www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

அன்று 14 வயது சிறுவன் ஆயுதமேந்தியதால் இன்று தமிழர் இராணுவம் சமபலத்தில்!

இன ஒடுக்குமுறை மற்றும் வர்க்கரீதியான ஒடுக்குமுறைகள் காரணமாக சர்வதேச ரீதியில் குறிப்பாக வளர்முக நாடுகளில் சிறுவர்கள் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றது.சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வறுமை காரணமாகவும் போரின் காரணமாகவும் மறுக்கப்பட்டுவருகின்றன.சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பட்டயத்துடன் யுனிசெப் நிறுவனம் சர்வதேச ரீதியில் செயற்பட்டுவருகின்றது.

சிறுவர்களின் உரிமைகளாக பல விடங்கள் குறிப்பிடப்பட்டாலம் ஆயுதக் குழுக்களில் இணைக்கப்படுவதுகுறித்தே கூடிய கரிசனை காட்டப்பட்டுவருகிறது. இதில் சிறுவர்களின் அடிப்படை உரிமை என்பதற்கு அப்பால் தீவிரவாத ஆயுதக் குழுக்களை ஒருவகையில் அடக்கிஆளும் வர்க்கத்தின் நரன்களை அல்லது பேரினவாத அரசாங்கங்களின் ஒடுக்குமுறைகளுக்கு மறைமுகமாக உதவுவதே மேலோங்கியிருப்பதாக விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் குற்றம்சாட்டிவருகின்றன.பல வருடகால சாத்வீக போராட்டத்தின்மூலம் ஈழத்தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டபோதே பதினான்கு வயதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சிறுவன் ஆயுதம் ஏந்திப் புறப்பட்டான்.

இன்று தமிழ் மக்கள் இராணுவ சமபலத்தைப் பெற்றது மட்டுமல்ல தேசியத் தலைவராக மதிக்கும் அளவுக்கு அவர் பரிணமித்துள்ளார்.அன்றும் சிறுவர் உரிமை என்ற கோதாவில் தடுக்கப்பட்டிருந்தால் தமிழர்கள் என்ற இனமே இந்த நாட்டில் தனது இருப்பிடத்துக்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும்.தமிமீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு பலாத்காரமாக தனது அமைப்பில் சிறுவர்களை இணைப்பதாக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் சிறுவர் சமூகத்தின் மேல் கொண்ட அக்கறைக்கு மேலாக போராளிகளை சேர்த்து புலிகள் மேலும் பலமடைவதை தடுக்கவே ஆகும்.

எந்தவொரு போராட்டக்குழுவின் வரலாற்றை எடுத்தாலும் அல்லது தனிப்பட்ட போராளியை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் இளம்பராயத்திலேயே இணைந்திரப்பார்கள். ஏனெனில் உலகமயமாதல்,தாராள மயமாதல்,சூழலில் முதலாளித்துவ வர்க்கம்,ஆளும் வர்கக்கம் என்பன தனது வர்க்க நலனைப் பேணும் வகையில் இளைய தலைமுறையினரின் போரிடும் சிந்தனையைக் குலைப்பதற்கு தொடர்புசாதனங்களையும்,கலைகளையும் கலைகளையும் பயன்படுத்தி வருகின்றன.இதனால் பராயமடைந்தபின்னர் போராளிக்குழுக்களில் இணைவோர் தொகை மிக மிக கறைவாகும்.

எனவே உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்தை விடுதலைப் போராட்டத்தை,பயங்கரவாதத்தை எந்தவித பிரிகோடுமில்லாது ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தும் சர்வதேவ சமூகம் சிறுவர் உரிமைகளில் ஒன்றான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற விடயத்தை பலமாக தூக்கிப்பிடித்துவருகிறது.யுனிசெப் போன்ற தொண்டர் நிறுவனங்களும் ஏனைய சிறுவர் உரிமைகளில் காட்டாத அக்கறையை இவ்விடயத்தில் காட்டிவருகிறது.

இன்று சிறுவர் சமூகம் உடல் ரீதியான இம்சை,போஷாக்கு இழப்பு,பாலியல் இம்சை,மனதறிய போதை ஊட்டலும் இம்சைப்படுத்தலும், சட்டவிரோதமாக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், பிள்ளைகளை விற்றலும் கடத்தலும், பிள்ளைகளை கைவிடுதல், வியாபார நோக்கங்களுக்காகப் பிள்ளைகளை ஏய்த்துப் பிழைதத்தல், பாடசாலை கல்வியை பெற முடியாதவாறு தடுத்து வேலைக்கு அமர்த்துதல்,தெருவில் பிச்சையெடுக்கவைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்கிவருகிறது.அத்தோடு சில மதங்களில் பெற்றோர் தமது நேர்த்திக்கடன் அல்லது விருப்பத்தை நிறைவேற்ற சிறுவயதிலேயே பிள்ளைகளை துறவிகளாக்கியும் வருகின்றார்கள்.

சிறுவர்களை ஆயுதக்குழுக்களில் இணைப்பது எந்தளவுக்குக் கொடுமையானதோ அதேபோல மேற்கூறிய இம்சைகளும் கருத்திலெடுக்கப்பட்டு சிறுவர் சமூகம் பாதுகாக்கப்படவேண்டும்.இலங்கையைப் பொறுத்தவரை கடந்த 20வருடங்களாக ஆயுதப் போரட்டம் தீவிரமடைந்துள்ளது.போர்ச்சூழலில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பாதிக்கப்படாத குடும்பங்களே வடக்கு கிழக்கு மாகாணத்தில் இல்லை எனலாம்.பெற்றோரை அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்த இழந்த சிறுவர்கள் இடம்பெயர்ந்த சிறுவர்கள்,வறுமை காரணமாக அடிப்படை வசதிகள் இல்லாத சிறுவர்கள் கணிசமாக உள்ளனர்.

போரின் கொடூரங்களை நேரில்கண்டு உரிமைகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் உள்ளனர். இத்தகைய சிறுவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் காட்டாத அக்கறை போராளிக் குழுக்களில் இணைந்த அல்லது இணைக்கப்பட்ட சிறுவர்களை மீட்டெடுப்பதில் காட்டுவதன் உள் நோக்கம் குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை கட்டாயமாக இணைப்பதாக 385புகார்கள் கிடைத்திருப்பதாக யுனிசெப் மட்டக்களப்பு பிரதிநிதி அன்ரியாஸ் ஜேம்ஸ் தெரிவித்திருக்கிறார்.இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13சிறுவர்களையும் அம்பாறை மாவட்டத்தில் 7சிறுவர்களையும் கடந்த வாரம் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.யுனிசெப் பிரதிநிதியும் ஒப்படைப்பின்போது பிரசன்னமாகியிருந்தார்.

அவரின் முன்னிலையில் ஊடகவியலாளர்கள் சிறுவர்களிடம் கேள்வி தொடுத்தபோது "நாமாகவே விரும்பிவந்தொம்",நாட்டுக்காக "போராடவந்தோம்" என்று தெரிவித்தனர்.அத்தோடு இணைய வந்த சிறுவர்களில் கணிசமானோர் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியவர்களாக இருந்ததுடன் பெற்றோருடன் இருப்பதைவிட புலிகளுடன் இருந்தால் நல்ல உயவும் அடிப்படை வசதிகளும் தமக்கு கிடைக்குமென்றும் கூறினார்கள்.தமது விருப்பத்திற்கு மாறாக புலிகள் வற்புறுத்தியே திருப்பி அனுப்புவதாகவும் தாம் திரும்பிவந்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்கள்.

புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஸ்,"நாம் பலாத்காரமாக சிறுவர்களை சேர்ப்பதில்லை.சேர வரும் சிறுவர்களை பலாத்காரமாக பெற்றோர்களை அழைத்து ஒப்படைத்துவருகிறோம்"என்று தொவித்தார்.அத்தோடு பலாத்காரமாக இணைக்கப்படுபவர்கள் மன உறுதியோடும் கொள்கைப் பற்றோடும் போராடமுடியாது என்றும் ஒப்படைப்பு நிகழ்வில் தளபதி ரமேஸ் தெரிவித்தார்.எனவே புலிகள் பலாத்காரமாக சிறுவர்களை தமது அமைப்பில் இணைப்பதாக குற்றஞ்சாட்டுவோர் சிறுவர்கள்மீது கொண்ட அக்கறை காரணமாகவே செயற்படுபவர்களாக இருந்தால் சிறுவர்களின் ஏனைய உரிமைகளிலும் கரிசனை செலுத்தவேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் போர் காரணமாகவும் வறுமை காரணமாவும் கணிசமான சிறுவர்கள் பாடசாலைக்கே செல்லாது அல்லதுஇடை விலகியவர்களாக உள்ளனர்.வீடுகளில் வர்த்தக நிலையங்களில் வேலைக் காரர்களாகவும் தெருவில் பிச்சை எடுக்கும் நாடோடிகளாகவும் உள்ளனர்.பாலியல் துன்புறுத்தல்கக்கு ஆளாகிவருகின்றனர்.

புலிகள் அமைப்பில் இணைந்தவர்களை சாதாரண வாழ்க்கைக்குக் கொண்டுவருவதற்காக கிளிநொச்சி,திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் யுனிசெப் இடைத்தங்கல் முகாமை அமைத்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.அத்தோடு படையினருக்கும் புலிகளுக்கும் சிறுவர் உரிமைகள் பற்றிய பயிற்சி வழங்கவும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டவும் நடவடிக்கை எடுத்துவருகிறது.அதாவது சிறுவர்களை போராளிகளாக மாறாது தடுப்பதில் காட்டும் அக்கறையை இந்த செயற்திட்டங்கள் புலப்படுத்துகின்றன.சிறுவர்களைப் பொறுத்தவரை ஏனைய உரிமைகளைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டுவதில்லை.பட்டயங்களாகவும் பட்டியல்களாகவுமே உள்ளன.

இலங்கை போன்ற நாடுகளில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயற்றப்பட்ட சட்டங்கள் இறுக்கமாக அமுல்படுத்துவதும் இல்லை.வெறும் கறுப்புவெள்ளைகளாகவே உள்ளன.யுனிசெப் நிறுவனம் சிறுவர் உரிமைகளைக் காப்பாற்றுவது பாராடடக்கூடிய அம்சம்.ஆனால் போராளிக்குழுக்களில் இணையாது தடுப்பதில் காட்டும் அக்கறையை ஏனைய உரிமைகளைக் காப்பாற்றுவதிலும் காட்டவேண்டும்.அதேவேளை அலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சிறுவர்களே பாரளி குழுவில் இணைய முண்டியடிக்கிறார்கள். இதனைத் தடுத்துநிறுத்துதல் என்பதற்கு அப்பால் ஏன் இணைக்கப்படுகிறார்கள் அல்லது இணைய முன்வருகிறார்கள் என்பதற்கான காரண காரியங்களையும் சர்வதேச சமூகம் இனங்கண்டு பரிகாரம் காண முன்வரவேண்டும்.

சிறுவர்கள் விடுதலை இயக்கத்தில் முற்றுமுழுதாக இணையாது தடுக்கமுடியாது.நடைமுறை சாத்தியமானதும் அல்ல.பயங்கரவாதத்திற்கும்,விடுதலைப் போராட்டத்திற்குமிடையில் கோடு போட்டு விடுதலை போராட்டத்தின் அடிப்படையை தர்மத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.இரண்டையும் ஒன்றாக கருதி குழப்பியடித்து ஒடுக்கும் நடவடிக்கையை எந்த வடிவத்தில் மேற்கொண்டாலும் உண்மையான விடுதலைப் போராட்டம் இலக்கை அடையும்வரை ஒருபோதும் ஓயாது.

எனவே விடுதலைக்காகப் போராடும் இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து உரிய பரிகாகங்களை வழங்குவதன்மூலம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கமுடியும்.பயங்கரவாதத்தையும் ஒடுக்கமுடியும்.யுனிசெப் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு சிறுவர் உரிமையை ஆயுதமாகப் பயன்படுத்த முனையக்கூடாது.சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணையும் சமூகத்தின் போராட்ட இலட்சியத்தை இனங்கண்டு அதற்கு பரிகாரம் காணவேண்டும்.

அத்தோடு சிறுவர்களின் ஏனைய உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.சிறுவர் ஆயுதப் போராட்டத்தில் இணையாது தடுப்பது என்பது உண்மையான சிறுவர் மீதான அக்கறை காரணமாக இருக்கவேண்டும்.ஏனைய உரிமைகளைப் பாதுகாப்பதுடன் சிறுவர்கள் வாழும் சமூகம் எதிர்நோக்கும் ஒடுக்குமுறைகளும் களையப்படவேண்டும்.இல்லையேல் ஆயுதக்குழுவில் இணையாது தடுக்கும் சிறுவர் உரிமை என்பதும் ஒரு வகையில் போராயுதமாக கருதவேண்டி ஏற்படலாம்.சிறுவர் உரிமைகளைப் காப்பாற்றுவது என்பது சிறுவர்கள் மீதான அக்கறை காரணமாக இருக்கவேண்டும்.

நன்றி வீரகேசரி-26/10/2003

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]