் எழுதாத சில விடயங்களும் எனது ஆங்கில நடையை சரியாக புரிந்துகொள்ளாமையால் ஏற்பட்ட தவறுகளும் இடம்பெற்றுள்ளன. எனது மூலக்கட்டுரைக்கு முரணான சில அபிப்பிராயத்தை மேற்படி தமிழ்த்தழுவல் ஏற்படுத்தியதையிட்டு நான் மனம் வருந்துகிறேன்.

எனது ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்க்க விரும்பும் அன்பர்கள் அகராதியை மட்டும் துணைக்கொள்ளாமல் ஆங்கில வழக்காறுகளையும் (idioms) கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

கைக்கு எட்டியும் வாய்க்கெட்டாத யாழ் நூலகம்

-யாழில் இருந்து குரு (மூலம்:சூரியன்.கொம்)

குடாநாட்டு மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டு போகின்றமை இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் யாழ் நூலகத்தின் நிலை மிகவும் வேதனைக்குரியது.
யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்தவர் கல்வி, பச்சையான இனத்துரோகம் என்றெல்லாம் கதைக்கும் போது எவருக்கும் உடன் மனதில் தோன்றுவது யாழ் பொது நூலகம். இதன் வரலாறு, இதற்கு பின்னால் உள்ள அரசியல் உலகத்தமிழர் யாவரும் அறிந்ததே இருப்பினும்....

முக்கியமாக அனைவரின் மனதில் இருக்கவேண்டியவை

1. அன்றைய நாட்களில் தென்ஆசியாவில் மிகப்பெரிய நூலகமாக விளங்கியது யாழ் நூலகம்

2. மறைந்த ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் காமினி திசானாயக்காவின் நேரடி வழிநடத்தலில் தீ மூட்டி எரிக்கப்பட்டதுடன், யாழ் நூலகம் தமிழர்களின் அறிவியலோடு மட்டுமல்லாது அரசியலிலும் புகுந்து கொண்டது.

3. இலங்கை ஜனாதுபதி சந்திரிக்கா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம், புத்தகமும் செங்கல்லும் என்ற திட்டத்தின் ஊடாக எரிந்த நூலகம் மீண்டும் சிங்கள அரசால் அரசியலுக்காகப்பயன்படுத்தபட்டது.

4. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தினை திறப்பதற்கு முன்னாள் மாநகர சபை ஆணையாளர் செல்லன் கந்தையாவையும் அவரது குலத்தையும் இணைத்து ஆனந்தசங்கரியார் நடாத்திய அரசியலும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது 2004ம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி (தகவல்- நூலக தகவல்ப்பிரிவு) யாழ்பொது நூலகம் பகுதி நேரமாக மாணவர்களின் நன்மை கருதி திறந்து வைக்கப்பட்டது.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க யாழ்ப்பாணத்தில் கால் ஊன்றுவதற்கு கடந்த சில காலமாக முயன்று வரும் அமெரிக்கா, தனது தகவல் மையத்தை யாழ் பொதுநூலகத்தை திறப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நூலகம் பொதுமக்களின் பாவனைக்காக முழுநேரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நூலகத்தில் குறையற்ற விதத்தில் அனைத்து வசதிகளும் உண்டு என்று சொல்லலாம்.

1. பொதிகள் வைப்பதற்கான பகுதி, முழுநேர காவலாளிகள்.
2. தகவல் பகுதி
3. சஞ்சிகைப்பகுதி, பத்திரிகைப்பகுதி ஒன்றாகவும்
4. இரவல் வழங்கும் பகுதி
5. மலசல கூடம்
6. சிறுவர்பகுதி
7. நிர்வாகப்பகுதி
8. உசாத்துணைப்பகுதி
9. கேட்போர் கூடம்
10. ஒடியோ, வீடியோ பகுதி
11. குளிரூட்டப்பட்ட கணினிப்பகுதி (இன்ரநெற் வசதிகளுக்காக)
12. நூலகத்தினைச்சுற்றி அழகான பூந்தோட்டம்.

என முழுமையான வசதிகளுடன் உள்ளது யாழ் நூலகம்.
சாதாரணமாக 50 ரூபா செலுத்தி அங்கத்துவம் பெறுவதன் மூலம் நூலகத்தின் பல பகுதிகளை உபயோகப்படுத்தலாம். (இன்ரநெற் உபயோகப்படுத்த 30 ரூபா அறவிடப்படுகின்றது.)

இங்குள்ள இன்ரநெற் இணைப்பானது சாதாரண டயலப் இணைப்பாகும். லீஸ் இணைப்பு குடாநாட்டில் வழங்க முடியாமல் இருப்பதகாவும் கூறப்படுகின்றது. இருப்பினும் பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு பெற்று வியாபாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. (நூலகம் திறந்தபின் இரண்டு தனியார் நிறுவனங்கள் இன்ரநெற் பாவனைக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.) மேற்படி காரணத்தால் நூலகத்தில் இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்வது மிகவும் மெதுவான செயற்பாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கத்தவராக இணைபவர் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவராயின் 300 ரூபாவும் மாநகரசபைக்கு வெளியில் வசிப்பவர் எனின் 600 ரூபாவும் செலுத்தி இரவல் வழங்கும் பகுதியில் அங்கத்துவம் பெறமுடியும்.

இதேபோல் சிறுவர்களுக்கு 175 ரூபா செலுத்தி அங்கத்துவராக முடியும்.

மேற்படி தகவல்களோடு பின்வருவன முக்கியமானவை

1. நூலகத்தால் வழங்கப்படும் அங்கத்துவத்திற்கான விண்ணப்படிவத்தில் 30 ரூபா அல்லது 50 ரூபா அங்கத்துவப்பணம் எனவும் 100 ரூபா வைப்புப்பணமாகவும் அச்சிடப்பட்டுள்ளது ஆனால் அறவிடப்படுவது அங்கத்துவம் -300 ரூபாவும் வைப்புப்பணம் - 300 ரூபாவும் மொத்தம் 600 ரூபா.,


2. பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு எடுத்து வியாபாரத்தில் ஈடுபடும் போது பொது நூலக்திற்கு லீஸ் இணைப்பு எடுக்க முடியாமல் போனது ஏன் ?

3. நூலக்தினைப்பராமரிப்பதற்கு நூலக நிர்வாகத்தினரால் மாதாந்தம் 500 000.00 (ஐந்து லட்சரூபா) உத்தியோகத்தர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களாவர்கள், இவர்களைத்தவிர பெருந்தொகைப்பணம் எவ்வாறு பராமரிப்பிற்கு மட்டும் செலவாகின்றது ? (மேற்படி தொகை மின்சாரம், தொலைபேசி, பூந்தோட்டப்பராமரிப்பு என்பவற்றிக்கு மட்டும் என அறியக்கிடக்கின்றது.)

நூலகத்தின் கட்டண அதிகரிப்பு காரணமாக கற்றலில் ஆர்வமுள்ள பல வறிய மாணவர்கள் இன்னும் அங்கத்துவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய பல ஆசைகூட இன்று தான் நிறைவேறியது.

13.07.2004 ம் திகதியில் உள்ள மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 0064 ஆகும்.



நூலக்தின் ஆடம்பரத்தினால் செலவாகும் பணத்தினை அங்கத்துவப்பணத்தினை அதிகரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறிய முன்னாள் துணைவேந்தர் என்ன காரணத்திற்காக அங்கத்துவப்பணத்தை அதிகரிக்கச் செய்தார் ?(அங்கத்துவப்பணம் 600 ரூபாவாக அமுல்படுத்தலில் பல வாக்குவாதங்களுக்கு மத்தியில் முன்நின்று உழைத்தவர்)




குறிப்பிட்ட முன்னாள் துணைவேந்தர் காலத்திலேயே பல்கலைக்கழகத்தில் பல கல்விச்சீர்கேடுகளும் (வெளிவாரிப்பட்டப்படிப்பில்), பல நிர்வாக மோசடிகளும், இன்னும் பல கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை யாழ் நூலகத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் சமயப்பெரியவர்கள் , கல்விமான்கள் குடாநாட்டிலுள்ள மாணவர்களை நூலகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யாமை மனவருத்தத்திற்கு உரியது. இது வரை காலமும் மாணவர்களின் கல்வி பற்றிச்சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்திருக்க சந்தர்பம் இல்லாதிருந்திருக்கலாம். இனிவரும் காலங்களில் நூலகத்தினை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் மாணவர்கள், பொதுமக்களின் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நாடாத்தி மாணவர்களையும் மக்களையும் நூலகங்கள் நோக்கி நகர்த்துவார்களா ?

குடாநாட்டில் பல முக்கிய பணிகளில் கடமை புரியும் பலர் தமது நாளாந்த வேலைகளை (தமக்கே உரிய வேலையை) செய்யாமல் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதும், தமது சொந்த நலனுக்காக பொதுமக்களின் வாழ்க்கையை அன்னியரிடம் அடகுவைக்கும் விதத்தில் நடந்துகொள்வதும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த நிலைமாறுமா ?

அல்லது
இவர்களை பெரியவர்களாக எண்ணி ஏமாந்துபோகும் அப்பாவி பொதுமக்கள் இவர்களின் சுயரூபங்களை அறிந்துகொள்வார்களா ?

காலம் பதில் சொல்லும்வரை காத்திருக்கமுடியுமா ?

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

வேலிகளை நம்பியிருக்கும் பயிர்கள் ?

- யாழில் இருந்து குரு   -(மூலம்:சூரியன்.கொம்)
"...அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்று படத்தில் உள்ளவாறான தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றது என்றும் இல்லாதவாறு மற்றய குடாநாட்டு தினசரிகளில்  இல்லாத இந்தப்புதிய அம்சம் பலருடைய மனதிலும் ஒரு நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றது .
ஏன் இந்த பிரிவினை ?வெளிநாட்டுச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், அயல்நாட்டுச்செய்திகள் எனப்பலவகையாக தலைப்பிடப்பட்டு வெளிவரும் செய்திகள் இதுவரை காலமும் ஏற்படுத்தாத தாக்கத்தை படத்தில் உள்ளவாறான தலையங்கம் ஆய்வாளர் பலரின் மனதில் பல கேள்விகளை உருவாக்கின்றது. அவற்றில் கிழக்கில் நடந்து முடிந்த பாகப்பிரிவினை போல் குடாநாட்டில் இன்னுமொன்றை தோற்றுவதற்கான முன் ஏற்பாடா என சந்தேகிக்கத்தோன்றுகின்றது 
 
!..." நாடு, மக்களுக்கான நல்லாட்சி, நீதி இவை எல்லாம் ஒரு சமூகத்தில் முக்கியமானவை இவை உட்பட இன்னும் பல விடயங்களை திருவள்ளுவர் தமது  நூலில் மிகத்தெளிவாக கூறியுள்ளார். இதே போலவே ஒளவையாரும் உலகில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் ஆரோக்கியமான, சந்தோசமான சமூக வாழ்வு வாழலாம் என தமது செய்யுள்களில் கூறியுள்ளார். எனினும் பண்டைய காலத்தில் தற்போதுள்ள பத்தரிகைகள், வானெலிகள், இணையத்தளங்கள் போன்ற மக்கள் தொடர்புசாதனங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை ஆகையால் இவற்றைப்பற்றி தமது கருத்துக்களை நேரடியாக எந்த குறளிலோ அல்லது செய்யுளிலோ குறிப்பிடவில்லை.

ஒரு தலைவனின் கட்டளைக்கு உட்பட்ட மன்னராட்சியில் அரசன் தொடக்கம் சாதாரண குடிமக்கள் வரை சகலருக்குமான பொறுப்புக்கள் கடமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
தற்போதைய ஜனநாயக ஆட்சியில், உலகில் பெருகிவருகின்ற சனத்தொகையால் ஆட்சியில் இருப்பவர்களால் மக்களை காணவோ அல்லது மக்கள் மந்திரிகளைச் சந்திக்கவோ சந்தர்பங்கள் கிடைப்பதில்லை. இதனால் ஊடகங்களின் தேவை அதிகமாகவே இருக்கின்றது. இந்த ஊடகங்களை பலரும் பல விதமாக பாவிப்பது தவிர்க்க முடியாதது. உதாரணமாக கத்தியை ஆக்கபூர்வமான வேலைகள் பலவற்றிக்கும், அழிவுக்கும் பயன்படுத்துவது போல ஊடகங்கள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று ஊடகங்கள் ஆற்றும் முக்கிய பணிகளாக

1. தகவல்களை வழங்குவது
2. சில ஆய்வாளர்களின் ஆராய்ச்சி மூலம் அரசியல், பொருளாதார சமூக எதிர்வுகூறல்களை செய்து சாதாரண பாமரமக்களையும் இன்றைய கால ஒட்டத்திற்கு ஏற்ப தயார்ப்படுத்துவது.
3. பொழுதுபோக்குவதற்கும் பயன்படுகின்றது.
மேற்கூறப்பட்டவை அனைத்து அம்சங்களையும் சாதாரணமக்களும் அறிவார்கள் இருப்பினும் உடகங்கள் பற்றிய சிறிய அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இந்த ஊடகங்கள் என்ன செய்கின்றன ? என ஒவ்வொரு தமிழரும் முக்கியமாக அறிந்து வைத்திருக்கவேண்டியது கட்டாயமாகும்.
1. எல்லாமே சம்பவங்களுக்கு வெறும் சாட்சிகளாக  (எல்லாம் முடிந்தபின்பே ஒப்பாரிவைத்து கூக்குரல் இடுபவர்களாக) இருப்பது; 
2. மக்களிடையே கருத்தை உருவாக்குவது. (நல்ல கருத்தைச்சொல்லி நல்ல வழியிலும் உண்மைகளைத் திரித்து பொய்த்தகவல்கள் மூலம் மக்களை வேறு திசையில் திசைதிருப்புவற்கு ஏற்ற விதத்தில் கருத்துக்களைப்பகிர்வது).

மிகமுக்கியமாக சில வேலைகளை மறைமுக செய்வதன் மூலம் மக்களிடையே பொதுவான கருத்தை தோற்றுவித்து சிலருக்கு அரசியல் இலாபம் தேடிக்கொடுப்பவர்களாகவும் இருக்கின்றன. இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் ஊடகங்களின் இரண்டாவது விடயத்தை ஆராய்வது மிகப்பொருத்தமாகும்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்று படத்தில் உள்ளவாறான தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றது என்றும் இல்லாதவாறு மற்றய குடாநாட்டு தினசரிகளில்  இல்லாத இந்தப்புதிய அம்சம் பலருடைய மனதிலும் ஒரு நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றது . 
 
ஏன் இந்த பிரிவினை ?
வெளிநாட்டுச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், அயல்நாட்டுச்சொய்திகள் எனப்பலவகையாக தலைப்பிடப்பட்டு வெளிவரும் செய்திகள் இதுவரை காலமும் ஏற்படுத்தாத தாக்கத்தை படத்தில் உள்ளவாறான தலையங்கம் ஆய்வாளர் பலரின் மனதில் பல கேள்விகளை உருவாக்கின்றது. அவற்றில் கிழக்கில் நடந்து முடிந்த பாகப்பிரிவினை போல் குடாநாட்டில் இன்னுமொன்றை தோற்றுவதற்கான முன் ஏற்பாடா என சந்தேகிக்கத்தோன்றுகின்றது !

மேலும் இச்சந்தேகத்தை வலுப்படுத்தக்கூடிய பல சம்பவங்கள் குடாநாட்டிலும் வன்னியிலும் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவே பத்திரிகையாளன் என்றவகையில் என்னுடைய அவதானிப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக
1. குடாநாட்டில் கடைகளில், சந்திகளில் மக்கள் ஏதாவது கதைக்கும் போது (அபிவிருத்தி சம்பந்தமாக) 'புலி இப்ப வன்னியை தான் கட்டி எழுப்புது, உலக நாடுகள் கொடுக்கிற காசில சொட்டுக்கூட இங்கால வராத போல கிடக்கு" என உணர்ச்சி வசப்படக்கூடிய சாதாரண மக்கள் தமக்குள் முணுமுணுப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. (அவர்களால் உண்மைத்தன்மைகளை பிரித்தறியம் ஆற்றல் இல்லாதிருப்பதும், படித்தவர்கள் சொல்கின்ற கருத்தில் பிழையில்லை என்ற நம்புகின்ற மனோபாவமும் சிலருக்கு வாய்ப்பாக அமைகின்றது.)

இந்த மாதிரியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் சிலர் திட்டமிட்டு பரப்புவதாகவே அறியக்கிடக்கின்றது. அதாவது குடாநாட்டு மக்களின் பலவீனம், தனக்கு அருகில் இருப்பவர் மீது இலகுவில் நம்பிக்கை வைப்பதாகும். அப்பாவி பொதுமக்கள் தனக்கு பக்கத்தில் இருப்பவர் சொல்கின்ற கருத்தின் உண்மைத்தன்மையை அறியாது அப்படியே ஏற்றுக்கொள்வதால் திட்டமிட்டு கருத்துப்பரப்புவர்களுக்கு இது வாய்ப்பாக அமைகின்றது.
அது மட்டுமல்ல சில பேராசிரியர்கள், பேச்சாளர்கள் வகுப்பறையில், மேடையில் பேசுகின்றபோது தமிழ் தேசியத்தின் மீது விசுவாசமாகவும் வகுப்பிற்கு வெளியே, மேடையை விட்டு இறங்கி முதற்சொன்ன கருத்துக்களுக்கு முரணாக மாற்றுக்கருத்துக்களையும் கூறுகின்றமையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதனால் வகுப்பில் மேடையில் கூறிய கருத்துக்களிலும் பார்க்க சாதாரண நிலையில், கேட்பவனுக்கு மிகஅன்னியொன்னியமாக கூறப்படும் கருத்துக்கள் மிக வீரியமாக மக்களிடையே வேகமாகப்பரவி மக்களின் மனங்களில் மயக்கங்களையும், போதமையையும் உருவாக்கின்றன.

பல்கலைக்கழகத்தில் சில குறிப்பிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் விடும் தவறுகளுக்கு அவர்களுடைய பிரதேசங்களைக்கூறி து}ற்றுவததையும் அவதானிக்க கூடியதாகவும் (அவர்களுக்கு நேருக்கு நேர் சொல்லாமல் மறைமுகமாக உரியவர்களின் காதினில் சென்றடையும் வகையில் சொல்லப்படுகின்றன. இந்த மாதிரியான செயற்பாடுகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு இருந்தமைக்கான அறிகுறிகளோ காணப்படுகின்றது.)
2. கிளிநொச்சி போன்ற இடங்களில் வெளிநாட்டு உதவி நிறுவனங்களில் பணிபுரியும் சில மேலதிகாரிகள் செயற்கையாக அங்குவாழுகின்ற மக்களில் அனுதாபப்படுவதும் அதேவேளை யாழ்ப்பாணத்தவர்களை செயற்கையாகவும் அபரவிதமாகவும் திட்டித்தீர்ப்பதையும் நேரடியாக அனுபவத்திருக்கின்றேன்.
இச்செயற்பாட்டின் மூலம் கருத்துச்சொல்லியவரின் திட்டமிட்ட செயல் இலகுவாக அவர் சார்ந்தவரூடாக எனைய சாதாரண மக்களுக்கு பரவுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

வெளிநாட்டு சதிகாரர்கள் நம்மவர்கள் சிலரை நன்கு பயிற்றுவித்து தமிழர் தாயகம் எங்கும் ஊறுவிளைவிப்பதற்காக செயலில் இயக்கியுள்ளமை ஆராச்சிக்கண்களுக்கு புலனாகின்றது. பெரிய செயற்திட்டம், பகுதி பகுதியாக பல பேர்களுடாக சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவது வெளிநாட்டவர்களின் தனிப்பாணி. இவற்றை சாதாரண பொதுமகனும் அறிந்து வைப்திருப்பதாலேயே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் மீது ஏவத்திட்டமிட்டிருக்கும் சதிகளை இலகுவில் முறியடிக்க முடியும் .
அப்பாவி மக்களின் மனங்களில் திட்டமிட்டு விதைக்கப்படும் சில கருத்துக்கள் எதிர்காலத்தில் பல பாரிய விளைவுகளை தோற்றக்கூடியவை எனவே முதலில் பத்திரிகைகள், செய்தித்தயாரிப்பாளர்கள், தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் தம்மை சுயபரிசோதனை செய்து தாம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள் என்பவற்றை திருத்திக்கொள்ளவேண்டும்

தொடர்ச்சியாக தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சதிகளை அறிந்த ஆராய்ந்து மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் அறியாமல் செய்தால் அது தவறு, அதனையே அறிந்து செய்தால் குற்றம். கடந்த காலங்களில் நிகழ்ந்தைப்போல தமிழ்மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற சதிகள் எதிர்காலத்தில் உருவாகுவதை அறிந்தும் அறியாதவராக உணர்ந்தும் உணராதவராக, மேலும் தெரிந்தும் தெரியாமலும் துணைபோவதனை நிறுத்துவதன் மூலம் உரியவர்கள் தங்களை வரலாற்றுப்பழியில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம்.

அமெரிக்க ஆட்சியாளருக்கு தலையிடித்தால் அப்பாவி ஈழத்தமிழன் ஆஸ்பத்திரிக்கு போக முடியமா ?
வேலிகள் போல் இருப்பவையே பயிரை மேயுமா ?



அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

தமிழன் என்பது மட்டுமல்லசிங்களவனும் அல்ல

-மூலம்:நமது ஈழநாடு-

அண்மையில் யாழ்.பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பேராசிரியர் அ.துரைராஜா நினைவு நிகழ்வில் பேராசிரியர் ரத்னஜீவன் ஹேபர்ட் ஹீல் கலந்து கொள்வதை எதிர்த்தது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை குடாநாட்டுப் பத்திரிகையொன்று படங்களுடன் செய்தி யாக வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தி பொய்யென்றும் புகைப்படங்கள் போலியானவையொன் றும் தனது பெயரைக் ஹேபர்ட் என்பதற்குப் பதிலாக றொபட் என்று போட்டி ருந்ததையும் குறிப்பிட்டு, மறுப்புக் கடிதம் ஒன்றை ஹல் எழுதியிருந்தார்.வழமை போலவே ஹல் பிரச்சினையின் மையத்தைத் தொடாமல், நடுப்பெயரைத் தவறாக எழுதிவிட்டது போன்றவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்குபவராகக் காணப்படுகின்றார்.

தனக்கெதிராக எழுதப்படும் விட யங்களுக்குப் பதிலளிக்காமல் செய்தி யிலுள்ள அற்ப தவறுகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவது இது தான் முதல் தடவையல்ல.04.04.2003 அன்று வன்னியில் இருந்து வெளியாகும் "வெள்ளி நாதம்" பத்திரிகையில் UTHR-J என் பவர்கள் யார்? என்ற கட்டுரையில் இவர் குறித்த பல உண்மைகள் புட்டுக் காட்டப்பட்டிருந்தன.

i) 30 க்கு மேற்பட்ட UTHR-J இன் அறிக்கைகளைத் தயாரித்து வழங் கியதில் இவர் பிரதான பங்கு வகிக்கிறார்.

ii) யாழ்.பல்கலை ஆசிரியர்கள் எவருமே அங்கம் வகிக்காத "றோ" வின் ஊடுருவல் காரணமாக 1989ஆம் ஆண்டுகளிலேயே கலைக்கப்பட்டு விட்ட UTHR-J அமைப்பின் பெயரைக் குடாநாட்டுக்கு வெளியில் இருந்தே இவர் வசதியாகப் பயன்படுத்துகிறார்.

iii) "றோ"வின் ஊடுவல் காரணமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர், இந்தியாவுக்கு எதிராகக் குரல் எழுப்பிப் புகழ்பெற்ற ரத்னஜீவன் ஹல் தான்.
iv) ஐந்து வருடங்களாக தீவிர யுத்த நடவடிக்கையில் ஊடகங்கள் எதுவும் வடபகுதிக்கு அனுமதிக்கப் படாத வேளையில் விதிவிலக்காக யாழ். செய்திகளை இலங்கை இரா ணுவப் புலனாய்வுத்துறையின் அனு சரணையுடன் விலாவாரியாகக் ஹல் பெற்றிருந்தார்.

v) ஹல் புலனாய்வு சேவைகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்.

vi) UTHR-J அறிக்கைகள் புலிகளை இழிவுபடுத்துவதையும் இலங்கையிலுள்ள பிரச்சினை சிங்கள - தமிழ் மக்களுக்கு இடையேயானயல்ல. புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடை யேயானது என்பதாகவும், சித்திரிப்பதையும் நோக்கமாகக் கொண்டவை.

இந்த விடயங்களுக்குள் 06.06.2003 வெள்ளிநாதம் இதழில் பதிலளிக்க முற்பட்ட ஹல் யாழ்.பல்கலைக்கழ கத்தில் தகுந்த தகைமைகள் இல்லாமல் பூச்சிய ஆராய்ச்சியுடன் புத்தி ஜீவிகளாக நடிக்கிறார்கள் என்றும் இவர்கள் தான் தனக்கு எதிரான தகவல்களைத் தருவதாகவும் கூறி, பிரச்சினையைத் திசை திருப்ப முயற் சித்தாரே ஒழிய, அவர் குறித்த தகவல் களை உறுதியான முறையில் மறுக்கவில்லை என்பதை 06.06.2003 வெள்ளிநாதம் இதழைப் பார்ப்பவர் கள் எவரும் புரிந்துகொள்வார்கள்.

இதற்கிடையே வைகாசி மாதம் 2003 வெள்ளிநாதம் இதழில் UTHR-J பின்னிணைப்பு - 1 என்ற கட்டுரையில் இவரது தந்தையார் ஆறுமுக நாவலருடன் துண்டுப்பிரசுரப்போர் ஒன்றை நடத்தியதாகவும் UTHR-J அறிக்கைகளை வெளியிடுவதும் அதனை ஒத்ததுதான் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதில் தந்தையார் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்றும், அது தனது பூட்டனுக்குப் பூட்டன் என்றும், காலவழுவில் தொங்கிக் கொண்டு திசை திருப்பலில் ஈடுபட்டாரே தவிர, தானும் தன் சகோதரர்களும் கேந்திர முக்கியத்துவமான இடங்களில் இருந்துகொண்டு தமிழ்த் தேசியத்தின் விரோத சக்திகளுக்கு துணைபோவது பற்றி எழுதப்பட்டிருந்தது பற்றியோ, தன் சகோதரனான கலாநிதி ராஜன் ஹல் வேறு பலருடன் சேர்ந்து ""முறிந்த பனை மரம்"" (Broken Palmyrah) எழுதியது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால், குறித்த கட்டுரை ஆசிரியரை மதச் சர்ச்சை ஒன்றுக்குள் இழுத்துவிட முயன்று இருக்கின்றார் என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டி ருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. 08.08.2003 வெள்ளிநாதம் இதழில் இவரது இரண்டு கடிதங்களுக் கும் பதிலளித்த UTHR-J என்பவர்கள் யார்? கட்டுரை ஆசிரியர், முரண் பாடுகளின் மொத்த வடிவமாக ஹல் எப்படி இருக்கிறார் என்பதை அழகாக எடுத்துக் கூறியிருந்தார்.

i) ""ஆசிய விழுமியங்கள்"" என்பவை காட்டுமிராண்டித்தனத்தை மறைப்பதற்கான போர்வை என்றவர், வெளிநாட்டில் தொடர்ந்து வாழ்ந்தால் தன் பிள்ளைகள் தன்னிலிருந்து அன்னியப்பட்டு விடுவார்கள் என்பதால் தாய் நாடு திரும்பியதாகக் கூறி ஆசிய விழுமியங்களாலேயே தானும் வடிவமைக்கப்பட்டிருப்பது தன்னை அறியாமலே வெளிக்காட்டி இருக்கிறார்.

ii) தகமையற்றவர்கள், பேராசிரியர்கள் போட்டுக்கொள்கிறார்கள் என்று கண்டிக்கும் கடிதத்தில் ஹல் என்று ஒப்பமிட்டவர் அதே காலப்பகுதியில், அதாவது யாழ்ப்பாணக் கல்லுரியில் 05.02.2002 இல் ஆற்றிய உரையை டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியிட்டபோது அதன் கீழே பேராசிரியர் ஹல் என்று அழகாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

iii) விழாவொன்றில் மங்கல விளக்கு ஏற்றக்கூப்பிட்ட பொழுது அதன் உச்சியில் சேவல் வடிவம் இருந்ததால் தான் ஏற்றப்போக வில்லை என பச்சைமதவெறியுடன் பெருமையடித்துக் கொண்டிருக்கும்(05.02.2002 உரையில்) ஹல்,நந்திக்கொடியைக் கொண்ட யாழ்.பல்கலைக்கழகத்தில் ""சேவை""யாற்ற வருவதற்கு தலைகீழாக நிற்கிறார்.

என்றவாறாக ஹலின் சுய வடிவம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத் தோடு இவரைப்பற்றிய விவரங்களின் அடிப்படையாக 28.07.2002 திகதி சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகை யின் ஆசிரியருக்கு கடிதப் பகுதியில் வந்த ""UTHR-J - USURPER WHITH A HIDDEN AGENDA"" என்ற தலைப்பி லான கடிதமே இருந்தது என்பதை வெளிப்படுத்திய கட்டுரையாசிரியர் முடிந்தால், சண்டே லீடர் பத்திரிகைக்கு மறுப்பு அனுப்பும் படி ஹல்லுக்கு சவால் விட்டிருந்தார். ஆனால், இன்று வரை ஹல் சண்டே லீடருக்கோ அல்லது வெள்ளி நாதத்துக்கோ மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆற்றிய சேவைக்கு (அல்லது துரோகத்துக்கு) பரிசாகத்தான், அண்ணளவாக 2 வருடகாலத்துக்கு முன் நாடு திரும்பியிருந்த ஹலுக்கு பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதா, என்பது பெறுமதி மிக்க கேள்வியாக எழுகிறது. வேதாகமத்தில் உள்ள ஒரு வசனம்

""....... என்னோடில்லாதவன்
எனக்கு எதிராக இருக்கிறான்....""
என்று கூறுகிறது.

எவரும் விரும்பியோ விரும்பா மலோ ஈழத்தமிழ்த் தேசியத்தின் ஒரே பிடிமானமாக இன்றைக்கு இருப் பது விடுதலைப் புலிகள்தான். எனவே புலிகளைக் கொச்சைப்படுத்த நினைக்கும் ஹல் போன்றவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது எவரும் சொல்லித் தெரியவேண்டிய விடயமல்ல.ஆபிரிக்க கவிதைத் தொகுதி யொன்றின் முன்னுரையில் ""தான் கறுப்பன் என்பது மட்டுமல்லாமல் தான் வெள்ளையனும் அல்ல என்பதை உணர்ந்து கொண்டதன் எதிரொலிகள் ஆபிரிக்கக் கவிதைகளில் ஆழமாக எதிரொலிக்கின்றன"" என்று கூறப்பட்டுள்ளது.

இதே போலவே, ஹல், சிதம்பரம், மகேந்திரன் முன்னாள் துதுவர் - துதரக தமிழ்ப் பணியாளர் தமிழில் கதைத்தால் கொழும்புக்கு அனுப்பி விடுவேன் என்ற சிங்கள விசுவாசி, அர்ஜீனா மகேந்திரன் (முதலீட்டுச் சபைத்தலைவராக இருந்தவர் - தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் இருந்த கிழக்குக் கடற் பரப் பில் சீன மீனவர்களுக்கு றோலர் அடிக்க அனுமதி பெற்றுக் கொடுத் தவர்) போன்றோர் என்னதான் குத்தி முறிந்து சிங்களத்துக்குச் சேவை செய்தாலும், அவர்கள் சிங்களவர்கள் அல்ல என்று உணரும் காலம் வந்தே தீரும். சிஹல உறுமயவின் ஸ்தாபகரான டீ.டு.குணசேகர, தான் சிங்கள பௌத்தன் அல்ல என்று உணர நேர்ந்தது போல்.

UTHR-J என்பவர்கள் யார்? என்ற கட்டுரையின் இறுதியில் அக்கட்டுரை யாசிரியர், உகண்டா நாட்டினரான ஒக்கோட் பிற்ரெக்கின் ""லாவின்னோ வின் பாடலிலிருந்து....."" என்ற கவி தையின் சில வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
""..........................
ஒக்கொல்வின் தலையை
நு}ல்கள் என்ற காட்டில்
தொலைத்துவிட்டார்
.............................
வகுப்பறைகளில் வைத்து
அவர்களுடைய விதைகள்
பெரிய புத்தகங்களால்
நசுக்கப்பட்டுவிட்டன.........""
ஹ{ல் போன்றோருக்கு மிகப் பொருத்தமான வரிகள் இவை அல்லவா!

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]